“கவலைகள் அறுக” என்றும்
“கடமையில் உறுக” என்றும்
“அவலங்கள் தீர லென்றால்”
“அவன்பாதம் அடைக” என்றும்
பவக்கடல் தூர்க்கும் பாத
பங்கயக் குழந்தைத் தேவே!
தவக்கடல் உன்றன் கண்கள்!
தயைக்கடல் உன்றன் பார்வை!
– மகான் தோத்திரம்

பொற்றாமரையில் நடந்த குழந்தை

ஒருநாள் மீனாட்சி அம்மனுக்குச் சிறப்பு அபிடேகம் நடந்து முடிந்து அலங்காரம் நிகழ்ந்து கொண்டு இருக்கும் நேரம். அரசாங்க அதிகாரி ஒருவர் அம்மன் தரிசனத்திற்காக வந்து நின்று கொண்டிருக்கிறார். குருக்கள் அர்ச்சனை செய்து கொண்டிருக்கிறார். அப்போது அம்மன் வடிவழகு, குழவியாயுள்ள மகான் குழந்தையானந்தரை எத்தன்மையில் ஆழ்ந்திற்றோ தெரியார்! அம்மனை அடிமுதல் முடிவரைத் தொட்டுத் தடவிக்கொண்டே இருக்கிறார்! அணிகலன்களை நீக்குவதும் பூட்டுவதும் கலைப்பதுமாக விளையாடிக் கொண்டு இருக்கிறார்! இக்குழந்தையின் செயல் அதிகப்படியாக இருப்பதாக அதிகாரிக்குப்படுகிறது! உடனே அவர் தனக்கே உரிய அதிகார மிடுக்கில் அர்ச்சகரைப் பார்த்து “என்ன ஐயா! இந்தக் குழந்தையை இப்படி விட்டு வைத்திருக்கிறீர்கள்? அம்பாளிடம் இப்படிச் சேட்டை செய்ய விடலாமா? இழுத்து வெளியே விடுகிறீர்களா? இல்லையா?” என்று கூச்சல் போட்டார். அதற்கு அர்ச்சகர்களும் மற்றவர்களும் இது சாதாரண குழந்தையல்ல் அம்பாள் குழந்தை!

அம்பாளே வளர்க்கும் தெய்வீகக் குழந்தை! அப்படித் தாங்கள் சொல்ல கூடாது” என்றனர்! அதற்கு அதிகாரி “என்னையா புருடா விடுறீங்க! இதெல்லாம் கட்டுக்கதை” என்றார். அதற்குள் அங்குள்ளவர்கள் குழந்தையின் வரலாற்றையும் திருவிளையாடல்களையும் அதற்கு இருக்கும் அம்பாள் அருளையும் எடுத்து விபரமாகக் கூறினர். இதைக் கேட்டுக்கொண்ட அதிகாரி “அப்படி என்றால், இந்தக் குழந்தை பொற்றாமரைக் குளத்தில் நடந்து செல்லுமா? சொல்லுங்கள்” என்றார். குழந்தையின் அருள்வௌ;ளம் பற்றி அர்ச்சகருக்கு முழு நம்பிக்கையுண்டு; “ஆனால் இந்த அதிகாரிக்காக இம்மீனாட்சியின் பாலகனைச் சோதனையன் ஆழ்த்துவதா?” என்றே சிறிது எண்ணினார். அம்மனை உருக்கமாக வேண்டிக் கொண்டு குழந்தையைப் பார்த்தார்! பார்த்ததுதான் தாமதம்! உடனே குழந்தை தரையில் நடப்பது போலவே பொற்றாமரைக் குளத்தில் நடந்து சென்று கைகொட்டிச் சிரித்துக் கொண்டு நின்றது! இந்த அதிசயத்தைப் பார்த்த அனைவரும் வியப்புற்று நின்றனர்! அர்ச்சகர் கண்கள் ஆனந்தக்கண்ணீர் வடித்தன! அதிகாரி ஆணவம் அழிந்து அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டார். எல்லோரும் “மீனாட்சியின் குழந்தை மீனாட்சியின் குழந்தையே” என்றனர்.

பாப்பாத்தியம்மாள் வழிபாடு:

மகானின் தாயார் திரிபுரசுந்தரி அம்மாள், கணவர் இராமசாமி ஐயர் இறப்பின் போதே உடன் கட்டை ஏறினார். சமயநல்லூர் சுந்தரேச சாஸ்திரிகள் என்பாரே இந்த உடன்கட்டைக் கிரியைகளை நடத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது. மகானின் உடன் பிறந்தாரின் வாரிசுகள் இன்றும் ஆண்டு தொறும் திரிபுர சுந்தரி அம்மாள் போரில் சுமங்கலிப் பிரார்த்தனை செய்து வருகிறார்களாம்.

மகானின் தாயார் உடன்கட்டை ஏறின மறுநாள் அவ்வூரைச் சேர்ந்த சொக்கலிங்க நாடார் என்பவர் தன் வயல்வெளியைப் பார்க்கச் சென்றிருந்தார். அப்போது உடன்கட்டை ஏறிய இடத்தில் ஓர் அதிசயத்தைப் பார்க்க நேர்ந்தது. திரிபுரசுந்தரி அம்மாளின் புடைவைக் கொசுவம் (முன்தானை), காதோலை, கருவல் மணி, கைவளை முதலியவை சிதறிக் கிடந்தன. எல்லாம் எரிந்து போன பிறகும் மேலே வைத்திருந்த எலுமிச்சம் பழம் அப்படியே இருந்தது. அவற்றை எல்லாம் கொண்டு வந்து அனைவரிடமும் காட்டினார். ஆயிரத்தில் ஒருவராய்ப் பெருங்கற்புத் தெய்வமாய் உள்ளவர்கட்கு இது வாய்க்கும் என ஊர்ப்பெரியோர்களும் உரைத்தனர். அவற்றை என்ன செய்வதென்று வீட்டாருடன் யோசித்துக் கொண்டிருந்தார். அன்று இரவு நாடாரின் மனைவியார் கனவில் திரிபுரசுந்தரி அம்மாள் தோன்றி “என் பொருள்களைப் பூவாடல் பானையுள் வைத்து வழிபடு. உன் வறுமை தீர்ந்து எல்லாவகையிலும் முன்னேற்றம் அடைவாய்” என்றாராம். அவ்வாறே செய்து பெரும் பலன் பெற்று அதுமுதற் கொண்டு தங்கள் மரபில் பிறக்கும் முதற் குழந்தைக்குப் “பாப்பாத்தி அம்மாள்” “பாப்பு” – “பாப்பையன்” எனப் பெயர்கள் வைத்து வருகின்றனராம். இன்றும் அப்பூவாடல் பானை அந்நாடார் மரபிலேயே உள்ளது.

செட்டி நாட்டில்:

பூவாடல் பானை வைத்து வழிபடுவதும், வீட்டுத் தெய்வ வழிபாடும் பத்தினித்தெய்வம் – கற்புக்கரசிகளின் வழிபாடேயாகும். இதைச் செங்கற்பட்டு மாவட்டத்தில் “பூவாடைக்காரி” வழிபாடு எனக் குறிப்பது வழக்கம். பூவாடைக்காரி என்றால் பூவோடும், பொட்டோடும், மஞ்சள், குங்குமத்தோடும் கணவனுக்கு முன் இறந்து போகும் சுமங்கலிப் பெண்களைக் குறிப்பது ஆகும். இதுவும் கற்புக்கரசிகளின் வழிபாடே! கற்புக்கரசிகட்கே இந்தநிலை வாய்க்கும் என்பது மரபு. உடன்கட்டை ஏறியவர்களைத் “தீப்பாய்ந்த அம்மன்” என்றபெயரால் வழிபடுவதும் தமிழகத்தில் உண்டு. ஆனால் இவற்றுள் “பூவாடல் பானை” வைத்து வழிபடும் “பாப்பாத்தி அம்மாள்” வழிபாடு மட்டும் சிறப்புக்குரியது ஆகும். கற்புக்கரசிகளின் முன்தானை, வளையல், கூந்தால் முதலியவை சிதறுவது கொண்டு மட்டும் வழிபடுவது பாப்பாத்தி அம்மாள் வழிபாடு என்பது தெரிந்து கொள்ள வேண்டும், ஒரு சிலருக்கு மட்டுமன்றி ஏனையோருக்கு வாய்க்காதது இது. செட்டிநாட்டில் பல குடும்பங்கட்குக் குல தெய்வம் இப்பாப்பாத்தி அம்மானே! இந்தநிலை செட்டிநாட்டில் எப்படி உருவாயிற்று? என்பதைப் பார்ப்போம். ஒருசில குடும்பங்களில் ‘‘பூவாடல் பானை” வைத்து வழிபடும் வாய்ப்பு இருக்கிறது. எல்லாச் செல்வமும் இருந்தும் குழந்தைச் செல்வம் இல்லையே என்கின்ற நிலையில் பாப்பாத்தி அம்மாளை வேண்டிக் கொண்டு குழந்தைப்பேறு பெற்றுச் செல்வாக்காக வாழ்கின்றார்கள். அவர்கள் தம்மரபில் தலைக்குழந்தைகட்கு எல்லாம் ‘‘பாப்பாத்தி”, ‘‘பாப்பாயி”, ‘‘பாப்பு” எனப் பெயர்கள் வைத்துப் பாப்பாத்தி அம்மாளைக் குலதெய்வமாக வழிபடுகின்றனர்.

ஒரு செட்டியார் வீட்டில் குழந்தையே இல்லை. அந்த வீட்டு அம்மாளுக்கு அது பெருங்குறையாக இருந்தது. எதிர்வீட்டுச் செட்டியார் மகனுக்குத் திருமண நாள் அன்று குழந்தையில்லாத தன் குறையை நினைத்து அழுதுகொண்டு இருந்தான் அப்பக்கம் பிச்சைக்கு வந்த சாமியார் இந்த அம்மாளைப் பார்த்து “நீ ஏனம்மா அழுகிறாய்” என்று கேட்கிறார்! அதற்கு அந்த அம்மாள் பதில் சொல்கிறாள்! சாமியார் “கவலைப்படாதே! பாப்பாத்தி அம்பாளை வேண்டிக்கொள்; நிச்சயம் உனக்குக் குழந்தையுண்டு; ஆனால் பிறக்கும் குழந்தைக்குப் “பாப்பாயி, பாப்பாத்தி” “பாப்பையன்” – என்று பெயர் வை!” என்று கூறிவிட்டுப் போய்விட்டார். அவ்வாறே பெண் குழந்தை பிறந்ததும் பாப்பாயி என்று பெயர் வைத்தனர்; அது மட்டுமன்றி அவர்கள் மரபில் பிறக்கும் தலைக்குழந்தைக்கும் இப்பெயரையே வைக்கின்றனர்.

இதனால் பாப்பாத்தி அருளும் தெய்வமாகவும், காப்பாற்றுகின்ற தெய்வமாகவும் “இப்பூவாடல் தெய்வம்” எனும் கற்புக்கரசித் தெய்வம் செட்டிநாட்டில் சிறப்பிடம் பெறுகிறது என்பதை அறிகிறோம். இது கொண்டு தமிழ்நாட்டின் சிறப்புக்குரிய பத்தினித் தெய்வ வழிபாடு” “கற்புக்கரசி வழிபாடு” என்பவை வெறும் ஏட்டில் மட்டும் இல்லை; நாட்டிலும் உள்ளன என்று அறிந்துகொள்ள முடிகிறது. இன்னும் பல ஊர்களில் – பல கற்புக்கரசிகட்கு முன்தானை, வளையல் முதலியவை ஒதுங்கும் நிகழ்ச்சியும் உண்டு.

காசி – கணபதி பாபா:

காசிக் கணபதி கட்டத்தில் சமாதியாயுள்ள மகான் இவர். பஞ்சலிங்க கட்டம் என்றும் இவ்விடத்தை அழைப்பது வழக்கம் சுமார் தொள்ளாயிரம் ஆண்டுகள் வரையில் இவர் வாழ்ந்ததாகக் கூறுவர். இவர் சிறந்த சித்தயோகி! மகான் சுழந்தையானந்தரின் குருதேவர் இவரே! மீனாட்சியின் கட்டளைப்படிக் குழந்தையானந்தருக்கு உபநயனம் முதலியவற்றை ஆலயக் குருக்கள்மாரே முடித்து வைத்தனர். அப்போது மகானின் பெயர் “இராசகோபாலன்” என்பதாகும். மேலும் குருகுலவாசக் கல்விக்குக் காசி – கணபதி பாபாவிடம் அனுப்பி வைக்க முடிவு செய்தனர். ஆனால் சிலநாட்களில் யாரைத்தேடிப் போக வேண்டும் என்று நினைத்தார்களோ அவரே மாணவனைத்தேடி வந்துவிட்டார். எல்லோருக்கும் பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல் ஆயிற்று. கணபதிபாபா தென்னாட்டிற்கு யாத்திரையாக வந்தவர், மாணவனை ஏற்றுச் சென்றார். இது இராமனைத்தேடி விசுவாமித்திரர் வந்ததுபோல் ஆயிற்று. குருதேவரிடம் சகல சாத்திரங்களையும் கற்றுத்தேர்ந்த மகான் குழந்தையானந்தர் அந்நாளில் “திரிலிங்கசுவாமிகள்” என்ற பெயரால் அழைக்கப்பட்டார் இமயமலைப் பகுதிகளில் பல்லாண்டுகள் சுற்றியுள்ளார். இவருடைய முதல் சமாதி கணேச கட்டத்தில் இவர் குருநாதரின் சமாதிக்குப் பக்கத்திலேயே உள்ளது.

கருங்குஷ்டம் குணமாதல்:

காசி சமாதிக்குப்பின் “திரிலிங்கசாமிகள்” என்ற பெயரிலேயே அங்கிருந்து கிளம்பி நேப்பாளத்திற்குச் சுவாமிகள் புறப்பட்டு விட்டார். அப்போது பகவான் இராமகிருட்டினரும், விவேகாநந்தரும் மகானைத் தரிசனம் செய்துள்ளனர். ஓர் அன்பரிடம் மகானைப் பற்றிக் குறிப்பிடும்போது திரிலிங்கசுவாமிகளைச் சாதாரணமாக நினைத்து விடாதே! அவரே சிவபெருமான் தான்! சிவனே தற்போது திரிலிங்கசுவாமிகள் உடலில்தான் இருந்து செயலாற்றுகிறார்!” என்கிறார் இதிலிருந்து மகான் எத்தனைப் பெரியவர் என்று உணர முடிகிறது. நேப்பாளத்தில் அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர் ஒருவருக்குக் சுருங்குஷ்டம்! எத்தனையோ வைத்தியமுறைகளைக் கையாண்டும் அவருக்குப் பலனில்லை. அவர், அப்பகுதிக்கு மகான் வந்திருப்பதை அறிந்து பார்த்துத் தன் நோயைக் குணப்படுத்த வேண்டியதும் மகான் அந்த நோயாளியைத் தன் கையால் தடவிவிட்டதுதான். உடனே நோய் குணமாயிற்று “கரும வியாதி தீராது” என்றும், குஷ்டநோய் ஆண்டவன் சாபத்தால் உண்டாவது” என்றும் கூறுவதற்கு மாறாக – மகான் கைவைத்துத் தடவிய மாத்திரத்தில் நோய் குணமாயிற்று என்றால் மகானின் பெருமைக்கு இதைவிடச் சான்று தேவையில்லை.

மகானை இராச மரியாதையோடு அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கேயே அவரைவைத்து அரச குடும்பத்தினர் வணங்கி வந்தனர். அப்போது நேப்பாள அரசர் அளித்தவையே பொன்னாலான மகர கண்டியும், கெளரி சங்கர ருத்திராட்ச மாலையும் ஆகும். இவை விலைமதிக்க முடியாதவை என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகள் நிரந்தரமாக அரண்மனையிலேயே தங்கியிருந்த மகான் – நேப்பாளம் கயிலாசநாதர் ஆலயத்திலேயே இரண்டாவது சமாதியானார்.

இன்னும் இவருடைய சீடர்கள், நேப்பாளம், வங்காளம், காசி முதலிய இடங்களில் ஏராளமாக உள்ளனர். வடநாட்டில் மகான் இருக்கும் காலத்தில் அவதூதராகவே (நிர்வாண நிலையில்) இருந்தார். திபேத், நேப்பாளம், காஷ்மீர், பரொடா முதலிய நாட்டின் அரசர்களும் வந்து வணங்கி ஆசி பெற்றனர். அதனால் மகானை இராஜ பூஜிதமகான், (அரசர்கள் வணங்கிய மகான்) என அழைப்பது வழக்கம்.

தென்காசி சமாதி:

நேப்பாளச் சமாதியிலிருந்து புறப்பட்ட மகான் தம் பழைய “குழந்தையானந்தர்” என்ற பெயரிலேயே தென்னாட்டில் சுற்றினார். குழந்தை போலவே மழலைச் சொல்லில் பேசியதாலும், குழந்தைகளிடம் அதிகம் தொடர்பு கொண்டதாலும், சதா வாய் நீர் ஒழுகிக் கொண்டிருந்ததாலும் மகானுக்கு இப்பெயர் வழங்கிற்று என்பர். இவர் குழந்தை போலவே பெரும்பாலும் அடம்பிடித்தலும் உண்டு.

ஆந்திரப்பகுதிகளில் பல ஆண்டுகள் மகான் சஞ்சாரம் செய்து பல அற்புதங்களை எல்லாம் நிகழ்த்திக் காஞ்சிபுரம் வந்தார். பிறகு பத்து ஆண்டுகள் திருவண்ணாமலையில் மண்ணுக்குள் மகாசமாதியில் இருந்தார். ஒரு செட்டியார் பக்தர் – விநாயகர் கோயிலுக்குள் கடைக்கால் தோண்டும்போது இரத்தம் பீரிட்டு எழப் பயந்து கொண்டு – மேலும் தோண்டாமல் அப்படியே மூடிவிட்டுப் போய்விட்டார். இது போன்ற நிகழ்ச்சி பூண்டி மகான் வரலாற்றிலும் உண்டு. அதிலிருந்து கிளம்பி நேரே தென்காசி சென்று அங்கு மூன்றாவது சமாதியானார். இதனை நெல்லையப்பர் சமாதி என வழங்குகின்றனர். இச்சமாதி தென்காசியில் சந்நிதி மடத் தெருவில் “சங்கரன் பிள்ளை” எனும் மகானின் பக்தர் வீட்டில் உள்ளது.

தொடரும்…

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here