நவராத்திரி விழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் கருவறை அம்மனைக் கண்டு மகிழ்வோம்.”நான் உங்களுக்குத் தாயாக இருக்கிறேன். நீங்கள் எனக்குச் சேயாக இருக்கிறீர்கள். என்னை நீங்கள் தொட்டு அலங்காரம் செய்யும் பொழுது நான் சேயாக மாறிவிடுகிறேன்.” என்பது அன்னையின் அருள்வாக்கு.
கமலாம்பிகை அலங்காரம்: அதன்படி இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தியாக விளங்கும் அன்னை ஆதிபராசக்தி நவராத்திரி காலத்தில் மலைமகளாகவும், அலைமகளாகவும், கலைமகளாகவும், காட்சி தருகிறாள் என்ற வகையில் அன்னை ஆதிபராசக்தியை கமலாம்பிகை வடிவில் அலங்காரம் செய்து வழிபாடு நடைபெறும்.
கருணை விழியே!
கமலாம் பிகையே!
கடைக்கண் பாரம்மா!
ஒரு மனம் கொண்டே!
திருமணம் வைப்பாய்!
உலகின் தாயம்மா!
தாமரை மொட்டைக்
கையில் ஏந்தும் தாமரை நீயே!
கமலாம்பிகையே!
தாமரைப் பாதம் தொழுதோம் அம்மா தனமே!
மனமே!
கமலாம்பிகையே!
வேப்பிலைக் காப்பு:
வேம்பில் பாலாக வடிந்து சுயம்பாக வெளிப்பட்ட நம் வேப்பிலை நாயகிக்கு வேப்பிலை அலங்காரம் நடைபெறும்.எங்கள் கண்பட்டுக் கண்பட்ட உங்கள் கரிய மேனி புண்பட்டுப் புண்பட்டுப் போனதுவோ- அம்மா கண்பட்டுப் புண்பட்ட காயம்தீர தாயே!
உன் மென்பட்டு மேனிக்கோ வேப்பிலைக்காப்பு…?
மஞ்சள் காப்பு:
ஒவ்வொரு காப்புக்கும் ஒரு தத்துவம் அமைந்திருந்தது. மஞ்சள் கிழங்கு கொதி நீரில் அவிக்கப்பட்டு வெயிலில் உலர்த்தப்பட்டுப் பொடியாக்கப்பட்ட நிலையில் தான் அன்னை ஆதிபராசக்தியின் திருவுருவச்சிலையின் அணியாக மாறுகிறது. இதனையே மஞ்சள் காப்பு அலங்காரம் எனக் கூறுவார்கள். அதுபோல, நாமும் நம் ஊழ்வினைகளுக்கேற்ப
சோதனைகளையும், வேதனைகளையும் தாங்கிக் கொண்டால் தான் அன்னை ஆதிபராசக்தியை அணுகமுடியும். என்ற தத்துவத்தை இந்த அலங்காரம் நமக்கு உணர்த்துகிறது.
மஞ்சள் காப்பணிந்த மாதரசி!
மருவத்தூர் அருளின் பேரரசி!
மங்கல மஞ்சள் தான் அணிந்தாய்!
தஞ்சம் அடைந்தோம் தமிழரசி!
மஞ்சள் உலகில் மாமருந்து!
மக்கள் எல்லாம் உன் கருத்து!
மாநிலம் எல்லாம் பொலிவு பெற!
மகராசி! நீயும் காப்பணிந்தாய்!
ஆன்மிக வண்ணமிட்டாய்!
அருள்வாக்கில் எண்ணமிட்டாய்!
அடிகளாரை வட்டமிட்டாய்!
அகிலம் சீர்படத் திட்டமிட்டாய்!
குங்கும காப்பு:
அன்னை ஆதிபராசக்தியின் உருவை, பாடல்வழி படம்பிடிக்கும் அபிராமிபட்டர் உதிக்கின்ற செங்கதிராகவும், உச்சித்திலகமாகவும், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கமாகவும், குங்குமத்திலேயே தோய்ந்த மேனியளாகவும் காட்டுகிறார். எனவே அன்னை ஆதிபராசக்திக்கு குங்கும காப்பு அலங்காரமும் செய்யப்படும்
குங்குமத்தின் காப்பே போல
குருநாதர் கருணை போல
நங்குலத்தைக் காத்து நிற்க
நாயகியும் காப்பணிந்தாள்!
குங்குமமே காப்பாக
குலமகளிர் கொண்டாடும்
குங்குமச் சிவப்பணிந்த கோலமே!
வாழ்க நீ அம்மா!
வாழ்க நீ தாயே!
சந்தனக் காப்பு:
சந்தனம் அரைக்க அரைக்க மணம் கொடுக்கும். மருவூரின் ஆன்மிகச் சந்தனம் எல்லோருக்கும் மணக்கும் என்பதை உணர்த்துவதாகவும், அரைக்க அரைக்க சந்தனம் மணப்பதைபோல நாம் துன்பப்படத் துன்பப்பட, ஆன்மிக மணம் பெறுவோம் என்பதை எடுத்துக் காட்டுவதாகவும் கருவறை அன்னைக்குச் செய்யப்பட்டிருந்த சந்தனக் காப்பு அலங்காரம் அமைந்திருக்கும்.
பக்தியிலே கரைந்துருகும்
பக்தர் மனம் சந்தனம்
சுந்தரமாய்த் தமிழ் சிறக்கும்
மந்திரமும் சந்தனம்
மருவத்தூர்
அறமெல்லாம்
மனம் மணக்கும் சந்தனம்!
குருதேவர் மனமென்றும்
குன்றாத சந்தனம்
குறையாமல் அருள்வழங்கும்
அதனாலே சந்தனம்!
விபூதிக் காப்பு:
அன்னை ஆதிபராசக்தி , நெருப்பாக ஒளிர்பவள். ஆனால், நாம் அனைவருக்கும் நெருங்குகின்ற வகையில், இன்று மானிட உருவம் தாங்கி நீறுபூத்த நெருப்பாக நில உலகில் அவதாரம் செய்துள்ளாள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் கருவறை அன்னைக்கு விபூதி அலங்காரம் செய்யப்படும்.
அடிகளார் திருக்கையில் அருளுகின்ற விபூதிக்கு உயிர் உண்டு என்று உரக்கச் சொன்னவள் நீ! நீயே இன்று வீபூதிக் காப்பணிந்து விளங்குகின்ற காட்சி கண்டோம்! வியந்து போய் நிற்கின்றோம்!
துளசி அலங்காரம்:
துளசி மருத்துவ குணம் மட்டும் பெற்றதன்று. ஆன்மிகத்தில் துளசிக்கும், வேம்புக்கும் தனிச் சிறப்புண்டு.அந்த வகையில் துளசி அலங்காரமும் அன்னைக்கு செய்யப்படும்.
லட்டு அலங்காரம்:
நவராத்திரி விழாவில் அன்னைக்கு பூந்தி அலங்காரம் செய்யப்பட்டு லட்டு மாலை அணிவிக்கப்படும்.
பொட்டு அலங்காரம்
புதுப்பூ அலங்காரம்
அது என்ன லட்டு அலங்காரம்? புதுமையாய் எதையும் செய்பவளே! லட்டுப் புதுமையானதும் அதற்காகவா?
வாழ்க்கை? இனிப்பான லட்டுபோல் இருந்திடவேஅணிந்தாயோ லட்டு அலங்காரம்?
சரஸ்வதி அலங்காரம்:
வெள்ளைத்தாமரைப் பூவிலிருந்து வீணை மீட்டி, கலைகளையும், தொழில்களையும் கல்விகளையும் தருபவள் கலைமகள் என்பதை உணர்த்தும் வகையில் சரஸ்வதி அலங்காரம் செய்யப்படும்.சக்தியே! சரஸ்வதியே!
சகலகலா வித்தகியே!புத்தியில் நிலைத்திருப்பாய்!புதுவாழ்வு நீ தருவாய்!உடையதும் வெள்ளை ஆனாய்! உணர்வதும் வெள்ளை ஆனாய்! கடையரும் கடைத் தேறக் கடைகண்ணால் அருள்வாய் அம்மா!
மகிடாசுரமர்த்தினி அலங்காரம்: அனைத்து உலக தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் எல்லையில்லாத் தொல்லை கொடுத்து வந்த எருமைத் தலையனாகிய மகிடாசூரனை அழித்தவள் அன்னை ஆதிபராசக்தி என்பதை உணர்த்தும் வகையில் மகிடாசுரமர்த்தினி அலங்காரம் செய்யப்படும்.
மகிடனை அசுரனை மாய்த்தவளே!மண்ணிலே வேரோடு சாய்த்தவளே! கம்பனை நிசும்பனை வதைத்தவளே! சூலம் கொண்டே சிதைத்தவளே! பாதகம் வேதனை சோதனைகள் பற்றுமோ உன்னடி பற்றுவோரை? வாதுகள் சூதுகள் வஞ்சனைகள்
வாட்டுமோ உனதடி வாழ்த்துவோரை?
நவராத்திரி விழாவில் ஒன்பது நாட்களிலும் ஒவ்வொரு விதமான அலங்காரங்களையும்
கண்ணாரக் கண்டு அன்னை ஆதிபராசக்தியின் அவதாரமாகிய நம் அம்மாவின் அருள்பெற்று உய்வோமாக!
ஓம் சக்தி!
நன்றி
சக்தி ஒளி நவம்பர் 2010.
பக்கம் (30- 37)
]]>