“கந்தர்வர் வித்தையர் கானமும் கேட்பைநீ
கண்ணுக்குள் சிவலோகக் காட்சியும் காண்பைநீ
இந்திரர் அமிழ்தமும் ஏற்றமாய் உண்மைநீ;
எந்நாளும் அன்னையருள் ஏகமாய் ஏற்பைநீ;
மந்திரம் தந்திரம் எந்திரம் சேர்ப்பைநீ;
மாதாவின் கருணைமழை மடைத்திறந் தான்வைநீ;
சிந்தனை எங்கினும் பந்தனை செய்யும்நீ;
சிறியேனைக் காப்பதில் உரியனாய் ஆவாயே!”
(மகான் தோத்திரம்)

மகான்களின் வாழ்க்கை:

மகான்களின் வாழ்க்கை அனைத்தும் அற்புதங்கள் நிறைந்ததே! இந்த அற்புத நிகழ்ச்சிகள் எதைக் காட்டுகிறது? ஆண்டவனும் அருள் நிரம்பிய மகானும் ஒன்றே என்பதையே நமக்குக் ஆண்டவனையே நினைவூட்டுகிறது. உலகின் அருள் இயக்கம் அனைத்தும் மகான்களின் செயலால் நிகழ்வனவே! மக்களை மேல் நிலைக்கு உயர்த்தும் ஆலயங்கள் எல்லாம் மகான்களின் அருள்பெற்றே சத்திமிக்க ஆலயங்களாகின்றன. இவ்வுலகில் மகான்களைக் கருவியாகக் கொண்டே ஆண்டவனும் தன்முத்தொழில்களையும் செயற்படுத்திக் கொள்கிறான். இதற்கு எடுத்துக்காட்டே இம்மகானின் வரலாறும் ஆகும்.

தன்சமாதியில் தானே அமரல்:

தன் தென்காசிச் சமாதியில் இருந்து வெளிக்கிளம்பி மதுரையில் சுற்றிக் கொண்டிருந்தபோது, தங்கத்தில் சீசக்கரம் செய்வதற்காக மகான் அவர்கள் தென்காசிக்குச் சென்றார். அப்போது தம்பக்தர் சங்கரன் பிள்ளையின் வீட்டிற்கும் சென்றார். வீட்டினுள் புகுந்த மகான் உடனே வேகமாக உள்ளே சென்று அங்கிருந்த சமாதி மேடைமேல் பத்மாசனம் போட்டுக் கொண்டு உட்கார்ந்து விட்டார். அந்த வீட்டில் உள்ளவர்க்கு இது பிடிக்கவில்லை. “அச்சமாதி யாரோ ஒரு மகான் சமாதி” என்றேதான் அவர்கட்குத் தெரியுமே தவிர – உண்மையில் யாருடையது? என்று தெரியாது! வீட்டில் உள்ளவரின் முகக்குறிப்பைக் கண்டு கொண்ட மகான், “ஏய்! என்னுடைய சமாதியில் நான் அமர்வதற்கு யாரையடா கேட்க வேண்டும்?” என்று கூறினார். வீட்டுக்காரருக்கும் – மகானின் பக்தர்கட்கும் ஒன்றுமே புரியவில்லை. பிறகு மகானே சாவதானமாகச் சங்கரன் பிள்ளையை அழைத்து, அவர் முன்னோர்களின் வரலாற்றைச் சொல்லி – அப்போது ஏற்பட்டதுதான் தன்னுடைய சமாதி எனக் கூறி விளக்கினார். இச்சமாதி இன்றும் “நெல்லையப்பர் சமாதி” என்றே அழைக்கப்படுகிறது.

சுண்ணாம்பு நீரைக் குடித்தது:

ஒருநாள் மகானைச் சோதனை செய்வதற்காக ஒருவன் வந்தான். வந்தவன் ஒரு குடம் நிறையச் சுண்ணாம்பு நீரைக் கரைத்துக் கொண்டு வந்தான். அவன் மகானை அணுகி “சாமி! தங்களுக்கு நல்ல மோராகக் கொண்டு வந்திருக்கிறேன் குடியுங்கள்! என்றான். மகான் எதையும் தெரிவித்துக் கொள்ளாமல் அப்படியே வாங்கிக் குடித்துவிட்டு ஏப்பம் விட்டார். ஆனால் அதைக் கொண்டு வந்தவன் வயிறு வீங்கி வயிற்றுவலி கண்டு அப்போதே கீழே சுருண்டு விழுந்தான். மகான் அவனை மன்னித்துப் புத்தி புகட்டினார்.

தீராத வயிற்று வலிக்கு:

மற்றொருநாள் மகான் அவர்களிடம் தீராத வயிற்று வலிக்காரன் ஒருவன் வந்தான். தன்னுடைய வயிற்று வலியினைப் போக்கித் தனக்கு உயிர்ப்பிச்சை அளிக்க வேண்டும் என்று இரந்து வேண்டினான். உடனே மகான் தன்சிறு நீரைப் பிடித்து அவனுக்குத் தந்து உடனே குணப்படுத்தினார். நோயாளி நோய் தீர்ந்து மகானின் கருணையைப் பாராட்டிச் சென்றான். இது ஒரு சிலருக்கு அருவருப்பாகக் கூடத் தோன்றலாம். மகான் இறையருள் பெற்ற நடமாடும் தெய்வம். அவர் செய்யும் செயல்களின் அந்தரங்கம் சாதாரண மனிதர்கட்குத் தெரியாது. மகான்களின் நிலையில் நின்று பார்த்தால், “ஆண்டவன் படைத்த பொருள்களில் எதுவும் அருவருப்புடையது அல்ல” என்பது விளங்காமல் போகாது. நம் கண்ணுக்குத்தான் அது சிறுநீர்! மகான்கள் கண்களுக்கு அது வினைதீர்க்கும் மருந்து மட்டுமல்ல தேவாமிர்தமும் ஆகும். தீராத நோயைக் குணப்படுத்துவதில் ஒவ்வொரு மகானும் ஒவ்வொரு முறையைக் கையாள்வது வழக்கம்.
அதுபோல் சித்தர் தருமலிங்கசுவாமிகள் அவர்கள் தீராதநோயைக் குணப்படுத்த ஒரு புதிய முறையைக் கையாண்டார் என்பதையும் நாம் அறிய வேண்டும். தன்னிடம் நோயாளி யாரும் வந்தால் தன் வீட்டின் பக்கத்திலுள்ள ஒரு இலுப்பை மரத்தின் பக்கம் அழைத்துச் செல்வது வழக்கம். அந்த மரத்தலி; தன் நோய் விலக வேண்டும் என்று 3 முறை முட்டிக் கொள்ளச் சொல்வார். நோய் முழுதும் குணமாகிவிடும். ஆனால் அந்த மரத்தில் முட்டிய இடத்தில், சிறு சிறு முட்டுக்கள் தோன்றிவிடும். அதனால் அந்த மரத்திற்கு “முட்டு இலுப்பை” எனப் பெயராயிற்று என்பர். சமீப காலம் வரை அந்த மரம் இருந்ததைப் பலர் பார்த்துமுள்ளனர்.

ஞானிகளின் செயலை நாம் அளந்து கூற முடியாது என்பதற்கு வேறொரு நிகழ்ச்சியையும் நாம் அறிய வேண்டும். காசி நகரத்தில் “இரவிதாஸ்” என்ற ஞானி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி. அப்பகுதியை ஆண்டு வந்த அரசன், அந்த ஞானியைச் சந்தித்து வணங்கி தன் குறையைப் போக்க முற்பட்டான். சாதிவித்தியாசம் பார்க்கும் பழைய நாளில் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியை எப்படிப் போய்ப் பார்ப்பது? என்று எண்ணிக் கொண்டே இருந்தான். நகரத்தில் ஒரு விழா. அப்போது நாட்டு மக்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டிருந்த நேரத்தில் அரசன் மாறுவேடத்தில் ஞானியைப் பார்க்கச் சென்றான். ஞானி முன் நின்று, “ஞானியே! எல்லாம் எனக்கு இருந்தும் மன அமைதி இல்லை; தாங்கள் எனக்குச் சிறிதாவது மனஅமைதியை இன்று தரவேண்டும் என்றான்! அதற்கு ஞானி செருப்பு ஊறவைக்கும் கலயத்தில் இருந்து ஒரு குவளை நீரைமொண்டு “இதைக் குடி” என்றார். அரசனுக்கு அழுக்கு நீரைக் குடிக்க மனம் இல்லாமல் ஞானியின் பின்புறம் திரும்பிக் குடிப்பது போல் தன் சட்டையில் ஊற்றிக் கொண்டு விட்டான்! அரசன் பிறகு வீடு சென்றதும், வண்ணானிடம் சட்டையைத் தந்து சலவை செய்யும்படிக் கூறினான். வண்ணான் ‘இந்த கறை எப்படி வந்தது?” என்று விசாரித்துத் தெரிந்து கொண்டான்.

தன் மகளை நோக்கி விபரம் கூறி உடனே சட்டையைச் சலவை செய்யக் கூறினான். வண்ணானின் மகள் சிறந்த அறிவாளி; இரவிதாஸ் சிறந்த ஞானி என்பதை நன்கு உணர்ந்தவன்! அந்தச் சட்டையின் மேலுள்ள அழுக்கு அனைத்தையும் தன் நாவால் உறிஞ்சி உண்டு விட்டாள். சில நாட்களில் அவளுக்கு தியானத்தில் அமரும் தெய்வ அருள் கிட்டிவிட்டது. இதன் மூலம் ஞானிகள் நமக்கு எதைத் தந்தும் நோயைக் குணப்படுத்த முடியும். நம்மை அருளில் முன்னேற்ற முடியும் என்று அறிந்து கொள்ள வேண்டும். அருவருப்பான பொருள் கூட அவர்கள் கைபட்டதும் புனிதப் பொருளாக தெய்விகப் பொருளாக ஆகிவிடுகிறது என்பதை தாம் அறிய வேண்டும்.

மகானும் பிராம்லி துரையும்:

பிரபல தேசபக்தர் சுப்பிரமணிய சிவாவின் உறவினர், “கேதார நாத்சிவம்” என்பவர் குறிப்பிடதாகக் கூறப்பெறும் அற்புத நிகழ்ச்சி இது. சுவாமிகள் வடநாட்டில் காசி நகரத்தில் இருந்தபோது நிகழ்ந்தது; பிராமல்துரை என்பவர் கலைக்டராக இருந்தார். ஒருநாள் துரை தன் மனைவியுடன் தனியிடம் ஒன்றில் உல்லாசமாக இருந்தார். அப்போது அந்த இடத்தின் வழியாகச் சுவாமிகள் அவதூதக் கோலத்தில் சென்று கொண்டிருந்தார்.துரைக்குக் கோபம் வந்துவிட்டது. உடனே தன்கையில் இருந்த சவுக்கினால் சுவாமிகள் முதுகில் ஓங்கி அடித்துவிட்டார். ஆனால் சர்வ வல்லமையும் உடைய ஆண்டவனின் அவதார புருடராகிய சுவாமிகட்கு அந்த அடிவிழவில்லை! அதற்கு மாறாகத் துரையின் மனைவிக்கே விழுந்தது! மனைவி கீழே விழுந்து அடிதாங்கமாட்டாமல் புரண்டு புரண்டு அழுதான். “இவன் எவனோ மாயாசாலக்காரன்” என்று துரை எண்ணிக் காவலர்களை அழைத்து வீட்டுக்குச் சுவாமிகளை இழுத்துவரச் செய்து இருட்டு அறையில்” அடைத்துப் பூட்டிச் சாவியை எடுத்துக் கொண்டார். பிறகு ஒருவண்டியில் ஏறிக்கொண்டு வெளியே சென்று கொண்டிருந்தார். என்ன அதிசயம்? தனக்கு முன்னால் சுவாமிகள் மெதுவாக நடந்து கொண்டிருந்தார்! துரைக்குக் கலக்கம் வந்துவிட்டது! பக்கத்தில் உள்ளவர்கள், “இவர் பெரியமகான்! இவருக்குத் துன்பம் செய்தவர்கள் அழிவது உண்மை! நேரே சென்று சுவாமிகள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பதே நன்று” என்று கூறினார். அதுகேட்ட துரை, சுவாமிகள் காலில் விழுந்து மன்னிப்புக் கோரினார், அன்று முதல் பெரும் பக்தரானார். காசியில் சுவாமிகளின் சமாதிக்குப்பிறகு – குறிப்பிட்ட நாளில் சமாதி பூசைக்காக அத்துரை ஒரு கட்டளை ஒன்று ஏற்படுத்தி விட்டார். அது இன்றும் “பிராம்லி நுரை”க்கட்டளை என்றே வழங்கப்படுகிறது.

ஒப்புமை நிகழ்ச்சி:

இதேபோன்று மேலும் சில சித்தர்களின் வாழ்க்கையிலும் சில நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அவற்றில் ஒன்றைப் பார்ப்போம் சித்தர் தருமலிங்க சுவாமிகளைப் பற்றி அப்போது கலைக்டராக இருந்து வந்த துரை ஒருவர் கேள்விப்பட்டார். சித்தரின் ஊருக்குப் பக்கத்தில் தான் தங்கியிருந்த போது – சித்தரைப் பல்லக்கில் ஏற்றி அழைத்துவரச் செய்தார். சித்தர், “நானே நேரே நடந்து வந்துவிடுவேன் – பல்லக்கில் ஏறமாட்டேன்” என்றும் கூறிவிட்டார். பல்லக்குத் தூக்கிகள் துரையிருக்கும் இடத்தை நெருங்கும் முன்பே சித்தர் வந்து சேர்ந்தது ஆச்சரியமாக இருந்தது. சித்தரைப் பார்த்துத் துரை நீர் பெரிய சித்தர் என்று நான் கேள்விப்படுவது உண்மையா?”என்று கேட்டார்! அதற்குச் சித்தர் மிகுந்த தன்னடக்கத்துடன் “அப்படி ஒன்றும் இல்லையே!” என்றார். இவர் சொன்ன பதில் துரைக்குக் கோபத்தை உண்டாக்கிவிட்டது! “நான் யார் தெரியுமா? இந்த மாவட்டத்தின் கலைக்டர்; நான் உன்னை எதுவேண்டுமானாலும் செய்வேன்!” என்று ஆணவத்துடன் கூறினாள்! சித்தர் அமைதியாகவே இருந்தார். துரைக்கு மேலும் கோபம் வந்துவிட்டது! பக்கத்தில் உள்ள ஆட்களைப் பார்த்து, “இவன் ஒன்றுக்கும் மசிய மாட்டான்; பிடித்து மரத்தில் கட்டுங்கள்” என்று ஆணையிட்டான்! ஆட்களும் சித்தரைப் பிடித்துக் கட்டி விட்டனர். துரை சித்தர் முதுகில் ஓங்கிச் சவுக்கால் அடித்தான்! சித்தர் அடியைப் பற்றிக் கவலை கொள்ளவே இல்லை! “நீ உண்மையான சித்தன் என்றால், இன்னும் கொஞ்ச நேரத்துக்குள் மழைபெய்யச் சொன்னான். சித்தர் தன்னுடைய வல்மையினால் உடனே மழையையும் பெய்ய வைத்துவிட்டார். அப்போது தான் துரை, சித்தரின் மகிமையையுணர்ந்தான்! தான் செய்தது தவறு என்றும் மன்னிப்புக் கேட்டாள்.

பக்கத்தில் உள்ளவர்கள், உன்குறை எதுவானாலும் சித்தரிடம் கேட்டுத் தீர்த்துக் கொள்ளலாம் என்றார்கள். துரை உடனே, சித்தரின் கால்களைப் பிடித்துக் கொண்டு “நீண்ட நாட்களாக எனக்குக் குழந்தை இல்லை; அந்தக் குறையைத் தாங்கள் தான் தீர்க்க வேண்டும்” என்று இறைஞ்சினான். துரைக்குச் சித்தர் “உன்னுடைய வேண்டுதலை ஏற்றுக் குழந்தைக்கு அருள் செய்கிறேன்; ஆனால் அக்குழந்தைக்கு என்மேல் விழுந்த அடி கோடாகத் தெரியும்” – என்றார். அப்படியே துரைக்குக் குழந்தை பிறந்து முதுகில் கோடு ஒன்று பள்ளமாக இருந்தது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு துரை சித்தரிடம் பெரும் மதிப்பு வைத்திருந்தான். அப்பகுதியில் துரை இருந்த நாள் வரையில் சித்தரை மறந்ததே இல்லை.

“சித்தர்கள் தெய்வவரம் பெற்றவர்கள்; எதையும் செய்யவல்லவர்கள்; தனக்குப் பிறர் துன்பம் செய்தால் அத்துன்பத்தைப் பற்றித் தான் கவலைபடாமல் – துன்பம் செய்பவர்க்கே திருப்பி விடுபவர்கள்; பிறர் தாம் செய்த குற்றங்களை மன்னிக்க வேண்டினாலும் மன்னிக்க வல்லவர்கள்; இவர்களே இவ்வுலகின் புனித மகாத்துமாக்கள்” என்று இவற்றின் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம் அல்லவா?

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here