ஞானியின் இலக்கணம் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்கள்

0
866

ஞானிகள் என்பவர்கள் எப்படி இருப்பார்கள்? ஞானிகளிலேயே நம்ம ஆன்மிககுரு அருள்திரு அம்மாஅவர்கள்
இல்லற ஞானி! துறவற ஞானியல்ல. எல்லாவற்றையெல்லாம் துறந்துவிட்டுப் போகவில்லை. இல்லறத்தில் இருந்துகொண்டே நல்லறத்தை வளர்ப்பவர்கள். அவர்களுக்கு இந்த வரிகள் எப்படிப் பொருந்துகின்றன என்பதை நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.

1). சிரமமின்றி சேவைகளை ஒழுங்கு செய்வார்

சிரமமின்றின்னா என்ன? ரொம்ப அலட்டிக்கவே மாட்டாங்க. அமைதியாக இருந்து தான் வந்த காரியத்தை முடிச்சுட்டுப் போவாங்க.

அதுமாதிரி அம்மா பாருங்க நீவந்து தியானம் பண்ணு, தினமும் யோகத்துல உட்காரு, இத்தனை நாள் விரதம் இரு என்று எல்லோருக்கும் உபதேசிப்பதில்லை. அம்மாவைப் பற்றிச் சொல்லணும்னா, “எல்லாம் உனக்கு நான் செய்யறேன். நீ கவலைப்படாதே! ”என்பார்கள்.

எப்ப அம்மா அவர்களிடம் போய்க் கேட்டீங்கன்னாலும் என்ன சொல்வாங்க? நீ கவலைப்படாதே! நான் பார்த்துக்கறேன் அப்படின்னு சொல்வாங்க.

“ நான் பார்த்துக்கறேன்” ன்னு சொல்றதுக்கு ஒரு ஆன்மா நமக்குத் தேவைதானே! அதுதான் அம்மா! இல்லையா…? அதனாலே ரொம்ப அலட்டிக்கவே மாட்டாங்க.

அவங்க நடை, உடை, பாவனை எதிலுமே ஒரு எளிமை. எதையுமே அலட்டிக்க மாட்டாங்க. சிரமமே இல்லாம இந்த 40 வருஷத்திலே மேல்மருவத்தூர் எப்படி வளர்ச்சியடைந்திருக்கிறது என்று பாருங்கள். சிரமமே இல்லாம சேவைகளை ஒழுங்குபடுத்துதல் நடந்துள்ளது.

சேவை என்றால் எவ்வளவு செய்கிறார்கள்! கல்விக்கு சேவை செய்து கல்விக் கூடங்களை நிறுவியிருக்கிறார்கள். மருத்துவத்திற்கு சேவை செய்து பெரிய மருத்துவமனை நிறுவியிருக்கிறார்கள்.

இப்படி மக்களுக்கு என்னென்ன தேவையோ அவைகளை எல்லாம் சேவைகளாகச் செய்து கொண்டிருப்பதனால் அந்த ஞானியினுடைய தன்மை நம்ம அம்மாகிட்ட பொருந்தி இருக்கிறது.

2). மவுனமாக வழிகாட்டுவார்

அம்மா எங்கேயும் போதனை அதாவது மேடைப் பேச்சுக் கொடுப்பதில்லை. போதகர்கள் வேறு. அம்மா அவர்கள் மாதிரி வழி காட்டுபவர்கள் வேறு. போதகர்கள்னா பேச்சுத்தான் கொடுப்பார்கள். சிலர் அப்படிப் பேசியே போதளை மூலம் மக்களை ஆன்மிகத்திற்கு ஈர்ப்பார்கள். அப்படியெல்லாம் அம்மா செய்யவே மாட்டார்கள். மவுனமாக வழிகாட்டுபவர்.

பல நேரங்களில் நம்ம கூட அடடா…! அம்மா மவுனமாயிர்ராங்க, நம்மகிட்ட பேசவே மாட்டேங்கறாங்க என்று வருந்துகிறோம்.

மவுனமாயிட்டாக்கூட உங்க மனசுல என்ன ஓடுதுங்கறது நல்லாவே தெரியும். நீங்கள் எதை எதிர்பார்த்து வந்தீர்கள் அது நடக்குமா? நடக்காதா? அப்படிங்கறதெல்லாம் தெரியும். ஆனா அந்த மவுனத்தின் மூலமாகவே உங்களுக்கு பதில் கிடைச்சுடும். அதனால் நெறைய பேசாம மவுனமாக வழிகாட்டுபவர் என்பதும் பொருத்தமே.

3). உருவாக்கினாலும் கட்டுப்படுத்துவதில்லை

அவர்கள் கணக்கற்ற பொருட்களுடன் செயல்பட்டாலும் அவற்றைக் கட்டுப்படுத்துவதில்லை. கணக்கற்ற செயல்கள் என்றால் இப்போது மேல்மருவத்தூரில் இருக்கிற கட்டடங்களினுடைய மதிப்பைப் போட்டாலே எத்தனையோ கோடி வரும். அத்தனை கோடியும் அம்மா அவர்களால் நமக்குக் கிடைத்தவை.

அதைப்பற்றியெல்லாம் அவங்க நெனச்சே பார்ப்பது இல்லை. நான் இவ்வளவு செய்தேன். நான் இத்தனை கோடில இந்த பில்டிங் கட்டினேன். இத்தனை கோடில கல்லுரிகள் கட்டினேன். அதெல்லாம் பண்ணியிருக்கேன் என்று அவர்கள் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.

4). சொந்தம் கொண்டாடமாட்டார்

அடுத்தது அவர்கள் உருவாக்கினாலும் அவர்கள் எதையும் சொந்தம் கொண்டாடுவதில்லை. சொந்தம் கொண்டாடறதுன்னா என்ன…? எனக்கு, எனக்குன்னு சொல்வது இல்லை. நான்தான் செய்தேன் என்று கூறுவதில்லை.. இது என்னுடைய ஹாஸ்பிட்டல். இது என் கோயில் என்று கூறுவதில்லை.

அம்மா அவர்கள் யாரைப் பார்த்தாலும், “சார்! இது உங்க கோயில் சார் நீங்க எப்ப வேண்ணாலும் வரலாம், போகலாம்” அப்படித்தான் சொல்வாங்க.

அது மாதிரி அவர்களே இப்படி ஒரு பெரிய ஆன்மிக இயக்கத்தையும், அதனால் பல கல்வி நிறுவனங்களையும் பல சமுதாய தொண்டுகளையும் செய்தாலும், அதற்கெல்லாம் அவர்கள் சொந்தம் கொண்டாடுவதில்லை. நான்தான் என்று அவர்கள் சொந்தம் கொண்டாடுவதில்லை. என் கோயில் இங்க யாரும் வரக்கூடாது. நான் கட்டுன கட்டடம் அப்படின்னு எல்லாம் சொந்தம் கொண்டாடுவதில்லை.

5). பலனை எதிர்பாராதவர்

அடுத்தது அவர்கள் வினை புரிந்தாலும் பலனை எதிர்பார்ப்பதில்லை. ஆன்மிகத்தில் பலன் எதிர்பார்க்கக்கூடாது. எப்பவுமே நான் இதையெல்லாம் செய்துகிட்டு இருக்கிறேன். நான் கடவுள். நான் வந்து ஒரு பெரிய தெய்வம். அப்படிங்கற மாதிரியெல்லாம் சொல்வதில்லை. இந்தக் காரியங்களெல்லாம் செய்வதால் தான் ஒரு தெய்வம் என்னும் நினைப்பு அவர்கள் மனதில் எந்த நிமிடத்திலும் வந்தது கிடையாது. அது ஒரு பெரிய தன்மை. தெய்வீகத்தன்மை என்றே நாம் சொல்லலாம்.

6). வெற்றியில் திளைப்பதில்லை.

அடுத்தது அவர்கள் வெற்றி பெற்றாலும் வெற்றியில் திளைப்பதில்லை.நான் இவ்வளவு செய்துவிட்டேன். இவ்வளவு மாநாடு நடத்திவிட்டேன். இவ்வளவு மக்களைக் கூட்டிவிட்டேன். இவ்வளவு ஆன்மிகத்தில் புரட்சி பண்ணிவிட்டேன். பெண்களுக்கு முக்கியத்துவம் என்னை மாதிரி யாரும் கொடுத்ததில்லை. வேள்வி முறைகளையெல்லாம் என்போல யாரும் சொல்லிக் கொடுத்ததில்லை என்று சொல்லி தன்னுடைய வெற்றியைப் பற்றி அவர்கள் என்றைக்குமே நினைப்பதில்லை. அவ்வாறு பெருமையாகப் பேசிக் கொள்வதில்லை.

7). நீங்காத நினைவு

அடுத்தது அவர்கள் அப்படி வெற்றியில் திளைக்காத காரணத்தால் அந்த வெற்றி எப்பொழுதும் அவர்களைவிட்டு நீங்குவதில்லை. அதைத்தான் முக்கியமாக நினைக்க வேண்டும். இவ்வளவும் அம்மா செய்திருக்கிறார்கள். அது என்றாவது மறைந்துவிடுமா..? மறையவே மறையாது.

எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மேல்மருவத்தூர் என்றால் ஆதிபராசக்தி என்ற தெய்வம் நினைவுக்கு வரும். ஆதிபராசக்தி தெய்வம் என்றால் பங்காருஅடிகளார் என்ற நினைவு கட்டாயம் வரும்.

எப்பவுமே ஒரு கோவிலில் பார்த்தீர்களானால் அந்தக் கோவிலை உருவாக்கிய, உறுதுணையாக இருந்த சித்தர்களுடைய வரலாறு அந்த இடத்தில் இருக்கும். அதுமாதிரி இந்தக் கோவில் இருக்கும்வரை, இந்த ஊர் இருக்கும்வரை, இந்த நாடு இருக்கும்வரை, இந்த உலகம் இருக்கும்வரை, அம்மா அவர்களின்
புகழ் என்றைக்கும் நிலைத்து நிற்கும் என்று சொல்லி உங்கள் அனைவருக்கும் மேல்மருவத்தூர் என்றால்
ஆதிபராசக்தி, ஆதிபராசக்தி என்றால் பங்காருஅடிகளார், பங்காஅடிகளார் என்றால் அம்மா என்ற நினைவு எப்பொழுதும் உங்கள் மனதில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த இடத்தை வேற யாருக்கும் நீங்கள் கொடுக்கக் கூடாது. இந்த இடத்தை யாராலும் நிரப்பவும் முடியாது என்று சொல்லி இந்தப் புத்தாண்டு தினத்தில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொண்டு விடை பெறுகிறேன்.

நன்றி

திருமதி லட்சுமி பங்காருஅடிகளார் அவர்கள்
.

(சக்தி ஒளி- ஏப்ரல்- 2012 ).