அன்னை கூறுகிறாள் எனக்கென்று யார் இருக்கிறார்கள் மகளே!! என்று. இதன் உட்கருத்து என்ன என்று நாம் சிந்தித்து பார்த்தோமா??????

நாம் ஒன்றை மட்டும் நினைத்து பார்த்தோம் என்றால் போதும் அம்மாவின் எல்லை இல்லாத கருணையை புரிந்து கொள்ள முடியும். அம்மாவிடம் நாம் வருவதற்கு முன்பாக எப்படி இருந்தோம்? முதலில் நாம் பெரிதும் விரும்புகின்ற (ஆனால் நிலையற்ற) இந்த உலகியலை எடுத்துக்கொள்வோம். இந்த உலகியலில் நாம் எப்படியான நிலையில் இருந்தோம்? இப்பொழுது எப்படியான நிலையில் இருக்கிறோம் என்று நினைத்து பாருங்கள். தொழில், வருமானம், பதவி, மரியாதை, குடும்பம், அந்தஸ்து, பேர், புகழ், உடல் நலம், இப்படி எந்த விடயத்தை எடுத்துக்கொண்டாலும் ஒரு படி அல்ல பல படிகள் உயர்த்தியே அன்னை எம்மை வைத்திருக்கிறாள். இதற்கு நாம் என்ன செய்து விட்டோம் அம்மாவிற்கு? இவை எல்லாவற்றிக்கும் மேலாக ஆன்மீகம் என்றால் என்ன என்றே தெரியாத, பக்தி என்றால் கோயிலுக்கு சென்று அர்ச்சகர் சமஸ்கிருத மந்திரங்கள் படிக்க கருவறையில் உள்ள இறைவனை வழிபட்டு வருவது என்று மட்டுமே நினைத்து கொண்டு இருந்த எங்களுக்கு எல்லாம் *ஆன்மீகம் என்றால் என்ன, பக்தி என்றால் என்ன, பக்தியை ஏன் வளர்த்துக்கொள்ள வேண்டும், ஊழ்வினை என்றால் என்ன, இந்த பிறவியின் நோக்கம் என்ன, என்ற இது போன்ற மூளைக்கு எட்டாத விஷயங்களை எல்லாம் எமக்கு ஒரு ஆன்மீக குருவாக இருந்து கற்றுத்தந்த அந்த பரம்பொருளின் அவதார நோக்கம், அவதார மகிமை இந்த உலகெங்கிலும் பரப்ப எம்மால் முடிந்த என்ன தொண்டு நாம் செய்தோம் என்று ஒவ்வொரு செவ்வாடை தொண்டனும் நினைத்து பார்க்க வேண்டும்.*

உடனேயே உங்களுக்குள்ளே ஒரு பதில் வரும். நான் என்னால் முடிந்த தொண்டை செய்து கொண்டு தான் இருக்கிறேன் என்று. இதுவும் ஒரு அறியாமையின் வெளிப்பாடு தான். 2000 ஆண்டுகளுக்கு முதல் வாழ்ந்த யேசு கிறிஸ்துவின் அவதார மகிமை, அற்புதங்கள் எல்லாம் இன்றும் உலகத்தில் எத்தனை கோடி மக்கள் எடுத்து கூறுகின்றார்கள்? ஆனால் கண்கண்ட தெய்வம் கலியுக அவதாரமான அந்த பரம்பொருள் பங்காரு தெய்வத்தின் புகழை நாம் அப்படி உலகிற்கு தெரியப்படுத்துகிறோமா? உலகிற்கு வேண்டாம்…. எமது சொந்தங்கள், நெருங்கிய நண்பர்கள், அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நபர்கள் என்று எத்தனை பேரிடம் நாம் எமது அம்மாவின் புகழ் பாடியுள்ளோம்? அவளது அவதார கால மகிமைகளை எத்தனை பேருக்கு எடுத்துக்கூறி உள்ளோம் என்று ஒரு முறை நினைத்து பாருங்கள்.

இதற்கு எமது இந்த உலகியல் ஒரு இடையூறாக இருக்கிறது. குடும்பம், தொழில், பந்த பாசம் இவை அனைத்தும் இதற்கு தடைதான். அப்படி என்றால் அம்மா பந்த பாசத்தை விட்டு சந்நியாசம் போக சொன்னார்களா என்ற கேள்வி எழும். அப்படி அம்மா சொல்லவில்லை. இல்லறத்தில் இருந்து கொண்டே ஆன்மீகம் வளர்க்க வேண்டும் என்பதை எடுத்து காட்டவே அந்த பரம்பொருள் இல்லறத்தில் இருந்து கொண்டே இந்த 40 வருட காலம் மிகப்பெரிய ஆன்மீக கட்டமைப்பை உருவாக்கி லட்சோப லட்சம் பக்தர்களையும் தன்பால் ஈர்த்து வைத்துள்ளது.

சரி அப்படி என்றால் இந்த நவீன உலகத்தில் எப்படி நாம் வீட்டில் இருந்து கொண்டு அம்மாவின் அவதார மகிமைகளை எடுத்து சொல்வது??? இன்று நாம் அனைவரும் முகநூல் பாவிக்கின்றோம் அல்லவா. எமது முகநூலில் உள்ள எமது தனிப்பட்ட நண்பர்களில் எத்தனை பேர் அம்மாவை பற்றியும், அம்மாவின் அவதார கால அற்புதங்கள் பற்றியும் அறியாமல் உள்ளார்கள்? நாம் தினமும் முகநூலில் எப்படியான பதிவுகளை பதிவிடுகிறோம்? எத்தனை பதிவுகள் அம்மாவை பற்றியது என்று சித்தித்து பாருங்கள்? எம்முடைய எல்லா பதிவுகளும் அம்மாவை பற்றியதாக இல்லை என்றால் அதற்கு என்ன பொருள்??? நாம் அம்மாவை விட மற்றைய உலகியல் விஷயங்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறோம் என்பதே அதன் உட்கருத்து.

தொழில் மாற்றம் என்றால் முகநூலில் பதிவு, சம்பள உயர்வு என்றால் பதிவு, பிறந்த நாள் என்றால் பதிவு, திருமண நாள் என்றால் பதிவு, குடும்பத்தில் சகோதரர்களுக்கு பிறந்த நாள் என்றால் பதிவு, திரைப்படம் சம்பந்தமான பதிவு, இப்படி எடுத்ததுக்கு எல்லாம் முகநூலில் பதிவு செய்யும் நாம் பத்து பதிவுகளில் ஒரு பதிவாக அம்மாவின் பதிவை பதிவிடுவதுதான அம்மா எங்களுக்கு செய்துள்ள அனைத்திற்கும் நாம் செய்யும் உபகாரமா?? அம்மா எதையும் எம்மிடம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஒரு தாயின் மனம் எப்பொழுது ஆனந்தம் அடையும் என்று குழந்தைகளாகிய எமக்கு தெரிய வேண்டும் அல்லவா??

நாம் பதிவிடும் எல்லா பதிவுகளும் அம்மாவின் அவதாரம் பற்றியும், அம்மாவின் அருள்வாக்குகள், அம்மாவின் அற்புதங்கள் பற்றியும் பதிவிடுவோம் என்ற சங்கல்பத்தை இன்றே மேற்கொள்வோமா?? நாம் உடலால், மனதால் எத்தனையோ தொண்டுகள் செய்கிறோம். அவை அனைத்தும் எமது ஆன்ம முன்னேற்றத்திற்காகவும், எமது ஊழ்வினை துன்பங்கள் தணியவும் தான். ஆனால் எங்களை தாயாக, தந்தையாக, குருவாக, தெய்வமாக இருந்து காத்து வழிடத்தும் அம்மாவின் மனம் குளிரும் வண்ணம் நாம் என்ன செய்து விட்டோம்??