தொண்டர்தம் துன்பங்களைப் போக்கியமை:

தன்னையே நம்பி வந்து, தன்கோயில் பணிகளை ஆர்வத்தோடு செய்கின்ற தொண்டர் தம் குடும்பங்களின் துன்பங்களை அம்மா எப்படியெல்லாம் போக்குகின்றாள் என்பதனை தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் ஒருமுறை அவனுக்கு ஏற்பட்டது. அவனுடைய குடும்பத்திலேயே அப்படி ஒரு பெரிய துன்பம் எற்பட இருந்தது. அம்மா அத் துன்பத்தின் கொடுமையிலிருந்து காப்பாற்றி மீட்டாள்.

செங்கற்பட்டு நகரில் அவன் பணிபுரிந்து கொண்டு வந்த சமயம் அது! அப்போது ஒரு நாள் மாலை நேரத்தில் துவைத்து வைத்த துணிகளை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு சலவைப் பெட்டியினால் துணிகளைத் தேய்த்து மடித்துக் கொண்டு இருந்தான். அவனுடைய இரண்டாவது பெண் குழந்தை பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு துணிகளை தேய்ப்பதற்கும் மடிப்பதற்கும் இடையூறாகத் தொல்லை கொடுத்துக் கொண்டு வந்தது. அப்பால் போ! அப்பால் போல் என்று சொல்லிக்கொண்டு விரட்டியபோதும் குழந்தை கேட்பதாக இல்லை. ஆகவே சலவைப் பெட்டியை (Iron Box) ஓரமாக வைத்துவிட்டு மடித்து வைத்த துணிகளை எடுத்துத் தனியே வைத்த ஒரு சில மணித்துளிகளில் விபரிதம் நடந்து விட்டது! சலவைப் பெட்டியைச் சாய்த்துத் தரையில் வைத்திருந்த அந்த நேரத்தில் அதனுடைய வெண்மை கண்ணாடி போல் தெரியவே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்த அந்தக் குழந்தை சட்டென்று அந்தச் சூடாயிருந்த சலவைப் பெட்டியின் மேல் விழுந்துவிட்டது. அந்த நேரத்தில் சலவைப் பெட்டியின் கூர்மையான பகுதி மேல்நோக்கி இருந்ததால் அந்தக் கூர்மையான பகுதி குழந்தையின் ஒரு கண்ணின் ஓரத்தில் பட்டுவிட்டது. சலவைப் பெட்டியின் சூடு ஒரு புறம்; அப்பெட்டியின் கூர்மை கண்ணில் பட்டது ஒரு புறம். இரண்டும் தாக்கிய துன்பத்தால் குழந்தை துடிதுடித்துப் போனான். சட்டென்று குழந்தையை அப்புறப்படுத்தினான்; குழந்தை கண்களை மூடிக் கொண்டு கோவென்று கதறியழுது துடித்தான்; அவனக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை; அவன் மனைவியும் அவனும் பதறிப் போனார்கள்.

குழந்தைக்குக் கண் பார்வை இத்தோடு சரி என்று பயமும் பீதியும் ஏற்பட்டு விட்டது. உடனடியாகப் போடுவதற்குரிய Eye olntment ஒன்று இருந்தது. அதனைத் தடவி விட்டுக் குழந்தையின் அழுகையை அவனும் அவன் மனைவியும் ஓயப்படுத்த முயன்றார்கள். எப்படியோ மூன்று மணிநேரம் அழுது ஓய்ந்து அப்படியே குழந்தை உறங்கி விட்டான். மறுநாள் காலையில் குழந்தை விழித்து எழுந்து வந்த போது பலவகைகளிலும் சோதித்து விசாரித்து அறிந்த போது “வலி எடுக்கவில்லை” என்றான். குழந்தை பார்வையில் எதுவும் கோளாறு ஏற்படவில்லை என்று அறிந்த பிறகே அவனுக்கும் அவன் மனைவிக்கும் நிம்மதியான பெருமூச்சு வந்தது. இந்த நிகழ்ச்சி அக்கம் பக்கத்தில் இருந்த சில பெண்மணிகட்கு மட்டுமே தெரியும். மறுநாள் சரியாகப் போனதால் அந்த நிகழ்ச்சியின் கொடுமை எப்படிப்பட்டது என்பதனை உணர முடியாமல் போய்விட்டது.

நான்தான் காப்பாற்றினேன்!

இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த சில நாள் கழித்து அவள் ஆலயத்துக்குச் சென்றாள். ஆலயத் தொண்டர்களோடு அவன் ஒரு புறம் நின்று கொண்டு இருந்தான். அம்மா அன்று அருள்வாக்குச் சொல்லிவிட்டுத் தொண்டர்கட்கு அருள்வாக்குச் சொல்ல முற்படும் முன்பாக, அவனை நோக்கி, “மகனே! உன் குழந்தை எப்படி இருக்கின்றது?” என்று கேட்டாள். “நலமாக இருக்கிறான் அம்மா” என்று பணிவோடு பதில் சொன்னான். அவனைப் பார்த்து பெட்டி போட்டாயே மகனே! என்று சலவைப் பெட்டியால் துணியைத் தேய்ப்பது போலச் சைகை காட்டி, “பக்கத்தில் இருக்கும் குழந்தையை அப்புறப் படுத்திவிட்டுப் பெட்டி போட வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை? அந்த அறிவு எங்கே போயிற்று?” என்று கேட்டாள். பத்து நாட்கட்கு முன் நடந்நத நிகழ்ச்சியை எதிரிலிருந்து பார்த்தவள் போல அம்மா அப்படியே சொல்கின்றாளே என்ற வியப்பால் மருண்டுபோய் நின்றான் அவன்!

“மகனே அங்கேயும் நான்தான் உன் குழந்தையை காப்பாற்றினேன். இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்கும்; உன் மகள் குருடாகப் போயிருப்பான்; நீயும் பழையபடி நாத்திகம் பேசப் புறப்பட்டுவிடுவாய்” என்று கேலியான குரலில் சொல்லிவிட்டு, மற்றொரு தொண்டரைப் பார்த்து, “மகனே! உன் குழந்தை எப்படி இருக்கிறான்?” என்று கேட்டாள்; “நலமாக இருக்கிறாள் அம்மா!” என்று கூறினார் அவர். “மாடியிலிருந்து விழுந்த அவளது முதுகெலும்பை இரும்பாக்கிக் காப்பாற்றினேன் மகனே!” என்று சொல்லிவிட்டு “என்னையே நம்பி வந்து எனக்குத் தொண்டு செய்பவர் குடும்பங்களை எப்படி நான் காப்பாற்றுகின்றேன் என்பதை நீங்கள் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதனை உங்கட்குச் சொல்கின்றேன்” என்று சொல்லி முடித்தாள்!

அந்த அன்பரின் மகன் சில நாட்களுக்கு முன், பக்கத்து வீட்டு மாடியில் ஏறி விளையாடி இருக்கின்றான். அவ்வாறு விளையாடும் போது மாடியிலிருந்து கீழே விழுந்து விட்டாள். அவ்வாறு கீழே விழுந்த அந்தப் பெண் மூர்ச்சையடைந்து விட்டாள்; அந்த அன்பர், மகள் மாடியிலிருந்து விழுந்த செய்தி அறிந்து ஓடி வந்து பார்த்தார். முதலில் அம்மன் திருநீற்றைப் பூசுவோம் பிறகு டாக்டரிடம் அழைத்துச் செல்வோம் என்று கருதித் திருநீற்றைப் பூசிவிட்ட பின் டாக்டரிடம் எடுத்துச் சென்று காட்டினார்களாம். எப்படியோ நல்ல வேளையாக எலும்பு முறிவு ஏதும் இல்லாமல், உயிருக்கும் ஆபத்து இல்லாமல் அந்த அன்பரின் மகளுக்கு உயிர்ப்பிச்சை கொடுத்து அம்மா காப்பாற்றினாள். அப்படிக் காப்பாற்றிய செய்தியை மற்றத் தொண்டர்கட்கும் எடுத்து உணர்த்தினாள்.

மேற்கண்ட நிகழ்ச்சிகள் இரண்டும் அவனுடைய குடும்பத்துக்கும், அந்த அன்பர் குடும்பத்துக்கு மட்டும் சம்பந்தப்பட்டவை. அந்த ஆபத்துக்களின் விளைவும் அந்த விளைவுகளிலிருந்து விடுபட்ட மகிழ்ச்சியும் சம்பந்தப்பட்டவர்களால் தான் உணர முடியும்; புரிந்து கொள்ள முடியும்.

அந்த நன்றி உணர்ச்சி:

அவனிடம் குடிகொண்டுள்ள சிறுமைகள் அவனுக்குத் தெரியும்; அம்மாவுக்குத் தெரியும்; ஆனாலும் அம்மாவின் கருணைஅவன் குழந்தையின் கண்கள் குருடாகப் போகாமல் காப்பாற்றிக் கொடுத்தது. அந்த நன்றியை அவனால் மறக்க முடியாது. இத்தனைக்கும் அவனுக்குக் கசிந்துருகும் பக்தி ஏதும் வரவில்லை. அம்மாவின் கருணையைப் பெறுவதற்கான அருகதையும் அவனுக்கு இல்லை. ஆனாலும், அம்மாவின் அன்பையும், பரிவையும், கருணையையும் அனுபவித்துச் சுவைத்து மகிழும் சந்தர்ப்பங்கள் பல அவனுக்கு ஏற்பட்டதுண்டு. இன்றைக்குத் திருவாசகம் படிக்கும்போது என்றோ பாடிய மாணிக்கவாசகர் பாடலின் அடிகள் அவனுடைய அனுபவங்கட்கும் பொருந்தி வருவதால் அதனை அனுபவத்தால் உணர முடிகின்றது.

“மலங்கப் புலனைத்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா! உனக்குக் கலந்தஅன் பாகிக் கசிந்துள் உருகும் நலந்தாள் இலாத சிறியேற்கு நல்கி இலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் நாபிற் சிறந்த தயவான தத்துவனே!”

என்ற பகுதியை இப்போது படித்து அனுபவிக்க முடிகின்றது.

பரம்பொருளின் கருணையைச் சுவைத்துப் பார்க்கின்றவர்கட்கு மாணிக்க வாசகரின் அனுபவம் புரியும். அந்தக் கருணையை நினைக்கும் போதும், பேசும்போதும், மற்ற பக்தர்களோடு அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போதும் ஏற்படும் சுவையே அலாதியானது. “உவட்டாமல் இனிப்பதுவே” என்று வள்ளலார் கூறியது பொய்யல்ல. அந்தப் பரம்nடிபாருளின் கருணையையும் நினைத்து அதனை அடைவதற்குரிய தகுதி தனக்கு இல்லாமையை நினைத்து, அப்படிப்பட்ட தனக்கும் அந்தக் கருணை கிடைத்ததே என்று எண்ணும்போது இறைவன் அடியார்கள் உருகிப் போகின்றார்கள். அந்த உருக்கமும் நெகிழ்ச்சியும் நிலையாக அமைந்துவிட்டால் இறையருளைப் பெறுவதற்கான உரிய தகுதியும் பக்குவமும் வந்துவிடுகின்றன! “நான்” என்ற ஆணவம், தன்னால்தான் எல்லாம் நடக்கின்றன என்ற நினைப்புகள் எல்லாம் கரைந்து போகின்றன! அப்படி வாராமல் தடுப்பது எது? இந்தப் பாழாய்ப் போன மனம்தான்! இந்த மனம் உலகியல் இன்பங்கள், பெண், பணம், வசதியான வாழ்க்கை, ஆடம்பரம், பேர், புகழ், பதவி இவற்றைக் கண்டே மயங்குகின்றது; ஏங்குகின்றது. இவையெல்லாமே “பொய்மைக் கோலங்கள்” என்று எத்தனை தத்துவ ஞானிகள் சொன்னாலும் உணர மறுக்கின்றது. அதனால்தான் மணிவாசகர் பாடுகின்றார். “மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, விலங்கு மனம்” என்கின்றார்.

இப்படிப் படித்து கேட்காத இந்த மனத்தைப் பழக்குவது என்பது பெரிய காரியம். மனத்தை இறைவன்பால் திருப்புவது என்பதும், முழுக்க முழுக்க இறைவன்பால் மனத்தை ஒப்படைப்பது எவ்வளவு கடினமானது என்பதும் அடியார்கள் பலரின் பாடல்களைப் படித்தால் தெரிகின்றது. ஆகவே, இறையருளுக்காக ஏங்கி அழுத அந்த அடியார்களின் அழுகையைப் புரிந்து கொள்ளாத அறிவு ஜீவிகளும், சில உள இயல் நிபுணர்களும் பக்தர்களின் நிலையைப் பார்த்து அது ஒருவிதமான மனநோய் என்பதும், “மதம் ஒரு அபின்” என்று கோஷம் போடுவதும் அறியாமை! அதனால்தான் மேனாட்டு அறிஞன் ஒருவன் “நமது ஞானம் வரையறைக்குட்பட்டது; நமது மடமையோ வரம்பறுக்க இயலாதது” என்றான். மற்றொரு அறிஞன், “கடவுள் அருளைப்பெற சமயம் ஒரு வழியே தவிர சமயமே கடவுள் அல்ல” என்றான்.

நல்ல வேளையாகப் பரம்பொருளான அம்மாவின் கருணை வெளிப்பாட்டை அனுபவிக்கின்ற சந்தர்ப்பங்கள் பல ஏற்பட்டதால் அம்மாவின் காலடிகளை உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நாட்பட நாட்பட வளர்ந்துகொண்டு வருகின்றது. ஆனாலும் “என்னிடம் உறுதியான நம்பிக்கை இன்னும் எனக்கு வரவில்லையே!” என்று அம்மா கேட்டு அவன் அறியாமையைப் புலப்படுத்தியதும் உண்டு.

தாயின் சந்ததிக்கு வருவதற்குக் கணக்குப் பார்க்கின்றாயே

அவன் செங்கற்பட்டில் வசித்துக் கொண்டிருந்தபோது அடிக்கடி கோயிலுக்குப் போக நினைத்தாலும் முடியவில்லை. மாதச் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகைக்குள் குடும்பத்தை நடத்தியாக வேண்டும்; பணச்சிக்கல், போதாமை! சரிதான் போ! மாதம் ஒருமுறை போய்வந்தால் போதும் என்று எண்ணுவான். ஒருமுறை தொண்டர்கட்கு அருள்வாக்குச் சொல்லிய நேரத்தில் அம்மா அவன் மானத்தை வாங்கினாள். அம்மா சொன்னதை இன்று நினைத்துப் பார்க்கும்போதும் சிரிப்பும் வருகிறது; நாணமும் வருகிறது.

அம்மா சொன்னாள்:

“மகனே மாதம் இரண்டுமுறை நீ குடும்பத்தோடு என் சந்ததிக்கு வரலாம்; ஆனாலும் கணக்குப் பார்க்கின்றாய்; தாயின் சந்ததிக்கு வருவதற்குக் கூடக் கணக்குப் பார்க்கின்றாயே மகனே! என்னிடம் பக்தியோடும் உறுதியோடும் நீ புறப்பட்டுக் கிளம்பு! அப்போது நானே வாகனமாக வந்து உன்முன் நிற்பேன் மகனே” என்று சொள்ளான். அந்த அளவு அம்மா சொன்னபோதும் அம்மாவின் அருமை புரியவில்லை. அம்மாவை நெருங்கவே முடியாத இப்போதையச் சூழ்நிலையில் அந்த நாள் நினைவுகளை அசைப்போட்டுப் பார்க்கும்போது அம்மாவின் அந்த எளிவந்த கருணையை நினைக்கின்றான்; ஏங்குகின்றான். இந்த ஏக்கத்தையும், உணர்வுமூகளையும் பக்தி உள்ள அன்பர்களாலும், அம்மாவிடம் பல்லாண்டுக் காலம் ஈடுபட்டவர்களாலும் மட்டுமேதான் உணர முடியும். சிற்றறிவும் வெற்றறிவும் கொண்டவர்களால் இதனை உணர்ந்து கொள்வது இயலாது.

ஆனாலும் இந்தப் பாழாய்ப் போன மனம் கீழ்நிலை அனுபவங்களில் மட்டுமே சுற்றிச் சுற்றி வருகின்றதே! பரம்பொருளான அம்மாவிடம் முழுமையான உறுதியும் – பக்தியும் – நம்பிக்கையும் வரமாட்டேன் என்கின்றதே அது ஏன்? என்பது மட்டும் இன்னும் அவனுக்குப் புரியவில்லை.

“மகனே! குடும்பம், மனைவி மக்கள் – பிள்ளைகளின் கல்வி – எதிர்காலம்” ஆகியவை பற்றிக் கவலைப்படாதே என்று மீண்டும் சொல்கின்றேன். அவையெல்லாம் என்பொறுப்பு என்றும் சொல்லிக் காட்டினாள். என்றாலும் கவலைப்படாமல் நம்மால் இருக்க முடியவில்லையே? அது ஏன்? அப்படி அடிக்கடிக் கவலைப்படுவதால் என்ன பலன்? அம்மாவின் பேரிலும், அம்மாவின் வார்த்தைகளிலும் இன்னும் நம்பிக்கை வரவில்லை என்றல்லவா பொருள்? இப்படி மனத்தை அலைக்கழித்துக் கொண்டு துன்புற்றால் அம்மா எப்படி காப்பாற்ற முடியும்? இந்த ஈனக் கவலைகள் மனத்தில் படிவதால் அம்மாவிடம் கொண்ட நம்பிக்கைக்குப் பழுது ஏற்படுகின்றது. அந்தக் கவலைகள் மீண்டும் பிறவிக்கான வழிக்கே வழிகோலுகின்றன! அரை குறை நம்பிக்கை அம்மாவின் திருவருளை முழுமையாகப் பெறுவதற்குத் தடைபோடுகின்றது! அம்மா என்ன செய்வாள்? ஆகக்குறையை நம்மிடம் வைத்துக் கொண்டு அம்மாவை நொந்து கொள்வது எவ்வளவு மடத்தனம்!

என் குறையே அன்றி நின் குறை அன்று:

பக்குவப்படாத இந்த மனத்தின் விசித்திர நிலையை அவள் அனுபவத்தில் உணர்வதால் தன் குறை அவனுக்குத் தெரிகின்றது. அபிராமிபட்டர் சொன்னது போல “இனி யான் பிறக்கின் என் குறையே அன்றி நின் குறையன்று காண்” என்றே நினைக்கத் தோன்றுகின்றது. மீண்டும் இவன் பிறவியில் அகப்பட்டு அல்லல்பட வேண்டாம்; இவனைக் கரையில்தூக்கி விடுவோம் என்றுதான் அம்மா நினைக்கின்றாள்; அது அவனுக்கும் புரிகின்றது. ஆனாலும் என்ன? பக்குவப்படாத மனமே அவனுக்குத் தடையாய் இருக்கின்றதே! ஆதிபராசக்தி என்ன செய்வாள்? பராசக்தியிடம் முழுமையான நம்பிக்கை வைத்து முழுமையான சரணாகதி அடைய மறுக்கின்றதே!

மனிதன் எதற்கு இரையாகின்றான்?

விந்தையான இந்த மனத்தின் போக்கைப் பற்றி அம்மா ஒருநாள் தொண்டர்கட்குச் சொல்லி உணர்த்தினாள்.

“மகனே! நீரில் உள்ள புழுபூச்சிகள் எல்லாம் மீனுக்கு இரையாகின்றன! மீன் தவளைக்கு இரையாகின்றது, தவளை பாம்புக்கு இரையாகின்றது, பாம்பு பருந்துக்கு அரையாகின்றது, பருந்து விலங்குகட்கு இரையாகின்றது, விலங்குகள் மனிதனுக்கு இரையாகின்றன, மனிதனோ தன் மனத்துக்கு இரையாகின்றான்” என்றாள்.

ஆகவே பக்குவப்படாத இந்த மனத்தையும் அவள் துணைகொண்டு தான் சரிப்படுத்திக் கொள்ள வேண்டும்; திருவருள் துணை இருக்குமானால் கைதூக்கி விடும் என்ற நம்பிக்கை மட்டும் அவனுக்கு இருக்கின்றது. ஆகவே, ஆண்டாள் பாடியது போல,

“இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் யாம் தன்னோடு உற்றோமே யாவோம், உனக்கேயாம் ஆட்செய்வோம் மற்றைக் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்”

என்பதற்கு இணங்க அம்மா இட்ட பணி எதுவோ அதனை உண்மையோடும், ஆர்வத்தோடும் தூய்மையோடும் செய்து வருவோம்; மற்றவை எல்லாம் அவன் பொறுப்பு! என்கின்ற மனநிலையை நாளாவட்டத்தில் பெற்றுக் கொள்ள முடிந்தது.

(தொடரும்)

ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 12 (1982) பக்கம்: 7-13

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here