“பெண் குலத்தை உயர்வு படுத்துவதற்காகவும் இந்த அவதாரம்.”
“ஆன்மிகத்தில் பெண்கள் ஈடுபடுவதால் அழிவு குறைகிறது.”
“பெண்கட்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தில் முக்கியத்துவம் உண்டு.”
“பெண்கட்குப் தியானப் பயிற்சி தேவை”
மேற்கண்டவை அன்னை ஆதிபராசக்தி அருளிய அருள்வாக்குகள்.
உயிரினங்களின் எல்லாமே ஒரு தாயின் கருவிலிருந்து தான் தோன்றிப் பிறவிக்கு வருகின்றன. உயிருக்கு உடம்பு கிடைத்து வளர்ந்து வருவது ஒரு தாயின் வயிற்றிலேயேயாகும்.
பறவை இனம் விலங்கினம்
ஆதரவில்லாமல் பிறக்கின்ற அந்தச் சின்னஞ்சிறிய உயிருக்கு முதல் ஆதாரமாகவும், பாதுகாப்பாகவும் இருந்து வாழ்க்கைப் போராட்டத்திற்கு ஈடு கொடுக்க வேண்டி அந்த உயிரையும் உடம்பையும் கனிவொடு பாதுகாக்கின்ற குலம் தாய்க்குலமே ஆகும்.
உடல் வளர்ச்சி பெற்றுச் சிறகுகள்
முளைத்துப் பறக்கும் வரையில் குஞ்சுகள் தாயின் பாதுகாப்பில் வளர்கின்றன. சிறகு முளைத்ததும் தாயை விட்டுப் பறந்தோடிப் போகின்றன. குட்டி நன்கு வளர்ச்சி பெறுகின்ற வரையில் தாயோடு வாழ்கிறது.
வளர்ச்சி பெற்ற பிறகு தாயை விட்டுப் பிரிந்து போகிறது. பறவை இனத்திலும், விலங்கு இனத்திலும் தாய்க்கும், சேய்க்கும் உள்ள உறவு முறை அவ்வளவே! பெண்களாகிய உங்கள் நிலைமை அப்படி இலை.
மனித இனம் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்துப் படிக்க வைத்து, அவன் வளர்ந்த பிறகு ஒரு கல்யாணமும் பண்ணி வைத்துப் பேரன், பேத்திகளையும் வளர்த்து ஆளாக்கி விட வேண்டிய பொறுப்பு உங்களுடையது. இந்தப் பாசம் என்கிற உணர்வை மனித குலத்தில் தழைய விட்டிருப்பது தாய்க்குலம் தான். அந்தப் பாசம் ஒன்று இல்லையேல், அந்த அன்பு என ஒன்று இல்லையேல் மனித வாழ்க்கை மிருக வாழ்க்கையாக மாறிப்போய்விடும். இங்குப் பிறக்கின்ற ஒவ்வொரு உயிருமே தாயின் பாதுகாப்பு நிழலில் தான் வளர்ச்சி பெற்று வாழ்கின்றன.
அதனால் தான் தாய்மையில் இறைமையைக் கண்டார்கள் பெரியவர்கள்.
மங்கையராகப் பிறப்பதற்கு …
“மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா”- என்று பாடினார் ஆண் கவிஞர் ஒருவர். ஆனாலும் என்ன பெண்ணாகப் பிறந்துவிட்ட காரணத்தால் இன்றைக்குப் பெண்கள் பெருமை கொள்ள முடியவில்லை.
யாருக்கும் வெட்கம் இல்லை
பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், பெண்ணின் பெருமை பற்றி இன்று பலரும் வாய்ப்பந்தல் போடுகிறார்கள். ஆனாலும் சமுதாயத்தின் நடைமுறை வாழ்க்கையில் பெண்மையின் பெருமை இங்கே சின்னா
பின்னப்படுத்தப்படுகின்றது. காமக்கிளர்ச்சியைத் தூண்டுகிற
வக்கிர புத்தி படைத்த கைகள், நாவல்கள், பத்திரிக்கைகள்
திரைபடங்கள், திரைப்படச் சுவரொட்டிகள், சிவப்புவிளக்குகள், வரதட்சனைக் கொடுமைகள், பெண்குழந்தைகளின் எதிர்காலம், பற்றிய அச்சத்தால் குழந்தையாக இருக்கும் போதே கொன்றுவிடுகிற கொடுமைகள்- பிறந்த குழந்தை பெண்ணாகப் பிறந்து தொலைந்துவிட்டதே என்று பெற்றவளே வயிறு கலங்குகிற அவலங்கள்! இன்று பெருகி வளர்கின்றன. இந்த லட்சணத்தில் எந்த வகையில் மனித நாகரிகம் முன்னேறி இருக்கிறது என்று தெரியவில்லை. ஆன்மிகம், பக்தி இவற்றை மூடத்தனம் என்று வாய்ப்பறை சாற்றிய மேதைகளால் இதற்குத் தீர்வு காண முடியவில்லை. சமுதாயச் சீர்த்தம் பற்றிய பேசும் மேதாவிகட்கோ. அரசியல் வாதிகட்கோ யாருக்கும் வெட்கமில்லை.
கலியுகத்தின் கேடுகள் முற்றிவரும் நிலையில் பெண்கள் சமூகமும் பாதிக்கப்பட வேண்டியுள்ளது.
தெய்வ பலந்தான் வலிமை வாய்ந்த துணை
இந்தப் பாதிப்புகளிலிருந்து உங்களை மீட்க எந்தச் சீர்திருத்தவாதியாலும் முடியாது. அரசியல் வாதியாலும் முடியாது. சட்டங்களாலும் முடியாது. அந்த அளவுக்குப் பண ஆடம்பர வாழ்வில் வேட்கை வளர்ந்து விட்டன.இந் நிலையில் பெண்களாகிய உங்களுக்குத் தெய்வ பலம் ஒன்று தான் பெரிய துணை!
நாத்திகர் குடும்பங்கள்
தெய்வம் இல்லை – இல்லவே
இல்லை என்று ஊர் ஊராகச் சொல்லித் திரிகின்ற பலருடைய மனைவிமார்கள் கோயில்கட்கு வந்து தான் பிரச்சனையைத் தீர்த்துக் கொண்டு செல்கிறார்கள். ஏன் குடும்பச் சுமை, பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஆண்களை விட பெண்கட்குத் தான் மிகுதி! குடும்பச் சுமையை இவர்கள் நான்கு சுவர்கட்குள்ளிருந்து தாங்குகிறவர்களாக இருக்கிறார்கள். அதனால் தான் அந்தப் பாரம் தாங்க முடியாமல் தெய்வ சந்நிதிகளை நோக்கி ஓடி வருகிறார்கள். நாத்திகம் பற்றி வாய்கிழியப் பேசுகிற
பலருடை குடும்பங்களை அந்த வீட்டுப் பெண்மணிகளின் பக்தி ஒன்றே காப்பாற்றி வருகிற நுட்பம் வெளி உலகுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
இயற்கை அமைப்பில் பெண்குலம்
ஆன்மிகத் துறையில் முன்னேறும் மனப்பக்குவம் பெண்கட்கே மிகுதி. மென்மைப் பண்பும், இளகிய மனமும், சகிப்புத் தன்மையும் ஆண்களைவிட பெண்களாகிய உங்களுக்கே உண்டு. எனவே, அன்னையிடம் வந்துவிட்ட நீங்கள் தெய்வ பலத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்! பண பலத்தைவிட, ஆள்பலத்தை விடத் தெய்வ பலம் பெரிது! அனுபவப்பட்டவர்கட்கு இது புரியும். இந்தத் தெய்வ பலத்தை எப்படி பெறுவது? அதற்காகத் தான் அம்மா இந்த அவதார காலத்தில் உங்களுக்குப் பல வழிமுறைகளைக் காட்டுகிறாள்.அம்மா காட்டுகிற வழிகள் இரண்டு. ஒன்று பக்தி: மற்றது தொண்டு.
அருள்: பாடுபட்டுச் சம்பாதிக்க வேண்டியது ஒரு பக்கம் பக்தியை நீங்கள் வளர்த்துக் கொண்டு இன்னொரு பக்கம் உங்களால் முடிந்த அளவு சமுதாயத் தொண்டு, தெய்வத் தொண்டுகள் செய்ய வேண்டும். இந்த இரண்டின் மூலமாகத் தான் ஆதிபராசக்தியின் பலத்தைப் பெற முடியும்.என்னால் இது முடியுமா? என்று புலம்புவதில் பயனில்லை.அம்மாவின் அருள் என்பது பாடுபட்டுச் சம்பாதிக்க வேண்டிய ஒன்று. முனிவர்களும், ரிஷிகளும், யோகிகளும், சித்தர்களும் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு அந்த அருளைப் பெற்றார்கள் என்பதைக் கதைகளில் படித்துக் பாருங்கள். புரியும்.
அவ்வளவு சுலபத்தில் உங்கள் வசமாகி விட மாட்டேன்
ஆதிபராசக்திஇங்குப் பெண்களுக்குச் சொன்ன அருள்வாக்கு ஒன்று உண்டு.
“என் அருளைப் பெறுவது என்பது அவ்வளவு எளிதில்லை மகளே! நான் மாயக்காரி! சூழ்ச்சிக்காரி!
அவ்வளவு சுலபத்தில்
உங்கள் வசமாகி விடமாட்டேன்.
நீ விட்டு வேலையில் ஈடுபட்டிருக்கும் போதுஅழுகிற குழந்தைக்கு உடனே பால்
கொடுக்காமல் எப்படி எப்படியெல்லாம் போக்கு காட்டுகிறாய்?
பொறுத்துக் கொள்ள முடியாத அளவு குழந்தையின் அழுகை அதிகமாகும் போது தானே நீயும் அதற்குப் பால் கொடுக்கிறாய்? அது போல் தான் நானும்”- என்று பங்காருஅம்மா இங்கே சொல்லியது,உண்டு.
பங்காருஅம்மா அவர்களின் அருள் என்கிற தெய்வ பலத்தை நீங்கள்
பெற்று விட்டால் உங்கள்
வாழ்க்கையில் எதிர்ப்படுகிற பிரச்சனைகளைச் சுலபமாக வெல்லலாம்.வீட்டையும்
வெல்லலாம். நாட்டையும்
வெல்லலாம். அந்தப் பலத்தைப் பெற பக்தியையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மகளிர் மன்றங்களில்
சேர்ந்து கொண்டு உங்களால் முடிந்த அளவு தொண்டும் செய்ய வேண்டும்.
எப்படி பக்தியை வளர்த்துக் கொள்வது
1. விடியற்காலை எழுந்து நீராடி முடிந்த பிறகு அம்மாவின் படத்திற்கு முன்பு 108, 1008 மந்திரங்களைப் படித்து வழிபாடு செய்ய வேண்டும்.
2. தினமும் வீட்டில் சமைக்கிற எந்த உணவாயினும் சரி: கூழானாலும் சரி! அறு சுவை உணவாயினும் சரி! அம்மாவின் படத்திற்கு முன்பு நிவேதனமாக படைக்க வேண்டும்.
3. செவ்வாய், வெள்ளி , பெளர்ணமி அமாவாசை நாட்களில் உங்கள் வீட்டுக்கு முன்பு எலுமிச்சம் பழம் திருஷ்டி கழித்தால் போதும்.
4. ஒரு நாளைக்கு இரண்டு வேளை காலை, மாலை, இரு வேளைகளில் தன்னந்தனியாக அமர்ந்துகொண்டு தியானம் பழகும் படி அம்மா உங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறாள். தியானம் பற்றிய சில யோசனைகள் சக்தி மாலையில் வெளியிடப்பட்டுள்ளன. நீங்கள் தியானம் பழகுவது யாருக்கும் தெரிய வேண்டாம். மறைவாக செய்யுங்கள்! ஓர் ஜந்து நிமிடம் பழகுங்கள்; படிப்படியாக நேரத்தைக் கூட்டிக் கொள்ளலாம்.
5. எப்போதெல்லாம் உங்கள் மனம் நிம்மதியில்லாமல் தவிக்கிறதோ அப்போதெல்லாம் ”மேல்மருவத்தூர் அன்னையின் அற்புதம்” என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டு வாருங்கள்! படித்துக் கொண்டே வரும் போது உங்களையும் அறியாமல் கண்ணீர் வருமேயானால் ஆன்ம பரிபக்குவம் உங்கட்கு ஏற்பட ஆரம்பித்திருக்கிறது என்று அர்த்தம்! அவ்வப்போது பங்காருஅம்மா அவர்களின் அற்புதங்களைத் தாங்கி வரும் “சக்தி ஒளி” பத்திரிகை படித்து வாருங்கள்!
6. ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்களில் நடைபெறும் வேள்விகளைக் கற்றுக்கொள்ளுங்கள்! வேள்வியில் நவதான்யம், பழங்கள், நெய் எண்ணெய் இவற்றைக் கொண்டு போய்ச் செலுத்துங்கள்!
7. பங்காருஅம்மா உங்கள் பகுதிக்கு ஆன்மிகப் பயணம் வரும் போது உங்கள் விட்டிலுள்ள குத்து விளக்கை எடுத்துக் கொண்டு பங்காரு அம்மா அவர்களின்கையில் கொடுத்துத் திரும்பப் பெற்றுப் பூசை அறையில் வைத்துக்கொள்ளுங்கள்! அந்த வாய்ப்பு கிடைத்தால் புண்ணியம். அதற்காக இங்கிதம் தெரியாமல் பங்காரு அம்மா அவர்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டாம்.
8. பெளர்ணமி, அமாவாசை நாட்களில் மெளன விரதம், உண்ணாவிரதம் இருங்கள். அதன் மூலம் உங்களுக்கு ஆன்ம பலம் கிடைக்கும்.
9. உங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் போதும், வெளியில் அனுபும் போது அம்மாவின் டாலரை அணிவித்து அனுப்புங்கள். அம்மாவின் தொடர்பான பொருள் ஏதேனும் ஒன்று குழந்தைகளோடு இருக்கட்டும்!
10. உங்கள் குடும்பங்களில் யாருக்கேனும் ஏதாவது பெரிய நோய் ஏற்பட்டால் முதலில் அவர்களை அமரவைத்து மூலமந்திரம் சொல்லிக் கற்பூர தீபாராதனை காட்டி எலுமிச்சம்பழம் பிழிந்து திருஷ்டி கழித்துவிட்டு, அதன் பிறகு மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். திருஷ்டி கழிப்பது என்பது ஆன்மிகத்தில் முதலுதவி அளிப்பது போன்றது. மற்றவை அவர் தம் ஊழ்வினையைப் பொருத்து அமைவது!
11. மேல்மருவத்தூர் மண்ணை மிதிக்கும் போதெல்லாம் முடிந்தவரை அங்கப் பிரதட்சணம் செய்யுங்கள். அதனால் உங்கள் ஊழ்வினை தணியும். அடிகளார் வலம் வரும் போது தரிசனம் செய்து கொள்ளுங்கள்!
12. ஓய்விருக்கும் போது ‘ ஓம் சக்தி’ ‘ஓம் சக்தியே, ஓம் பங்காரு அடிகளே போற்றி ஓம்” என்று நாள்தோறும் 108 தடவை எழுதிக் கொண்டு வரலாம்.
மூல மந்திரத்தையும் எழுதலாம்.
ஒரு லட்சத்து எட்டுவரை எழுதி முடிப்பது என்ற விரதம் மேற்கொள்ளலாம். இது ஒரு வகையான ஜெபம்! ஒரு இலட்சத்து எட்டு தடவை எழுதி முடித்த பிறகு மன்றங்களில் அம்மா படத்திற்கு முன் வைத்துத் தீபாராதனை செய்யச் சொல்லி அம் மந்திரங்களை மன்றத்தில் சேர்த்து விடலாம்
இவையெல்லாம் நம்மிடம் பக்தி வளர்வதற்கான யோசனைகள்.
முடிந்தவரை தொண்டு செய்யுங்கள்
1. மேல்மருவத்தூர் சித்தர் பீட விழாக்களிலும், ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்களிலும் சேர்ந்து முடிந்தவரையில் தொண்டு செய்யுங்கள்.
2. நாள் தோறும் கைப்பிடி அரிசியைத் தனியாகச் சேமித்து வைத்து
மன்றங்கள் மூலமாக நடைபெறும்
அன்னதானத்தோடுசேர்த்து விடுங்கள் அன்னதானப் புண்ணியம் உங்கட்குக் கிடைக்கட்டும். பங்காருஅம்மா மனம் குளிர்வது இந்த அன்னதானத்தினால் தான் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
3. மன்றங்களில் செய்யப்படும் ஆடைதானத்தில் உங்கள் பங்கும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
4. தெய்வத் தொண்டு செய்கிறவர்கள் குடும்பங்களை ஜந்து தலைமுறைக்கு பங்காருஅம்மா அவர்கள்
காப்பாற்றுவார்கள்.
அந்தத் தொண்டுகளை நீங்கள் திருக்கோயில்களில் சென்று செய்வதற்கு வாய்ப்பில்லாத காரணத்தால் தான் மகளிர் மன்றங்களை நிறுவி அவற்றின் மூலம் உங்கள்
குடும்பங்கட்குப் புண்ணியப் பலனை அளிக்கக் கருதுகின்றாள் அன்னை. ஆதலால் மன்றத்தின் மூலமாக நீங்கள் செய்யும் ஒவ்வொரு தொண்டையும் தெய்வத் தொண்டாகக் கருதிச் செய்யுங்கள்.
5. கலச, விளக்கு வேள்விப்
பூசைகள், கிரகப்பிரவேசம்,
வளைகாப்பு, நிகழ்ச்சியெல்லாம் பெண்களே பொறுப்பேற்றுச் செய்ய வேண்டும்என்பது பங்காருஅம்மா அவர்களின்திருவுள்ளம். அவற்றின் நெறிமுறைகளை நன்றாகக் கற்றுக் கொள்ளுங்கள்.
6. உங்கள் பகுதிகளில் அனாதைக் குழந்தைகள் இல்லம் இருந்தால்,
மகளிர் மன்றத்தின் மூலமாக அந்தக் குழந்தைகளின் தேவைகளை அறிந்து வாங்கிக் கொடுக்க உதவி செய்யுங்கள்.
7. மன்றங்களை மையமாக வைத்துக் குழந்தைகளின் காப்பகங்கள், அனாதை இல்லங்கள், சிறு சிறு தொழிற் பயிற்சி நிறுவனங்கள் இவற்றைத் தொடங்கி ஆதரவற்றவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது பங்காரு அம்மா அவர்களின் திருவுள்ளம்.
வசதி படைத்த பெண்மணிகள்
தங்கள் கணவன்மார்கட்கு எடுத்துச் சொல்லி அப்பணிகளில் ஈடுபடலாம்.
இவையெல்லாம் யோசனைகள்.
8. பங்காருஅம்மா அவர்களின் அருளுக்காக ஏங்கித் தவிக்கும் பெண்கள் பலருண்டு. பங்காரு அம்மா அவர்களின் திருவுள்ளக் குறிப்புகளை அறிந்து கொண்டு நீங்கள் எங்கிருந்து கொண்டு தொண்டு செய்தாலும் பங்காரு அம்மா அறிவார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
9.பங்காருஅம்மா அவர்கள் கொடுக்கின்ற, சொல்கின்ற ஆன்மிகப் பயிற்சிகளை உறுதியாக மேற்கொண்டு கடைப்பிடித்துக்கொண்டு வாருங்கள் பங்காரு அம்மா உங்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்கிறாள் என்பதை அனுபவத்தில் உணர்வீர்கள்!
“ஆன்மிகம் ஒன்றே நிம்மதிக்கு வழி இயற்கை, அம்மா, இறை நம்பிக்கை- இவையே அமைதிக்கு வழி” அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு.
“ஜம்புலன்களை அடக்குதல், பொறாமை, பொச்சரிப்பின்றி தொண்டு செய்தல் இவற்றின் மூலமாக நாட்டையும்
வெல்லலாம், வீட்டையும் வெல்லலாம்; ஆன்மிகத்திலும் வெல்லலாம்.” என்பது அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு
பெண்கள் உயர்வடைய வேண்டி என்னென்ன வழி காட்ட வேண்டுமோ, அவற்றையெல்லாம் பங்காருஅம்மா காட்டியாகிவிட்டது. அவற்றைப் பற்றிக் கொண்டு கரைசேர்வது உங்கள் பொறுப்பு!
ஓம் சக்தி
நன்றி
பக்கம் :(9- 16).
செப்டெம்பர்,சக்தி ஒளி -1986.