ஆன்மிகத்தில் அநாதைகள்

தனக்கென்று ஒரு இஷ்ட தெய்வம் – தனக்கென்று ஒரு குரு- தன் இஷ்ட தெய்வத்தையும் குருவையும் பற்றிக் கொள்வதற்கு உரிய மந்திரங்கள்- இந்த மூன்று அடிப்படைகள் இல்லாதவன் எப்படிப் பட்ட செல்வச் சீமானாக இருந்தாலும், எத்தகைய உயர் பதவியில் இருந்தாலும், மெத்தப் படித்த மே தாவியாக இருந்தாலும் ஆன்மிகத் துறையைப் பொறுத்த வரையில் ஆன்மிகத்தில் அநாதைகளே!

தன்னை இஷ்ட தெய்வமாக வரித்துக் கொண்ட தன் பக்தனுக்கு, அன்னை ஆதிபராசக்தி அடிகளார் என்ற குருவைக் காட்டியிருக்கிறாள். உரிய மந்திரங்களையும் கொடுத்திருக்கிறாள்.வலுவான அடித்தளம் போட்டுக் கொடுத்திருக்கிறாள்.

ஒரு குருவின் தேவை, குருவின் துணை, குருவின் பெருமை பற்றி அன்னை ஆதிபராசக்தி அருள் வாக்கிலே வெளிப்படுத்தினாள். அவை வருமாறு:

ஆன்மிகத்தில் அநாதைகளாக ஆகிவிடக்கூடாது

“அடிகளார் ஆலயத்தைச் சுற்றி வருவதும், நீங்களெல்லாம் மின்னும் புவிக்கெலாம் என்று பாடுவதும், நான் ஒரு மனிதக் கூட்டில் பாய்ந்து உங்களுடன் பேசுவதும் எல்லாம் எதற்காக…?

உங்களுக்கெல்லாம் ஒரு குரு வேண்டும் என்பதற்காக..!

நீங்களெல்லாம் ஆன்மிகத்தில் அநாதைகளாக ஆகிவிடக் கூடாது… என்பதற்காக!”

குரு மூலமாகத் நெருங்க முடியும் ; அடைய முடியும்

“அபிடேகம், அலங்காரம், அர்ச்சனை, தியானம், இவற்றால் எல்லாம் என்னை அடைய முடியாது. உன்னை நீயே அடைய வேண்டும்.

கம்பி மூலம் மின்சாரம் பாய்வது போல, கருத்துகள் மூலம் பொருள் புரிவது போல அடிகளார் மூலம் தான் என்னை நீங்கள் நெருங்க முடியும்.

காந்தத் தன்மை பெற்ற காந்த ஊசியினால் இரும்பு கவரப்படுவது போல அடிகளார் மூலமாகத் தான் என்னை நெருங்க முடியும்; அடைய முடியும்.

ஒரு குரு தேவை

“உன் உருவத்தைப் பார்க்கக் கண்ணாடி தேவை; அக் கண்ணாடியில் உன் பின்பக்க உருவத்தை முழுமையாகப் பார்க்க முடியாது.

உனக்குத் தெரியாத ஓர் உருவம் உனக்கு உண்டு; உன்னுடைய பின் பக்க உருவத்தைப் பார்பதற்கு ஆதிபராசக்தி என்ற கண்ணாடி தேவை! அதற்கு ஒரு குரு தேவை.”

உலகியல் வளர்ச்சி ஆன்ம வளர்ச்சி

“கையில் கிடைத்த களிமண்ணைக் கொண்டு குரங்காகவும் பிடிக்கலாம்; பிள்ளையாராகவும் பிடிக்கலாம்.அது அவரவர் மனோபாவத்தை பொறுத்து .

அதுபோல அடிகளாரை உலகியல் ஆன்மிகம் என்ற எந்த ரூபத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம். பயன்படுத்திக் கொள்ளும் விதத்தைப் பொறுத்து தான் உன் வளர்ச்சி அமையும்.

குருவின் அவசியம்

“மரம் செடி கொடிகளில் கூட வயதானவை உண்டு.

காட்டு விலங்குகளுக்கும் தலைவன் உண்டு. அதுவே அக் கூட்டத்தை வழி நடத்தும்.

தேனீக்களிலும் ராணி தேனீ, ராஜா தேனீ, வேலைக்கார தேனீ என உண்டு.

செம்மறியாடுகளும் ஒரு ஆடு முன்னே போனால் அதனைத் தொடர்ந்து கூடவே மற்ற ஆடுகளும் போகும்.

யானையும் கூட்டத்தோடும் தலைவனோடும் வாழ்கிறது.

அதுபோல ஆன்மிகத்திலும் உங்களுக்கு ஒரு குரு தேவை.ஒரு குருவை ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும்.

குரு என்று ஒருவரை ஏற்றுக் கொண்ட பிறகு அவரை ஆராய்ச்சி செய்யக் கூடாது. அவர் அப்படி! இவர் இப்படி! என்று எடைபோடக் கூடாது. தெய்வத்தையும் குருவையும் ஆராய்ச்சி செய்யக்கூடாது.”

தாயும் குருவும்

“ஒரு குழந்தைக்குத் தாய் அவசியம் அது போல உங்களுக்கு ஒரு குரு அவசியம்.

தாயையும் குருவையும் மறக்கக் கூடாது.”

அடிகளார் ஆசியே அம்மாவின் ஆசி

“அடிகளார் உள்ளத்தில் என்ன பதிவு ஏற்படுகிறதோ அது தான் அம்மாவின் கருத்து என்பதைப் புரிந்து கொள்! அடிகளார் ஆசியே அம்மாவின் ஆசி!

பார்வையும் – பாதம் பட்ட மண்ணும்

“அடிகளார் பார்வைக்கும் பாதம்பட்ட மண்ணுக்கும் மகிமை உண்டு. அடிகளார் பார்வைக்குப் பாவம் போக்கு சக்தி உண்டு.

சூரிய ஒளிக்கு இருளை ஓட்டும் சக்தி இருப்பது போல, பிற பொருள்களை எரிக்கும் சக்தி இருப்பது போல, ஒருவனது பாவத்தை எரிக்கும் சக்தி அடிகளார் பார்வைக்கு உண்டு.”

திருவருளும் – குருவருளும்

“திருவருள் வேண்டுமானால் குருவருள் வேண்டும். குருவருள் இல்லையென்றால் திருவருள் கிடைக்காது.”

பாதபூஜை

பெளர்ணமி தினத்தில் குருவிற்குப் பாதபூஜை செய்து, தான் செய்த பாவச் செயல்கட்கு மன்னிப்பு கேட்பது நல்லது.

குருவே தெய்வம்

“இன்றைக்குப் பாமர மக்களும் அடி மட்டத்தில் உள்ளவர்களும், பெண்கள் சமுதாயமும் ஆன்ம முன்னேற்றம் பெற வேண்டி அடிகளாரையே குருவாகவும் தெய்வமாகவும் உங்களுக்குக் காட்டிக் கொடுத்திருக்கிறேன்.

புரிந்து கொள்வதும், பற்றிக் கொள்வதும் உங்கள் பொறுப்பு.”

அடிகளாரும் -நானும்

” நானாக அவன் இருப்பான்; அவனாக நான் இருப்பேன்.”

அஞ்ஞானம் விலகுவது எப்போது

“என்றைக்கு நீ அடிகளாரை முழுமையாகப் புரிந்து கொள்கிறாயோ, அன்றைக்குத் தான் உன் அஞ்ஞானம் விலகும். ஆன்ம ஞானம் பிறக்கும். அதுவரை நீ அலைய வேண்டியது தான்

-என்பன அருள்வாக்கில் அன்னை கூறியவை.

தொடரும்……

நன்றி

அவதார புருஷர் அடிகளார்-பாகம்-6

பக்கம் 3- 6.

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here