மாங்கல்யம் கிடைத்தது!

மேல்மருவத்தூர் அன்னை ஆதி பராசக்தி ஆலயத்தில் அன்றன்றும் ஆயிரமாயிரம் அற்புதங்கள் நடத்துகின்றன.

1982 மார்ச்சு 19-ஆம் நாள் வௌ;ளிக்கிழமை, மதுரை திரு.தெ.இராமநாதன் செட்டியார் குடும்பத்தினர் தம் குடும்ப நலன் கருதி அப்பனிடம் அருள்வாக்குக் கேட்பதற்காக ஆலயம் சென்று இருந்தனர். அன்று, அவர்கள் தம் பெயர்களையும் பதிவு செய்தனர். வரிசைப்படி அருள்வாக்கிற்காகத் திரு.இராமநாதன் செட்டியார் மகனின் பெயர் அழைக்கப்பெற்றது. அம்மனின் அருளாசிப் பெற அப்பெண் ஆவலோடு புற்று மண்டபத்திற்குள் நுழையும்போது, அம்மன் அருள்நிலை கலைந்து வெளியே வந்துவிட்டது. அதைக் கண்ட அப்பெண் தன்னையுமறியாது தேம்பித் தேம்பி அழத்தொடங்கினாள். அருகிலிருந்த ஆலயத் தொண்டர்கள், ஆறுதல் கூறி அமைதிப்படுத்தி, ‘‘அடுத்தநாள் அருள்வாக்குக் கிடைக்கும், அமைதியாகச் செல்க” என்று கூறி அனுப்பினர். பெற்றோரும் சமாதானம் கூறி அழைத்து வந்தனர்.

அப்பொழுதே அப்பெண் ‘‘ஞாயிற்றுக்கிழமை தனக்கு அருள்வாக்குக் கிடைக்க வேண்டும்” என்றும், ‘‘அதுவரை அங்கேயே தங்கியிருப்பேன்” என்றும் ஆலயத்தைச் சுற்றி உடல் உருள்வலம் (அங்கப்பிரதட்சணம்) வருவேன்” என்றும், அம்மனை வேண்டி மனஉறுதி பூண்டாள்.

எண்ணிய எண்ணியாங்கு 21-03-82 ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து நீராடி ஆலயத்தைச் சுற்றி உடல் உருள்வலம் வந்தாள். தன்னை மீறிய சக்தியொன்று தன்னை உருட்டி வலம் வரச் செய்வதாக உணர்ந்தாள்.

பிரார்த்தனையை நிறைவேற்றி விட்ட மகிழ்ச்சியோடு, பக்கத்தில் இருந்த குளியல் அறைக்குள் குளிக்கச் சென்றாள். குளித்து முடித்த போது தான் கழுத்தில் அணிந்திருந்த மாங்கல்யச் சங்கிலி, உருள் வலம் வரும்போது எங்கோ கழன்று விழுந்திருப்பதை உணர்ந்தாள். துடிதுடித்துப் போனாள். மீண்டும் கண்ணீர், கவலை – உடனே, சந்நிதி முன்வந்து ‘‘தாயே! நீயே என் மாங்கல்யத்தைப் பெற்றுத்தர வேண்டும்” என்று வேண்டிக் கொண்டாள். அடுத்து அருள்வாக்கு மண்டபத்திற்குச் சென்று அமர்ந்தாள்.

அவள் பெயர் அழைக்கப் பெற்றது. தன் தந்தையாருடன் சென்று, தாய்முன் அமர்ந்தாள் அம்மன் ‘‘மகளே! உன் மனக் கவலையை மாற்றி உன்னை வாழச் செய்கிறேன். மனக்கவலையை விடு” என்று எடுப்பிலேயே அப்பெண்ணின் எண்ணத்தை வெளிப்படுத்தியது. அதன்பின் மாங்கல்யம் பற்றிக்கூறி, ஆசி வழங்க வேண்டும் என்று விழைந்தாள். அதற்கு ‘‘மகளே ஆலயத்து நடைமுறைகளைப் பின்பற்றிக் கவனமாக இருந்திருக்க வேண்டும், இருப்பினும் இம்மண்ணை மிதித்து விட்டாய்; உன் கவலையை மாற்றுகிறேன் சென்று வா!” என்றது தேம்பிய உள்ளம் தெளிவாகிப் புற்று மண்டபத்தை விட்டு வெளியே வந்தாள்.

ஆலயத்துத் தொண்டர்கள் ஒலிபெருக்கி மூலம், ‘‘கழன்று விழுந்து விட்ட அப்பெண்ணின் மாங்கல்யத்தைக் காணும் வாய்ப்புப் பெற்றவர்கள், அதனை எடுத்து அறநிலை அலுவலகத்தில் ஒப்படையுங்கள்” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தனர்.

அன்று ஆலயத்திற்குச் சென்றிருந்த நான், இராமநாதன் செட்டியார் அவர்களைச் சந்தித்த பொழுது அவர்கள் மாங்கல்யம் பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை. அது பற்றிய மனச்சலனம் சிறிதும் இல்லை. எல்லாம் நன்மைக்கே என்ற மனத் தெளிவோடும் நம்பிக்கையோடும் காணப்பெற்றனர். அமைதி குடிகொண்டிருக்கும் ஆலயத்தின் மகிமை அது. ஆனால், பிற நண்பர்கள் மூலம் செய்தியறிந்த நான் ‘‘மாங்கல்யம் பற்றி எதுவும் நினையாதீர்கள். அம்மா அருள் பாலிப்பாள்” என்று ஆறுதல் கூறினேன். பின்னர் திரு.இராமநாதன் செட்டியார் குடும்பத்தினர் அம்மன் அருளாசியுடன் இல்லம் திரும்பினர்.

நாட்கள் இரண்டு சென்றன. 23-03-82 செவ்வாய்க்கிழமை . அருள்வாக்கு நடந்து கொண்டிருக்கிறது. அற்புதத்திலும் அற்புதம் அன்றுதான் நிகழ்ந்தது! அன்பர் ஒருவர் அருள்வாக்கிற்காகப் புற்று மண்டபத்துள் நுழைகிறார். அருள் பாதங்களைத் தொட்டு வணங்கி, அம்மன் முன் அமர்கிறார். அம்மனின் கையில் அவர் கண்டெடுத்த மாங்கல்யத்தைத் தந்துவிட்டு, அம்மன் அருளாசியோடு வெளியே வருகிறார்.

அம்மனோ ஆலயத்துத் தொண்டரை அழைத்து, மாங்கல்யம் கிடைத்துள்ள செய்தியைக் கூறுகிறாள். ஆலயத்துத் தொண்டர், உடனே ஒலிபெருக்கியில் அறிவிக்கிறார். அன்று, ‘‘மாங்கல்யத்தை எடுத்தவர்கள் கொடுத்துவிடுங்கள், என்று கூவிய ஒலி பெருக்கி, இன்று ‘‘மாங்கல்யம் கிடைத்துவிட்டது. உரியவர்கள் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்” என்று ஒலிக்கிறது. அதைக் கேட்டவர்கள் எல்லாம் ‘‘அற்புதம், அற்புதம்” என்கின்றனர் அவரவர்களின் பொருள் கிடைத்தது போல் அளவளாவுகின்றனர். அங்கிருந்தவர்களில் ஒருவர் கூறுகிறார். ‘‘என்னங்க! அஞ்சுக்கும் பத்துக்கும் ஆளையாளு விழுங்கிக் கொண்டிருக்கிற இந்தக் காலத்தில், ஐயாயிரம் ரூபாய் பெறுமான பொருளைக் கொண்டு வந்து அம்மனிடம் சேர்ப்பதென்றால் சாதாரண நிகழ்ச்சியா! அற்புதத்திலும் அற்புதம், அம்மனின் அருஞ்செயல்” என்கிறார்.

மாங்கல்யம் கிடைத்த செய்தி உரியவர்க்குத் தெரிவிக்கப்படுகிறது. திரு. இராமநாதன் செட்டியார் குடும்பத்தினர் மாதாவின் மகிமையை எண்ணி மகிழ்ச்சிக் கண்ணீர் வடிக்கின்றனர். அன்று வடித்த கவலைக் கண்ணீரைக் களிப்புக் கண்ணீராக மாற்றிய அன்னையைக் காண, ஆலயம் வருகின்றனர். அன்னையை வழிபாடு செய்து கொண்டு அறநிலைய அலுவலகம் செல்கின்றனர்.

அம்மனின் அருளாசியோடு அப்பெண் தன் மாங்கல்யத்தைப் பெற்றுக் கொள்கிறாள். அப்போது அகம் மலர்ந்தது! முகம் மலர்ந்தது!

ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 5 (1982) பக்கம்: 40-41

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here