‘‘கவலை போமே”

 

அண்டத்தின் உட்கருவே! – அகிலமெலாம் ஆட்டுவிப்பாய்! அன்பு பொங்கி கொண்டல்தரும் குளிர் மழைபோல் – குவலயத்துக் கருள்சுரக்கும் குறியோடின்று மண்ணுலக மக்களுய்ய – மருவத்தூர் எழுந்தருளி மாசு நீக்கத் தொண்டு செயும் ‘‘அடிகளராய்த்” – தோன்றியுளாய்! துயர்நீக்கும் சுடரே போற்றி!

அருள் வாக்குக் கூறுதற்கு – அடிகளராய் உருவெடுத்தாய்! அடடா! அந்தப் பெருமகனோ குணமலையாம்! பேரறிஞர் வணங்குகிற பெரிய சான்றோன்! தருமங்கள் தழைத்திடவும் – தரணியிலே ஆன்மிகம் தழைக்க வேண்டி கருமங்கள் ஆற்றிவரும் – கனிவான குணமுடையோன்! காண வாரீர்!

கருமைநிறக் கண்ணனவன்! களங்கமிலா உளத்தோன்! கவலை தீர்க்கும் பெருமருந்து! சித்தாடும் – பெருமாட்டி உறைவிடமாம்! பேதம் நீக்கி அருள் பொழியும் பெரும்மேகம்! – அழகாக சிரித்தாலோ அன்பு மின்னல்! உருவத்தில் மிக எளிமை! உள்ளத்தால் தெய்வமகன்! உண்மை காண்பீர்!

பாரதனில் துயர்நீக்கிப் – பயம் நீக்கி, மன அமைதி பரவச் செய்து சீரழிந்த உலகினையே – செம்மையுறச் செய்திடவே சிந்தை கொண்டு அரவணைக்கும் மருவத்தூர் – அருளரசி, ஆன்மிகம் அரசு ஒச்ச வார வழிபாட்டு மன்றம் – வையமெலாம் வளர்ந்திடவே வாழ்த்தியுள்ளாள்!

வையகத்தில் வாழ்வாங்கு – வாழ்ந்திடவே வகைகூறி வழியைக் காட்டும் தையலவன்! மருவத்தூர் – தலத்தினிலே எழுந்திட்டாள் தருமம் வாழ்! அயல் மதத்தோர், என்மக்கள்! அன்னை நான்! எனக்கூறி அருள் சுரக்கும் கயல் விழியாள்! கருணை நிறை – கண்ணானை சரணடைந்தால் கவலை போமே!

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 6 (1982) பக்கம்: 43

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here