நான் குடியிருப்பது ஓர் அக்கிரகாரத்தில்! நான் செவ்வாடையணிந்து தெருவில் நடமாடும் போதெல்லாம் என்னை இங்கிருப்பவர்கள் பலரும் ஒருவித வெறுப்புணர்ச்சியோடு பார்ப்பவர்கள். ஒரே ஒரு சகோதரி மட்டும் ‘ஓம் சக்தி ‘ என்று கையெடுத்துக் கும்பிடுவார். அந்தச் சகோதரியின் கணவர் ஓர் அதிகாரியாக இருப்பவர்.

 

ஒரு சமயம் அந்தச் சகோதரி என்னிடம் வந்து எங்கள் வீட்டில் அன்னையின் மந்திரங்களும் அன்னையின் பாடல்களும் ஒலிக்கிற கேசட்டுக்களும் இருக்கின்றன. ஆனால் அன்னையை வைத்து வழிபட திருவுருவப் படம் ஒன்று கூட இல்லை. என்று சொன்னார்கள். நான் மிகவும் சந்தோஷப்பட்டு அன்னையின் திருவுருவப் படம் ஒன்றை வாங்கிக் கொடுக்க எண்ணி  அம்மா! தங்களுக்கு எந்த மாதிரிப் படம் வேண்டும்? நிறைய மாடல்களில் படங்கள் உண்டு. பெரிய அளவில் வேண்டுமா? சிறிய அளவில் வேண்டுமா? என்று கேட்டேன்.

அது கேட்ட அந்தப் பெண்மணி சக்தி! பங்காரு அடிகளார் படம் இல்லாத அன்னையின் படம் மட்டும் வாங்கித் தாருங்கள்! சாதாரண மனிதன் உருவத்தை வைத்து அன்னையை வழிபடுவதற்கு நான் என்ன பைத்தியக்காரியா? முட்டாளா? என்று கூறினார்கள். நானும் அந்த அம்மையாரைப் பார்த்து அம்மா புரியாமல் பேசாதீர்கள். இன்று கலியுகத்தின் கல்கி அவதாரமாக இருப்பவர் தான் எங்கள் அடிகளார். அடிகளாரை ஒதுக்கிவிட்டு
அன்னையை வழிபாடு செய்து அவளை அடைய முடியாது. நீங்கள் அன்னையையும், அடிகளாரையும் தொழாமல் இருந்தால் கூட தண்டனை கிடையாது. ஆனால் அடிகளாரை துச்சமாக மதித்தாலும், நினைத்தாலும் அதனால் வருகிற விளைவுகளை நீங்கள் மட்டுமன்றி உங்கள் சந்ததியே அனுபவிக்க நேரிடும் அவ்வளவுதான்! சொல்ல முடியும் என்றேன்.

அதற்கு அந்தப் பெண்மணி எந்தெந்த வார்த்தைகளைப் பேசக்கூடாதோ அந்தந்த வார்த்தைகளால் நம் குருபிரானைச் சொல்லி திட்டினார். என் காதுகள் செவிடாகியிருக்கக்கூடாதா என்று நான் நினைத்துப் புண்படும் அளவில் அந்த வார்த்தைகள் இருந்தன. நான் மிகவும் நொந்து போனேன்.

அன்றைய இரவு சரியாக 9 மணி அளவில் அந்தப் பெண்மணியின் கணவருக்கு திடீரென்று கைகால் உணர்ச்சி போயிற்று. வாய் பேச முடியவில்லை. மயக்க நிலையும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டு அவதிப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. அங்கே குடியிருக்கும் 3 மருத்துவர்களும் அவர் கணவரைப் பார்த்து சிகிச்சை அளித்தனர். 2மணி நேரம் நோயாளியோடு போராடியும் நோயை நீக்க முடியவில்லை. உடனே அருகில் இருக்கும் பழனி நகருக்குக் கார் மூலம் கொண்டு சென்றார்கள். அங்கே பிரசித்தி பெற்ற மருத்துவரிடம் கொண்டு போனார்கள். அவரும் சோதனை செய்து பார்த்துவிட்டு இனி காப்பாற்ற முடியாது இறையருள் இருந்தால் பிழைக்கட்டும் என்று கை விரித்த நிலையில் அமா்ந்து கொண்டார்.

அங்கிருந்து அவரைக் காரில் போட்டுக்கொண்டு உடுமலைப்பேட்டையில் உள்ள பெரிய டாக்டர்களிடம் வந்தார்கள். பிரபலமான ஒரு மருத்துவமனையில் சோ்த்தார்கள். உயிர் பிழைப்பதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை. 

இவ்வளவும் நடந்த பிறகு தான் அந்தப் பெண்மணிக்குத் தான் செய்த தவறு புரிந்தது. ”அம்மா தாயே! ஓம் சக்தி! என் கணவர் உயிரைக் காப்பாற்றி என்
மாங்கல்யத்தைக் காப்பாற்று! நான் என்ன பாவம் செய்தேன்! ஏன் என்னை இப்படி சோதிக்கிறாய்? நான் செய்த தவறு தான் என்ன? என்று புலம்பியபோது தான் தான்செய்த தவறு புரிந்தது. அடிகளாரைக் கேவலமாகப் பேசிய தவறு புரிந்தது.

உடனே மானசீகமாக அடிகளார் திருவடிகளே சரணம்! ஆன்மிக குருவே சரணம்! கல்கி அவதாரமே நின் தாள் சரணம்! என்று சொல்லி என்னை மன்னித்து அருள் புரியணும் தாயே! என்று கூறியபடி கதறியழுது மூலமந்திரத்தை ஒலிக்க ஆரம்பித்தார். ஒரு இலட்சத்து எட்டு தடவை ஓம் சக்தி எழுதுகிறேன். உன் பாலகன் மகிமையைப் புரியாமல் பேசிய பாவத்திற்குப் பிராயச்சித்தமாக ஒரு இலட்சத்து எட்டு தடவை ஓம் சக்தி! ஓம் சக்தி! என்று என் கைப்பட எழுதுகிறேன். என் கணவா் உயிரைக் காப்பாற்றி கொடு தாயே! என்று முழுவதும் சரணாகதி அடைந்து விட்டார். அந்தப் பெண்மணி.

இது நடந்து 2 நிமிடங்களில் அந்த பெண்மணியின் கணவா் லேசாகக் கண்களைத் திறந்து பார்த்த காட்சியை நினைத்தால் இன்றும் என் மனம் ஆனந்தக் களிப்பு அடைகிறது. அப்படியே படிப்படியாக 3மணி நேரத்தில் உடல் நிலையில் சற்று மாற்றம் காணப்பட்டது. டாக்டா்களே ஆச்சரியப்பட்டுக் கூறினார்கள். 

என்ன தான் மனிதன் விஞ்ஞான முயற்சிகளைக் கையாண்டாலும் கடைசியில் விஞ்ஞானம் தோல்வியுற்ற நிலையில் மெஞ்ஞானம் என்று சொல்லக் கூடிய இறையருள் தான் மனிதனின் முடிவினைப் பரிசுத்தமாக்கும். இப்போது நாங்கள் கொடுத்த மருந்து பலன் கொடுக்கவில்லை. இந்த நோயாளியின் மனைவி ஓம் சக்தி! ஓம் சக்தி! என்று ஓங்காரமிட்ட ஒலிதான் அன்னையின் அருளாகத் துணை புரிந்தது. என்ன தான் டாக்டா்களாக நாங்கள் இருந்தாலும் தெய்வத்திற்கு முன்னால் நாங்கள் தோல்வி அடைபவா்களே! நீங்கள் முறையிட்ட தெய்வத்தின் அருள் தான் எங்கள் மருந்துக்கும் உயிர் கொடுத்துள்ளது. என்று
சொல்லி அன்னையின் புகழைப் பாடினார்கள்.

3.4 தினங்களில் பழைய உடல் நிலை பெற்றுப் புரண குணம் அடைந்தார் அவள் கணவா். பின் வீடு திரும்பினார். அந்தப் பெண்மணியே நேரில் வந்து என்னிடம் மன்னிப்புக் கோரினார். நீங்கள் வேண்டிக் கொண்டபடி ஒரு இலட்சத்து எட்டு தடவை ஓம் சக்தி மந்திரம் எழுதி மருவத்துாருக்கு ஆன்மிக குரு அடிகளார் அவா்கட்கு அனுப்பி வையுங்கள். அதனால் உங்கட்கு மேன்மை உண்டாகும் என்று சொன்னேன்.

இரவு பகலாக அன்னையையும், அடிகளாரையையும் நினைத்துக் கொண்டு ஊண், உறக்கமின்றி ”ஓம் சக்தி!” என்ற மந்திரத்தை எழுத எழுத அவள் கணவனுக்கு நல்ல சுகம் கிடைத்தது. மீண்டும் வேலைக்கு திரும்பிவிட்டார்.

அந்த சகோதரி பேசிய ஆணவமான பேச்சுகட்கு அன்னை பாடமும் புகட்டினாள். தவறு உணா்ந்து சரணாகதி அடைந்ததால் மாங்கல்யத்தையும் காப்பாற்றிக் கொடுத்தாள்.

ஆன்மிக குரு அடிகளார் மகிமையை ஒவ்வொருவரும் உணா்ந்து கொள்ள வேண்டும். அப்படி உணரவில்லையேல் உணருகிற காலம் ஒன்று வரும். ஓம் சக்தி! குருவடி சரணம்! திருவடி சரணம்!.

நன்றி- (இசைமணி சக்தி செல்வராஜ், எம்.ஏ.)

(அவதார புருஷா் அடிகளார் பாகம்-3) 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here