பாகம் – 2

‘‘மேலே நாடுகள் உடம்பையும் ஆன்மாவையும் இணைத்து ஆக்க பூர்வமான பணிகளில் ஈடுபடுத்த இன்னும் தொடங்கவில்லை. இந்தியாவைப் பொறுத்தமட்டில் இன்னும் மிக நீண்ட தூரம் செல்ல வேண்டியவர்களாக உள்ளோம் என்பது வெளிப்படை. என்றாலும் நாம் செல்ல வேண்டிய பாதையில் பெரிய தடைகள் என்று ஒன்றும் இருப்பதற்கில்லை. இடைக்காலத்தில் வெளிப்படாமல் மறைந்து இருந்தாலும் மிகப் பழங்காலந்தொட்டே இந்திய எண்ண அடிப்படையில் விஞ்ஞான ரீதியான மனோபாவமும் அணுகுமுறையும் நிறைந்திருந்ததுடன் பன்னாட்டு மன நிலையும் இருந்து வந்துள்ளது. இந்த எண்ண அடிப்படை சத்தியத்தை நாடிச் செல்வதில் ஓர் அஞ்சாமையும், மானிட குல ஒருமைப்பாட்டில் ஒரு நம்பிக்கையும், உயிர் வாழ்வன அனைத்திலும் ஒரு தெய்வ சாந்தி நித்தியம் உண்டு என்ற நம்பிக்கையும், தனிமனித வளர்ச்சிக்குத் தடை விதிக்காமல் ஊக்குவிக்கும் இயல்பும் கொண்டு விளங்கிற்று” அடுத்து ‘‘இராமகிருஷ்ணரும் விவேகானந்தரும்” (பக்2) என்ற தம் சொற்பொழிவில் இவ்வாறு ஜவஹர்லால் நேரு கூறுகிறார்.

‘‘இந்திய நாடு, தனது நீண்ட நெடிய வரலாற்றில், உலகின் பிற பகுதிகளில் என்ன நிகழ்ந்த போதிலும் வாழ்க்கையின் மதிப்பீடுகளை மறக்கவே இல்லை. இதன் பயனாக சத்திய ஆராய்ச்சிக்கு ஒரு அழுத்தம் தந்து வந்துள்ளது. இதன் விளைவு என்னவென்றால் சத்திய நாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எந்தப் பெயரைச் சூடிக்கொண்டு இதில் ஈடுபட்டாலும் அவர்களை இருகரம் நீட்டி இந்த நாடு வரவேற்றது. எனவே, சத்திய நாட்டம் மெய்ப்பொருள் தேடல் என்ற வழிகளில் இந்தியா ஒரு பாரம்பரியத்தை உற்பத்தி செய்துவிட்டது. அன்றியும் தத்தம் வழிகளில் நின்று சத்திய நாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வெறுப்புணர்ச்சி காட்டாமல் அவர்களிடம் ஓர் ஒப்பற்ற சகிப்புத் தன்மையையும் இக்காடு காட்டி வந்துள்ளது.”

மெய்ப்பொருளை பூத விஞ்ஞானத்தின் உதவி கொண்டு ஆராயலாம். ஆனால் முடிவு காண முடியாது. இதன் காரணம் வெளிப்படை, பூத விஞ்ஞானம் பொறி அறிவின் (Sense date) துணை கொண்டு சேர்க்கப்படும் அறிவையே முற்றிலும் நம்பியுள்ளது. விஞ்ஞானம் என்ற சொல்லுக்கு அடைமொழியாக உள்ள பூத என்ற சொல்லே இதன் எல்லைக்குட்பட்ட தன்மையை உணர்த்தி விடுகிறது. விஞ்ஞானத்தின் இந்த எல்லைக்குட்பட்ட தன்மையை சர் ஆர்தர் எடிங்க்டன் என்ற கணித வானியல் அறிஞர் உட்பட பல விஞ்ஞானிகளும் ஒப்புக்கொண்டு உள்ளனர். எடிங்க்டன் ‘‘பூத விஞ்ஞானத்தின் தத்துவம்” என்ற தம் நூலில் (பக் 16-17) இவ்வாறு பேசுகிறார்.

‘‘பீன்களின் வகைகளை ஆராய்கின்ற வல்லுநர் ஒருவர் கடல் வாழ் மீன் இனங்களை ஆராய்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பெரிய வலையைக் கடலில் வீசிப் பல்வேறு இன மீன்களையும் உயிர் வர்க்கங்களையும் வலையிற் பிடித்து மேலே போடுகிறார். ஒரு விஞ்ஞானி என்ற முறையில் வலையில் அகப்பட்டுள்ள உயிர் வகுக்கங்களை வரிசைப்படுத்துவார் அவர். இரண்டு பொதுவான முடிவுகட்கு அவர் வருதல் கூடும்.

1. கடல் வாழ்வனவற்றுள் இரண்டங்குல நீளத்திற்குக் குறைந்த உயிர்கள் இல்லை. 2. எல்லாக் கடல் வாழ் பிராணிகட்கும் கில் எனப்படும் உறுப்பு உண்டு.

இந்த இரண்டு முடிவுகளும் அவர் வலையில் அகப்பட்ட பிராணிகளைப் பொறுத்தமட்டில் உண்மை என்பதையும் எத்தனை முறை வலையை வீசிப் பிராணிகளைப் பிடித்தாலும் இப்பொதுத் தன்மை உண்மையே என்பதையும் அவர் அறிகிறார். எந்த இனத்தை அவர் வலையில் பிடித்தாரோ அந்த இனப் பிராணிகட்கு இவை பொருந்துமே தவிர பிற இனங்கட்கு இப்பொதுத் தன்மை பொருந்தும் என்று கூற அவர் முன்வரமாட்டார்.”

இதே நூலின் முகவுரையில் (பக்X) இவ்வாசிரியர் பின்வருமாறு கூறியுள்ளார்.

‘‘சத்திய நாட்டத்தில் பூத விஞ்ஞானம் பின்பற்றச் செல்கின்ற வழி தவிர மனித அனுபவத்தின் பிற பகுதிகளைப் புறக்கணித்துவிட வேண்டும் என்று கூறுகிறவர்கள் கூட்டத்தில் நான் ஒருவன் அல்லன். பூத விஞ்ஞானம் மிக அண்மைக் காலத்தில் தோன்றியது; அது நிலைபேறு உடையதா என்பதை இன்னும் சோதித்து முடிக்கவில்லை, என்றாலும் விஞ்ஞானத் தத்துவத்திற்கும் மனித அனுபவம் முழுவதையும் ஏற்றுக்கொண்டு பேசும் தத்துவத்துக்கும் பெரிய முரண்பாடு ஒன்றும் இருப்பதாக நான் கருதவில்லை.”

பூத விஞ்ஞானமும், பௌதிக விஞ்ஞானிகளும் விஞ்ஞானம் என்ற சொல்லின் முன்னர் அடைமொழியாக உள்ள பூத என்ற சொல்லின் எல்லையை மறந்து விட்டோ, மறுத்து விட்டோ மனித ஆன்மாவைப் பற்றியோ, சத்தியப் பொருளின் இயல்பு பற்றியோ தன் முடிந்த கருத்து என்று ஏதானும் ஒன்றைச் சொல்லத் தொடங்கினால் அந்த வினாடியே விஞ்ஞானமும், விஞ்ஞானியும் சத்திய நாட்டத்தைக் கைவிட்டு விட்டு வீண் பிடிவாதக் கொள்கையைப் பின்பற்றுகின்றனர் என்று ஆகிவிடும். இதேபோல ஆதி சங்கரரும் உபநிடத வியாக்கியானத்தில் பின்வருமாறு கூறுகிறார். ‘‘புலன் அனுபவத்திற்கு அப்பாற்பட்டதாகிய ஆன்மிக விஞ்ஞானம், புலன் அனுபவத்திற்கு உட்பட்டதும் பூத, விஞ்ஞானத்தின் ஆட்சிக்கு உட்பட்டதுமாகிய பௌதிக இயல்பற்றி பேச உரிமை பெறவில்லை.”

உபநிடதம் (3-9-1 மற்றும் 4-3-6) மேலும், அறிவியலின் பிற துறைகளின் ஏதாவது ஒன்றின் மூலம் முரண்பாடு என்று நிறுவப் பெற்ற ஒன்றை மறுத்துப் பேசச் சுருதிகட்கும் உரிமை இல்லை. அதாவது ‘‘நெருப்புக் குளிர்ந்து பொருளை நனைத்துவிடும் இயல்புடையது” என்று கூற சுருதிக்கு உரிமை இல்லை. இதன் எதிராக சுருதிகள் ‘‘தத்துவம் அஹி” – நீ அதுவாக உள்ளாய் என்று கூறினால் இதன் எதிராக பிற அறிவியல் துறைகள் என்ன கூறினாலும் அவை தவறுடையவை என்று கொள்ள வேண்டும். உதாரணமாக அறிவிற் குறைந்தவன் (அஞ்ஞானி) மின்மினிப் பூச்சியை நெருப்பு என்றும், ஆகாயம் என்பது நீல நிறமுடைய தரைப்பகுதி என்றும் கூறுகிறான். உண்மையில் இவை இரண்டு முடிவுகளும் அவன் புலன் (பொறி) அனுபவத்தால் பெற்றவையாகும் என்றாலும் அறிவியலின் பிற துறைகள் இவை இரண்டு முடிவுகளும் தவறானவை என்று கூறுமேயானால் அஞ்ஞானியின் புலன் அனுபவமாக இவை இருந்தாலும் தவறு தவறுதான்.

‘‘சமயமும் விஞ்ஞானமும்” (வி.முழு நூல்கள் Vl ப.81) என்ற தம் உரையில் விவேகானந்தர் பின்வருமாறு கூறுகிறார்.

‘‘அனுபவம் ஒன்று மட்டுமே அறிவைத் தரவல்லது. இந்த உலகத்தில் சமயம் என்ற விஞ்ஞானம் ஒன்று மட்டிலுமே அனுபவ அடிப்படையில் போதிக்கப்படுவதில்லை. அதனால் அதில் தெளிவான முடிவுகள் தென்படுவதில்லை. இவ்வாறு இருத்தல் கூடாது. எல்லாக் காலத்திலும் சமயம் என்பதைத் தம் அனுபவ அடிப்படையில் உணர்ந்து அதனை உபதேசிக்கும் ஒரு சிறு கூட்டம் உண்டு. இவர்களையே மெய்ப்பொருள்ஞானிகள் (Mystics) என்று கூறுகிறோம். எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்களானாலும் எந்த மொழியில் பேசுகிறவர்களானாலும் எந்த மொழியில் பேசுகிறவர்களாக இருப்பினும் இவர்கள் அனைவரும் ஒரே கருத்தைத்தான் கூறுகின்றனர். இவர்கள் கூறுவது தான் சமய விஞ்ஞானம் ஆகும்”

‘‘கணிதம் என்பது எப்படி உலகின் எந்தப் பகுதியிலும் மாறுபடுவதில்லையோ அதேபோல மெய்ப்பொருள் ஞானிகளும் மாறுபடுவது இல்லை.”

இரசாயனமும் பிற இயற்கை விஞ்ஞானமும் எவ்வாறு இந்தப் பூத உலகைப் பற்றிப் பேசுகின்றனவோ அப்படியே சமயம் என்பது இவ்வுலகை கடந்த உண்மைகள் பற்றிப் பேசுகிறது. இரசாயனம் பற்றி அறிய வேண்டியவன் படிக்க வேண்டியது இயற்கையாகிய புத்தகத்தையேயாகும். அதேபோல சமயத்தைப் பற்றி அறிய வேண்டியவன் படிக்க வேண்டிய புத்தகம் அவனுடைய மனம். நெஞ்சம் ஆகியவையாகும். ஞானியானவன் தன் மனம், நெஞ்சம் என்பவற்றை மட்டும் படித்துவிட்டு பு+த விஞ்ஞானம் பற்றிப் பேசினால் அது தவறாகிவிடுகிறது, காரணம் அவன் தவறான புத்தகத்தைப் படித்துவிட்டுப் பேசுகிறான். அதே போல அகத்தைப் படித்து அறிந்துகொள்ள வேண்டிய சமயத் தத்துவத்தைப் பேச வருகின்ற விஞ்ஞானி புற உலகம் என்ற தவறான புத்தகத்தைப் படித்துவிட்டுப் பேசுவதால் அவனும் தவறு இழைக்கிறான்.

இன்றைய உலகில் நலின பூத விஞ்ஞானத்தின் குரல்வளையை அமுக்குவதுடன் மனித மனத்தையும், சமுதாயச் சூழ்நிலையையும் குளறுபடி செய்கின்ற பிடிவாதக் கொள்கை ஒன்று உண்டு என்றால் அதுதான் உலகாயதம் (Meterialism) என்ற கொள்கையாகும். அதி அற்புதமான இந்த விஞ்ஞான யுகத்திலும் இக்கொள்கை அடம்பிடிக்கின்றது. மிகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகள் கூட இதை எதிர்த்துக் குரல் எழுப்புவதுடன் எச்சரிக்கையும் செய்துள்ளனர்.

பரிணாமத் தத்துவத்தை வழங்கிய சார்லஸ் டார்வினுடன் ஒத்துழைத்தவரான தாமஸ் ஹக்ஸிலி என்ற விஞ்ஞானி தம்முடைய வழியும் பயனும் (Methods and Results) என்ற நூலில் (Vol I பக் 161) உலகாயதம் என்பது முன்பின் இல்லாமல் இடைப் பிறவரலாக (Intruder) வந்த கொள்கையாகும் என்று கூறிவிட்டு வாழ்க்கைத் தத்துவத்தில் உலகாயதம் என்பது அர்த்தமற்ற ஒன்று என்றும் மறுக்கிறார்.

ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here