‘கூட்டு குடும்பமாக வாழுங்கள்’

தீபாவளி விழா வருடந்தோறும் வந்து போகிறது.தீபாவளியோடு அந்த மகிழ்ச்சியும் போய்விடாமல் எப்பொழுதும் அது நிலைத்து நீடிக்க என்ன செய்யவேண்டும்?’உங்களுக்கு இங்கே இனி  இடமில்லை ‘என்று தீய எண்ணங்களை, தீய சிந்தனைகளை, தீய ஆசைகளை, உள்ளத்தில் அண்ட இடம் கொடுக்காமல் அகற்றி அனுப்பிவிட வேண்டும்.தீபாவளி என்பது நாம் கொடுக்கும் கொடை விழாவாகவும் மாறவேண்டும்.அப்படிப்பட்ட தர்மங்கள் பெருகவேண்டும்.

இந்த ஆண்டு மழை உண்டு.பொருளாதார வளர்ச்சி உண்டு.பொருளாதார வளர்ச்சியில் மனிதன் மேலும்  மேலும் வளர்ச்சி பெற கடுமையாக உழைக்கவேண்டும், ஆனால் இப்போது பொருள்,சேரச்சேர,உழைப்பு குறைந்து வருகிறது.உல்லாச வாழ்க்கைக்கு உள்ளங்கள் ஏங்குகின்றன.உல்லாசம் பெருகப் பெருக ஊதாரித்தனம் பெருகிவிட்டது.

ஊதாரித்தனம் பெருகுவதால் உழைப்பு குறைகிறது.உழைப்பின் குறைவு நாளடைவில் பொருளாதாரத்தை சரிவுக்கு தள்ளிவிடும்.ஒரு செடியில்,கொடியில்,மரத்தில் பூக்கின்ற பூக்கள் எல்லாம் காயாக மாறவேண்டும்.காய்கள் எல்லாம் கனிகளாக பழுக்கவேண்டும்.பயன் தர வேண்டும்.ஆனால் பூக்கும் பூக்களெல்லாம் உதிரிப்பூக்கள் ஆகிவிட்டால்,காய்களும் வராது.கனிகளும் கிடைக்காது.

மனிதர்களுக்கு சொல்லாற்றல் பெருகிவிட்டது.செயலாற்றல் குறுகிவிட்டது.அவர்கள் சொல்வதெல்லாம் உள்ளத்திலிருந்து வரும் வாழ்க்கை பத்திரங்களாக இல்லாமல்,உதட்டளவில் வரும் வார்த்தை சித்திரங்களாக உள்ளன.

உண்மையான உணர்வுடன் வரும் வார்த்தைகள் வாழ்க்கையை பத்திரப்படுத்தும்.உதட்டளவில் வரும் சொற்கள் காற்றில் கரைந்துவிடும்.கேட்பதற்கு சொற்கள் இனிமையாக இருக்கும்.அவைகளை செயல்களாக மாறினால் வாழ்க்கையும் இன்பமாக மாறும்.

பயமும், அவநம்பிக்கையும் நீங்கிட,உள்ளத்தில் உண்மை ஒளி பொங்கிட, இந்த தீபாவளியை ஒரு திருப்புமுனையாக அமைந்துக் கொள்ளுங்கள். தனிமரம் தோப்பாகாது என்பது போல ,தனிமனிதனாகத் தனிவழி காணாமல்,கூட்டுக் குடும்ப வாழ்க்கை எனும் பழைய முறைகளைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள்.அதுதான் தமக்குப் பாதுகாப்பு என்று உணருங்கள்.

 தன்னைத்தானே நம்பித் தனிமரமாக வாழும் முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு,தாய்,தந்தை,தாத்தா,பாட்டி எனும் உறவுச் சொந்தங்களோடு இணைந்து என்றென்றும் தீபாவளியாக வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள்!

உறவோடும்,நல்ல நட்போடும் வாழ்க்கையை வளமாக்கி வாழ்ந்திட இந்த தீபாவளித் திருநாளில் அனைவரையும் வாழ்த்துகிறோம்.!

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here