மேல்மருவத்தூர் தைப்பூச ஜோதி

0
1144

மேல்மருவத்தூரில் தைப்பூச ஜோதி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வெளிநாட்டுப் பக்தர்கள் தங்கள் நாட்டு தேசிய கொடியுடனும், பாரம்பரிய உடையுடனும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இலங்கை சார்பாக கலந்து கொண்ட பக்தர்கள் தேசிய கொடியை விடுத்து, அமைதியை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி ஊர்வலத்தில் பங்குகொண்டமை எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது. கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வரும் சக்தி மாலை விழாவில் பத்து லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதன் நிறைவு நாளன்று (ஞாயிறு) தைப்பூச ஜோதியை பங்காரு அடிகளார் ஏற்றி வைத்தார். இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் டி. முருகேசன், இந்திய அரசின் நிதித்துறை இணை செயலாளர் சக்தி காந்தாய், ஐ. ஏ. எஸ்., காவல் துறை மேலதிகத் தலைவர் பாலசந்திரன், ஐ. பி. எஸ்., வருமான வரித்துறை ‘ஆம்புட்ஸ்மேன்’ ஜி,முத்துராமகிருஷ்ணன், சென்னை ரயில் பெட்டித் தொழிற்சாலையின் பிராந்திய முகாமையாளர் எம். எஸ். ஜெயந்த் ஆகியோர் உள்ளிட்ட பலர் பிரதம அதிதிகளாகப் பங்கேற்றனர்..

மாலை 3.00 மணியளவில் நடைபெற்ற ஊர்வலத்தில் தீபம் தாங்கிய ஊர்தியைத் தொடர்ந்து 108 மகளிர் சீர்வரிசை மற்றும் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் பக்தர்களின் அணிவரிசை சென்றது. ஊர்வலம், 6.00 மணியளவில் சித்தர் பீடத்தின் பின்புற மைதானத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த தைப்பூச ஜோதி மேடை அருகே உள்ள தளத்தை அடைந்தது. அங்கு மையத்தில் ஜோதி ஏற்றப்படும் பாத்திர அமைப்பு வைக்கப்பட்டிருந்தது. அருகே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் உலகப்புகழ் இசை முரசு சிவமணி, டிரம்ஸ் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. தளத்தில் மாணவ மாணவிகளின் நடன, கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து 108 மகளிர் பங்கேற்ற திருஷ்டி எடுக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன..

6.45 மணிக்கு ஆன்மீக குரு பங்காரு அடிகளார் ‘தைப்பூச ஜோதி’யை, அலங்கார ஐந்து முக பாத்திர உச்சியில் ஏற்றிவைக்க, சிறப்பு அதிதிகள் ஐந்து முகங்களிலும் ஜோதி ஏற்றி வணங்கினர். தொடர்ந்து ஜோதி அமைப்பு, ஜோதி மேடையின் உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு நிறுவப்பட்டது. பங்காரு அடிகளார் ஜோதிக்கு தீபராதனை காட்டி, ஜோதி மேடையைச் சுற்றி வந்து பக்தர்கள் பக்கம் தீபராதனை காட்டினார். விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம், ஆதி பராசக்தி அறநிலைய மற்றும் ஈரோடு மாவட்ட ஆதிபராசக்தி மன்றங்கள் செய்திருந்தன

 

வீரகேசரி வாரவெளியீடு
12-02-09
]]>