ஆன்மிகம் என்பது ஓர் கடல் போல இருப்பது. ஆனால் அதில் நீந்திக் கரை சேர்ந்தால் மட்டுமே வாழ்க்கை என்னும் வசந்தத்தின் முழு அர்த்தமும் புரியும். ஆனால் வெற்றி பெறுபவர் எத்துணை பேர்?  ஆன்மிகக் கடலில் இறங்கினால் வரும் சோதனை என்னும் அலைகளைக் கண்டு அஞ்சியே அதில் கால் நனைக்காமல் கரையில் நிற்பவர் பலர்.

பாதி வரை நீந்தி , எதிர்ப்படும் சோதனைகளின் வீரியம் தாங்காமல் திரும்பி, ஆதியில் இருந்த இடத்திற்கே சென்றவர் பலர். சிலரோ, ஒரு குரு, ஒரு தத்துவம் எனப் பற்றிக் கொள்ளாமல், உடனடியாகத் தன் கஷ்டம் தீர வேண்டுமென, தடம் மாறி தவறான அல்லது முழுமை பெறாத வேறு தலைமை எனச் சென்று, அங்கும் எதுவும் கிடைக்காமல் கடைசியில் அம்மா அருள்வாக்கில் சொல்வது போல் ஆன்மிக அனாதைகளாக அல்லல்படுகிறார்கள்.

மிக அரிதான சிலர் மட்டுமே , ‘ஓம் சக்தி’  என்று அம்மா அருளிய தத்துவத்தைப் புரிந்து அதன் பொருளைத் துடுப்பாக இறுகப் பற்றி, ஆன்மிகக் கடலில் எதிர்வரும் சோதனையைத் தாண்டி வாழ்க்கையை அர்த்தமாக்கி மகிழ்கிறார்கள்.

பாமரனுக்கும் புரியும்படிச் சொல்ல வேண்டுமென்றால், “எது வந்தாலும் என்னைப் பற்றிய பிடியை விடாமல் இருந்தால், நீ பிறவிக்கடலைத் தாண்ட நான் அருள்வேன்”  என்னும் அம்மாவின் சரணாகதித் தத்துவம் என எளிதில் சொல்லலாம்.

இந்த உண்மை, அவரவர்க்குப் புரிய காலமும் நேரமும், அவர்களின் பக்குவத்திற்கு ஏற்ப மாறும். எனக்கு இந்த உண்மை புரிய 20 வருடம் ஆனது என்பதே சத்தியம். அதை எல்லோருக்கும் விளக்கவே இந்தக் கடிதம்.

1995 ஆம் ஆண்டு நான் மாலை அணிந்து இருமுடி செலுத்த வந்த முதல் ஆண்டு என் குடும்பம், பல கஷ்டத்திலிருந்து விடுபட்டு அன்னையின் அரவணைப்பில் நிதானமான முன்னேற்றத்துடன் வளர்ந்து வந்தது.

என் ஊரின் மன்றத்தில் என்னால் முடிந்த அளவுக்குப் பணியும் செய்து வந்தேன். என் மகள் திருமணத்தையும், மகனின் வாழ்க்கையையும், கணவரின் ஆரோக்கியத்தையும் அம்மா நல்ல முறையில் நடத்தி வந்திருந்தாள்.  அம்மாவைத் தவிர எனக்கு வேறு எந்த ஆதாரமும் இன்றி, அவளை வேண்டி வந்திருந்தேன்.

தொடர்ந்து இருமுடி அணிந்தும், மேல்மருவத்தூருக்கு வந்து ஆடிப்பூரத் தொண்டு செய்தும் அன்னையின் ஆசி பெற்று வந்திருந்த காலம் அது.

2007 டிசம்பர் மாதம் நான் 13 வது முறையாக மாலை அணிந்து மேல்மருவத்தூர் வந்த நாள். இருமுடி செலுத்தி, அதர்வண பத்ரகாளி அம்மன் சன்னதி முன் உள்ள சக்தி வேல் அருகில் கற்பூரம் ஏற்றி வேண்டிக் கொண்டிருந்தேன். எதிர்பாராமல் என் கவனக்குறைவால் என் சேலையில் நெருப்புப் பற்றிக் கொண்டது.

நான் சிலை போல் ஒரு விநாடி எந்த முயற்சியும் செய்யாமல் “நான் என்ன தவறு செய்தேன்? என்னை ஏன் அம்மா சன்னதியில் தண்டித்துவிட்டாள்?” என யோசிக்கும் நேரத்தில் நெருப்பு என் சேலையைச் சுற்றிப் பரவலாகப் பற்றி எரியத் தொடங்கியது.

பிறகு சுதாரித்துக் கொண்டு நெருப்பை அணைக்க முயலும் போது, என் தாலிக்கொடியும் தொலைந்து போயிருப்பதை உணர்ந்தேன். பிறகு தரையில் உருண்டு நெருப்பை அணைத்து என்னை நிதானப்படுத்தி நின்ற நேரத்தில், அருகிலிருந்த சக்திகளும் ஆலயக் காவலர்களும் என்னை அம்மாவின் மருத்துவமனைக்கு அனுப்பி முதலுதவி செய்தனர்.

தகவலறிந்து என் குடும்பமும் வந்து சேர்ந்தது. அம்மா எனக்கு ஆசிர்வாதம் செய்து, ஒரு சேலையும், மஞ்சள் கொடியும், குங்குமமும் அனுப்பி வைத்திருந்தாள்.

என்னைச் சென்னையிலுள்ள பிரபலமான மருத்துவனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றினர். அங்கே மருத்துவர்கள் என்னைச் சோதித்து, தொடை வரை மிக அதிகமாகத் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பிழைப்பது அரிது எனவும் சொல்லிவிட்டனர்.

அதன்பிறகு என்ன நடந்ததென எனக்கு நினைவில்லை.ஏறத்தாழ 30 நாட்கள் கழித்து வீடு திரும்பினேன். என்னை என் குடும்பம் மிக ஆதரவுடன் காப்பாற்றி, எல்லா பணிவிடையும் செய்து முழு ஆரோக்கியம் பெறச் செய்தனர்.

இதுவரை நான் அறிந்தது, என்முன் என்ன நடந்தது என்பது தான் மட்டுமே தவிர, எப்படி நான் காப்பாற்றப்பட்டேன் என்பது அல்ல. ஆகமொத்தம் நான் எண்ணியது, என் மகன் மேல் கொண்ட பாசத்தால் நான் உயிர் பிழைக்க வேண்டும் என்ற நினைப்பு தான் என்னைப் பிழைக்க வைத்திருக்கிறது என்பது மட்டுமே.

என் குழப்பமான மனதிற்குள் நான் அம்மாவை வெறுக்கத் தொடங்கினேன். எனக்கு மனதில் பிரதானமாகப் பல கேள்விகள் எழுந்தன.

1. அம்மாவை நம்பிக் கோயிலுக்கு வந்ததால் , அவள் சன்னதியில் நடந்த இந்த விபத்தை ஏன் அவள் தடுக்கவில்லை?

2. என் தாலி கோயில் வளாகத்தில் காணாமல் போய்விட்டதே,  அதைப்பற்றியும் எந்தத் தகவலும் இல்லை. எனக்கு ஏன் அம்மா பாதுகாப்பு அளிக்கவில்லை?

3. எல்லாவற்றிற்கும் மேலாக, மற்றவர்கள் இழிவாக எண்ணும் படி ஓர் நிகழ்வு நடந்துவிட்டதே ! ஊரில் உள்ளவர்கள் அம்மாவைப் பற்றித் தவறாக எண்ணுவார்களே!  இதையும் ஏன் அம்மா தடுக்கவில்லை. என் காயம், வலி இன்னும் குறையவில்லையே ? ஏன் அம்மா குணப்படுத்தவில்லை?

இப்படிக் கிட்டத்தட்ட 3 வருடமாக அம்மாவை வெறுத்து வந்தேன். இடையில் எனக்கு ஒரு வருடம் கழித்து இன்னொரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றாலும் என் வலி குணமாகவில்லை. எரிச்சல் அதிகமாகிக்  கொண்டே வந்தது.

இந்தத் தருணத்தில் என் குடும்பத்தைப் பற்றி சொல்ல வேண்டும். என் மகன் அன்னையிடம் மாறாத பக்தி கொண்டவன். என் குடும்பத்தில் உள்ள அனைவரும் அன்னையை வணங்கி வருபவர்கள். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் அன்னையைப் பற்றி எடுத்துச் சொல்லி 20 வருடமாக வணங்க வைத்த நான், அம்மாவை வெறுக்க ஆரம்பித்தேன்.

ஊரிலுள்ள எல்லாக் கோயிலுக்கும் சென்று என் வலி குணமாக வேண்டினேன். எந்த முன்னேற்றமும் இல்லை. இத்தகைய மன உளைச்சலில் பத்து நாட்கள் முன்பு என் அறையில் அமர்ந்து அழுது கொண்டே பலவாறு புலம்பிக் கொண்டிருந்தேன். என் மனம் மிகக் குழப்பமாகவும், உடல் வலி காரணமாக வாழ்க்கையை வெறுக்கத் தொடங்கி, மனம் நொந்தும் அரற்றிக் கொண்டிருந்தேன்.

ஒளியாய் வந்த அம்மா

அப்போது என் முன் இருந்த வீட்டுச் சுவரில் பளீரென ஓர் ஒளி வடிவம். அதிலிருந்து அம்மா குரு வடிவில் காட்சியளித்தாள். எனக்கு உடல் வியர்த்தது. ‘அம்மா’ என்று அலறத் தொடங்கினேன்.

n

திடமாகவும், மெதுவாகவும், அம்மா என் கேள்விகளுக்கு விடையளிக்கத் தொடங்கினாள். எனக்கு மெளனமாகவே பல சைகை மூலம் ஒவ்வொன்றையும் விளக்கத் தொடங்கினாள். என் வீட்டுச் சுவரில் அம்மா தன் திருக்காட்சியைத் தந்து நடந்ததை விளக்கினாள்.

‘ஏன் அழுகிறாய்? அங்கு என்ன நடந்தது என உனக்குத் தெரிய வேண்டுமா?  பார்”  என்று நடந்ததைக் காட்டினாள். என் சேலையில் நெருப்புப் பட்டதும், வேல் முன் நான் குனிந்திருந்த போது,  தாலி கீழே விழுந்தது. அதை ஒரு சக்தி எடுத்து எல்லோரிடமும் கேட்க, யாருக்கும் எதுவும் தெரியாததால் கோயில் உண்டியலில் போட்டது.

பிறகு அந்தத் தாலியின் தங்கத்தையும், செயினின் தங்கத்தையும் உருக்கி பல தாலிகளாக மாற்றியது, அம்மா தன் திருக்கரத்தால் ஏழைத் தம்பதிகள் திருமணத்திற்கு அவற்றைக் கொடுத்து ஆசிர்வதித்தது என எல்லாம் திரையில் காண்பதைப் போலக் காட்டினாள். பிறகு என் கேள்விகளுக்கு விடைகளை அடுக்கினாள். எனக்கு எதிர்வார்த்தை பேச இயலாதபடி நியாயமாக வாதம் செய்தாள்.

உன்னைக் கோயிலில் சோதித்து விட்டேன் என அழுகிறாயே?  ஆனால் உன் ஊழ்வினையின் காரணமாக நடக்க வேண்டிய பெரும் ஆபத்தை என் சந்நதியில் , உன்னை அனுபவிக்க வைத்து, உன்னைப் பிழைக்கச் செய்து அருளினேன். அது உனக்குத் தெரியாது ! உன் உயிரைக் காப்பாற்றியது நான் ! மருத்துவர்கள் அல்ல!

நீ உன் நிலைமைக்கு, மிகப்பெரிய மருத்துவமனையில் மருத்துவம் செய்யவைத்து, அங்கேயே உயர்பதவி வகிக்கும் சக்தி ஒருவரைக் கொண்டு உனக்கு உரிய சிகிச்சைகள் அளித்து, தினமும் மன்றத்தின் பிரசாதம் இடவைத்து, உன்னைக் காப்பாற்றினேன். அது உனக்குத் தெரியாது.

உன் தாலி தொலைந்ததை அபசகுணமாகக் கருதுகிறாய். ஆனால் உன் ஊழ்வினை தணிக்க, உன் தாலி இப்போது ஏழை மணமக்கள் கழுத்தில் ஏற வைத்து,உனக்கு அருளினேன். அது உனக்குத் தெரியாது!

உன் வலி குணமாகவில்லை என்று மூன்று வருடமாக எல்லாக் கோயிலுக்கும் சென்றாயே, ஒருமுறை கூட அம்மா! என்னைக் காப்பாற்று! என வேண்டவில்லை. இருப்பினும் உன்னைக் காத்து உயிர்ப்பிச்சை அளித்தேன்!

அதற்குக் காரணம் நீயில்லை ! உன் மகன்.

உன்னை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, பாதபூஜைக்கு வந்து என் அம்மாவைத் திருப்பிக் கொடு என வேண்டினான். நான் மெளனமாய் இருப்பதைக் கண்டு அடுத்த நாளும் விடாமல் என் காலைப் பற்றி உன்  உயிரை என்னிடம் வரமாகப் பெற்றான். ஆக இது அவனுக்காக நான் கொடுத்த உயிர்.

நீ இத்தனை வருடம் என்னை அறிந்தும் என்னைப் புரியாமலிருக்கிறாய். அவனோ நான் எத்தனை சோதனை கொடுத்தாலும், என்னைப் பற்றியதை விடவில்லை. வேறு கடவுள், வேறு வழி என எங்கும் போகவில்லை!  உன் மகனால், அவனது மாறாத பக்தியால் நீ பிழைத்தாய்!  அது உனக்குத் தெரியாது!

இப்படி எல்லா நிலையிலும் உன்னருகில் இருந்து உன்னைக் காப்பாற்றி வருகிறேன். நீயோ அம்மா என்னைக் கைவிட்டுவிட்டாள் எனப் புலம்புகிறாய்!

நீ உயிர்பிழைத்த பின் உன்னை உன்மகன் ஆலயம் அழைத்து வந்தான். வேண்டா வெறுப்பாக வந்தாய். என்னை வெறுத்தாய். ஆனால் உன் மகனுக்கு, அவன் வயதிற்கு மீறிய சோதனைகளைக் கொடுத்தும், என்னை விட்டு அவன் அகலவில்லை!

அவன் பக்தி உண்மையா அல்லது உன் பக்தி உண்மை?  நடந்தவை போகட்டும் ! இனியாவது திருந்தி வாழ்!  நான் உரைத்ததை சக்தி ஒளிக்கு எழுது!  உனக்கு எல்லா நலனும் உண்டு!”

இவ்வாறு உரைத்து எனக்கு உத்தரவிட்டு மறைந்தாள். நான் வாயடைத்து நின்றேன்!  20 வருடமாய்ச் செவ்வாடை அணிந்து கோயிலுக்கு வந்து புரியாதது எல்லாம் அம்மா தன் திருக்காட்சியில் புரிய வைத்தாள். அது தான் சரணாகதி!

“நீ என்னை வழிபட்டு வந்தால், பிறகு எதற்கும் கவலைப்படாதே!  உன் குடும்பம், உன் நலன் எல்லாம் நான் பார்த்துக் கொள்வேன்!  நீ எத்தனை சோதனைகள் வந்தாலும், மனம் தளராமல் என்னை நம்பி, உன் பணிகளைச் செய் ! உன்னை நான் காப்பாற்றுகிறேன்!”

இதுதான் சரணாகதித் தத்துவத்தின் எளிமையான சாரம். சக்திகளே, நாம் அம்மாவை வேண்டியிருப்பதினால், ஆன்மிகக் கடலில் நீந்த சக்தி பெறுகிறோம். எதிர்வரும் அலைகள் எத்தனை பெரியதாயினும் அதைக் கண்டு, தளர்ந்து அம்மாவைப் பற்றிய பிடியை விட்டுவிடக்கூடாது. எல்லாம் அவள் பார்த்துக்கொள்வாள் என அவள் பாதம் இறுகப் பற்றிப் பயணப்படுங்கள்!

சோதனைகள் வந்தவுடன் அம்மாவை விட்டு முருகா என்பது, அதுவும் பயனளிக்கவில்லையெனில் சிவனே என்பது என மாறி மாறிப் போனால் நாம் ‘ஆன்மிக அனாதை’ களாக ஆகி திசைமாறி வேதனைப்படுவோம்!

ஓம் சக்தி என்ற மந்திரத்தைப் பிடித்து அம்மாவை நம்பி வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள்!  அம்மா வாழ வைப்பாள். ஊழ்வினை குறைய அவள் தரும் சோதனைகளை மனமுவந்து ஏற்று அனுபவித்து வந்தால் தான், அவள் தரும் நலன்களுக்கும், வாழ்க்கையில் கரை ஏற அவள் அருளையும் பெற உரியவராவீர்கள்.

இதோ…. என் வலி குறைந்து கொண்டே வருகிறது!  என் குடும்பத்தில் படிப்படியாகப் நல்லவை நடந்து வருகிறது!  இவையாவும் நான் சரணாகதித் தத்துவத்தை உணர்ந்த பின் கண்டவை!

இது என்சிற்றறிவுக்கு எட்ட 20 வருடம் ஆனது. என் அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து உள்ளேன்!  இதை புரிந்து கொண்டு அம்மாவை விட்டு விலகாமல் மாறாத பக்தியும் சீரியப் பணியும் செய்து அவள் அருளைப் பூரணமாக அனுபவியுங்கள்.

ஓம் சக்தி!

நன்றி

சக்தி ஒளி டிசம்பர் 2010

சக்தி. ம. பாலசரஸ்வதி, உடுமலைபேட்டை

பக்கம் 10- 14.

]]>

1 COMMENT

  1. engu solvadhu unmai.. naangalum ammavai nambikkondu irukkirom.. ellam aval paarthukkolvaal..naan venduvadhu, amma enrum koodavey iru veru edhuvum vendaam.. amma unnai maravaadha varam vendum..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here