ஆழமான பொருளுடைய மூன்று சொற்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன. இன்றைய மனிதன் அடைந்துள்ள பரிதாபமான நிலையை அறிந்து கொள்வதற்கு இச்சொற்கள் பெரிதும் உதவுகின்றன. அவை போகம், யோகம், ரோகம் என்ற மூன்று சொற்களாகும். இவற்றின் பொருள் முறையே உடல் திருப்தி, ஆன்மிக வளர்ச்சியும் நிறைவும், உடல் பற்றியதும், மனம் பற்றியதுமான நோய் நொடிகள் என்பதாகும். இந்தச் சொற்களை வைத்துக்கொண்டு ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மனிதன் போகத்திலிருந்து யோகத்திற்கு உயர வேண்டும். அதனால் பிறவி எடுத்ததன் பயனாகிய நிறைவைப் பெறமுடியும். இவ்வாறு செய்யத் தவறினால் அவன் அனுபவித்த அதே யோகம் அவனை ரோகத்தில் கொண்டு தள்ளிவிடும். மனிதன் செய்யும் முயற்சிகளில் போகம் எப்படி நியாயமானதோ, அதேபோல யோகமும் நியாயமானதாகும். யோகத்தை அனுபவிக்க மனிதனுக்கு கருவி, கரணங்களைக் கொடுத்த இயற்கை அவன் யோகத்தைப் பயிலவும் அதே கருவி கரணங்கட்கு ஆற்றலைத் தந்துள்ளது.

இதன் எதிராக யோகத்தை அனுபவிக்கும் நிலையிலிருந்து யோக நிலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலோ அது பற்றிக் கவலைப்படாமலோ இருப்பவன் அதோகதி அடைகிறான். யோகத்தில் சென்றால், ஆன்மிகம் நல்லொழுக்கம், முருகியல் ஆகிய துறைகளில் பெரிய நிலையை அடைய முடியும் என்றும் ஒரே நிலையில் மனிதன் நிற்க முடியாது. ஒன்று அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும். இல்லையானால் கீழே உள்ள நிலைகட்குத் தள்ளப்படுவான். போக நிலையிலிருந்து யோக நிலைக்குச் செல்ல முயலவில்லையானால் உடல், மனம் ஆகியவற்றில் ரோகநிலை வந்துவிடும். விஞ்ஞான முதிர்ச்சி பெற்ற இந்த நாளில் மனிதன் இந்தப் பரிதாபமான நிலையில்தான் இருக்கிறான்.

இந்தப் புதிய விஞ்ஞான நாகரிகம் காப்பாற்றப்பட வேண்டுமானால் மனித முயற்சி, குறிக்கோள் என்பவை ஆன்மிக வழியை நோக்கிச் செல்ல வேண்டும். இவ்வாறு செய்தால்தான் இன்றைய மனிதன் சுதந்திரமுடையவனாக இந்த உலக சுகபோகங்களை அனுபவிக்க முடியும். இல்லாவிட்டால் இந்தப் போகங்கட்கு அடிமைப்பட்டவனாகப் பரிதாபத்துக்குரியவனாக ஆகிவிடுவான். ஆன்மிக விஞ்ஞானத்தின் இந்த நிரந்தரமான செய்தி ஈசோ உபநிடத முதல் பாடலில் பேசப்படுகிறது. ஆன்மிக விஞ்ஞானத்தின் குறிக்கோள் எது என்றால் மீளாத்துயரம், துன்பம் என்பவற்றிலிருந்து விடுவிப்பதும் அச்சத்திலிருந்து அஞ்சாமைக்கு இட்டுச் செல்வதாகும்.

பண்படாத இன்றைய உலகாயதம் எத்தகைய மோசமான நிலைக்கு நம்மைக்கொண்டு செலுத்தியுள்ளது என்பதையும் சிந்திக்க வேண்டும். நாளும் வளர்ந்து வருகின்ற மன, உடல் நோய்கள் என்பவற்றுடன் சமுதாயம் முழுவதையும் புற்றுநோய் போல் பற்றி வளரும், லஞ்சம் கையூட்டும் பண்பாட்டு அழிவு என்பவற்றையும் காண வேண்டும். ஒழுக்கத்திற்கு முரணானதும், சமுதாய நலத்துக்குக் கேடு விளைவிப்பதுமான ஒரு பழக்கத்திலிருந்து எதிர்த்து ஒருவன் மீள வேண்டுமானால் அதற்கு ஆன்மிக பலம் வேண்டும். ஆன்மிக பலத்தை உடலை நன்கு வளர்ப்பதனாலோ அறிவைப் பெரிதும் கூர்மையாக்கிக் கொள்வதாலோ பெற்றுவிட முடியாது. ஆசைகள் குறுக்கிடும் பொழுது மிகப் பெரியதும் நுண்மாண் நுழை புலமாவதுமாகிய அறிவு ஒன்றுஞ் செய்ய முடியாது. ஆனால் அந்த அறிவு அதன் பின்னர் மறைந்துள்ள ஆத்மஞானத்தின் ஒளிபால் தூண்டப்பட்டால் எந்த ஆசையையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலைப் பெற்றுவிடும். மனித அறிவு பெறும் இப்புதிய மீட்சிதான் மனிதனையும் அவனுடைய நாகரிகத்தையும் படுகுழியில் விழாமல் காப்பாற்றும் கருவியாகும். அறிவு என்பது ஞானமாக முதிர்வதே இம்முறையில்தான் மனிதனுடைய அறிவுக்கும் அது ஞானமாக முதிர்வதற்கும் முரண்பாடு ஒன்றும் இன்மையால் இந்தியாவில் அறிவின் விளைவாகிய விஞ்ஞானத்திற்கும், ஞானத்தின் விளைவாகிய ஆன்மிக விஞ்ஞானத்துக்கும் எவ்வித முரண்பாடும் இருப்பதாகக் கருதுவதில்லை. இந்த மாபெரும் தத்துவம் மூவாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய ஸ்ரீகிருஷ்ணனால் பாவதத்தில் பின்வருமாறு பேசப்படுகிறது. “பொதுவாகப் பேசுமிடத்து இந்த உலகத்தில் புறப்பகுதியை ஆராய்ந்து சத்தியத்தை நாடும் திறம் உள்ளவர்கள் (விஞ்ஞானிகள்) பள்ளத்திலிருந்தும் தீமையிலிருந்தும் நம்மை தாமே உயர்த்திக் கொள்கின்றனர்.

“விலங்குகளைத் தவிர மனித இனத்தைப் பொறுத்தவரை ஒருவனுடைய அல்லது ஒருத்தியினுடைய குருவாக இருப்பவர் அவனுக்கு அவனே; அவளுக்கு அவளேயாவர். இதன் காரணம் ஒன்றுண்டு. மனிதன் பூதப் பொருள்களையோ, சமுதாய வசதிகளையோ அடைவதற்கு அவனுடைய பொறிபுலன் தரும் நேரடி அனுபவங்களையும் அவற்றிலிருந்து கிடைக்கும் முடிவுகளையுமே உதவியாகக் கொள்கின்றான்.”

இந்த இரண்டு சுலோகங்களும் பௌதிக விஞ்ஞானத்துக்கும் தொழில் நுட்பத்திற்கும் மனிதன் எவ்வளவு முக்கியத்துவம் தந்துள்ளான் என்பதற்கு எடுத்துக்காட்டு. ஆனால் இந்த விஞ்ஞான அறிவு மட்டுமே இருந்துவிட்டால் மனிதன் முழு வளர்ச்சி அடைய முடியுமா?

இவற்றான் மட்டுமே மனிதன் முழு வளர்ச்சி அடைந்துவிடலாம் என்று கூறுகிறது மேனாட்டு விஞ்ஞான அறிவு. மனிதனிடம் புதைந்து கிடக்கும் ஆழமானதும், மிக உயர்வானதுமான பல சந்தர்ப்பங்கள் பற்றி மேனாட்டு விஞ்ஞானம் அறியவில்லை. ஆனால் மனிதனுடைய அறிவை (ஞானம்) பரம் (உயர்ந்தது) அபரம் (சாதாரணமானது) என்று பிரித்து முண்டக உபநிடதம் கூறியுள்ளது. இது பற்றிக் கண்ணன் பாகவதத்தில் “அழியாததான தெய்விக ஆற்றல் மனிதனிடம் புதைந்துள்ளது என்றும், அதனை ஆராய்ந்து வெளிப்படுத்தும் ஆற்றலையும் இயற்கை மனிதனுக்கு அளித்திருக்கிறது” என்று கூறுகிறான்.

ரோமன்ரோலண்ட் என்ற பெரியார் “ஸ்ரீ இராமகிருஷ்ணர் வாழ்க்கை” என்ற நூலில் பின்வரும் கருத்தைத் தூண்டும் சொற்களைப் பேசுகிறார்.

“இந்த நேரத்தில் எந்த ஒரு மனிதரைப் பற்றி நினைக்கிறேன் என்றால் இந்த நாட்டின் 30 கோடி மக்களின் இரண்டாயிரம் வருடத்திய ஆன்மிக வாழ்வு ஒரு வடிவு பெற்ற ஒரு பெரு மகனை ஆகும். அந்த மனிதர் இறந்து நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அவருடைய ஆன்மா இந்த நவீன இந்தியாவைச் சூழ்ந்து உள்ளது. அந்த மனிதர் காந்தியைப் போலச் செயல் வீரர் அல்லர்; காத்தே அல்லது தாகூர் போல ஒரு பிறவிக் கலைஞரும் அல்லர் அவர் வங்காளத்தைச் சேர்ந்த ஓர் எளிய அந்தணர். அவருடைய புறவாழ்க்கை எவ்விதப் பரபரப்போ நிகழ்ச்சிகளோ இல்லாமல் அமைந்திருந்தது. ஆனால் அவருடைய அகவாழ்வு மனிதன் தெய்வம் என்ற இரண்டின் பன்மை முழுவதையும் தழுவி அமைத்திருந்தது”

இராமனாதபுரத்தில் தமக்கு அளிக்கப்பெற்ற வரவேற்பில் சுவாமி விவேகானந்தர் பின்வருமாறு பேசினார்.

“இந்த நாட்டில் இன்றும் செழித்து வளரும் சமயமும், ஆன்மிகமும் பொங்கி வழிந்து உலகை நிரப்ப வேண்டும். இன்றைய மேலை நாடுகள் அரசியல் போட்டி, நாட்டாசை, சமுதாயச் சூழ்ச்சிகள் என்பவற்றில் சிக்கிப் பாதி உயிர் இழந்து தாழ்மையுற்று உள்ளன பற்றின்மை “தியாகம்” என்பதுதான் இந்திய சமயங்களின் ஒரே குரலாகும். எல்லையற்றதான இந்த அண்டத்தையும் ஒரு பைத்தியக்காரக் குட்டை என்று கருதி இந்த அண்டத்தின் அப்பாலும் சென்று காண வேண்டும்; அதற்கப்பாலும் செல்ல வேண்டும் என்று துணிந்து பேசும் இருப்புத் தலையர்களும் மாபெரும் அறிஞர்களும் இந்த நாட்டில் இன்றும் உள்ளனர்.

இந்தியப் பண்பாட்டின் ஆணி வேர் எனப்படுவது எதனையும் கடந்து அப்பால் உள்ளதைக் காண வேண்டும் என்ற பேரவாத்தான். இயற்கையின் முகத்திரையைக் கிழித்து எப்பாடுபட்டாலும் எதனை இழந்தாலும் அப்பால் உள்ளதைக் காண வேண்டும் என்ற துணிச்சல் தான் இந்நாட்டின் பண்பு.

மேலைநாட்டு நாகரிகத்தை முழுதும் அறிந்திருந்தாலும், அந்தக் கல்வி, செல்வம், தகுதி, சிறப்பு என்ற அனைத்தையும் ஓர் இந்து, இந்தியன் நன்கு அறிந்திருந்தாலும் இவை ஆன்மிகத்திற்கு அடிப்படுத்தி வைத்திருப்பதே அவனுடைய சிறப்பாக இருந்து வந்தது. என்றாவது ஒருநாள் இந்து என்பவன் ஒருவன் தன் ஆன்மிகத்தை மறந்து இந்த உலகாயத நாகரிகத்தில் மூழ்கினால் அன்று இந்த நாட்டின் காலாசாரம் பண்பு, நாகரிகம் என்பவை அழிந்துவிடும். இந்த இனத்தின் முதுகெலும்பாக உள்ள ஆன்மிகம் முறிக்கப்பட்டால் அழிவு என்பது உறுதியாகிவிடும். எனவே நண்பர்களே! இன்று இந்த நாட்டைப் பிடித்திருக்கின்ற உலகாயதம் என்னும் மரணப் பிடியிலிருந்து தப்ப வேண்டுமானால் ஆன்மிகத்தைப் பிடித்துள்ள பிடியைத் தளர்த்தல் ஆகாது. ஆதலால் தனிப்பட்ட முறையில் ஆன்மிகத்தை நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இந்த இந்திய இனம் வாழ வேண்டும் என்பதற்காகவாவது நீங்கள் ஆன்மிகத்தை விட்டுவிடக்கூடாது. ஒரு கையால் ஆன்மிகத்தை வலுவாகப் பிடித்துக்கொண்டு மற்றொரு கையை முடிந்த அளவு நீட்டிப் பிற இனத்தார்களிடமிருந்து பெறக்கூடிய நற்பயன்கள் அனைத்தையும் நீங்கள் தவறாமல் பெற முயலுங்கள். அதனால் தவறு இல்லை. ஆனால் எத்தனை நலங்களைப் பெற்றாலும் அவை அனைத்தும் ஆன்மிகத்திற்கு அடிப்படுத்தியே இருக்க வேண்டும்.

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here