அம்மாவின் அவதாரத் திருநாள் வந்துவிட்டது. சிறப்பு மலர் வெளியிடப் போகிறார்கள். அம்மலருக்கு என்னுடைய அனுபவங்களைக் கட்டுரையாக எழுதி அனுப்ப நினைத்தேன். போனவாரம் பேப்பர் பேனாவுடன் இரவு பத்து மணிக்கு அமர்ந்து எழுதத் தொடங்கினேன். ஒரு பக்கம் எழுதி விட்டேன். தூக்கம் கண்களைத் தழுவியது. உறங்கச் சென்று விட்டேன்.

ஆழ்ந்த உறக்கத்தில் ஓர் அற்புதமான கனவு. கனவில் அம்மா தோன்றினாள். மகனே!  நீ கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறாய். அதை முதலில் நிறுத்து என்றாள்.  அம்மா, மலருக்காக எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றேன். தெரியும் அதை நிறுத்து, நான் சொல்வதை எழுது; இன்றைய காலச் சூழ்நிலைக்கு நான் கூறும் கருத்து தேவையானது, என்றாள்.

அம்மா!  தாயே ! சொல்லம்மா ! சொல் என்றேன். இன்று சில முக்கிய ரகசியங்களையும், விளக்கங்களையும் அருளப் போகிறேன் மகனே, பலர் என்னை இந்துக் கடவுளாகக் கருதுகின்றனர். நான் அப்படி அல்ல!  நான் மதத்திற்கு அப்பாற்பட்டவள்!  நான் இந்து சமயத்திற்கு மட்டும் உரியவளல்ல!  அதற்கும் மேலே நான் அனைத்து மதங்களுக்கும் உரியவள்!  மதங்களைக் கடந்தவள்!

என்னை ஒரு குறிப்பிட்ட மதக் கடவுளாக நினைத்து வழிபடுகின்றீர்கள். அது மனச் சாந்திக்காக!  மதங்கள் என்னைக் கட்டுப்படுத்துவதில்லை!  நான், சமயம் என்ற சிறிய வட்டம் அல்ல!  நான் ஒரு பெரிய வட்டம். அந்த வட்டத்தையும் கடந்தவள்.

ஒவ்வொருவரும் மதங்களின் பெயரால் சண்டையிட்டுக் கொள்கின்றனர். மதச் சண்டைகளுக்கு அப்பாற் பட்டவள் நான்!   ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மதம் மாறுவது தேவையில்லை. எந்த மதத்திலிருந்தாலும் என்னுடைய பூரண அருள் உண்டு!  நான் அருளியுள்ள வழிபாட்டு முறைகள் யாவும் மதச் சார்புடையன அல்ல. மதங்களைக் கடந்தவை. உலக மக்களுக்குப் பொதுவானவை.

சில நேரங்களில் நான் பேரொளியாக, ஜோதியாகக் காட்சியளிக்கிறேன். அந்த ஜோதியையும் கடந்த நிலை என்னுடைய நிலை!

எந்த மதத்தைச் சேர்ந்தவராயினும் என்னை வழிபடலாம். சரணாகதி அடையலாம். மதங்களின் பெயரால் சண்டையிட்டு, இரத்தம் சிந்துவது மக்களின் அறியாமையாகும். மதங்களின் பெயரால் நடத்தப்படும் தீவிரவாதச் செயல்கள் மனிதனின் மன வளர்ச்சியின்மையைக் காட்டுகிறது.

நான் இந்தப் பிரபஞ்சம் முழுமைக்கும் பொதுவானவள். நான் அவதாரம் செய்திருக்கிறேன். ‘அவதாரம்’  என்பது ஒரு குறிப்பிட்ட மதத்திற்குரிய சொல் அல்ல. “உலகை காத்து, ரட்சிக்க வந்த கடவுள்” என்பது அவதாரம் என்ற சொல்லின் பொருள்!

பாலகன் உலகைக் காத்து, ரட்சிக்க வந்த அவதாரம். எனக்குப் பல்வேறு நாமங்கள் சூட்டி வழிபடுகின்றனர். நான் அனைத்து நாமங்களையும் கடந்தவள். குணங்குறியுடன் காணப்படும் நான், அவற்றைக் கடந்தவள் குணங்குறி அற்றவள்.

நான் ஒரு குறிப்பிட்ட மதத்திற்குரிய கடவுள் அல்ல! அல்ல!!  அல்ல!!

மதங்களைக் கடந்தவள் !கடந்தவள்!!  கடந்தவள்!!

அடிகளார் ஒரு மதகுரு அல்ல. அவர் மனிதகுல வழிகாட்டி!

சமயங்கள் தான் மதகுருக்களைக் போற்றுகின்றன. உலக சமயங்கள் ஒவ்வொன்றிலும் மதகுருகுருமார்கள் உள்ளனர். அடிகளார் மதங்களைக் கடந்த மனித நேயமிக்கத் தலைவர். சமயங்கள் அனைத்தையும் ஏக திருஷ்டியாக, சம நோக்குடன் நோக்குபவர் தான் அடிகளார். மதங்களின் கருத்து வேறுபாடுகள், சண்டைகள் இன்னபிற யாவும் அடிகளாரைப் பாதிப்பன அல்ல.

உலக மதத்தலைவர்களெல்லாம் அடிகளாரைப் போற்றி வழிபடும் நாள் வெகு விரைவில் வரப்போகிறது! உலகம் உய்ய ஒரே வழி அடிகளார் வழிதான்!  என்று உலக மக்கள் உணர்ந்து வருகின்றார்கள்!  அமைதிப் புரட்சி, உலகப் புரட்சியாக மலரும் நாள் விரைவில் வரப்போகிறது.

இரண்டாவது என்னை அனைவரும் ஆதிபராசக்தி என்றழைக்கிறார்கள். ஆதிபராசக்தி என்பதன் பொருள் ‘தாய்மைக் கடவுள்’  என்பதாகும். தாய்மை என்பது உலகம் முழுமைக்கும் பொதுவானது. உலகத்திலுள்ள ஜீவராசிகள் யாவற்றிற்கும் நான் தாயாக இருந்து அருள்பாலித்து வருகிறேன்.

ஆதிபராசக்தி என்பது இந்துக்களின் தாய் என்ற குறுகிய வளையத்திற்குள் சிந்திக்காதே. ஆதிபராசக்தி என்பது பொருள் ஆழம் நிறைந்த சொல் ‘தாய்மை நெறி ‘ என்பதே அதன் பொருள்.

தாயானவள் தன் குழந்தைகள் யாவற்றையும் சரிசமமாக நடத்துவது போல நான் உங்களைச் சரிசமமாக நடத்துகிறேன். கருணை உள்ளத்தோடு உங்களை ரட்சிக்கிறேன். அடிகளார் உருவம் தாய்மை வடிவம்.பெண்கள் சமுதாயத்தை காக்க வந்த திருவுருவம். எனக்கும், பெண் சமுதாயத்திற்கும் உள்ள உறவு தாய்- மகள் உறவு.

எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவளாக இருப்பினும், எந்த இனத்தைச் சேர்ந்தவளாக இருப்பினும், எந்த மொழியைச் சேர்ந்தவளாக இருப்பினும், எந்த நாட்டைச் சேர்ந்தவளாக இருப்பினும், எந்த சமயத்தைச் சார்ந்தவளாக இருப்பினும் அவள் எனக்கு மகள் உறவு தான்! எந்தச் சமயத்தைச் சேர்ந்தவளாக இருப்பினும் என்னைத் தாயாக வழிபடுவதில் தடையேதும் உளதோ?

பெண்ணியத்தைப் போற்றும் செயல்முறைக் களமே மேல்மருவத்தூர்!  வழிபாட்டு முறைகளைப் பெண்களே ஏற்றுச் செய்வதால், நாளைய தலைமுறை ஏற்றம் பெறும். நாடு செழிக்கும். உலகம் அமைதி பெறும்.

ஆதிபராசக்தி என்ற சொல்லுக்கு அதன் வாக்கிய அர்த்தம் மட்டும் பொருளல்ல. அதனுடைய லட்சியார்த்தம் தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியது. லட்சியார்த்தம் விரிந்த பொருளை உடையது.

ஆதிபராசக்தி என்றால், தாய்மை அறம் உடையது.ஆதிபராசக்தி என்றால், தாய்மை அறம்.ஆதியில் பரம் பொருளான சக்தி தாய்மை சக்தியாக உள்ளது. நான் மும்மூர்த்திகளையும் கடந்த தாய்த் தெய்வம், நான் தாய்மை நிலையில் உள்ளேன். அன்பு, பரிவு, கருணை, பாசம், நேசம், யாவும் எனக்கு அணிகலன்களாக உள்ளன.

அடிகளார் தழிழ் மண்ணில் பிறந்துள்ளார். எனவே தமிழ்நாட்டுக்குரியவர். தமிழ்ச் சமுதாயத்திற்குரியவர் என்ற சிந்தனைகள் உங்களுக்கு உள்ளன. தேசப் பரிச்சேதம் அடிகளாருக்கு இல்லை. அவர் தமிழ்நாட்டிற்கு மட்டும் உரியவர் அல்ல!  தமிழ் மண்ணிற்கு மட்டும் உரியவர் அல்ல!  தமிழ்ச் சமுதாயத்திற்கு மட்டும் உரியவர் அல்ல!

தமிழ்நாடு, வடநாடு, இந்தியா, ஆசியா, என்ற பரிச்சேதங்கள் அடிகளாருக்கு இல்லை. அவர் தேசங்களைக் கடந்து , அவற்றின் எல்லைகளைக் கடந்து நிற்பவர். உலக மண்ணிற்கும் , பிரபஞ்சம் முழுமைக்கும் உரியவர். நீ அவரை ஒரு குறிப்பிட்ட மண்ணிற்கு மட்டுமே சொந்தக்காரராக்கிப் பார்க்காதே! அவர் பிரபஞ்ச நாயகர்.

மூன்றாவதாக, இங்கு எல்லோரும் ‘பங்காரு சித்தர்’  என்று சொல்கின்றார்கள்.  அடிகளார் சித்தர் மட்டுமல்ல. அதனைக் கடந்தவர். சித்தர்களுக்கும் மேலான நிலையே அடிகளார் நிலை!  உலகிலுள்ள கோடானகோடி சித்தர்களும் அடிகளாருக்கு இணையாக மாட்டார்கள். சித்தர்களெல்லாம் பாலகனை வணங்குகிறார்களே ஒழிய, பாலகன் யாரையும் வணங்க வேண்டியதில்லை. மருவத்தூருக்குச் சித்தர்பீடம் என்று பெயர்  வைக்கப்பட்டுள்ளது. சித்தர்பீடம் என்பதன் உண்மையான பொருளைத் தெரிந்து கொள்ள வேண்டும். உலகில், உலக சகோதரத்துவம், உலக சமாதானம், உலக அமைதி ஆகியவற்றைப் போற்றி, உலக மக்கள் சங்கமமாகும் இடமே சித்தர்பீடம்.

சித்தர்கள் இருப்பதால் மட்டுமே சித்தர்பீடம் என்று பொருளல்ல. இனம், மொழி, நாடு, சாதி கடந்த இடமே சித்தர்பீடம். இங்கு விரைவில் வெளிநாடுகளிலிருந்து பலர் வந்து கூடப் போகின்றார்கள்.ஆராய்ச்சி செய்யப்போகின்றார்கள். அப்பொழுது தான் உங்களுக்குச் சித்தர் பீடத்தின் அருமை, பெருமைகள் புரியப் போகிறது.

இந்தப் சித்தர் பீடம் உலக மறுமலர்ச்சிக்கான நாற்றங்கால் ஆகும். தொழிற்புரட்சி, சமுதாயப் புரட்சி போன்றவற்றைச் சந்தித்த நீங்கள் விரைவில் ஆன்மிகப் புரட்சியைச் சந்திக்கப் போகிறீர்கள். அப்புரட்சி சித்தர் பீடத்திலிருந்து தொடங்கப் போகிறது. தொண்டு நெறி மூலமாக உலக சமாதானம் சாத்தியமாகப் போகிறது மகனே!

அடிகளார் மதங்களைக் கடந்தவர்

அடிகளார் தாய்மைக் கடவுள்

அடிகளார் சித்தர் நிலை கடந்தவர்

உணர்ந்து கொள்!  நம்பி நட!  அன்பு வழியில் செல்!

கனவு கலைந்தது. அம்மா கூறியதை எழுதியுள்ளேன். ஏற்றருள்க!

ஓம் சக்தி!

நன்றி

சக்தி ஒளி மார்ச் 2010

-பேராசிரியர். கண்ணன் ,M.A.,Ph.D  திருபுவனம்

பக்கம் 5- 8.

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here