*உனக்கு அழிந்து போகின்ற உலக சுகங்கள் வேண்டுமா? நிரந்தர சுகம் வேண்டுமா?*

இன்றைக்குத் தேவையான களாக்காய் வேண்டுமா? நாளைக்குத் தேவையான பலாக்காய் வேண்டுமா?

எது வேண்டும் என்று தீர்மானிப்பது உன் பொறுப்பு.

*அந்தப் பொறுப்பையும் நீ என்னிடம் விட்டு விட்டால், உன்னையும் உன் குடும்பத்தையும் என் பொறுப்பில் ஏற்றுக் கொள்கிறேன். உனக்கு எது தேவை, அதனை எப்படி எப்போது கொடுக்க வேண்டும் என்பது எனக்கு மட்டுமே தெரியும். எதிலும் அவசரக்காரனாக மாறிவிடாதே! என்கிறாள் அன்னை.*

*உன்னை என்னிடம் ஒப்படைத்துவிடு.* பிறகு அங்கே, இங்கே என்று ஓடாதே! அந்தச் சாமி ,இந்தச்சாமி என்று அலையாதே! சில மந்திர சித்தி பெற்றவனிடம் ஓடாதே!

*என்னிடம் அரைகுறை நம்பிக்கை வைத்து நெருங்குபவர்களுக்கு அடிகளாரின் மகத்துவத்தைக் காட்டுவேன். அடுத்த கணம் மாயையால் மறக்கடிப்பேன்.*

*என்னை மட்டுமே நம்பி அடிகளாராகவே என்னை உண்மையாக ஏற்றுக் கொண்டால் என்*
*சாம்ராஜ்யத்திற்கு உன்னை அழைத்துக் கொண்டு செல்வேன்.*

*ஆரம்ப காலத்தில் நீ என்னிடம் வந்தபோது காட்டிய அன்பும், பரிவும், பாசமும் இப்போது அம்மா நமக்குக் காட்டவில்லையே என்று புலம்பாதே! அன்றைக்கும் இதே அம்மாதான், இன்றைக்கும் அதே அம்மாதான்.*

*உலகமெல்லாவற்றையும் – அன்பு என்னும் வலை பின்னி உங்களை ஒரு கூடாரத்தில் கொண்டு வந்து நிறுத்தி, உங்களை அழிவுப் பாதையிலிருந்து மீட்கவே தானடா இங்கே நான் அடிகளாராகவே வந்திருக்கிறேன். நீ என் கூடவே சுற்றி வருபிற பிள்ளையாக இரு.நான் என்ன சொல்லுகிறேனோ அதை மட்டும் கேள்.*

*ஆன்மிகத்தில் காலங்காலமாக அனாதைகளாக விடப்பட்ட உங்களிடம் தான் இன்று வந்து கொஞ்சுகிறேன்; ருசி காட்டுகிறேன்; கெஞ்சுகிறேன்; ஏன் ? அதனமூலம் உன்னதமான ஒரு தலைமுறையை இந்த நாட்டில் உருவாக்கி ஒப்பற்ற ஆன்மிகப் பாரம்பரியத்தை இங்கே வளர்ப்பதற்காக!.*

இந்த நாட்டில் அணைந்து வரும் ஆன்மிக ஜோதியை கொழுந்து விட்டு எரியச் செய்வதற்காக!

இன்றைக்கு விஞ்ஞானத்தின் பொய்மைக் கோலத்தை ஓரளவு அறிவு படைத்தவனுக்குப் புரிய வைத்து விட்டேன்.இனி விஞ்ஞானம் பொய்த்துவிடும். ஆன்மிகம் திரும்ப வரும்.

*காலச்சக்கரத்தை சுற்றிவிட்டுக் கொண்டு……அவனவன் போக்கிலே அவனவனை ஆடவைத்து வேடிக்கை காட்டிக் கொண்டு இருக்கிறேன். நீ இந்தக் கலியுகத்தில் எதை எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டு வேடிக்கை காட்டும் என்னை மட்டும் நம்ப மறுக்கிறாய்.*

சக்கரம் சுழல்கிறது. ஒரு காலத்து மெய்கள் அடுத்த சுழற்சியில் பொய்யாகிவிடும்.ஒரு காலத்தைய பொய்கள் இன்னொரு சுழற்சியில் மெய்யாகிவிடும்.

*நான் காலம் கடந்தவள். காலம்தோறும் உன்னைக் கண்காணித்து, உன் ஆன்மாவிற்கு உடம்பு ஒன்று கொடுத்து வேடம் போட்டு அனுப்புகிறவள்.*

நீ இருக்கிற நாடு மாறலாம், அழியலாம். பூமி கடலாகலாம்! கடல் பூமியாகலாம்! ஒவ்வொன்றின் எல்லைக் கோடுகள் மாறலாம்.

உன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொரு பொருள்களும் தோன்றுகின்றன, வளர்கின்றன, தேய்கின்றன, அழிகின்றன, மாற்றமடைகின்றன.

*எல்லாமே மாறி வருகின்ற இவ்வுலகில் மாறாத உண்மைகள் இரண்டு. அவை நானும், நீயும். நானும் நீயும் இன்றைக்கு இருந்தோம், இன்றும் இருக்கிறோம், நாளையும் இருப்போம். என்னில் ஒரு கூறு நீ. இன்று நீ என்னைப் பிரிந்து கிடக்கிறாய். உன் மூலஸ்தானம் நான்தான். என்னில் நீ வந்து ஒடுங்க வேண்டும் என்பதற்காகவே இந்த உலக நாடகம். இது நாடகம் என்ற உண்மையை மறந்து விடாதே.*

*உன் மனமும், உன் முந்தைய கருமமும், அஞ்ஞானமும், அகங்காரமும் என்னையும் உன்னையும் பிரித்து விட்டன.உன் கருமத்தால் நீ ஒரு உடம்புக்குள் வருகிறாய் . என் மாயையால் நானும் ஒரு உடம்பு தாங்கி அவ்வப்போது வருகிறேன். ஏன்? உன்னை மீட்பதற்காக, உன்னை என்னோடு சேர்த்துக் கொள்வதற்காக.* இனி நீ மீண்டும் பிறந்து அடி உதை எல்லாம் படாமல் இருப்பதற்காக!

*நீ உன் முன்னைய கருமங்கள் காரணமாகப் பிறவிக்கு வருகிறாய். நான் என் மாயா சக்தியால் மீண்டும் ஒரு பிறவி தாங்கி வருகிறேன். யுகம் தோறும் வருகிறேன். உன்னை மீட்க வருகிறேன். ஒவ்வொரு பெயர் தாங்கி வருகிறேன். அந்த யுகத்தருமத்துக்கு தக்கபடி வேடம் தாங்கி வருகிறேன்.இன்றைய எனது வேடத்துக்குப் பெயர்தான் பங்காரு அடிகளார்.ஒரு புறம் என் மகிமையையும் காட்டுகிறேன். அடுத்தகணம் உன்னை என் மாயையால் மறக்கப் பண்ணுகிறேனே அது புரிகிறதா…? இந்த மாயையைக் கடந்து வா! பார்க்கும் பொருளும் நானே! பார்க்கப்படும் பொருளும் நானே!*

*உனக்குச் சொல்ல வேண்டியவைகளை எல்லாம் சொல்லி விட்டேன்.உனக்குக் கொடுக்க வேண்டிய வாய்ப்புக்களை எல்லாம் கொடுத்து விட்டேன்.*

*ஒருமுறைக்கு பலமுறை சிந்தனை செய்.!*

இவற்றில் அம்மா சொல்லிக் காட்டியது பாதி!
சொல்லாமல் சொல்லிக் காட்டியது மீதி!

நன்றி சக்தி ஒளி