அம்மா.!

உன் அழகிய முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கப் பிடிக்கும்!

உன் கருணை விழிகள் கனிவுடன் என்னைப் பார்க்கிறதா? என்று ஏங்குவது எனக்குப் பிடிக்கும்!

உன் அழகிய உதடுகள் மகளே!என்று அழைக்காதா? என என் மனம் தவிப்பது எனக்கு பிடிக்கும்!

உன் அபயக் கரங்கள் என்னை அரவணைக்கவும், ஆசீர்வதிக்கவும் எப்பொழுது வரும்..? என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பது பிடிக்கும்!

உன் மென்மலர்ப் பாதங்களை அலங்கரித்து கொண்டிருக்கும் அந்த மலர்களாய்ப் பிறந்திருந்தால்.?என்று நினைக்க பிடிக்கும்!

உன் மகளாய்ப் பிறக்க வைத்த விதியை மிகவும் பிடிக்கும்!

உன் அருள் மழையில் நனையப் பிடிக்கும்!

குருவாய் நின்று போதிக்கும் உன் அளப்பரிய ஞானம் பிடிக்கும்!

பசித்த முகம் பார்த்து படியளக்கும் உன் தாய்மை பிடிக்கும்!

உரிமையுடன் உன்னை அம்மா! என்று கூறி அழைக்கப் பிடிக்கும்!

உன் கருணையில் பிறந்த உலகம் பிடிக்கும்!

நீ படைத்த இயற்கை எல்லாம் பிடிக்கும்!

உன் பாதமலர்களை மனதிலே இருத்தித் தியானிப்பது பிடிக்கும்!

உன்னையே நினைத்து சுற்றிச் சுற்றி வரும் என் நினைவு எனக்கு மிகவும் பிடிக்கும்!

உன் அருள் மொழிகளை உன் திருவாயால் , உன் எளிய மொழிகளால் உணர்த்தும் பாங்கு எனக்குப் பிடிக்கும்!

என் தொண்டு உனக்குப் பிடித்து விட்டால் உன் கண்கள் எப்படிப் பிரகாசிக்கும் என்பதை அறிந்துகொள்ள பிடிக்கும்!

வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது உன்னிடம் சொல்லிச் செல்ல பிடிக்கும்!

எது வாங்கி வந்தாலும் உன்னிடம் காண்பித்து, உன்னருள் பெற்ற பின் அதை ஏற்றுக்கொள்ளப் பிடிக்கும்!

‘மனம்’ என்னும் ஊஞ்சலில் உன்னை மலரணையில் அமர வைத்து ஆட்டி விட மிகவும் பிடிக்கும்!

மன்றம் செல்லப் பிடிக்கும்!

மந்திரநூல் படிக்கப் பிடிக்கும்!

உன் அருளை பறைசாற்றும் ஒளி ஒலி நாடாக்களை பார்க்கவும்,கேட்கவும் பிடிக்கும்!

உன் மந்திரத்தை எந்தக் கணமும் உச்சரித்துக் கொண்டே இருக்கப் பிடிக்கும்!

உன் நினைவால் அழுது தவிக்கும் அந்த நிலை மிகவும் பிடிக்கும்!

செவ்வாடை அணிந்து கொள்ளப் பிடிக்கும்!

தொண்டு செய்வது மிகவும் பிடிக்கும்!

இருமுடி ஏந்தி செல்வது பிடிக்கும்!

உன் கருணை மழையில் நனைந்து விட எத்தனை பிறவி எடுத்தாலும் பிடிக்கும்!

உன்னை தேடாத உயிர்களையும் இந்த உலகில் வாழ வைத்துக் கொண்டிருக்கும் உன் கருணை மிகவும் பிடிக்கும்!

எல்லோரும் நான் பெற்ற பிள்ளைகள் தானே!என்று பேதமின்றி பார்க்கும் தன்மை பிடிக்கும்!

மெய்ப் பொருளை உணர்த்தி , குருவாய் நின்று வழிகாட்டும் மேன்மை பிடிக்கும்!

உன் அருகிலேயே இருக்கப் பிடிக்கும்!

உன் திருவடியை தியானிப்பது பிடிக்கும்!

எங்கள் உள்ளங்களில் நீ என்றும் நிறைந்திருக்க வேண்டும் ,என்று உன்னிடம் கெஞ்சுவது எனக்கு மிகவும் பிடிக்கும்!

உனக்கு பிடித்ததெல்லாம் எனக்குப் பிடிக்கும!்

எனக்கு பிடித்த உன்னை என் இதயத்திற்குள் பூட்டி வைத்திருக்கிறேன் என்பதை நினைக்கும்போதே பிடிக்கும்!

சக்தி ஒளி
செப் 2001