பரம்பொருள் சக்தி ரூபம் எடுத்து நேரிடையாக வந்து நம்மோடு பேசுகிற அற்புதம் மேல்மருவத்தூர் தலத்தில் மட்டுமே நடைபெறும் அற்புதம் ஆகும்.

“உலகத்தின் எந்த, மூலையில் இருந்தாலும் என் பக்தனை அழைத்துக் கொள்வேன்” என்று அம்மா அருள்வாக்கில் அன்று சொன்னாள். அதன்படித் திருமானூர் என்ற ஊரில் உள்ள பக்தன் ஒருவனுக்கு அருள்பாலித்தாள்.

திருச்சி மாவட்டத்தில் கொள்ளிடக்கரையில் இருப்பது திருமானூர். அங்கே தெற்குத் தெருவில் உள்ள வீட்டில் வசிப்பவா் சக்தி. சுப்பிரமணியம். அவருக்கு வாழ்க்கையில் ஒரு பெரிய பிரச்சனை. அவருடைய செல்ல மகன் விஜயகுமார் ஆறு வயது வரை பேசாமலே ஊமையாகக கிடந்தான்.

சக்தி உபாசனை மேற்கொண்ட அந்த அன்பா், மகன் நிலைமையை எண்ணியெண்ணிக் கவலைப் பட்டுக்கொண்டிருந்தார்.

ஒருநாள் இரவு…. உறக்கத்தில் ஒரு கனவு.

அந்த வீட்டிற்கு எதிரிலே ஒரு வேப்பமரம். அங்கே வேம்பும், பாம்பும், சுயம்பும் தெரிகின்றன. அந்த வேப்பமரத்திலிருந்து அம்மா வெளிப்படுகின்றாள் எப்படி…..?

செவ்வாடை அணிந்த சிங்காரியாக செந்தாமரை மலா்ந்தது போல அந்த அருள்வடியும் முகத்தில் ஓா் இளஞ்சிரிப்பு! ஒரு பசுவையும் அதன் கன்றினையும் ஓட்டிக் கொண்டு வருகிறாள். சுப்பிரமணியம் வீட்டுக் கதவைத் தட்டுகிறாள்; தட்டி
எழுப்புகிறாள்.

ஒரு செம்பு கொண்டு வா! என்கிறாள். கொண்டு வந்து கொடுக்கிறார். பால்கறக்கச் சொல்கிறாள் அந்தப் பெருமாட்டி!

“நீங்களே கறந்து கொடுங்கம்மா” என்கிறார் இவா்!

புவனம் முழுவதையும் ஈன்ற அந்தப் பெருமாட்டி, தன் செங்காந்தள் விரல்களால் பசுவின் மடிபிடித்துப் பால் கறக்கிறாள். செம்பிலிருந்து பாலைத் தான் சிறிது குடித்து, வீட்டில் உள்ள எல்லோரையும் அழைக்கிறாள். எல்லோரையும் குடிக்கச் சொல்கிறாள். பிறகு தன் செம்பவள வாய் திறந்து “என் வீட்டுக்கு வா!” என்று சொல்லிவிட்டு மறைகிறாள்.

அவ்வளவுதான்! கனவு கலைகிறது. உடனே விழித்துக் கொள்கிறார் சக்தி. சுப்பிரமணியம்.

எழுந்துபோய்க் கடிகாரத்தைப் பார்க்கிறார். விடியற்காலை 4.00 மணி அன்று வெள்ளிக்கிழமை….!

“என் வீட்டுக்கு வா” என்றாளே…..! செவ்வாடையில் வந்தாளே……! இந்தக் கனவிற்கு அா்த்தம் என்ன……? புரியாமல் விழிக்கிறார் சுப்பிரமணியம்

அம்மாவின் செவ்வாடைத் தோற்றத்தை நினைத்தவுடன், திருமானூர் செவ்வாடைத் தொண்டா்கள் நினைவு வந்தது. ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் நினைவிற்கு வந்தது. செவ்வாடைத் தொண்டா்களிடம் தான் கண்ட கனவிற்கு விளக்கம் கேட்கிறார்.

“என் வீட்டுக்கு வா! என்றாளே அம்மா…..! புரியலையா……? உங்களை மேல்மருவத்தூருக்கு வரச் சொல்லியிருக்கிறாள்” என்றார்கள் செவ்வாடைத் தொண்டா்கள். அதன்பிறகு மேல்மருவத்தூர் சென்றார். அந்தக் கனவு அனுபவத்திற்குப் பிறகு வெள்ளிக்கிழமை தோறும் விரதம் கடைப்பிடித்தார்.

அன்று கனவில் வந்து, மேல்மருவத்தூர் அழைத்து…….. பசும்பால் கறந்து கொடுத்து, வெள்ளிக்கிழமை விரதம் இருக்க வைத்து, ஆறு வயது வரை பேசாமல் கிடந்த ஊமைச் சிறுவன்
விஜயகுமாரைப் பேச வைத்திருக்கிறாள்.

இன்று அவன் வயது 14  (1994). எட்டாண்டுகளாகப் பேசும் திறன் பெற்று உலாவி வருகிறான்.

அன்று தில்லையிலே இலங்கை மன்னன் ஒருவன் ஊமைப் பெண்ணைப் பேச வைத்தார் மாணிக்கவாசகா்.

இன்றோ அடிகளாராக உலாவி வரும் ஆதிபராசக்தி திருமானூா் சுப்பிரமணியன் மகன் விஜயகுமார் என்ற ஊமைப் பையனைப் பேச வைத்து அற்புதம் புரிந்திருக்கிறாள்.

நன்றி

ஓம் சக்தி

சக்தி. அமரானந்தம், தஞ்சை

அவதார புருஷா் அடிகளார், பாகம் 13, பக்கம் (3 – 4)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here