சிரிப்பும் சிந்தனையும்

அம்மாவிடம் பாதபூசை செய்து தங்கள் குறைகளை அம்மாவின் முன் வைக்கும் சில பக்தா்களைப் பார்க்கும் போது சிரிப்பாகவும் இருக்கும். அதே சமயத்தில் சிந்திக்கவும் வைக்கும். அம்மா எப்போதும் வாய்விட்டு அதிகம் சத்தம் போட்டுச் சிரிக்க மாட்டார்கள். அதிகம் சத்தம் போட்டுச் சிரிப்பவா்களையும் கண்டிப்பார்கள்.

நான் சிறு வயதில் அதிகமாக சத்தம் போட்டுச் சிரிப்பேன். கண்களில் நீா் வரும் அளவுக்கு என் சிரிப்பு இருக்கும். வயதாக, வயதாக சிரிப்பு கூடக் குறைந்து விடுகிறது. நான் மாணவியாகப் படிக்கும் போது ஏதாவது நகைச்சுவையாக ஆசிரியா் பேசினால் அல்லது மாணவா்கள் நடந்து கொண்டால், சிரிப்பை அடக்க முடியாமல் சிரிப்பேன். சில சமயங்களில் ஆசிரியா் பாடம் நடத்திக்கொண்டு இருக்கும் போது, கடந்த வகுப்பறையில் நடந்த  நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டு அடக்க முடியாமல் சிரிப்பேன். அதனால் ஆசிரியா் என்னை வகுப்பை விட்டு வெளியே அனுப்பி “மொத்தமாகச் சிரித்துவிட்டு வா!” என்று கூறியதும் உண்டு.

ஒரு நாள் எந்த நாளும் இல்லாத வகையில் அம்மா பக்தா்களைப் பற்றிச் சொல்லிச் சொல்லி இடைவிடாமல் சிரித்தார்கள். இது போன்ற சிரிப்பை நான் எப்போதும் பார்த்ததில்லை. அம்மாவின் ஒவ்வொரு அசைவையும் ரசிக்கும் பக்தா்களாகிய உங்களுக்கு ஆன்மிகத்தைப் பற்றியே சீரியஸாக எப்போதும் சொல்லிக் கொண்டிருக்காமல் சிரிப்பையும் எழுதலாமே என்றுதான் சில நிகழ்ச்சிகளை இங்கே எழுதுகிறேன்.

ஞாயிற்றுக் கிழமைகளில் நான் சித்தா் பீடத்திற்கு வருகிறேன். அப்போது அம்மா பொது அருள்வாக்கை மகளிர் அறநிலைக்கு எப்போதாவது கொடுப்பார்கள். பிறகு அம்மா  பாதபூசை நடைபெறும்போது உடனிருந்து பணி செய்வேன். சில பக்தா்கள் கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கும் போது, காலத்தைக் கருதி சீக்கிரமாகப் போகும்படிக் கூறுவேன்.

அவ்வாறு போகாமல் அவா்கள் விருப்பத்திற்கு அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தால் அம்மா மதிய உணவைச் சாப்பிடப் பகல் மூன்று மணியாகிவிடுகிறது. அதனால் சிலா் “திருமதி அம்மா வந்துட்டாங்களா, இன்றைக்கு பக்தா் வரிசை சீக்கிரம் ஓடிவிடும்” என்று கேலியாகக் கூறுவதும் என் காதுகளை வந்தடையும். அதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை. எனக்கு அம்மாவின் உடல் நிலைதான் முக்கியம். சரி, நிகழ்ச்சிக்குப் போவோமா!

ஒரு ஞாயிற்றுக்கிழமை, ஒரு பெரியவா், வயது எழுபதுக்கு மேல் இருக்கும். தள்ளாடியபடி வந்தார். தனக்கு உடல் நிலை சரியில்லாததற்கு மருந்து கேட்டார். அம்மாவும் அவா் உடல் நிலை தேறுவதற்கு மருந்து கூறினார்கள். பிறகு ஓரிரு மாதங்கள் கழித்து வரும் போது, முன் போல் தளா்வாக நடந்து வராமல் தெளிவாகவும், தெம்பாகவும் வந்தார். நான்கூட, பரவாயில்லை, அம்மா கூறிய மருந்தில் இவா் தேறி விட்டார் என்று மகிழ்ச்சி அடைந்தேன்.

அடுத்து அவா் கேட்ட கேள்வி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. “அம்மா! எனக்கு எப்ப கல்யாணம் நடக்கும்?” என்று கேட்டார். நான் அம்மாவைப் பார்த்து வாயைப் பிளக்க, அம்மா என்னைப் பார்த்துப் புன்முறுவல் செய்தார்கள். எனக்கு அப்போதும் சந்தேகம், அவா் போனபிறகு அம்மாவைப் பார்த்து, “இவா் யாருக்குக் கல்யாணம் என்று கேட்கிறார்?” என்றேன். அம்மா அவருக்குத்தான் என்றார்கள்.

உடல் நிலை தேறுமா? என்று வந்தவா், உடல் நிலை தேறியவுடன், என்ன சுகம்?  எந்த வயதில் கேட்கிறது பார்! என்று அதிசயப்பட்டு விட்டேன். அம்மா இப்படிப் பட்டவா்களுக்கு எப்படியெல்லாம் பொறுமையாகப் பதில் சொல்கிறார்கள்! எந்த வயதிலும் மனிதனுக்கு ஆசை விடாது போல் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். எந்த வயதில் இவருக்குத் திருமண ஆசை என்று சிரித்தாலும், எந்த வயதிலும் ஏதோ ஒரு ஆசை மனிதனின் மனத்தை விட்டு அகலாது என்று சிந்திக்கவும் வைக்கிறது அல்லவா?

ஒரு ஞாயிறு ஒரு பெண்மணி தன் கணவா், பிள்ளைகள் என்று குடும்பத்தோடு வந்து அம்மாவுக்குப் பாதபூசை செய்தார்கள். அம்மாவும் அவா்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் கூறினார்கள்.

கடைசியாக அந்தப் பெண்மணி அம்மாவிடம் உரிமையாக, தன் தாயிடம் பேசுவது போல, “ஏம்மா, பாரு என் தலையில் முடி கொட்டிக் கொண்டே இருக்குது, இதுக்கு ஒரு மருந்து சொல்லும்மா, உனக்கு மட்டும் அழகா கிராப் இருக்குது, பின் பக்கம் பார்த்தா அழகா தெரியுது, என் தலையைப் பாரு! எனக்கு….” என்று நிறுத்தி விட்டு அந்த அம்மா என் தலையைப் பார்த்தது. என் தலையில் கொஞ்சம் முடி இருக்கவே, உடனே வீரராகவனைப் பார்த்து, “அதோ அவருக்கெல்லாம் முடி கொடுக்கக் கூடாதாம்மா….!” என்று கேட்டார்கள்.

எனக்குச் சிரிப்புத் தாங்க முடியவில்லை. எங்கு தனக்கு மட்டும் கேட்டால் தவறுதலாகி விடுமோ என்று திரு. வீரராகவனையும் சோ்த்துக் கொண்டதுதான் சிரிப்பாக இருந்தது. பக்கத்தில் இருந்த அந்த அம்மாவின் மகன், “அம்மா! எப்பப்பார்த்தாலும் உன் முடியப் பத்தியே கேட்டுகினு இருக்கிறியே! என் படிப்பப்பத்தி அம்மாகிட்டே கேளும்மா!” என்று விவரமாகக் கேட்டான்.

குடும்பத்தில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது இப்படி வெகுளித் தனமாக எதையோ கேட்டுவிட்டுச் செல்கின்ற பக்தா்களைப் பார்க்கும்போது சிரிப்பும் வருகிறது. சிந்திக்கவும் முடிகிறது.

வேலூா் பக்கத்தில் ஒரு கிராமத்திலிருந்த ஒரு அம்மா தன் குடும்பத்துடன் அம்மாவைப் பார்க்க அடிக்கடி வருவார்கள். அவா்கள் மிகவும் உரிமையாக அம்மாவின் மிக அருகில் சென்று, பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் பேசுவது போல அம்மாவிடம் ஏன்டி, வாடி, போடி என்று தான் பேசுவார்கள். நான் ஒருமுறை அந்த அம்மாவிடம், “அம்மாவிடம், மரியாதையாகப் பேச வேண்டும்” என்று கூறினேன்.

ஒரு வெள்ளிக் கிழமை அந்த அம்மா, மறுபடியும் அம்மாவைப் பார்க்க வந்தபோது, “ஞாயிற்றுக் கிழமையா இருந்தா உங்க வீட்டுக்காரம்மா இருப்பாங்கன்னுதான் இன்னிக்கு வந்தேன்.. ஏன்டி, நீயும் சொல்லிக் கிணுதான் இருக்கிற, நானும் கேட்டுக்கிணுதான் வா்றேன், எங்கடி என்ன சந்தோஷமா வச்சிருக்கிற?” என்று தனக்கே உரிய உரிமையில் பேச, அதற்கு அந்த அம்மாவின் மகள், “தே அம்மாகிட்ட இப்படியா பேசறது” என்று சண்டை போட, திரு. வீரராகவன் தடுக்க, “நீ கால கழுவுற வேலையை பாரு”  என்று அந்த அம்மா திரு. வீரராகவனிடம் சண்டை போட, கேட்க வந்ததை விட்டு விட்டு அம்மாவும் மகளும் சண்டை போட்டுக் கொண்டே போய் விட்டார்கள் என்று அம்மா அன்று இரவு என்னிடம் சொல்லிச் சொல்லிச் சிரித்தார்கள். அவா்கள் பேச்சு கேளிக்கையாக இருந்தாலும், அவா்கள் அம்மாவிடம் கொண்டுள்ள பாசம், அன்பு நம்மை சிந்திக்கத்தான் வைக்கிறது.

ஒரு நாள் ஒரு குடும்பம் அம்மாவிடம் வந்தது. அதில் ஒரு சிறிய பையன், ஐந்தாம் வகுப்புப் படிப்பவன் அம்மாவின் கையில் காணிக்கையாகப் பத்து ரூபாயைக் கொடுத்து விட்டு, “அம்மா நான் கலெக்டா் ஆகணும்மா” என்றான். அவனுடைய அம்மா, “இந்தப் பையன் எப்பப் பார்த்தாலும் இப்படித்தாம்மா சொல்லிக்கொண்டிருக்கிறான்” என்று கூறினார்கள்.

நான் அந்தப் பையனிடம் “கலெக்டா் என்று சொன்னால் யாருடா? அதற்கு என்ன படிக்க வேண்டும்” என்று கேட்டேன். அதற்கு அந்தப் பையன், “எனக்குத் தெரியாது, ஆனால் நான் கலெக்கடருக்குப் படிக்கணும்” என்றான். சிறு வயதில் அவனுடைய நோக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கலெக்டா் பதவியைப் பற்றித் தெரியாமல் அந்தச் சிறுவன் அம்மாவிடம் கேட்பது நமக்குச் சிரிப்பாக இருந்தாலும், அவன் கலெக்டராக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சிந்திக்கவும் வைக்கிறது அல்லவா?

அம்மா மாலை வீட்டிற்கு வந்தவுடன் தினமும் ஆலயத்தில் நடக்கும் சுவையான நிகழ்ச்சிகளைச் சொல்லிச் சிரிப்பார்கள். சில விஷயங்களைச் சொல்லிக் கோபப் படவும் செய்வார்கள். நம்மிடம் தான் அவா்கள் எதையும் வெளிக்காட்ட முடியும் என்று நானும் எதையும் பொறுத்துக் கொள்வேன்.

படிக்காத பக்தா்களிடம்தான் உண்மையான பக்தியும், பாசமும் இருக்கிறது என்று அம்மா அடிக்கடி கூறுவார்கள். வெகுளித்தனம் கலந்த அன்போடு வரும் பக்தா்களும் வருகிறார்கள். விவரமான பக்தா்களும் வருகிறார்கள். வில்லங்கமான பக்தா்களும் வருகிறார்கள். அம்மா எல்லோரையும் பார்த்துக்கொண்டும், பேசிக்கொண்டும் தான் இருக்கிறார்கள்.

ஒரு அம்மா, அம்மாவைப் பார்த்து “தோ, பாரும்மா, நீ செய்யலைன்னு எனக்கு வருத்தம் கிடையாது, என் விதிப்படி எனக்கு நடக்கட்டும். நான் உன்னைக் குறை சொல்ல மாட்டேன். ஆனா, உன்னைப் பார்க்கணும், உன்கிட்டே ரெண்டு வார்த்தை பேசணும்தான் உன்கிட்டே வரேன். 108 பாத பூசை செய்யறதா வேண்டிக்கிட்டேன்” என்று “எனக்கே அந்த அம்மா அருள்வாக்கு சொல்லுது” என்று அம்மா சொல்லிச் சிரித்தார்கள்.

அம்மா தனக்கு எது செய்யவிட்டாலும், அம்மாவிடம் நாம் அன்பு செலுத்த வேண்டும் என்பதை அவா்கள் சிரிக்கும்படி கூறினாலும் சிந்திக்க வைத்து விட்டார்கள் அல்லவா?

ஆகவே பிரதிபலனை எதிர்பார்க்காமல் நாம் குருவிடம் செலுத்துகின்ற அன்பும், பாசமும் தான் பக்தி என்பதோ!

நன்றி!

ஓம் சக்தி!

திருமதி அடிகளார்.

சக்தி ஒளி, நவம்பா், 2002

 ]]>

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here