மிகப் பழங் காலந்தொட்டே இத்தமிழச் சாதி இறைவழிபாட்டிற்குத் தலையாய இடங்கொடுத்து வந்தது. இந்தியாவிலேயே அதிகமான கோயில்கள் இங்குத்தான் உள்ளன.

மொஹஞ்சதாரோ, ஹாரப்பா முதலிய இடங்களில் அகழ்வு ஆராய்ச்சி செய்த அறிஞர்கள் இந்நாட்டில் வாழ்ந்த பழங்குடி மக்கள் இறை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர் என்று கூறுகின்றனர். வேதம் சிறப்பித்துக் கூறும் அக்னி வழிபாட்டிற்கு எதிராக இப்பகுதியில் விக்ரக வழிபாடும், அன்னை வழிபாடும் சிறப்புற்று விளங்கின. அங்ஙனம் பழமை தொட்டே சமய நெறி இருந்து வந்தாலும் பிற பழக்க வழக்கங்களைப் போலச் சமய நெறியும் நாளா வட்டத்தில் தன் சிறப்பையும் தனித் தன்மையையும் இழக்கத் தொடங்கிற்று. பரிபாடல் முதலிய, நூல்களில் கூறப்பட்ட உயர்ந்த தத்துவத்துடன் கூடிய சமய நெறி நாளாவட்டத்தில் வெறும் சடங்குகளாய் நின்றுவிட்டன. சடங்குகளே சமயம் என்று கருதும் அளவிற்குத் தாழ்ந்து விட்டோம்.

இதனுடன் அறிவு வளர்ச்சியும் சேர்ந்தவுடன் சமயக்கிளைகள் தோன்றலாயின. வேதாந்தம், சித்தாந்தம் என்னும் பெருங் கிளைகள் இத்தமிழ் நாட்டில் வேர்விட்டு வளரத் தொடங்கின. அறிவின் துணை கொண்டு வளர்ந்த இந்தக் கிளைகளுள் அறிவு வாதம் ஏற்படலாயிற்று. “அத்வைதம்” என்ற ஒரே சொல்லை ஏற்றுக்கொண்டு அந்த ஒருசொல்லுக்கு அத்வைதிகள், விசிட்டாத்வைதிகள், சைவ சித்தாந்திகள், துவைதிகள் என்ற நான்கு கிளைகளும் நான்கு விதமான பொருள் செய்து கொண்டு தம்முன் சண்டை இடலாயின.

இன்றைக்கு 350 ஆண்டுகள் முன்னர் வாழ்ந்த தாயுமானவர் என்ற சித்தர் முதன் முதலாகப் இப்போராட்டத்தைத் தவிர்க்கக் கருதி “வேதாந்த சித்தாந்த சமரச தன்னிலை பெற்ற வித்தகச் சித்தர் கணமே” என்று பாடிச் சென்றார். சமயவாதிகள் சண்டையைப் போக்கி ஒருமைப்பாட்டைக் காண முயன்றவர்கள் சித்தர்கள். பதினெண் சித்தர்கட்குப் பிறகு முதன் முதலில் ஒருமைப்பாட்டைப் பேசியவர் தாயுமானார். அவருக்குப் பிறகு 200 ஆண்டுகள் கழித்துத் தோன்றிய சித்தர் வடலூர் இராமலிங்க வள்ளலார் என்ற பெருமகனார். இவரும் மக்களிடையே சமயம் என்ற பெயரிலும் சாதி என்ற பெயரிலும் மலிந்து கிடக்கும் நோயைப் போக்க வேண்டிச் “சமரச சுத்த சன்மார்க்கம்” என்னும் வழியைப் போதித்தார்.

“சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச் சத்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகு அலவே”

இவர் கண்ட வழியில் மிக முக்கியமானவை சில:

1. இறைவன் ஒளி வடிவானவன்: கருணைக் கடலானவன் (அருட் பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை) 2. உயிர்கள் அனைத்தும் இறைவன் உறைகின்ற கோயில் எனவே எல்லா உயிர்கட்கும் அன்பு செய்வதே இறைவனிடம் அன்பு செய்வதாகும். பிற உயிர்களிடம் அன்பு செய்ய வேண்டும் என்பதை ஓயாது வலியுறுத்தினார் வள்ளலார்.

“அப்பா! நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்” “உள்நாடி உயிர்கள் தொறும் துயர் தவிர்த்தல் வேண்டும் “எனை அடைந்தார் சுகம் வாய்த்திடல் வேண்டும் “எச்சார்பும் ஆகி உயிர்க்கு இதம் புரிதல் வேண்டும்”

மருவத்தூரில் குடிகொண்டுள்ள அன்னை ஆதிபராசக்தி அருள்வாக்கு மூலம் எதனைச் செய்கின்றாளோ அதனைத்தான் வள்ளலார் தாம் விரும்புவதாகக் கூறுகிறார். உயிர்களின் துயர் துடைக்கத்தானே அன்னை அருள்வாக்கு அருள்கின்றாள். அன்னையிடம் வருபவர் எவ்வளவு துயரத்தில் ஆழ்ந்து வந்தாலும் அன்னையின் மண்ணை மிதித்தவுடன் தம் துயரச் சுமையின் பாரம் நீங்கப் பெறுகிறார் என்பதை அனுபவ பூர்வமாக ஆயிரக் கணக்கானவர் சொல்லக் கேட்கிறோம் அல்லவா? மனிதன் மற்ற உயிர்கள் மேல் செலுத்துவது “அன்பு” என்ற பெயைரப் பெறும். ஆனால் “அன்னை உயிர்கள்மேல் செலுத்துவதைக் கருணை அல்லது அருள்” என்று கூறுகிறோம்.

வருபவர் யாராக இருப்பினும் அவர்களிடம் அன்னை வேறுபாடு காட்டாமல் கருணை பொழியக் காரணம் யாது? அன்னை அருளே வடிவானவள். இதனைத் தான் திருமூலர். “அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்”

என்று கூறிப் போனார். எத்துணைப் பாபம் செய்தவர்களையும் அன்னை வெறுத்து ஒதுக்குவது இல்லை. அவரவர்கள் செய்த, செய்கின்ற, புண்ணிய பாவங்கட்கு ஏற்ற பயனை அவரவர்கள் அனுபவிப்பார்கள். இதில் அன்னை தலையிடுவதில்லை. ஆனால் துன்பம் அனுபவிக்கின்றவர்கள் மனத்தில் ஓர் அமைதியை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களின் துன்பச் சுமையை அன்னை குறைக்கின்றாள். ஒருவருடைய மனத்துயரத்தின் சுமையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதானதன்று. ‘எச்சார்பும் ஆகி உயிர்க்கு இதம் புரிதல் வேண்டும்” என்று வள்ளற் பெருமான் இறைவனை வேண்டுவதும் இதைத்தான். அவர் வேண்டுவதைத் தானே மருவத்தூரில் இருந்து அன்னை செய்கிறாள். உயிர்கட்கு இதம் புரிதல் என்றால் மனச் சுமையைப் போக்குதல் என்பதாகும். அன்னைகுலப் பொருளாக இருத்தலின் எளிதாக இதனைச் செய்கிறாள்.

அப்படியானால் உலகில் உள்ள அத்தனை பேருடைய துயரச் சுமையையும் அன்னை குறைப்பாளா? என்று அறிவு ஜீவிகள் என்று தங்களைத் தாங்களே கூறிக்கொள்ளும் அன்பர்கள் கேட்பதும் காதில் விழுகிறது. இவர்களை எத்தேசித்துத்தான் வள்ளற் பெருமான் ஜாக்கிரதையாகப் பாடுகிறார். “எனை அடைந்தார் சுகம் வாய்த்திடல் வேண்டும்” என்று. எனவே அன்னையின் அருளை நாடி வருகின்றவர்கள் எத்தனை இலட்சம் பேராயினும் சளைக்காமல் அன்னை அவர்கள் துயர் துடைக்கத் தயாராக உள்ளாள். ஆனால் அதற்கு முதற்படி நாம் அவளை அடைய வேண்டும். இந்த எண்ணம் வருவதே கடினம். அப்படியே எண்ணம் வந்தாலும் அடைய முற்படுகையில் தடைகள் நூற்றுக்கணக்கில் வரும். இவற்றை எல்லாம் உறுதியுடன் தாண்டி வந்தால் தவறாமல் அன்னை மனத்தில் உள்ள துயரச் சுமையைக் குறைப்பான் என்பது உறுதி.

அன்னை காட்டும் சன்மார்க்கத்தில் அடுத்துள்ள முக்கியமான பணி பசிப்பிணி போக்குதல் என்பதாகும். இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த வள்ளலாரும் இதுபற்றி மிகுதியாகப் பேசுகின்றார்.

“உள்ளலேன் உடையார் உண்ணவும், வறியார் உறுபசி உழந்டது வெந்துயரால் வள்ளலே! நெஞ்சம் வருந்தவும் படுமா? மற்றிதை நினைக்குந் தோறும் எள்ளலேன் உள்ளம் எரிகின்றது. உடம்பும் எரிகின்றது என் செய்வேன்? அந்தோ கொள்ளலேன் உணவும் தரிக்சிலேன் இந்தக் குறையெலாம் தவிர்த்தருள் எந்தாய்” என்றும். “வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர் வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறிவீர் பெட்டிமேல் பெட்டி வைத்து ஆள்கின்றீர் வயிற்றுப் பெட்டியை நிரப்பிக் கொண்டு ஒட்டி உள் இருந்தீர் பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நினையீர் பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்!

என்றும் கூறும் அவர் இன்று நம் சமுதாயத்தில் நடைபெறுவதை அன்றே கண்டவர் போல மேலும் கூறுகிறார்.

“நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ

 ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ

வேலை இட்டுக் கூலி குறைத்தேனோ

 பசித்தோர் முகத்தைப் பாராது இருந்தேனோ

கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!

வள்ளலார் எந்த ஏழை எளியவர்களின் பசியைப் போக்க வேண்டும் என்று துடிதுடித்தாரோ அந்தப் பணியைத்தான் மருவத்தூரில் அன்னை விடாமல் செய்து வருகிறாள். அன்னையின் ஆணையின் வண்ணம் தமிழ்நாடு முழுவதும் தோன்றி வளரும் வாரவழிபாட்டு மன்றங்களும் மேற்கொள்ள வேண்டிய தலையாய பணி ஏழைகட்கு அன்னதானம் செய்வதேயாகும்.

ஏனைய ஆலயங்கள் போல அல்லாமல் அன்னை ஆதிபராசக்தி தன் ஆலயத்திற்கு வரும் அன்பர்கட்கு அருள்வாக்கு வழங்கும் வகையில் சமுதாயத்தில் இன்று காணப்படுகின்ற பல பிரச்சனைகட்கும் சுமுகமான தீர்வுகாண வழி செய்கின்றாள். ஆன்மிகத்தை நாடி வருபவர், உலகியல் நலங்களை நாடிவருபவர், துயரச் சுமையை இறக்கி வைக்க வருபவர் ஆகிய அனைவருக்கும் இங்கு இடம் உண்டு. இதில் ஒரு தனிச் சிறப்பு என்னவென்றால் இந்த மூன்று வகையிரையும் அன்னை தொண்டில் ஈடுபடுத்துகின்றாள்.

அன்னதானம், உடைதானம், கல்விப் பொருள்கள் தானம், ஊனமுற்றவர்கட்கு உதவிக் கருவிகள் தானம் என்ற வகையில் இப்பெருமாட்டி செய்து கொண்டே போகிறாள். ஆன்மிக வழிச் செல்ல விரும்புகிறவர்களையும் மக்கள் தொண்டில் ஈடுபடுத்தித் ‘தொண்டு நெறியே ஆன்மிக நெறி” என்ற கொள்கையையும் இங்கு அன்னை நிலைநாட்டுகிறாள். அன்று தாயுமானார் என்ற சித்தர் கூறினார், “அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டு விட்டால் இன்பநிலை தானே வந்து எய்தும் பராபரமே” என்று. இன்று அன்னை இங்கு வருபவர்கள் அனைவரையும் அன்பர் பணி செய்ய ஆளாக்கி விடுகிறாள். தமிழகச் சித்தர் பரம்பரை தொடர்கின்றது. நாமும் அதில் பங்கு கொண்டு பயன் அடைவோமாக.

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here