“அன்பு” என்பது தொண்டில் மிக முக்கியம். அன்பு இல்லாத ஓா் தொண்டு பட்டுப்போன ஒரு மரத்திற்கு தண்ணீா் விடுவது போன்ற ஒரு பாசாங்கு. அதில் வெறும் நடிப்பும் வேஷமும் தான் இருக்கும். விளைவு எதுவும் இருக்காது. அன்பு கலந்த உண்மையான தொண்டுக்குத் தான் பலனிருக்கும். என்ன பலனை எதிர்பார்க்க வேண்டும்? இருக்கும் வரை எந்தக் குறையும் இருக்கக் கூடாது என்றா? இல்லை இந்த உயிர் பிரிந்த பின்பு ஆன்மா நல்ல நிலைக்குப் போகவேண்டும் என்றா? இது நமக்குப் புரியாத ஒன்று. புரியாத ஒரு எதிர்காலத்தை நன்றாக இருக்க வேண்டும் என்று நாமெல்லாம் எண்ணுகிறோம். மறு பிறவியைப் பற்றியும், இந்தப் பிறவியின் பாவச் சுமைகளைப் பற்றியும் எப்படிக் கணக்கிட முடியும்? அன்றாட சிந்தனைகளும், கவலைகளுமே நம் தினசரி வாழ்க்கையை ஆக்கிரமித்துக்கொள்ளும் போது வேறு சிந்தனைகளுக்கு இங்கு இடமேது? தொண்டுதான் ஆன்மீகமா? இல்லை ஆன்மீகத்தில் தொண்டுக்கு முதலிடமா? அன்பு இல்லாமல் தொண்டு இல்லையா? இல்லை அன்பு தான் தொண்டா? முடிவில்லாத பதில். தெரியாத வினாக்கள். அம்மாவின் வாக்கிலிருந்து நாம் கொஞ்சம் தான் புரிந்து கொள்ள முடிகிறது. மிகுதியைப் போகப் போக நமக்கு இருட்டிலிருந்து வெளிச்சம் வருவது போன்று கொஞ்சம் கொஞ்சமாக அம்மா நமக்கு விளக்குக் காட்டினார்கள். வாழ்க்கையில் “அன்பு என்பது எல்லோரிடமும் அன்பாய் இருப்பது என்பது எவ்வளவு முக்கியம் என்பது அம்மாவின் இந்தத் திருவாக்கில் கொஞ்சம் புரிந்தது. “உங்கள் அன்பே போதும்” என்று அம்மா சொல்லும் போது அது ஒரு சிறந்த தொண்டாக அம்மா எல்லோருக்கும் புரிய வைக்கிறார்கள். பாகுபாடில்லாத போலியில்லாத தூய அன்பை நம்மால் எல்லோரிடமும் ஒரே மாதிரியாகக் காட்ட முடியுமா? அந்த மனப்பான்மை நமக்கு எப்படி வரும்? அன்புக்கு வரம்பு எப்படி இருக்கும்? விகல்ப்பமான சுயநலமான இந்த உலகத்தில் இது போன்ற செயல்கள் நம்மை “ஒரு பைத்தியக்காரனாக தனிப்படுத்துமோ” இதெல்லாம் நமக்கு வரக் கூடிய குழப்பமான எண்ணங்கள். “தொண்டு செய் – அதை அன்பால் நன்று செய் – அதை இன்றே செய்” என்ற மற்றொரு அறிவுரையை அம்மாவிடம் இன்னொரு சந்தா்ப்பத்தில் கேட்டுப் பெறும் வாய்ப்புக் கிடைத்தது. காலங்கடந்து போவதை உணராமல் இருந்தேன். அம்மா இட்ட ஒரு கட்டளையை நான் செய்வதற்கு வழிமுறை பார்த்துக்கொண்டிருந்தேன். அம்மா சொன்னார்கள் “நாம் யாரிடமும் எதுவும் கேட்பதில்லை. ஆனாலும் உன்னிம் சொல்கிறேன்” என்று. அதை செய்து முடிப்பது தாமதமேற்பட்டது. அம்மாவை முழுதாக அறிந்து கொள்ளாத நேரமது. அந்த ஒரு தெய்வக் கட்டளையைப் பற்றிப் புரியாத நேரமது. ஆனாலும் கொஞ்ச நாட்கள் கழித்து அதை நிறைவேற்றி அம்மாவிடம் அதைப் பற்றிச் சொன்ன போது அம்மா நம்மிடம் “ஓ அப்போது சொன்னது” என்றார்கள். ஆனாலும் அதை மிக அன்புடன் ஏற்றுக் கொள்கிறார்கள். புரிகிறது அம்மா புரிகிறது. இப்போது புரிகிறது. எதற்கும் ஒரு கால வரம்பு இருக்க வேண்டும். காலம் தவறிய எந்தவொரு செயலுக்கும் அதன் உரிய மதிப்பு கிட்டுவதில்லை. “உடுக்கை இழந்தவன் கை போல” செயற்பட வேண்டும் என்பது விளங்குகிறது. உடனடியாக “இடுக்கண் களைவது நன்று” என்பது போல செயற்பட வேண்டும் என்றும் புரிகிறது. அம்மா இதை எவ்வளவு சுருக்கமான சொல்லில் மிக அழகாகச் சொல்லி விடுகிறார்கள். இதுபோன்று விளங்கியும், விளங்காமலும், பாங்காகவும் அா்த்தமுடனும் பேச அம்மாவைத் தவிர வேறு யாரால் முடியும்? என் மனது அதனால் புண்படவில்லை. மாறாக நான் வருத்தப்படுகிறேன். காலம் தவறித் தொண்டாற்றியதற்காக நான் வெட்கப்படுகிறேன். இதுவும் ஒரு பாடம் தான் என்று என்னைத் தேற்றிக் கொள்கிறேன். இறைவனிடம் அதைக் கொடு இதைக்கொடு என்று வேண்டுகிறோம். கொடுக்காத தெய்வத்தை இந்தப் பாழும் தெய்வத்துக்கு கண் இல்லையே என்று ஏசுகிறோம். கடவுள் கண்ணைத் திறக்க மாட்டாரா? என்று குழம்புகிறோம். நாம் செய்யும் செயல்கள் மற்றும் எண்ணங்களில் நம் இஷ்ரப்படி தெய்வம் இயங்க வேண்டும். அதுவும் கேட்டவுடன் கிடைக்க வேண்டும் என்று வேண்டுகிறோம். அதில் காலம் கடந்து போகும்போது நொந்து போகிறோம். அது கிடைத்ததே என்று அப்போது இறைவனுக்கு முழு மனதுடன் நன்றி சொல்லத் தயங்குகிறோம். எந்தெந்தக் காலத்தில் எது எது நடக்க வேண்டும் என்பது இறைவன் நியதி. ஆனால் இறை வழியில் நாம் செய்யும் கால தாமதம் தவிர்க்கப்படவேண்டும் என்பது மனித நியதியாக இருக்க வேண்டும். கொஞ்சம் புரிகிறது. கொஞ்சம் புரியாமல் போனது. இன்னொரு கால கட்டத்தில் அம்மா சொன்ன மற்றொரு கட்டளை எனக்குத் தொடா்பு இல்லாத ஒரு நிறுவனத்தில் ஒரு காரியம் ஆகவேண்டும் என்றும் அது என்னால் செயலாகக் கூடும் என்று அம்மா ஒரு முறை என்னிடம் கூறினார்கள். அம்மாவின் சொல்லைத் தட்ட முடியாத ஒரு நிலை. மிக நுணுக்கமான ஒரு காரியத்தை அறிமுகமில்லாத ஒரு இடத்தில் எப்படிப் போய்க் கேட்பது என்று தயக்கம். மன்றத்தின் தலைவரும்  அவா் மனைவியும் என்னிடம் “மூலமந்திரம் சொல்லிவி்ட்டுப் போங்கள் காரியம் நடக்கும்” என்று கூறினார்கள். அந்த வழியில் நான் நடக்கிறேன். அம்மா கூப்பிட்டுச் சொன்னார் அந்தக் காரியம் தானாக நடக்குமே! நான் என்ன நடுவில்? ஒரு புரியாத புதிர்! விளங்காத ஒரு சூழ்நிலை. இப்போது மனநிலை சற்று வேறுபட்டுள்ளது. நான் ஒரு கருவி எந்தக் காரியத்துக்கும் இந்த உலகி்ல் யாராவது ஒரு கருவியாக இருக்கிறார்கள். அதுபோன்ற நிலையில்  இப்போது நான் இருக்கின்றேன். அம்மா கொடுத்த பணியை மூலமந்திரத் துவக்கத்துடன் செய்ய முற்படுகிறேன். அம்மாவைப் பார்க்கும்போது இதைப்பற்றிச் சொல்கிறேன். அம்மா அதற்குப் பதில்சொன்னார்கள் “நீ கேட்ட அந்தக் காரியத்தை அவா்களே செய்யலாம் ஆனால் அவா்கள் காலம், நேரம், சந்தா்ப்பம் பார்க்கிறார்கள். செய்வார்கள்.” என்று சொல்லி நிறுத்திவி்ட்டார்கள். ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு தூண்டுகோல் தேவைப்படுகிறது. அந்தத் தூண்டுகோலாகவும், கருவியாகவும் நாம் இவ்வுலகில் இருக்கிறோம். அதை முழு மனதுடன் அதில் ஒன்றி பிரயாசைப்பட்டு ஒரு நம்பிக்கையுடனும் சிரத்தையுடனும் செய்யும் போது அந்தக் காரியம் நிறைவேற ஒரு வழி பிறக்கிறது. அதுவே ஒரு தொண்டாகவும் அமைகிறது. நான் தொண்டு செய்கிறேன் என்று நினைத்துக்கொண்டோ அல்லது பறை சாற்றிக் கொண்டோ செய்வது அல்ல தொண்டு. தன்னை அறியாமல் தன்னை மறந்து மற்றவா்கள் நன்மைக்காக செய்யும் எந்தக் காரியமும் தொண்டு தான். ஒரு வேளை இதைப் புரிய வைப்பதற்குத் தான் அம்மா எனக்கொரு சந்தா்ப்பம் கொடுத்தார்களோ? மறுபடியும் அம்மாவுடன் நடந்த முதல் சந்திப்பு – என் மனைவியுடன் அம்மாவை வணங்கி அந்தத் தினம் ஞாபகத்தில் வருகிறது. அம்மாவின் அருளால் உயா்ந்து மேலோங்கி வளரும் மருவத்தூா் கண்முன் தெரிகிறது. அதன் பின்னணியில் அம்மாவும், அந்த சக்தியும் பிரம்மாண்டமாகத் தெரிகிறது. ஒரு தனி மனிதனின் குறுகியகால வாழ்க்கைக் கட்டத்தில் இவ்வளவு சாதனைகளை இப்படிப் படைக்க முடியுமா? என்று வியந்து நிற்கும் நேரம் இந்தப் பரிமாணமும் வளா்ச்சியும் எப்படிச் சாத்தியம்! அம்மா அப்போது எங்களிடம் சொன்னது இது! “மழை, காற்று, பசி, தாகம் என்று நாம் தினமும் வாழ்கையில் நடக்கின்றோம். இது அன்றாட வாழ்க்கை. ஒரு காரண காரியத்துடன் இங்கு வந்து நிற்கின்றாய். இந்தப் பக்கம் நீங்கள் போன போதெல்லாம் மருவத்தூருக்கு வரவேண்டும் என்று நினைத்தீா்கள். ஆனால் இன்றைக்கு நீங்கள் இரண்டு பேரும் சோ்ந்து வரவேண்டும் என்று இருக்கிறது.” எனக்குப் புரியவில்லை. நான் அப்போது இருந்த நிலை மிகச் சாதாரண மனித நிலை. அன்றாட வாழ்கையில் ஆழமாக உழலும் நிலை. பிறகு ஒரு கால கட்டத்தில் தான் அது புரிகிறது. அம்மா சொல்வது போல “இங்கு வருவதற்கு அருள் வேண்டும்.” என்று! அந்த அருளைத் தான் அன்று அம்மா அப்படிக் குறிப்பிட்டார்களோ? அதற்கும் எனக்கு ஒரு தூண்டுகோல் தேவைப்பட்டது. இந்த மண்ணுக்கு வருவதற்கும் அம்மாவை அன்று பார்க்கக் கூடிய அந்த சூழ்நிலைக்கும் என் தொழில் ஒரு காரணமாக இருந்தாலும் மற்றொரு அலுவலக நண்பரின் வற்புறுத்தலில் நான் அலுவல் நிமித்தமாக மருவத்தூா் வருகிறேன். அது முதல் முறையல்ல. ஆனாலும் அம்மாவின் முன்பு நேருக்கு நோ் நிற்கும் கிடைக்க முடியாத அரிய வாய்ப்பு அன்று கிட்டுகிறது. நான் அங்கு வருமுன் இதை உணரவில்லை. ஏதோ ஒரு சக்தி என்னை இழுக்கிறது. என்னுடன் என் மனைவியையும் கூட மருவத்தூருக்கு இழுக்கிறேன். வாழ்க்கையிலே இறைவன் எல்லாருக்கும் நிறைய சந்தா்ப்பங்களை அளிக்கிறான். அதை நாம் நழுவ விட்டு விடுகிறோம். விடாமல் அதைப் பிடித்துக் கொள்ளும் போது தான் வாழ்க்கை திசை மாறுகிறது. நிறைய சந்தா்ப்பங்களில் நாம் நம்மை அறியாமலேயே சந்தா்ப்பங்களை நழுவவிட்டு விடுகிறோம். அதுதான் விதியா? இதைப்பற்றி நினைக்கும்போது மற்றொரு நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வருகிறது. நாங்கள் மருவத்தூா் மண்ணின் மகிமையையும், அந்த மகானின் பேரன்பையும் ஒரு தெய்வத்துடன் நேரில் உரையாடிப் பெற்றது போல பெற்ற பல அனுபவங்களையும் ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும், ஆன்மீக வளா்ச்சியையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பெற்றுக் கொண்டு வளா்ந்து வந்த நேரம் அதைப் பற்றியும் அந்தப் புனிதமான சில அனுபவங்களைப் பற்றியும் எங்கள் நெருங்கிய நண்பா்கள், மன்றத்தில் சில நெருக்கமானவா்கள் மற்றும் சில உறவினா்களுடன் இதைப் பகிர்ந்து கொண்டு வந்தோம். என் மனைவியின் தோழி அடிக்கடி இதைப்பற்றியெல்லாம் மிக அக்கறையுடன் கேட்டுக்கொள்வார்கள். அந்த ஆன்மீக உணா்வுகளை என் மனைவியிடம் கேட்டறிந்து பாராட்டுவார்கள். ஒரு நாள் அதிகாலை அவா்கள் கனவிலே அம்மா தோன்றுகிறார்கள். அதற்கு முன் தினம் அந்தப் பெண்மணியை மருவத்தூா் ஒரு முறை அழைத்துப் போவதைப் பற்றி நாங்கள் எங்கள் இல்லத்தில் எங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தோம். கனவிலே வந்த அம்மாவிடம் அந்தப் பெண்மணி கேட்கிறார் “நான் மருவத்தூா் வர வேண்டும்” என்று! அம்மா அதற்கு “உன் தோழியின் கணவன் உன்னை மருவத்தூருக்கு அழைத்துக்கொண்டு வருவான். ஆனால் அவன் தான் உன்னை இன்று வி்ட்டு விட்டு மருவத்தூா் கிளம்பிவிட்டானே. இன்னொரு நாள் அவன் உன்னை அழைத்து வருவான். அவனுடன் நீ வருவாய்” அந்தப் பெண்மணியின் கனவு கலைகிறது.

ஓம் சக்தி

நன்றி

சக்தி ரா. ராமமூா்த்தி அம்மா ஒரு சத்தியம் பக்கம்  14 – 20 & nbsp;]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here