“ஆமா, இது மிகவும் நேர்த்தியான ஔடதம் சாமி! எல்லாம் சேமமாகும். சும்மா சாப்பிடுங்க” என்றார்கள் சுவாமிகள். திரு.சுப்பையா நாயுடு அவர்களும் மிக நம்பிக்கையுடன் சுவாமிகள் கொடுத்த பச்சை மிளகாய்த் துவையலை விரும்பிச் சாப்பிட்டார். வயிற்றப் போக்கும், வலியும் இருந்த இடம்தெரியாமல் குணமாகிப் போனது. எண்பத்தைந்து வயதான நாயுடு அவர்கள் இன்றும் 1982-ல் எவ்வித வயிற்றுக் கோளாறுமின்றி நலமுடன் வாழ்ந்து வருகிறார்.

முன்னாள் அமைச்சர் உயர்திரு.குமாரசாமி ரெட்டியார் அவர்கள் முதன் முதலாய்ச் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார்கள். தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த அவர்களைப் பொன்னையா சுவாமிகள், ஆசி பெறுவதற்காகப் பொதிச்சுவாமிகளிடம் அழைத்து வந்தார்கள். முதலில் பார்க்க விரும்பாத சுவாமிகள் பின்னர், “இப்போது ஈடுபட்டிருக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். ஆனால் வேறு பதவி கிட்டாது. மீண்டும் ஒரு முறை இவ்வித முயற்சியில் வெற்றி பெறுவதுடன், பதவியும் கிட்டும், அது கொஞ்சம் காலம் நீடிக்கவும் செய்யும்” என்று ஆசி கூறி விபூதி அளித்தார்கள். அதன்படி ரெட்டியார் அவர்கள் முதல்முறை சட்டசபை உறுப்பினர் ஆனார்கள். ஆனால் அமைச்சர் பதவி எவ்வளவோ நம்பிக்கையுடனிருந்தும் கிடைக்ககவில்லை. இரண்டாம் முறை தேர்தலில் வெற்றி பெற்று உறுப்பினராகி, பின்னர் அமைச்சர் பதவியும் கிட்டியது. அப்பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீடிக்கவும் செய்தது. கல்வி அமைச்சர் பதவி ஏற்றதும் ரெட்டியார் அவர்கள் சுவாமிகளைத் தரிசிக்ககக் கருவை வந்தார்கள். ஆனால் அது சமயம் சுவாமிகள் அடக்கம் எய்தி விட்டார்கள். எனவே, சுவாமிகளது சமாதிக் கோயிலுக்கு அடிக்கல் நாட்டி அவர்களின் அருள் சக்தியின் அருமை பெருமைகளை மனமாரப் பாராட்டினார்கள்.

பொதிச் சுவாமிகளும் பொன்னையா சுவாமிகளும் ஒருநாள் மாலை அளவளாவிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு வில் வண்டியில் அழகிய முதுமைச் சீமாட்டி ஒருத்தி வந்து சுவாமிகளை வணங்கி நின்றாள். அவளை ஏறிட்டுப் பார்த்த பொதிச்சுவாமிகள் புன்னகை புரிந்து, “உனர் கவலை விரைவில் தீரும். சொத்துத் தகராறு சாதகமாய் முடியும்” என ஆசி கூறி விபூதி வழங்கி வழியனுப்பினார்கள். அந்த மூதாட்டி சுவாமிகளை வணங்கி விடைபெற்றுச் செல்லும்போது, “சுவாமி இந்தப் புருவை (பெண்ணாடு) யாருன்னு தெரியுமா?” எனப் பொன்னைய சுவாமிகளை கேட்டார்கள் பொதிச்சுவாமிகள். தெரியவில்லையே சுவாமி!” என்றார்கள் பொன்னையா சுவாமிகள். “இவள்தான் என்னை துறவியாக்கி, இந்த ஞான நிலைக்கு ஆளாக்கிய புண்ணியவதி! எனது ஒரு காலத்து மனைவி”, எனக் கூறிச் சிரித்தார்கள். “அவளுக்குமா நல்லாசி?” என வினவினார்கள் பொன்னையா சுவாமிகள். “சுவாமி! அவளுக்குக் கோயிலே கட்டலாம்! அவளால்தானே நான் ஞானம் அடைந்தது”. என விளக்கம் கூறினார்கள் பொதிச்சுவாமிகள். வந்த சீமாட்டிக்கு சுவாமிகளின் அடையாளம் புரியவில்லை என்ன உலகம்.

தமது அடக்கத்தைப் பொதிச் சுவமிகள் இருதினங்களுக்கு முன்னரே அறிவித்து, தாமே அருகிலிருந்து தம் மனம்போல் கல்லறை கட்டினார்கள். தாம் அடங்குமுன், தமது திருக்கரத்தால் முன்னர் பிறந்ததும் சேனை புகட்டி தமது கெயரான “பசுபதி பரமகுரு” என்பதனைச் சூட்டிய, பொன்னையா சுவாமிகளின் இரண்டாவது மகள், தற்போது தமிழ்நாடு காவல்துறைத் தலைவராய்ப் பணிபுரியும், அடியேனை அருகில் அழைத்து கையில் சங்கு கொடுத்து ஊதச் சொன்னார்கள். அடியேன் ஊதமுயன்றபோது முடியவில்லை. உடனே சுவாமிகள் சங்கைத் தாம் வாங்கி ஊதிக்காட்டி, “இதோ இப்படி ஊது”, என்றார்கள். அதன்படி அடியேன் ஊதினேன். “நான் திண்ணையில் படுத்துக் கண்ணை மூடினதும், என் காதில் சங்கை ஊது பின்னர் என்னை அலங்காரச் சப்பரத்தில் உட்காரவைத்து, ஊர்வலமாய்க் கொண்டு வருவார்கள். அப்போதும் நீ சங்கு ஊதிக்கொண்டு வந்து, என்னைக் கல்லறையில் அடக்கம் செய்யும்போதும் ஊத வேண்டும்” என்றார்கள். அதன்படி சுவாமிகளும், பொன்னையா சுவாமிகளின் இரண்டாவது மகனாம் பொன்பரம குருவான அடியேனது சங்கநாதம் கேட்டுக்கொண்டே அடங்கினார்கள். அந்நிலையிலேயே இரு தினங்கள் பொதுமக்கள் பார்வைக்காக சுவாமிகளின் திருமேனி வைக்கப்பட்டிருந்தது. அதற்குள் புதிதாய் சப்பரம் ஒன்றும் மரத்தால் செய்யப்பட்டது. சுவாமிகளின் திருமேனியில் எவ்வித மாற்றமுமில்லை. விறைத்தலோ வீக்கமோ எதுவுமில்லை. மென்மையாய், மிகஒளியுடன் விளங்கியது திருமேனி. அத்திருமேனி, அலங்காரச் சப்பரத்தில் இரு தினங்களுக்குப்பின் ஏற்றி ஊர்வலமாய் எடுத்து வந்து, அடக்கம் செய்யப்பட்டது. அடியேனும் சவாமிகளின் ஆணைப்படியே சங்கு ஊதினேன். சுவாமிகளின் விருப்பப்படியே அவர்களது திருமேனி அடக்கம் செய்யப்பட்டது. அதன்மேல் சமாதிக் கோயில் ஒன்றும், பராசக்திபீடமும் அமைத்து, தற்போது கட்டப்படுகிறது.

தாம் சென்ற ஊர்களிலெல்லாம் தமது வரவை அறிவிக்கப் பொதிச் சுவாமிகள் ஊதிய அவ்வரிய சங்கு இன்றும் அவர்களது சமாதிக் கோயிலின் நித்திய பூஜையின் போது பொன்னையா சுவாமிகளின் கடைசி மகன், தற்போது ஆலயத்தின் திருப்பணி பொறுப்பேற்று சீரிய முறையில் திரிகரண சுத்தியோடு சிறப்புற அத்தெய்வ கைங்கரியத்தை ஆற்றி வரும் பொன் கிருஷ்ணமூர்த்தியால் ஊதப்பட்டு, அதன் ஓங்கார ஒலி சுவாமிகளின் அருள் நாடிவரும் அன்பர்களின் அவலம் போக்கி அல்லல் நீக்கி மன ஆறுதல் அளித்து வருகிறது.
வருடாவருடம் வெகு விமரிசையாய், இன்னிசை முழக்கத்தோடு, அன்னதானத்துடன் சுவாமிகளின் சமாதிக் கோயிலில் குருபூசை விழா மார்கழிப் பௌர்ணமியன்று வெகு சிறப்புடன் நடந்து வருகிறது. இவ்வாண்டு நடந்தது 50வது ஆண்டுப் பொன்விழாக் குருபூசை, பொன்விழாவானதால் குருபூசை மூன்று தினங்கள் நாதசுரம், மற்றும் இன்னிசைக் கச்சேரிகளுடன் மிகக் கோலாகலமாய்க் கொண்டாடப் பட்டது. அந்தச் சமாதிக் கோயிலில் திரிகரண சுத்தியோடு எவரொருவர் வழிபட்டாலும் அவரவர் வேண்டும் வரம் தடையின்றிக் கைகூடும். நம்பினார்க்கு ஒருபோதும் நட்டமில்லை.

நாதம் தான் விந்து, விந்து கட்டினால் மூலம் தெரியும். மூலம் தெரிந்தவர் முனிவர். மூலாதாரம் கண்டவர்ஞானி. ஆதாரத்துக்கு ஆதாரம் அறிந்தவர் சித்தர். அவர் பரம்பொருளோடு இரண்டறக் கலப்பவர். அவரைத் தெய்வம் என்றாலும் ஒன்றுதான். அப்படிப்பட்டவர்களே நம் பொதிச் சுவாமிகள். அவர்கள் அருள்மலை, அனைவரையும் தம்பால் ஈர்க்கும் காந்தமலை. நாம் விலகினாலும் தமது அருட் காந்தத்தால் நம்மை ஈர்க்கும் அன்புமலை.

“ஆண் பெண் இருபாலாரால் ஆனதே உலகம். விபூதி வெண்மை குங்குமம் சிவப்பு. அதேபோல், ஆண்விந்து வெண்மை, பெண்விலக்கு சிவப்பு. ஆண் கருவான விந்துக்கு வயதே கிடையாது. ஆனால் பெண் கருவான விலக்குக்கு வயதுண்டு. எனவே, ஆணிற்கு சபலம் அதிகம். பெண்ணிற்கு சபலம் குறைவு. இதிகாச புராணங்களிலே பிருந்துவைக் கண்டு திருமால், திலோத்தமையைக் கண்டு பிரம்மா, மோகினியைக் கண்டு சிவன், மச்சகந்தியைக் கண்டு பராசுரர், மேனகையைக் கண்டு விசுவாமித்திரர், லோபரமுத்தரையை கண்டு அகத்தியர், கிருதாசியைக் கண்டு வியாசர் சபல முற்றனர் என்பதைக் காண்கிறோம். பெண்ணிற்கு விலக்கு ஒரு வயதில் நின்றதும் சக்தி சேருகிறது. எனவேதான் உலகில் பெரியோர் ஆதிசக்தியைப் பெண்ணாக உருவகம் செய்தனர். ஆவதும் அதனால்தான்; அழிவதும் அதனால்தான். ஆகவே பெண்வடிவான ஆதிபராசக்தி அனைவருக்கும் தாய். தாயிடந்தான் தயை, கருணை, அன்பு, தியாகம், சாந்தம், பொறுமை, கைமாறு, கருதாக்கொடை, சுயநலமில்லாச் சமநோக்கு குறிப்பறிந்து உதவும் குணமத் யாவும் சிறக்கக் காண்கிறோம். சக்திதான் முழுமுதற்பொருள். சக்தியினின்றே முத்தொழில் புரிவிளக்கம் கூறுவார்கள் பொதிச்சுவாமிகள்.

“முக்திக்குப் போகும் வழி அறியும் மார்க்கமே ஆன்மிகம். தமிழுக்கு நன்னூல் போல் முக்திக்கு ஆன்மிகம், நன்னூல் சூத்திரம் போல் ஆன்மிகத் தத்துவம். தன்னூல் படிக்காமல் தமிழ் அறிஞர் ஆக முடியுமா? முடியாது. அதேபோல், ஆன்மிக உட்கருத்து அறியதவன் முக்திக்குப் போக முடியாது. ஆன்மிகம் பற்றி அறிய என்ன தெவை? அறிவு, அதுவே நன்னூலைப் பற்றி அறியவும் தேவை. அறிவைக் கொண்டு என்ன செய்ய வேண்டும்? முதலிலே நல்லது கெட்டதை அறிய வேண்டும். கெட்டதைக் கண்டு தெளிந்து ஒதுக்கி நல்லதை நாட வேண்டும். நல்லதை நாடிய பின், முப்பானூலுக்குப் பரிமேலழகர் உரைபோல், நல்லதிற்கும் உரை காணவேண்டும். மனத்தை ஓர்மைப்படுத்தி சிந்தித்தால் நல்லது விளங்கும். அப்புறம் அந்த நல்லதைக் கொண்டு ஆன்மாவை சுத்தி செய்ய வேண்டும். அதன் பின் தான் தியானத்திற்குப் போக வேண்டும். ஆன்ம சுத்திக்கு கெட்டதைக் கண்டு களையவேண்டும். ஆன்ம சுத்திக்குப்பின் என்ன செய்ய வேண்டும்? மனத்தைப் பழக்க வேண்டும். மனம் ஒரு குரங்கு. குரங்கிலும் குட்டிக்குரங்கு. இலகுவில் அடங்காது, ஆத்தாளை மதிக்காது, அப்பாவை மதிக்காது. பயம் என்பதே அறியாது. மனத்தை அடக்க அதன் போக்கை ஒரு நிலைப்படுத்த வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? தன்னை அறிய வேண்டும். தன்னிலை அறிய வேண்டும்; மாற்றானை அறிய வேண்டும்; அவன் நிலை அறிய வேண்டும்; நல்லதைச் செய்ய வேண்டும்; ஈகையை வளர்க்க வேண்டும், ஆனால் ஏமாளியாய் இருத்தல் கூடாது; அடக்க முள்ளவனாயிருத்தல் வேண்டும்,ஆனால் அடங்கிப் போய்விடக் கூடாது; பண்பாளனாயிருத்தல் வேண்டும், ஆனால் பயப்பட்டவனாயிருத்தல் கூடாது; குழந்தையிடம் அன்பாயிருத்தல் வேண்டும், ஆனால் பிள்ளை மாயை யுடையவனாயிருத்தல் கூடாது. மேற்கண்ட குணங்களாம் சங்கிலியால் மனக் குரங்கைக் கட்டி வைத்தல் வேண்டும்.

பின்னர், ஒன்றையே நாட வேண்டும். அதுவும் நன்றே நாட வேண்டும், நன்று பலவிதம்; பசித்தார்க்கு தராதரம் பாராது அன்னமிடுவது; துன்புற்றார்க்கு இன்சொல்லால் ஆறுதல் கூறுவது; ஏழை பணக்காரன் என்று பாராது அன்பு செலுத்துவது; நல்லாரைக் காண்பது நம் பேச்சைச் சுருக்கி, நல்லார் கண்டறிந்ததைக் கேட்டுத் தெளிவது; சித்தர் சமாதிகளை தரிசிப்பது அச்சமாதிகளில் நின்று மனத்தை ஒரு நிலைப்படுத்தி, சில காலம் மௌனம் மேற்கொள்வது. இவையெல்லாம் செய்து வந்தால் மனக்குரங்கு தம் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி நின்று நாம் சொன்னபடி கேட்கும். இச்சாதனைகள் எல்லாம் முடிந்த பின்தான். மனத்தை ஓர் நிலைப்படுத்தி தியானத்திற்கு செல்லலாம். அதில் எந்நிலையிலும் தடங்கல் வரலாம். அதிகக் கவனம் தேவை. தியானத்திற்கு முன் எதையாவது ஒன்றைத் தியாகம் செய்தாக வேண்டும். எதைச் செய்வது? உயிருள்ளவை மீதுள்ள பாசம், உயிரற்றவை மீதுள்ள பற்று நான் என்ற அகம், மண் பெண், பொன் மீதுள்ள மோகம், சுகபோகம் இவற்றுள் ஏதாவது ஒன்றைத் திரிகரண சுத்தியோடு தியாகம் செய்ய வேண்டும். அதன்பின் கனவிலும் அதை நினைக்கக்கூடாது. பின்னர் தியானம் செய்ய வேண்டும். அறிவு, மனம், மூச்சு யாவற்றையும் ஓர் நிலைப்படுத்தி, நம்முள் உள்ள ஆன்ம சோதியை நினைத்தல் வேண்டும். சிறுகச் சிறுக, மாத்திரை மாத்திரையாக நேரத்தைக் கூட்ட வேண்டும். சாதனை ஏறஏற யோக நிலை கூடும். யோக நிலை கூடக்கூட வைத்தியம், சோதிடம், சித்து, திரிகாலம், இறுதியாய் முத்திக்கு வழி, இம்மையில் ஆரம்பித்து மறுமையில் தொடரும். இவற்றை தனியாயிருந்து சிந்திக்க வேண்டும் என ஆன்மிக இலக்கணம் போதிப்பார்கள் பொதிச் சுவாமிகள்.

எல்லாம் வல்ல சித்தரான பொதிச்சுவாமிகள், “இறைவன் நம் உள்ளக் கமலத்தில் ஆன்மாவினுள் உள்ளான். வெறும் உண்ணும் உணவாலும், உடையாலும் இறைவனை அடைதல் இயலாது. திரிகரண சுத்தியோடு நம்முன் உள்ள சோதியை நாடினால் ஞானம் கிட்டும். அரிய மானிடப் பிறப்பு எடுக்கும் ஒவ்வொருவரும் ஞானம் பெற்று, ஆத்ம அருளை அடைந்து, அருளுடன் ஒன்றிக் கலந்திட வேண்டும். உடம்பினுள் உள்ள சோதியை உணர்ந்து, அறிந்து பிரம்மமானால் ஞானியே! ஞானி என்றால் யார்? பஞ்ச பூதங்களின் நுட்பங்களையும், உலக மாயையையும் அறிந்து தெளிந்து, அவற்றின் நிலை கண்டு, இயக்கம் கண்டு, நிறைகண்டு, நிதானித்து, நிர்பயமாய், நிர்மலமாய், நிர்மதியாய் அளந்து நிறுத்து, அதன் சுவை கண்டு, நிறம்கண்டு, இனம் கண்டு, “தூ” இவ்வளவு தானா அவை என்றுணர்ந்து, நிரந்தரமற்ற அவை தேவையில்லையென உதறித்தள்ளி, அவற்றை எல்லாம் ஆட்டிப் படைக்கும் ஆதிசக்தி நீயென உணர்ந்து, உன்னையே நாடல் வேண்டும். நீ என்றும் நிர்குணமாய், நிர்மலமாய், நிர்ச்சலமாய், நிர்மதியாய், ஆதிசக்தியாய், அறிவாய் விளங்கும் பரம்பொருள், நீயின்றி நானில்லை, நற்குணமில்லை, ஊணில்லை, உறக்கமில்லை, உன்னையே சிந்திக்கும் அறிவில்லையேல் அண்ட சராசரமேயில்லை. ஆகவே, உன்னையே அடைவேன் நான். ஞான், நீ இரண்டும் ஒன்று சேர்ந்து கலந்ததே ஞானி என உபதேசிப்பார்கள்.

முருகனுக்கு பொதிச்சுவாமிகள் கொடுக்கும் விளக்கமே தனிச்சிறப்பு வாய்ந்தது. “ஒரு கோடி ஞானிகளின் சக்தியைப் பிளந்து வடித்து ரசத்தை சல்லடையில் சலிந்து வாலையில் வடித்து அம்மையப்பன் அருளெனும் வடித்துணியால் வடிகட்டி அதிலிருந்து வரும் முத்துத்தான் முருகன். ஞானத்தில் சிறந்த முத்து, ஞானச் செல்வ முத்து. அதனால்தான் சிவனுக்கு ஞானம் உரைத்தான். ஞானிகள் தேடிய சொத்தெல்லாம், பெருமையெல்லாம் உரைத்தான். ஞானிகளின் பெருமையே பிரணவ மந்திரம். அதனையே ஞானமுத்து முருகனான தகப்பன் சாமியாம் பரம குரு தந்தைக்கு உரைத்தான். இதனால் ஞானிகளின் உயர்வு தெரிகிறது. ஒரு கோடி ஞானிகள் ஈசனுக்கு சமம். ஆனால், ஆதிபராசக்தி தான் ஒப்பற்ற முதல் சக்தி. மாசு மறுவற்றவள். தலை சிறந்தவள் மற்றதெல்லாம் அவளது கிளை சக்திகளே, என்பார்கள்.

“தற்காலம் சக்தியுகமே” எனக் கூறும் பொதிச்சுவாமிகள், “வெறுமையில் முழுமை காண்போம். வெறுமையென்றால் சூன்யம். அந்தச் சூன்யத்திலிருப்பது அருள்மிகு ஆன்மாக்கள். அருள்மிகு ஆன்மாக்கள் வாழுமிடந்தான் சூன்யம். அந்த வெறுமையில் இருக்கும் அருள்மிகு ஆன்மாக்கள்தான் அகில உலகத்தையும் ஆட்டிப் படைப்பவை. கலியுலகிலுள்ள எல்லா உயிர்களும் அந்த அருள்மிகு ஆன்மாக்களது ஆதிக்கத்திற்கு உட்பட்டவைதான். அந்த அருள்மிகு ஆன்மாக்கள் உலகில் சிலருக்கு அருகாமையிலும், சிலருக்கு வெகு தொலைவிலும் உள்ளார்கள். வெறுமையிலுள்ள ஆன்மாக்களின் அருளாசி பெற்ற உயிர்களுக்கு அருகாமையிலும், பெறாத உயிர்களுக்குத் தொலைவிலும் இருக்கும். அதுவே அருட்சட்டம். அச்சட்டத்தைப் படைத்தது மாதா. “அ” முதல் “ன்” வரை எல்லாவற்றையும் படைத்தவள் அவள். அந்த மாதாதான் ஆதிபராசக்தி”, என்பார்கள் பொதிச் சுவாமிகள்.

“அடிமை நவக்கிரகத்தையும் மாற்றும், சித்துக்களும் புரியும். ஆனால், அவையெல்லாம் ஆன்மிக ஞானத்தின் அரிச்சுவடி. முதல்படி. நாம் அவற்றைக் கடந்து முன்னேறி மேலே செல்ல வேண்டும். உள்ளொளியை நாடி உண்மையை உணர வேண்டும். ஆதிபராசக்தி அருள் பெற்று இறையுடன் இரண்டறக் கலக்க வேண்டும்” என்பார்கள் சுவாமிகள்.
இவ்விதம் தத்துவக் களஞ்சியமாய், ஞானதீபமாய், அருள் விளக்கமாய் உலகில் விளங்கிய தெய்வத்திரு பசுபதி பரமகுரு பொதிச்சுவாமிகள் 1930-ஆம் ஆண்டு கருவையில் சமாதி கொண்டு இறையுடன் இரண்டறக் கலந்தார்கள்.

“கருவையம்பதியில் வாழ்ந்து கருணையின் வடிவமாகி
பெருமானை தனைத்துறந்து பெறற்கரும் தவங்க ளாற்றி
இருவினை வென்றே யென்றும் இன்பமாம் சமாதி கொண்ட
பொருவில பொதிச்சுவாமி பூங்சுழல் போற்றி போற்றி!”

ஓம் சக்தி!
நன்றி: சக்தி ஒளி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here