தைப்பூச ஜோதியை ஏற்றிய பங்காரு அடிகளார்

0
1703

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் அருள்திரு பங்காரு அடிகளார் தைப்பூச ஜோதி ஏற்றினார்.மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூசத்திருவிழாவையொட்டி ஜோதி ஏற்றும் விழா நேற்று அதிகாலை 4 மணிக்கு மூலவர் சுயம்பு ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு

அபிஷேகத்துடன் தொடங்கியது. 8 மணிக்கு பங்காரு அடிகளாருக்கு கோவில் வாசலில் வரவேற்பும், பாதபூஜையும் நடைபெற்றது.பின்னர் அகண்ட ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி கோவிலுக்கு அருகே உள்ள மிகப்பெரிய மைதானத்தில் நடைபெற்றது. இதற்காக, மைதானத்தின் மத்தியில் சிறப்பு மேடை அமைக்கப்பட்டு, நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகிய இயற்கையை வழிபடும் வகையில் பங்காரு அடிகளாரின்அருள்வாக்குப்படி, காய், கனி வகைகள், நவதானியங்கள், வண்ண மலர்கள் என இயற்கை வளங்களில் இருந்து கிடைக்கக்கூடிய பொருட்கள் மேடை முழுவதும் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தன. அதன் நடுவில், ஜோதி ஏற்றுவதற்காக 5 முகங்கள் கொண்ட பிரம்மாண்டமான விளக்கு வைக்கப்பட்டு இருந்தது.

மாலை 5 மணி அளவில், பங்காரு அடிகளார் வீட்டில் இருந்து, பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன், அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், மூல ஜோதி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊர்வலத்தின் முன்னால் குதிரைப்படை வீரர்கள் போன்று செவ்வாடை பக்தர்கள் அணிவகுத்து வந்தனர். ஊர்வலத்தில் கரகம், காவடி ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் இடம் பெற்று இருந்தது. மாலை 6.30 மணி அளவில், மைதானத்தை அடைந்தது. பின்னர் ஜோதி மேடையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பங்காரு அடிகளாரின் முன்னிலையில், லட்சுமி பங்காரு அடிகளாரின் மேற்பார்வையில் பெண்களே இந்த பூஜைகளை நடத்தினார்கள். இந்த பூஜையைத் தொடர்ந்து 6.45 மணிக்கு பங்காரு அடிகளார் தைப்பூச ஜோதி ஏற்றினார். தைப்பூசத்தையொட்டி, கடந்த 65 நாட்களாக ஏறக்குறைய 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தைப்பூச சக்தி மாலை அணிந்து, இருமுடி ஏந்தி கோவிலுக்கு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இருமுடி ஏந்தி கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் தினசரி அன்னதானம் வழங்கப்பட்டது என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.முன்னதாக டிரம்ஸ் சிவமணி குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

நன்றி
அதிகாலை.com

]]>