வினையையும் வெல்லலாம்!

வினையை மூன்று வகையாகப் பிரித்துச் சஞ்சிதம், பிரசரத்துவம், ஆகாமியம் என்று பெயரிட்டனர் தம் முன்னோர் என்று கண்டோம் அல்லவா? (சக்திஒளி – சுடர் 5) பிறவி பிதாறும் அந்த ஆன்மாவைப் பற்றித் தொடர்ந்துவரும் இயல்புடையது வினை என்றும் கண்டோம். இதில் ஒரு குறிப்பிட்ட பிறவியில் அனுபவிப்பதற்காக ஒதுக்கப்படும் வினை (நல்வினை, தீவினை என்ற இரண்டும்) பிராரத்துவம் என்று கூறப்பெறும். இதனை அந்த ஆன்மா எந்த உடம்புடன் இருப்பினும் அனுபவித்தே ஆகவேண்டும் என்றும் கூறுவர். நல்லவர்கள் கடுமையான துன்பத்துள்ளாகும் பொழுது ‘‘பாவம்” அவர் நல்லவர்! இப்படிப்பட்ட துன்பத்தை அனுபவிக்க அவர் எந்தக் குற்றமும் செய்ததாகத் தெரியவில்லை. ஆம்! பிராரத்துவ வினை இது. அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று பிறர் கூறக் கேட்கிறேன். பட்டினத்தாரைக் கழுமரத்தில் தவறுதலாக ஏற்றிவிட்டதாகவும், அப்பொழுது அவர் பாடியதாகவும் உள்ள ஒருபாடல் இதனை நன்கு விளக்கும். ‘‘பிறப்பு எடுத்த பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை; பிறப்பதற்கு முன் செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டதுவே”

எனவே, முற்பிறப்பில் செய்ததும், இப்பிறப்பில் அனுபவிப்பதற்காக ஒதுக்கப்பெற்றதும் ஆன பிராரத்துவ வினையை அனுபவித்தே தீர்க்கப்பட வேண்டும். இதனால்தான் மிக நல்லவர்கள் மிகக் கொடிய துன்பத்தை அனுபவிப்பதை நம் கண் எதிரே காண்கிறோம். இதேபோல மிகத் தீயவர் நம் கண் எதிரே மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதும் தாம் அன்றாடம் காணும் காட்சியாகும். நம்மில் பலர் ‘‘சார்! கடவுள் இருக்கிறாரா” என்றுகூடச் சந்தேகம் உண்டாகிவிடுகிறது. ‘‘என்பவரைப்போல உத்தமமானவரைப் பார்க்க முடியாது; ஆனால் இன்று அவர் படும் துன்பம் பொறுக்க முடியாதது. ….. என்பவரைப் போன்ற கொலைக்காரக் கொடியவரைப் பார்க்க முடியாது. ஆனால், அரசியல் செல்வாக்கிலும், பிற வசதிகளிலும் இவர்போல அனுபவிப்பவர் யாரும் இல்லை. இதனால் தான் கடவுள் பெயரிலேயே சந்தேகம் உண்டாகிவிடுகிறது” என்று பேசக் கேட்கிறோம்.

ஆழ்ந்து சிந்தித்தால் இதனை விளங்கிக்கொள்வது எளிது. ஒருவர் வசதியாக வாழ்ந்தகாலத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் கிடைக்கும் வகையில் ஒரு பெருந் தொகையை டெபாசிட் செய்துள்ளதாக வைத்துக் கொள்வோம்; அந்தக் குறிப்பிட்ட நாள் வருவதற்கு முன்னர் அவர் தம் வசதிகளை இழந்து சோற்றுக்க் கஷ்டப்படுவதாக வைத்துக்கொள்வோம்; ஆனால் குறிப்பிட்ட நாளில் அவர் முன்னர் வைத்த டெபாசிட் வந்து சேர்கிறது. வெளியில் இருந்து பார்க்கும் நமக்கு அவர் சமீப காலத்தில் சோற்றுக்குத் திண்டாடியது தொரியும். திடீரென்று அவர் கையில் சில ஆயிரங்கள் ஒரே நாளில் வருமானால் நாம் ஆச்சரியப்படுகிறோம். ஆனால் அந்த ஆயிரங்கள் ஒரு காலத்தில் அவராலேயே டெபாசிட்டில் போடப்பட்ட தொகைதான். அதேபோல பிராரத்துவ வினை வந்து சேரும்பொழுது கொடியவர் மகிழ்வதும் உண்டு; நல்லவர் துன்புறுதலும் உண்டு. இதில் வியப்படையவோ நம்பாமல் இருக்கவோ ஒன்றும் இல்லை.

பிராரத்துவம், சஞ்சிதம் என்ற இரண்டும் ஒருவர் முன் பிறவிகளில் சேர்த்துவைத்த மூட்டைகள் என்பதை அறிய முடிகிறது. அப்படியானால் இவற்றை அனுபவித்துத்தான் ஆக வேண்டுமா? ஆம்! அனுபவித்தே ஆகவேண்டும் என்று சமயங்கள் கூறுகின்றன. இவற்றை அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்றால் கடவுள் அருளைவேண்டி நிற்பதன் நோக்கம் யாது? அந்தத் திருவருள் நம் வினை அனுபவித்தினின்று நமக்கு விடுதலை தராது என்றால் திருவருளால் யாது பயன்? கோயிலுக்கு ஏன் போயாக வேண்டும்? அன்னை ஆதிபராசக்தியிடம் குறையை நிவர்த்திக்க வேண்டும் என்று கேட்பதால் யாது பயன்? என்று எல்லாம் சந்தேகம் வருவது நியாயமானதே!

இந்த நிலையில் மிகவும் பொறுமையுடன் இருந்து சில கருத்துக்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். வினையை அனுபவித்தே தீரவேண்டும் என்பது பொதுவான சட்டம். எந்த சட்டத்திற்கும் விதிவிலக்கு (Exception) உண்டு என்பதை நாம் அறிவோம். விதிவிலக்கு இருக்கிறது என்பதனால் பொதுச்சட்டம் இல்லாமல் போய்விடுவதில்லை. இந்த விதிவிலக்கே சட்டத்தின் வலுவை நினைவுறுத்தப் பயன்படுகிறது. விதியை அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்பதற்கு விதிவிலக்கு யாது? நம்முடைய ஆழமான பக்தியின் காரணமாகவும் அவனையே ‘‘சரணம் அடைவதன் காரணமாகவும் அன்னை ஆதிபராசக்தி சில நேரங்களில் விதியை மாற்றுகிறாள்.

இவ்வாறு கூறுவதால் ஏதோ புதிய கருத்தைப் புகுத்தி விட்டோம் என்று யாரும் நினைத்து அல்லல்படத் தேவை இல்லை. நம்முடைய முன்னோர்கள் இக்கருத்தை மிகப் பழங்காலத்திலேயே வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

‘‘முடிகள் சாய்த்து அடிவீழ்தரும் அடியாரை முன் வினை மூடாவே.” ‘‘சொலவல்லார் அவர் தொல்வினை தீருமே!” ‘‘சிவன் என்று நித்தலும் ஏத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே!”

என்று திருஞான சம்பந்தப் பெருமான் ஆணையிட்டுக் கூறுகிறார். இங்கு அப்பெருமான் தொல்வினை, முன்வினை என்று கூறுவது சஞ்சிதம், என்ற வகையாகும்.

‘‘ஏத்தவல்லவர் வினைதேய்வது திண்ணமே அடியார்மேல் பைய நின்ற வினைமாற்றுவார்” என்ற இடங்களில் பிராரத்துவ வினையையும் போக்கிக்கொள்ளலாம் என்கிறார் பெருமான். அருணகிரிப் பெருமான் செந்தூர் முருகனைப் பாடவந்த இடத்தில் ‘‘அவன் கால்பட்டு அழிந்தது என் தலைமேல் அயன் கையெழுத்தே” என்று அலங்காரத்தில் பாடுகிறார்.

எனவே சஞ்சிதம், பிராரத்துவம் என்ற இரண்டையுமே இறையருள் பலத்தால் போக்கமுடியும் என்பதை நம் முன்னோர் கூறிப்போயினர். இவ்வாறு தம் வினையைப் போக்கிக்கொள்வது எல்லாருக்கும் இயலும் ஒன்று அன்று. ‘‘சர்வபரித்யாகம்” என்று கூறப்படும் முழுச் சரணாகதி அடைந்தவர்கட்கு மட்டுமே அன்னை இதனைச் செய்வான்.

அப்படியானால் நம்போன்ற சாதாரண, சராசாரி மக்களின் கதி என்ன? சஞ்சித, பிராரத்துவ வினைகளின் பிடியினுள் சிக்கி அலைந்து அனுபவிக்க வேண்டியது தானா? என்ற வினா நியாயமானதே!

‘‘கடவுளை நம்பாமல் வினையை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு புறம். கடவுளை நம்பிக்கொண்டு, ஆனால் முற்றிலுமாக நம்மை அவன் அடைக்கலமாகத் தர முடியாமலும் ஆனாலும் அவளிடம் ஓயாமல் வந்து அழுது புலம்பி நம் குறையைப் போக்க வேண்டும் என்று அழுபவர்கள் ஒருபுறம். முற்றிலுமாகத் தம்மை அடைக்கலப் படுத்திக் கொண்டு சஞ்சித, பிராரத்துவ வினைகளை மாற்றிக்கொள்ளும் பொரியோர்கள் ஒருபுறம்.”

முதல் கூட்டத்திலும் மூன்றாவது கூட்டத்திலும் சேராமல் இடையே இருக்கின்ற நமக்கு மருவத்தூர் பெருமாட்டி ஒரு நல்ல வழியைக் கூறுகிறாள். அவளே முன்வந்து நம் வினையை அழிக்கும் அளவுக்கு நாம் அவளிடம் அன்பு செய்யவில்லை. அதேநேரத்தில் அவள் நம்மைக் கைவிடும் அளவுக்கு அவனை விட்டு எட்டிப்போய் விடவும் இல்லை. எனவே, அன்னை நம் வினையை நாம் அனுபவிக்குமாறு செய்கிறாள். அதே நேரத்தில் அந்த வினை தம்மை அதிகமாகப் பாதித்து அழித்துவிடாமலும் பார்த்துக் கொள்கிறாள்.

ஒரு கிலோ எடையுள்ள கல் ஒருவன் தலையில் விழவேண்டும் என்பது அவன் விதி என்று வைத்துக்கொள்வோம். சாதாரணமாக ஒரு கிலோக் கல் தலையில் விழுந்தால் மண்டை பிளந்து உயிர் போவது உறுதி. ஆனால் அன்னையிடம் முறையிடுவதனால் அவள் அருள் (GRACE) என்னும் இரும்புத் தகட்டைத் தலைமேல் வைத்துவிடுகிறாள் தாய். கல்லும் விழுகிறது (விதிமாற்ற முடியாது என்ற சட்டத்திற்கு ஏற்ப) ஆனால் அதே நேரத்தில் அப்படி விழுவதால் அவனுக்கு எவ்வித தீங்கும் நேராதபடி அன்னை காப்பாற்றி விடுகிறாள்; இங்கு வரும் அன்பர்கள் சிலர் ‘எத்தனை முறை அன்னையிடம் முறையிட்டும் இன்னும் என் குறை தீரவில்லையே” என்று வருந்துகிறார்கள். அன்னை ‘மகனே! ஒரே வினாடியில் உன் குறையைப் போக்கிவிட முடியும். ஆனால் இது நாளை வேறு விதமாக உன்னைப் பாதிக்கும். மறுபடியும் என்னிடம்தான் வரப் போகிறாய். மீட்டும் மாற்றியவுடன் வேறுவிதமாகப் பாதிக்கும்” எனவே அதற்குரிய காலம் வரும்வரை பொறுமையாக இரு. இதனால் எவ்விதத் தீங்கும் உன்னை வந்து அடையாதபடி நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறுகிறாள்.

எனவே வினை எத்தகையதாயினும் அதனை அறவே தீர்க்கவும் முடியும். அல்லது அதன் கொடுமை இல்லாதபடிச் செய்யவும் முடியும். திருவருள் ஒருவனுக்கு இருக்குமானால் இந்த இரண்டில் ஒன்று உறுதியாகச் சித்திக்கும்; இதுவே வினையை வெல்வது என்பதாகும்.

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here