சுற்றுச்சூழல் ஆர்வலர்களை இன்று அதிகளவில் கவலைக்கொள்ளச் செய்யும் அம்சம், புவி வெப்பமடைதல். பருவநிலைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களால் கடந்த பத்தாயிரம் ஆண்டு களாக இல்லாத வகையில் புவியின் மேற்பரப்பில் வெப்பநிலை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.



         சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களிலிலிருந்து இந்த புவி மாறுபடுவதற்கு காரணம் இங்கே உயிரினங்கள் வாழ்வதற்கான தட்பவெப்பம் நிலவுவதுதான். தற்போது வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் இனி வரும் காலங்களில் இங்கே உயிரினம் வாழ முடியுமா என்ற அச்சம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது.

         புவியில் உயிரினம் வாழக்கூடிய தட்பவெப்ப நிலை நிலவுவதற்கு காரணம், சூரியனின் வெப்பக்கதிர்கள் புவி மீது தொடர்ச்சியாக விழுந்து கொண்டிருப்பதுதான். இந்த வெப்பம் அப்படியே புவி மீது தங்கிவிட்டால் உலகம் எரிந்துவிடும்; புவி மீது விழும் சூரிய வெப்பம் மொத்தமாகத் திரும்பிப் போய்விட்டால் இந்த உலகம் பனியால் உறைந்துபோகும். இந்த இரண்டு நிலைகளும் ஏற்படாமல், உயிரினங்கள் வாழக்கூடிய தட்பவெப்பம் நிலவுவதற்கு அடிப்படைக் காரணம், நமது புவியைச் சுற்றியுள்ள காற்றுமண்டலமே! காற்று மண்டலத்தை வளி மண்டலம் என்கிறோம்.இந்த மண்டலத்தில் 78 விழுக்காடு நைட்ரஜன் வாயுவும், 21 விழுக்காடு நமது உயிர் மூச்சுக்குத் தேவையான ஆக்ஸிஜன் வாயுவும் உள்ளன. மீதமுள்ள 1 விழுக்காட்டில் கரியமிலவாயு உள்ளிட்ட பல வாயுக்கள் உள்ளன. இவை பசுமை இல்ல வாயுக்கள் எனப்படும். இந்த 1 விழுக்காடு வாயுக்கள்தான் சூரிய வெப்பத்தை புவியில் தங்க வைத்து, உயிரினங்கள் வாழ்வதற்கான தட்பவெப்ப நிலையை உருவாக்குகின்றன. ஆனால், அண்மைக் காலமாக விஞ்ஞான வளர்ச்சி, தொழிற்புரட்சி, வேளாண்துறை தொழில்நுட்பம் உள்ளிட்ட மனிதச் செயல்பாடுகளால் நமது வளி மண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்களின் அளவு அதிகரித் துள்ளது. இவை சூரிய வெப்பத்தை அதிகளவு தங்க வைப்பதால், புவியின் மேற்பரப்பு வெப்ப மடைந்து மனித குலத்திற்கும் மற்ற உயிரினங்களுக் கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தான் புவி வெப்பமடைதல் என்கிறார்கள்.

         மனிதச் செயல்பாடுகளால் அதிகரித்துள்ள பசுமை இல்ல வாயுக்களில் முதன்மையானது கரியமிலவாயு எனப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு. பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு ஆகியவற்றை இன்று நாம் அதிகமாக பயன்படுத்துகிறோம். இவையனைத்தும் பூமிக்கு அடியிலிலிருந்து எடுக்கப்படு பவையாகும். இத்தகைய புதைவடிவ எரிபொருட் களை இன்றைய உலகம் அதிகளவில் பயன்படுத்து வதால் அதிலிருந்து கரியமில வாயு அதிகமாக வெளி யேறுகிறது. அதுபோல காடுகளை அழிக்கும்போது மரங்கள் மட்கிப்போவதாலும், மரங்களை எரிப் பதாலும் கரியமிலவாயு வெளியாகிறது. இதனால் காற்றுமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களின் அளவு கூடுகிறது. புவியின் வெப்பம் அதிகமாகிறது. கரியமிலவாயுவைத் தொடர்ந்து மீத்தேன் வாயுவின் வெளியேற்றமும் புவி வெப்பத்திற்கு முக்கியக் காரணமாகும்.

      குப்பைமேடுகள், கழிவுநீர் தேங்குதல், கால்நடைகளின் சாணம் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் மீத்தேன் வாயுவின் ஒரு மூலக்கூறு என்பது கரியமிலவாயுவின் 25 மூலக்கூறு களுக்கு இணையானது என்பதால் இதனால் புவி வெப்பமாதல் மிகவும் அதிகமாகும் என்பதை உணர்ந்துகொள்ளலாம். தொழிற்சாலைகளின் புகை உள்ளிட்ட கழிவுகளாலும், உரங்களாலும் நைட்ரஸ் ஆக்சைடு எனும் பசுமை இல்ல வாயு வெளியாகிறது. ஒரு நைட்ரஸ் ஆக்சைடு மூலக்கூறு, 298 கரியமிலவாயு மூலக்கூறுக்கு இணையான வெப்பத்தை பிடித்துவைக்கும் திறனுடையதாகும். இவைதவிர, குளிர்பதனப் பெட்டிகள், குளிர்சாத னங்கள், அலுமினியப் பொருட்கள், சிமெண்ட், மின்கடத்தி போன்ற நாம் அன்றாடம் பயன்படுத் தும் பொருட்களிலிருந்து வெளியாகும் எஃப் வாயுக்களும் கரியமிலவாயு போல 22,800 மடங்கு வரையிலான வெப்பத்தை பிடித்து வைத்துக் கொள்கின்றன.

        வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் இத் தகைய பசுமை இல்ல வாயுக்களின் அதிகரிப்பால் பருவ நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மழைக் காலத்தில் வறட்சியும், வெயில் காலத்தில் புயல் மழையும் ஏற்படுவதற்கு இவை முக்கிய காரணங்களாகின்றன. புவி வெப்பமாதல் அதிகரித்துக் கொண்டே சென்றால் வறட்சி அதிகமாகும்; குடிநீர் பஞ்சம் ஏற்படும்; பனிப்பாறைகள் உருகும்; காடுகள் எரியும்; பயிர் விளைச்சல் குறையும்; கடல் நீர் நிலத்திற்குள் புகும்; புயலின் வேகமும் எண்ணிக்கையும் அதிகமாகும் என்கிறார் கள் ஆராய்ச்சியாளர்கள். மனித உயிர்கள் உள்பட அனைத்து உயிரினங் களும் புவி வெப்பமாதலால் கடும் பாதிப்பிற்குள் ளாவதைத் தடுக்க முடியாது. தொற்றுநோய்கள், இதய நோய்கள் போன்றவை அதிகரிப்பதுடன் ஊட்டச்சத்து பற்றாக்குறையும் ஏற்படும்.இது மரணத்தில்போய் முடியும். இந்த ஆபத்திலிருந்து உலகத்தை மீட்பதற்காக தற்போது பன்னாட்டு அளவிலான கருத்தரங்குகள்- மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. புவியின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்வதில் பெரும்பங்கு வளர்ந்த நாடுகளையே சாரும்.

          குறிப்பாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சீனா, ஜப்பான் போன்றவை தங்களின் வேகமான வளர்ச்சிக்காக பூமியில் புதைந்துள்ள செல்வங் களைத் தோண்டி எடுத்தும், தொழிற்சாலைகளைப் பெருக்கியும், ரசாயன உரங்களை அதிகப்படுத்தியும் புவியின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்துவிட்டன. வளர்ந்து வரும் நாடான இந்தியாவின் பங்கும் இதில் கணிசமாக இருக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்பு என்பது உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் ஏற்படுகிறது. பசிபிக் கடலில் உருவாகக்கூடிய ஒரு புயலால் அமெரிக்கா, கனடா ஆகியவை மட்டுமின்றி தென் அமெரிக்க நாடுகளும் பாதிக்கப்படுகின்றன.

         வளர்ந்த நாடுகளான அமெரிக்காவும் கனடாவும் இந்த இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு மீளும் வசதிகளைப் பெற்றுள்ளன. ஆனால், தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள வளர்ந்துவரும் நாடுகளும்- ஏழைநாடுகளும் பெரும் பாதிப்பிலிருந்து மீள முடியாத நிலைமைக்குத் தள்ளப் படுகின்றன. புவியில் தற்போது வெளியேறியிருக்கும் பசுமை இல்ல வாயுக்களால் புவியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ்வரை உயரக்கூடிய ஆபத்து இருக்கிறது. இது 2 டிகிரி செல்சியஸாக உயர்ந்தால் அது ஒட்டுமொத்த உலக மக்களின் கூட்டுத் தற்கொலையாக முடியும். இந்த ஆபத்திலிருந்து மனிதகுலத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள், பசுமை இல்ல வாயுக்களின் அதிகரிப்பைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

          பெட்ரோலியப் பொருட்களுக்குப் பதிலாக, மாற்று எரிபொருள்களை கண்டறிந்தாக வேண்டும். காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். வளர்ந்த நாடுகள் தங்களின் தொழில்நுட்ப உதவியையும் நிதியுதவியையும் வளரும் நாடுகளுக்குக் கொடுத்து அவற்றை இயற்கைச் சீரழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளும் உடன் படிக்கைகளும் இந்த ஆண்டு டிசம்பரில் டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் கூடவிருக் கும் காலநிலை மாற்ற மாநாட்டில் உறுதி செய்யப் படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்க் கிறார்கள். உலகம் எரியாமல் காக்க வேண்டிய கடமையில் இருக்கிறது மனிதகுலம்.

நன்றி

நங்கீரன்

01-03-09

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here