தன்னையும் தன் குடும்பத்தாரையும் காப்பாற்றுவதற்காகப் பொருள் தேவைப்படுகிறது. அப்பொருளுக்காக அலுவலாற்றுவது, வியாபாரம் செய்வது இன்னபிறதான் தனது முக்கியக் கடமையாகிறது என்று ஒவ்வொருவனும் நினைத்துக் கொண்டிருக்கிறானே……!

தன்னையும் தனது சுற்றத்தாரையும் பொருளைத் தேடிக் கொண்டு காப்பாற்றுவதற்காக வேண்டி அவனுக்குப் பிறவியை நான் தரவில்லை. மகனே! தன்னை உணர, தன் வினையை அனுபவித்துக் கழிக்க, மேலும் வினையைக் கூட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக மனித குலத்திற்கு இப்புவியில் நான் கொடுத்த பொன்னான வாய்ப்படா மனிதப் பிறவி! அதிலும் இந்நேரம் நானே நேரில் வந்திருக்கின்றேனே? அதனை உணா்ந்து அதன்படி நடக்க வேண்டியது தானே அவனவன் கடமை? மகனே! உனது வினையைக் கழிப்பது என்பது எளிதான செயல் என்றா நினைத்துக் கொண்டாய்? அது அவ்வளவு சுலபமல்லடா…! ஒருவன் வினையைக் கழித்துக் கொள்ளுகின்ற மார்க்கத்தை என்னருளால் தெரிந்து கொண்ட பின் அவனறியாமல் என்னருகே வர ஆரம்பிக்கின்றான். எனவே, நான் விளையாட்டுக்காகச் சோதனை தருவது போல் பாவனை செய்தால் உடனே மனம் சோர்ந்து வினையைக் கழிக்கிற வேலையை விட்டுவிட்டு, உலகியல் கடமைகளைச் செய்ய ஓடிவிடுகின்றான். ஆனால் என் ருசி கண்டவன் என்னை விட்டு நீங்க முடியுமா….? மறுபடியும் தன் அகக் கடமையாற்ற வந்துவிடுகின்றான். இதனிடையில் நான் அவனுக்குக் கொடுப்பது ஓய்வு என்பதைப் புரிந்து கொள் மகனே! மகனே! இதனுடைய தாத்பரியம் போகப் போகத்தான் விளங்கும்!” அம்மா.
]]>