எல்லா உயிர்கட்கும் பசி உள்ளது. உயிர்களின் போராட்டத்துக்கு இந்தப் பசி உணர்ச்சியும் ஒரு காரணமாக விளங்குகின்றது. எல்லா உயிர்கட்கும் உணவைப் படைத்த தெய்வம், மனிதர்கட்கும் பசி தீர வேண்டி நிலம், நீர், தீ, காற்று, மழை இவற்றைப் பயன்படுத்தும் அறிவு முதலியவற்றைக் கொடுத்திருக்கின்றது. புராதனச் சமுதாயத்தில் மனிதன் கூட்டாகச் சேர்ந்து உணவைத் தேடி உண்டு வாழ முற்பட்டான். மனிதக் கூட்டம் பெருகப் பெருகச் சுய நலமும் வளர்ந்தது. இருப்பவர் – இல்லாதவர் ஒருபுறம் ஏழ்மை – ஒருபுறம் செல்வம் என்ற இந்த வேறுபாடும் வளரத் தொடங்கியது. இந்த வேறுபாடுகளிடையேயும் கூட மனிதனுக்கு மனிதன் உணவளித்துக் காப்பாற்றுகின்ற பண்பாடு இருந்து வந்தது.

பழங்கால விருந்தோம்பல்:

பழங்கால ஆற்றுப்படை நூல்கள் அந்தக்காலச் சமுதாயத்தின் விருந்தோம்பலை நன்கு விளக்கிக் கூறுகின்றன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு நிலத்து மக்களும் பசியோடு வந்த பாணர்களையும், கலைஞர்களையும் இரவலர்களையும் உபசரித்துக் காத்து வளர்த்த போக்கை அந்த நூல்களில் காணலாம். பிற்காலச் சமயங்கள், கடவுளையும், சமயக் கோட்பாடுகளையும் மையமாக வைத்து இந்த அறவுணர்ச்சியைப் பெருக்கின. விருந்து என்றாலே வீடு தேடி வந்த புதியவர்களை வரவேற்று உணவு அளிப்பது என்று பொருள்.

உறவினரும், சுற்றத்தாரும் விருந்தினர் என்று அழைக்கப்பட்டதில்லை. மணம் முடித்த சங்க கால இளைஞர்கள் தம் முயற்சியால் பொருள் சம்பாதித்து உறவினரையும் சுற்றத்தாரையும், பசித்த ஏழை மக்களையும் காப்பாற்றுவது தம் கடமை என்று கருதிய காலம் அது. இந்தக் காலத்து இளைஞர்கள் போல மாமனார் கொடுக்கும் வரதட்சணையில் வாழ்க்கை வண்டியை ஓட்ட அவர்கள் நினைத்தது இல்லை. அழகான மனைவியின் ஊடலுக்கு அஞ்சுவதைவிட யாசித்து வருபவரின் துன்பங்கண்டு அஞ்சினானாம் ஓர் அரசன். “ஒண்ணுதல் மகளிர் துளித்த கண்ணினும் இரவலர் புன்கண் அஞ்சம்” என்று அந்த அரசனது பண்பாட்டைப் பாடுகிறான் ஒரு புலவன். விருந்தினர்களுக்குச் சோறு போட முடியாத தன் வறுமையை “விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை” என்று சொல்லி நொந்து கொள்ளுகின்றான் புலவன் ஒருவன். சமயப் பின்னணி கடவுள் பின்னணி என்பவை அதிகம் வெளிப்படுத்தப்படாத நிலையில் இந்த அறவுணர்ச்சி உள்ளத்தில் ஊறியிருந்த நிலைமையைச் சங்க இலக்கியங்களில் நாம் காணலாம்.

சமய காலம்:

சமுதாயம் மேலும் மேலும் பெருகியது. மனிதர் வாழ்வில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் பெருகின. அரசியல் மாற்றங்கள் திகழ்ந்தன. இவற்றுக்கிடையேயும் தனி மனித வாழ்வில் இன்ப துன்பங்கட்கான ஆராய்ச்சியும் நிகழ்ந்து வந்தன. அரசியல் மாற்றங்களால் சமுதாயம் நிலை குலைந்த ஒரு கால கட்டத்தில் ஆழ்வார்களும், நாயன்மார்களும் வந்தனர். தெய்வபக்தியை வளர்த்துக்கொண்டு துன்பங்களிலிருந்து விடுபட வழி கூறினர்.

மனிதர்களிடம் சுயநலப் போக்கு வளராதவாறு சுயநலம் படைத்தோரையும், செல்வரையும் பார்த்து எச்சரித்தனர். மண்ணில் நல்ல வண்ணம் வாழ வகைகளை எல்லாம் கூறினர். எளியவர்க்கு உணவு தராதவர் நரகம் செல்வர் என்று கூறினர். “கரப்பவர் தங்கட்கெல்லாம் கடுநரகங்கள் வைத்தார்” என்றார் நாவுக்கரசர். இறைவனை வழிபடுவதால் உணவும் ஆடையும் கிடைக்கும். போற்றி வணங்கினால் துன்பமின்றி வாழலாம் என்றார் கந்தரர். எண்ணற்ற அறச்சாலைகள், தண்ணீர்ப் பந்தல்கள், அடியார்கட்கு உணவிட்டுப் போற்றும் பண்பாடு என்ற பழக்கங்கள் வளர்க்கப்பட்டன. சமயச் சான்றோர்கள் எல்லாம், இந்த இளமை நில்லாது இந்த உடம்பு நிலையில்லாதது இந்தச் செல்வம் நிலையில்லாதது, ஆகவே இறைவனைப் பற்றுக் கோடாகக் கொண்டு இல்லாதவர்கட்கு உதவி செய்து பிறவி நோயைப் போக்கிக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினர். இந்த உலகில் இன்ப துன்பங்களை இறைவன் ஏன் வைத்தான் என்று திருமூலர் கூறுகிறார்.

இன்பம் இடர் என்று இரண்டுற வைத்தது
முன்பு அவர் செய்கையி னாலே முடிந்தது
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பிலார் சிந்தை அறம் அறியாரே! என்கிறார்.

இவ்வாறு பசித்த மக்களின் துன்பங்கண்டு அவர்கட்கு உணவும், உடையும், உதவியும் செய்யுமாறு சமயங்கள் போதித்தன. சோழர் காலத்துக் கோயில்களும் மடங்களும் சமுதாய தலமையங்களாகத் திகழ்ந்தன. காலப்போக்கில் சமய நிறுவனங்களில் போலித்தனமும் ஆரவாரமும் சடங்குகளும் சாதிச் செல்வாக்கும் பெரியதன் விளைவாக மக்களிடம் இறைவழிபாடு பக்தி குன்றலாயின.

இவற்றையெல்லாம் உணர்ந்தே தான் வடலூர் வள்ளலார் ஏழைகட்கு உணவிட்டுக் காக்க வேண்டி சத்திய தருமச்சாலை அமைத்தார். ஏழைகட்கு இறைவனை ரொட்டித் துண்டு மூலமாகத்தான் காட்ட முடியும் என்று விவேகானந்தர் கூறினார். அன்னதானத்தின் அருமையும் பெருமையும் பற்றிப் பழங்கால நூல்கள் போற்றிச் சொல்கின்றன. செல்வர்களின் சுயநலம் காரணமாகவும் பண வேட்டை காரணமாகவும் ஆடம்பரத்தின் காரணமாகவும் தான் இன்றைய சமுதாயத்தில் “நக்சலைட்” இயக்கம் அரும்பத் தொடங்கிவிட்டது தெய்வ நம்பிக்கையிலும் பாவபுண்ணியங்களிலும் நம்பிக்கை வைக்காமல் செல்வர்கள் மிகுதியான செல்வத்தைச் சேர்க்க முனைந்து வாழத் தொடங்கினால் அங்கே கடவுள் நீதி சும்மா இருக்காது.

செல்வர்களின் கடமை:

அங்கங்கே உள்ள செல்வர்கள், நம் அருகில் உள்ள ஏழைய எளிய மக்கள் வாழ்வித்து அவர்கள் பிழைப்புக்கு வாய்ப்பு கொடுத்து உதவி செய்தால் இரண்டு வகையில் அவர்கட்கு நன்மை. ஒன்று அவர்கள் புண்ணியப் பலனை அடைவார்கள். மற்றது அவர்கள் சந்ததியினர் நலம் பெறுவார்கள். இதனை மறந்து ஏழை எளிய மக்கள் அழ அழச் சேர்த்த செல்வம் எல்லாம் அழ அழ அவர்களை விட்டு ஓடிப்போகும்.

வள்ளுவன் சொல்லும் வங்கி:

வள்ளுவன் சொல்வான், பணத்தைச் சேமித்து வைக்கும் “பாங்கு” எது தெரியுமா? ஏழைகளின் வயிறு! அதனை நிரப்புவதால் ஏழைக்கும் நன்மை, செல்வனுக்கும் நன்மை அற்றார் அழிபசி தீர்த்தல். அது ஒருவன் பெற்றான் பொருள்வைப் புழி! என்பது அவன் வாக்கு!

தற்போதுள்ள மடங்களும், சமய நிறுவனங்களும் செல்வர்களும் இதனை உணர்ந்து கடமைகளைச் செய்தால் பல சமுதாயப் பிரச்சனைகள் தீரும். ஆகவேதான், மருவத்தூர் பெருமாட்டி சமுதாயத்துக்கு இணக்கமான இந்த வழியினைக் காட்டி எல்லா வார வழிபாட்டு மன்றங்களையும் சோற்றுப் பிரச்சனையைத் தீர்ப்பதன் மூலம் சமயப் பணி செய்ய ஆணையிடுகின்றார்.

ஏழைகட்கும் அறிவுரை:

ஏழைகளின் சோற்றுப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டிச் செல்வர்கட்கு அறிவுரை சொன்ன சமயப் பெரியவர்கள் ஏழைகளைப் பார்த்தும் அறிவுரை கூறினார்கள். “ஐயம் இட்டு உண்” என்று செலவர்கட்குச் சொல்லிவிட்டு, கொடுப்பவன் இருக்கிறான் என்று கருதி “கைநீட்டிப் பிழைப்பதையே மேற்கொண்டு வாழாதே, உழைத்து முன்னேறுக என்ற கருத்துப்பட, “ஏற்பது இகழ்ச்சி” என்றும் சொன்னார்கள். கடவுள் நம்மை ஏழையாகப் படைத்துவிட்டானே என்று அலுத்துக்கொண்டும், சலித்துக் கொண்டும் கடவுளை வழிபடுவதை விட்டுவிடக் கூடாது. தவம் போன்ற முயற்சிகளை நிறுத்தி விடக் கூடாது என்றும் சொன்னார்கள். சோற்றையே நினைத்துக் கொண்டு கடவுளையும் கடவுள் நெறியையும் மறப்பது எப்படிப்பட்டது? இந்த ஆற்றில் முதலை இருக்கிறதே என்று வேறு வழியகப் பயணம் போனவன் குட்டி போட்ட கரடியின் பிடியில் அகப்பட்டுக் கொண்டு திண்டாடுவது போன்ற என்று சொல்கிறார். இதனைத் திருமூலர் அழகாகச் சொல்கிறார்.

ஆற்றில் கிடந்த முதலைக்கண் டஞ்சிப் போய்
ஆற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும்
நோற்றுத் தவம் செய்யார் நூலறி யாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே
என்பது திருமந்திரப் பாடல்

எனவே, ஆன்மிக உணர்வும், சமய உணர்வும் பெருக வேண்டுமானால் ஏழை மக்களின் சோற்றுப் பிரச்சனையைத் தீர்ப்பதன் மூலம் முயல வேண்டும். அன்னை ஆதி பராசத்தி அருள் வாக்கில் இதனையே தொண்டர்கட்கு வலியுறுத்துகின்றான். அன்னையின் இந்த நோக்கத்தைச் செல்வர்களும் வாணிகர்களும் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களும் கோயில்களும் மடங்களும் சமய நிறுவனங்களும் உணர்ந்து நடந்து கொண்டால் நாட்டில் நல்லமைதி நிலவும். அன்னையின் நோக்கத்தை எல்லோரும் உணர்வார்களா? உணர்ந்து நடப்பார்களா?

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here