கடவுளைத் தேடி அலைந்தவர்கள்: ஆன்மிக நாட்டமும், அருள் தாகமும் கொண்டு கடவுளைத் தேடி அலைகிற கூட்டம் அன்றும் இருந்தது. இன்றும் இருக்கிறது. அந்த ஒரு லட்சியத்தை வைத்துக் கொண்டு படாத கஷ்டங்கள் பட்டவர்கள் உண்டு.

இப்படிப் பலராலும் தேடப்படும் கடவுள் மேல்மருவத்தூரில் மாறுவேடம் போட்டுக் கொண்டு வந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. நம்மிடம் பேசுகிறது. நோய், நொடி தீர்க்கிறது. லட்சக்கணக்கான பேர்க்கு ஆன்மிக அனுபவங்களையும், தெய்வீக அனுபவங்களையும் போகிற போக்கில் அள்ளி அள்ளிக் கொடுக்கிறது. இதையெல்லாம் அனுபவத்தில் கண்டறிந்து அனுபவிக்கிற செவ்வாடைத் தொண்டர்கள் எவ்வளவு அதிர்ஷ்டம் செய்தவர்கள்? உலகத்திலேயே அதிர்ஷ்டசாலிகள்: உலகத்திலேயே அதிர்ஷ்டசாலிகள் யார் தெரியுமா? நம் செவ்வாடைத் தொண்டர்கள் தான்! ஏன்? இவர்கள் ஆதிபராசக்தியோடு நேரடித் தொடர்பு வைத்திருப்பவர்கள்! இன்னொரு புறம் உலகத்திலேயே துரதிர்ஷ்ம் பிடித்தவர்கள் யார் தெரியுமா? அதே செவ்வாடைத் தொண்டர்களுள் சிலர்தான். ஏன் தெரியுமா? கொடுத்த வாய்ப்புக்களையும், கிடைத்த வாய்ப்புக்களையும் சில தொண்டர்கள் நழுவ விட்டுக் கொண்டிருக்கிறார்களே! கோட்டை விட்டுக் கொண்டு வருகிறார்களே…..! இவர்கள் துரதிர்ஷ்டத்தை என்னவென்று சொல்ல! “அம்மா! கஷ்டம் தாங்க முடியலே!” என்று வந்தான். அவன் கணக்கை எடுத்துப் பார்த்தாள் அன்னை. எத்தனையோ சாபங்களும், பாவங்களும் கொண்ட குடும்பமாக இவன் குடும்பம் இருக்கிறதே என்று நினைத்த நம் தாய், இவனைத் தன் அருள் வட்டத்தில் சேர்த்து ஒரு பணியைக் கொடுத்து அவனது ஐந்து தலைமுறையைக் காப்பாற்ற நினைத்தாள். “என் பெயரில் ஒரு வழிபாட்டு மன்றம் தொடங்கி வழிபாடு செய்! முறையோடு வழிபாடு செய்! உன் குடும்பத்தையும் காப்பாற்றுகிறேன். மன்றத்துக்கு வருகிற பக்தர்களின் குறையையும் தீர்க்கிறேன்” என்று வாக்குக் கொடுத்தாள். மன்றம் என்பது ஒரு கோயில்: இப்படிப்பட்டவர்களில் சிலரது அலட்டல்! அதிகாரம்! சில மன்றங்களைச் செயல்படாமல் வைத்து விட்டது. மன்றம் என்பது ஒரு கோயில் மாதிரி! அந்தக் கோயில் பொறுப்பையே கொடுத்தாள்! அதைப் பயபக்தியோடு கருதிப் பரிபாலனம் செய்து வந்திருந்தால் இவன் பரம்பரை செழிப்படையும். ஆனால் பரிதாபம்! கோட்டை விட்டு விட்டான். இவன் துரதிர்ஷ்டம் பிடித்தவன்தானே? அது மட்டுமா? நாடெங்கும் ஆன்மிகம் பரவ வேண்டி, பிரச்சாரக்குழு, வேள்விக்குழு. சக்தி பீடங்கள் என்றெல்லாம் அமைத்து அதற்குத் தலைவன், துணைத் தலைவன், செயலாளன், பொருளாளன் என்று பொறுப்புக்களைக் கொடுத்து, தொண்டு செய்ய வாய்ப்புக் கொடுத்தாள். கடவுளே நமக்கு இட்ட பணி இது! ஆதிபராசக்தியே கொடுத்த வாய்ப்பு இது! என்று எத்தனை பேர் நினைக்கிறார்கள்? எத்தனைத் தொண்டர்களை இவர்கள் உருவாக்கினார்கள்..? இந்தப் பதவிகளும், பொறுப்புக்களும் கொடுத்த போதை இவர்களைத் தள்ளாட வைக்கிறது. தெய்வம் கொடுத்த வாய்ப்பை இவர்களில் சிலர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இப்படிப்பட்டவர்கள் கோட்டை விட்டவர்கள் தானே? துரதிர்ஷ்டம் படைத்தவர்கள்தானே…….? மாயாசக்தி: இதையெல்லாம் பார்க்கிறபோது ஒன்று தெரிந்தது! “மாயை” யின் சக்தி எவ்வளவு வலுவானது! இந்த மாயையின் சக்திக்கு ஆட்படாமல் ஆன்மிகத்தில் முன்னேறி வந்த மகான்கள் உண்டு; யோகிகள் உண்டு! ஞானிகள் உண்டு! அத்தகையவர்களின் வரலாற்றிலிருந்து சில சம்பவங்களை எழுதினாலாவது நமது தொண்டர்கள் – நமது பக்தர்களுக்கு மனமாற்றம் ஏற்படாதா என்ற ஆதங்கத்தில் பல யோகிகள், ஞானிகள் பற்றி அவ்வப்போது எழுதுகிறேன். அந்த வகையில்தான் பரமஹம்ஸ யோகானந்தா வாழ்வில் நடந்த சில சம்பவங்களை எழுதி வருகிறேன். பரமஹம்ஸ யோகானந்தாவுக்கு ஆதிபராசக்தி ஒரு குருவை அனுப்பி வைத்த சம்பவத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, நீ ஒரு கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற வேண்டும் என்றார் தந்தை. எனக்கு நாட்டம் இல்லையே என்றார் யோகானந்தா! என் மகன் ஒரு பட்டதாரியாக விளங்க வேண்டும். என் ஆசையை நிறைவேற்றடா! என்று மன்றாடினார் தந்தை. ஆசிரமத்தில் தங்கியது: இந்த மனப்போராட்டத்திற்கு இடையே, காசியில் இருந்த ஒரு ஆசிரமத்தில் சேர்ந்து, ஆன்மிகப் பயிற்சிகளை மேற்கொண்டு காலம் தள்ளி வந்தார் யோகானந்தா! தீவிர தியானத்தை மேற்கொண்டார். அங்கு வசித்தவர்களில் ஒருவர் கேலியாகச் சொன்னார். “ஏய்! இறைவனை அவ்வளவு சீக்கிரம் பிடிக்க முயலாதே!” இவரது தியானத்தைப் பார்த்து எழுந்த கிண்டல் பேச்சு அது! அந்த ஆச்சிரமத்துக்குத் தலைவராக இருந்தவர் சுவாமி தயானந்தா! அவரிடம் இவர் சொன்னார். “சுவாமி! நான் இங்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. நான் இறைவனை நேருக்கு நேர் சந்திக்க விரும்புகிறேன். எந்த மதக் கோட்பாடும், எந்தச் சங்கத்தின் தொடர்பும் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை” என்றார். அது கேட்ட சுவாமி தயானந்தா அவரை அன்புடன் தடவிக் கொடுத்து, அருகிலிருந்த சீடர்களுக்கு எச்சரிப்பது போலச் சொன்னார். “ஏய்! நீங்கள் யாரும் முகுந்தனுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது. நமது வழிகளை இவன் தானாகக் கற்றுக் கொள்வான்” என்று எச்சரித்தார். ஆசிரம வாழ்வில் சங்கடம்: “முகுந்தா! உன் தகப்பானார் உனக்குச் செலவுக்குப் பணம் அனுப்பி வைப்பதாகத் தெரிகிறது. அந்தப் பணம் வேண்டாம்! திருப்பி அனுப்பி விடு இன்னொரு ஆசிரம விதி உண்டு. இங்கு எப்போது உணவு அளிக்கப்படுகிறதோ அந்த நேரத்தில்தான் நீ சாப்பிட வேண்டும். நேரம் தவறித்தான் சாப்பாடு கிடைக்கும். உனக்குப் பசி எடுத்தாலும், பொறுத்துக் கொள்ள வேண்டும். தவிர, வாய் திறந்து கேட்கக் கூடாது! தெரிகிறதா?” என்றார். இந்த விதி அவரைச் சங்கடப்படுத்தியது. ஆனாலும் அவர் அந்த ஆசிரமத்தின் விதியை ஏற்றுக் கொண்டு காலம் தள்ள வேண்டியிருந்தது. அந்த ஆசிரமச் சீடர்களோடு அவரால் ஒத்துப் போக முடியவில்லை. அந்த ஆசிரமத்திலிருந்து வெளியேற நினைத்து, ஆதிபராசக்தியிடம் தியானத்தில் வேண்டினார். “தாயே! நீ எனக்கு முன் தோன்றி உபதேசம் கொடு! அல்லது ஒரு குருவை அனுப்பி வைத்து உபதேசம் கொடு!” என்று தியானத்தில் வேண்டிக் கொண்டார். அசரீரியாக ஒரு பெண் குரல்: “உன் குரு இன்று வருகிறார்!” என்று ஒரு பெண் குரல்! அசரீரிக் குரல் கேட்டது. அடுத்த கணம், “முகுந்தா! தியானம் செய்தது போதும்‘! உனக்கு ஒரு வேலை இருக்கிறது! மாடியிலிருந்து இறங்கி வா!” என்று கீழே சமையலறையிலிருந்து ஒரு குரல் கேட்டது. சமையலறையிலிருந்து அழைத்தவர் ஆசிரமவாசி! ஹாபு என்ற இளைஞர். புரோகிதம் செய்யும் தொழிலில் இருப்பவர். “வா! கடைத்தெருவுக்குச் சென்று ஆசிரமத்துக்குச் சாமான்கள் வாங்க வேண்டும்” என்று அவரை அழைத்துச் சென்றார். கடைத்தெருவில் ஒரே கூட்டம்! வண்ண வண்ண ஆடைகள் அணிந்த குடும்பப் பெண்கள்! வழிகாட்டிகள்! புரோகிதர்கள்! எளிய ஆடையணிந்த விதவைகள்! கௌரவமான பிராமணர்கள்! எங்கும் திரிந்த கோயில் மாடுகள்! இந்த நெரிசலில் முட்டி மோதிக் கொண்டு சென்ற போது… ஒரு ஒதுக்கமான சந்து…….! அங்கே இவர் தலையைத் திருப்பிப் பார்த்தபோது…… காவியுடை அணிந்த துறவி: அந்தச் சந்தின் கோடியில் காவியுடை அணிந்த ஒருவர்! தெய்வீகத் தன்மை கொண்ட முகம்! அவரைப் பாத்ததும் அவர் மீது கண்கள் நிலை குத்தியபடி இருந்தன! நீண்ட காலம் தனக்குப் பழக்கம் ஆனவர் போல் தோன்றியது. இவர் யாரோ ஒரு துறவி! உனக்குத் தெரிந்தவர் என்று குழம்பாதே! நட! – என்று மனம் கூறியது. பத்து நிமிடமாகப் பார்த்தபடி இருந்த இவருக்கு பாதங்கள் மரத்துப் போனது போல் இருந்தது. ஏதோ கல்போல ஆனது மாதிரி இருந்தது. மிகுந்த சிரமத்துடன் திரும்பினார். பிறகு கால்கள் சாதாரண நிலைக்கு வந்தன. எதிர்ப்பக்கம் திரும்பினார். மறுபடி ஏதோ ஒரு சுமை! கால்களை எடுத்து வைக்க முடியவில்லை. அந்த யோகி காந்தக் கண்களால் என்னை அவரிடம் இழுக்கிறார் என்று புரிந்தது. அருகிலிருந்த ஆசிரமவாசியிடம் தன் கையில் வைத்திருந்த சாமான்களைக் கொடுத்து விட்டு, அந்தத் துறைவியை நோக்கி நடந்தார். அவரை அடைந்ததும், “குருதேவா! தியானத்தில் பலமுறை உங்களைப் பார்த்திருக்கிறேன். இந்த முகம்! இந்தக் காந்தக் கண்கள்! சிங்கம் போன்ற தலை! இந்தத் தாடி! – இவையெல்லாம் என் தியானத்தில் கண்டிருக்கிறேன்” என்றார். எனக்கே உரியவன்: “அடே! நீ எனக்கே உரியவன்! நீ என்னிடம் வந்துவிட்டாய். அடே! உனக்காக எத்தனை ஆண்டுகள் காத்திருந்தேன் தெரியுமா?” என்றார் அந்தத் துறவி. அவர்தான் யுத்தேஸ்வரர் கிரி! “இவர்தான் என் குரு! இவர் இறைவனைக் கண்டவர்! என்னையும் இறைவனிடம் அழைத்துச் செல்வார்!” என்று யோகானந்தாவின் உள்ளுணர்வு சொல்லிற்று. அதன்பின் இந்தப் பிறவியின் நினைவுகள் மறையலாயின. முந்தைய பிறவியின் நினைவுகள் மெல்ல மெல்ல உதயமாயின. காலம் செய்யும் கோலம்தான் என்ன? இந்தச் சந்தர்ப்பத்தில் மேலும் ஒரு செய்தியைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. அருட்கூடத்தில் நம் அம்மாவுக்குப் பாதபூஜை செய்யப்போகும் சில பக்தர்களுக்கு அம்மாவைப் பார்த்தவுடன் அழுகை வருகிறது! கண்ணீர் வருகிறது! “என்னைப் பார்த்ததும் ஏன் அழறே?” என்று அம்மா கேட்கிறார்கள். அது என்னமோ தெரியலம்மா! அழணும் போல இருக்கு! அழுது கொட்டி விட்டால் மனசு திருப்தியாயிடுது! என்கிறார்கள். அவ்வாறு சொல்வதன் பின்னணி என்ன…….? ஏதோ ஒரு பிறவியில் அருள்திரு. அடிகளார் ஆன்மாவோடு பிறவித் தொடர்புள்ள ஆன்மாக்களும் வந்திருக்கின்றன. அவர்கள் அந்தப் பிறவியில் அடிகளார்க்குச் சேவை செய்திருக்கலாம். சீடர்களாக இருந்திருக்கலாம். அப்படிப்பட்டவர்கள்தான் சொல்கிறார்கள். “அது என்னமோ தெரியலைம்மா! உங்களைப் பார்த்ததும் அழணும்னு தோணுது” இதுதான் பூர்வ ஜென்மத் தொடர்பு! பழம் பிறவி வாசனை! ஆன்மாவுக்கு அழிவில்லையே! கர்மவினைக்குத் தக்கபடி அது பிறந்தும் இறந்தும் உழன்றபடியே தொடர்ந்து வந்தபடியே இருக்கிறதே! யுக்தேஸ்வரரின் சந்திப்பு: முந்தைய பிறவித் தொடர்பு யோகானந்தாவுக்கு வந்ததும், ஓ! இந்தப் புனிதமான திருவடிகளில் எத்தனை முறை விழுந்து பணிந்திருக்கிறேன்? இது முதன்முறை அல்லவே….. என்று நினைத்தார். யுக்தேஸ்வரர், யோகானந்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு ஒரு வீட்டிற்குச் சென்றார். நான் தற்சமயம் என் தாயாரைக் காண்பதற்காக வந்திருக்கிறேன். என்னுடைய ஆசிரமம் வேறு இடத்தில் செராம்பூரில் உள்ளது. சில நாட்கள் மட்டும் இங்கே தங்கியிருப்பேன். நீ இப்போதே உன் வீட்டிற்குத் திரும்பு. சந்நியாசி என்பவன் எல்லாம் துறந்தாலும், தன் வீட்டார் அனைவரிடமும் அன்பு காட்டக் கூடாது என்று அர்த்தமல்ல! எதிர்காலத்தில் என் ஆசிரமங்கள், அத்துடன் எல்லாவற்றையும் உனக்குக் கொடுக்கப் போகிறேன்! என்றார் குருதேவர். குருதேவா! நான் ஞானத்தை அடைய வேண்டியும், கடவுளை அறிய வேண்டியும் வந்திருக்கிறேன். உங்களிடம் உள்ள அந்தப் புதையல்தான் எனக்கு வேண்டும் என்றார் யோகானந்தா. “நான் உன்னை எளிதில் சீடனாக ஏற்றுக் கொள்ள மாட்டேன். நான் சொல்வதற்கெல்லாம் கீழ்ப்படிய வேண்டும். என்னிடம் முழுமையாகச் சரணடைய வேண்டும்!” என்றார் யுக்தேஸ்வரர். நான்கு வாரங்கள் கழித்து மீண்டும் என்னிடம் வருவாய் எனக் கூறி அனுப்பினார். அவ்வாறே சந்தித்தார். நீ உன் வீட்டிற்குத் திரும்பிச் சென்று குடும்பத்தாருடன் இரு! உன் தகப்பனார் நீ கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற வேண்டும் என்று விரும்புகிறார் அல்லவா? அவர் ஆவலை நிறைவேற்று என்று கட்டளையிட்டார். மேலும் படிக்கவும், பட்டம் பெறவும் நாட்டமில்லாமல் தயங்கி நின்றார் யோகானந்தா. நீ ஒரு பல்கலைக்கழகப் பட்டதாரியாக இருந்தால், இந்தியாவிலுள்ள ஞானத்தை இன்னும் அதிக ஆவலுடன் உலகம் கேட்குமல்லவா…? மேலை நாடுகளில் உன்னால் ஆக வேண்டிய பணிகள் இருக்கின்றன என்றார் யுக்தேஸ்வரர். குருதேவா! உங்கள் கட்டளைகளுக்கெல்லாம் கீழ்ப்படிகிறேன். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை! என்ன..? எனக்குக கடவுளைக் காட்டுவதாக வாக்குறுதி அளிக்க வேண்டும்! ஒரு மணி நேரம் குருவுக்கும் சீடனுக்கும் வாதப் பிரதிவாதங்கள் நடந்தன. அது பற்றி யோகானந்தா குறிப்பிடுகிறார். ஒரு குரு கடவுளுடன் அந்தரங்கமான உறவை உண்மையில் வைத்திருந்தால்தான், அவனைக் காட்சி அளிக்கும்படி வேண்டுவதற்கு இயலும். யுக்தேஸ்வரர் இறைவனுடன் ஒன்றியிருப்பவர் என உணர்ந்தேன். அவருடைய சீடன் என்ற முறையில் எனக்குள்ள எனக்கிருந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதில் உறுதியாக இருந்தேன். நீ பிடிவாதக்காரன்! உன் விருப்பம் என் விருப்பமாகட்டும் என்று சொல்லிச் சம்மதித்தார் யுக்தேஸ்வரர். ஒரு குருவிடம் அவர் பெற்ற அனுபவங்கள் என்னென்ன….? என்பதை அடுத்து எழுதுவேன். சக்தி ஒளி – ஜுன், 2012 பக்கம் (32 – 38)
]]>