மருத்துவத்தில் மருவூராள்

பாகம் – 3

நூற்றுக்கணக்கானவர் வியப்புடன், அம்மன் கை நீட்டி, எங்கள் மூவருடன் பேசிக் கொண்டிருப்பதை மிக வியப்போடு பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். அந்தப் பெண்ணின் கணவன் வந்து, தன் மனையாளுடன் நிற்கின்றாள். அன்னை அருள் வாக்கு தன்னை தொடருகின்றாள். ‘‘இந்த தம்பதிகள் குழந்தை இல்லை என 14 ஆண்டுகள், இராமன் துன்புற்ற நிலையில் வனவாசம் இருந்ததை ஒட்டி கஷ்டப்பட்டு இருந்தார்கள். எல்லா முயற்சியும் தோல்வி அடைந்த நிலையிலே இந்த ஆலயம் வந்தார்கள்.

என்னை நம்பி வந்தார்கள். அன்று வாக்கு சொன்னேன் ‘‘இன்று கையிலே அந்தப் பெண் ஏந்தி நிற்பது ஓர் ஆண்குழந்தை! கட்டி எனச் சொல்லி கர்பப் பையிலே ஆபரேஷன் செய்ய வேண்டும் செய்தால் தான், கருதரிக்கும் என் உன் மருத்துவம் சொன்னது; ஆனால் இன்று அறுவை சிகிச்சை இல்லாமலே ஆண்டு இரண்டிலே, சொன்னபடியே ஆண் குழந்தை பிறந்து உள்ளது. பார் மகனே இந்தச் சிறப்புக்காகத்தான், இந்த நிகழ்ச்சியைச் சொல்கின்றேன், இதை என் பக்தர்களுக்கு இப்போதே, ஒலி பெருக்கியில் சொல்லி விடு என்று அன்னை ஆணையிட்டாள். அன்னை அருள்திரு. அடிகளார் வடிவிலே புற்று மண்டபத்துள் சென்று அமர்ந்து தன் அருள் வாக்கைத் தொடருகின்றாள். செய்தி அறிவிக்கப்படுகின்றது. பக்தர்கள் கண்களின் வியந்த பார்வையோடு, செவி கொடுத்து, இந்த நிகழ்ச்சியைக் கேட்கும் போது மெய்சிலிர்த்து, அன்னையின் இந்த திருவிளையாடலை எண்ணி, மெய் மறந்து நிற்கின்றனர். அந்தத் தம்பதிகளை குழந்தையோடு அழைத்துக் கொண்டு அறநிலை அலுவலகம், அடைந்து, ஆவலுடன் உரையாடலைத் தொடங்கினேன்.

‘‘இந்தக் கோயிலுக்கு, வந்து அருள் வாக்குக் கேட்டுத் திரும்பிப் போன ஐந்து மாதத்திலே, கருத்தரித்தாள், மெட்றாஸ்ல போல் சுகப் பிரசவம் ஆச்சி, இன்னிக்கு அம்மா, கொடுத்த இந்தக் குழந்தைக்கு 14-நாள் வயசு, ஆஸ்பட்டலிருந்து நேரா இப்ப கோவிலுக்கு வந்து அம்மா, மடியில வைச்சி, அர்ச்சனைப் பண்ணிட்டு போலாம்னு வந்தோம்; அதிர்ஷ்டவசமாக, மந்திரிப்பு கெடச்சது; அம்மா சொன்னது அத்தனையும் அவ சொன்ன மாதிரியே நடத்திக் காட்டிட்டா” என ஆனந்தக் கண்ணீர் மல்க, தென் ஆற்காடு மாவட்டத்தில் பண்ருட்டி அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த அந்த தம்பதிகள் சொன்னார்கள். மகப்பேறு மருத்துவத்தில் இந்த அம்மா செய்யும் அற்புதம், சொல்வதற்கரியது. அன்னை, அறுவை சிகிச்சையின்றி தன் அருளாலே கருணை காட்டி குழந்தைச் செல்வத்தைத் தருவது மட்டுமல்ல, இவ்வளவு காலத்திலே தருவேன் எனச்சொல்லி அதை நிறைவேற்றுகின்றாள். இன்ன குழந்தை என இனத்தைச் சொல்லி, கருணை காட்டித் திருவிளையாடல் புரிவது, இந்தக் கலியுகத்திலே ஒரு ஆன்மீக மருத்துவம் இல்லையா?

மகப்பேற்றிலே இது மருவத்தூரான் தன் அளப்பரிய அருட்பணி நோய்கண்டு, அதன் காரணம் விளக்கி, நோய் நீக்கும் நம் அன்னையின் மருத்துவம் ஒரு விந்தை மிகு புதுமை, அருள் வாக்கிலே, அன்பு மொழியிலே ஆற்றும் அறப்பணியே ஓர் மருத்துவம். தாய்க் கருணைச் சொல்லே நோய் தீர்க்கும் மருந்து, ‘‘நான் காப்பாத்தித் தரண்டா மகனே” எனச் சொல்லி விட்டால், நோயாளிக்கு அந்தக் கணமே, தன் உயிர் போய் விடுமோ என்ற கவலை நோய் தீர்ந்து விடுகின்றது. அருள்வாக்கைக் கேட்க வந்திருந்த கூட்டத்திலே மற்றொரு மூதாட்டி தான் திருமதி. ஷா. இந்த அம்மையார் பம்பாயைச் சேர்ந்தவர். மிகப் பணக்காரக் குடும்பம், ஐம்பதைக் கடந்துவிட்ட அந்தத் தாய், தன் கணவரோடு மருவத்தூருக்கு வந்தாள்.

இந்த அம்மையாருக்கு கர்பப் பையிலே புற்றுநோய், பம்பாயிலே ஜெஸ்லோக் மருத்துவ மனையில் சேர்ந்தார்கள். சோதனைகள் முடிந்து கைதேர்ந்த சிறப்பு மருத்துவர்களாலே (Carcaionoma of the Uterus) ‘‘கருப்பையிலே புற்றுநோய்” என்றும் (In Operatddie) அறுவை சிகிச்சையாலே குணப்படுத்த முடியாத அளவுக்கு வளர்ந்துவிட்ட நிலை, எனவும் கூறப்பட்டது. வேதனையுற்று இரத்தப் போக்கு நாளுக்கு நாள் அதிகமாகவும், செய்வதறியாது இருந்த நிலையில்தான், அவர்கள் நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டு, மருவத்தூர் அற்புதத்தை, எண்ணி தம்பதிகள் இருவரும் விமானம் மூலம் மீனம்பாக்கம் வந்து, மேல்மருவத்தூரில் அன்னையிடம் அருள் வாக்கிற்கு நுழைகின்றார்கள்.

‘‘காப்பாற்றித் தருகிறேன்” என்று அன்னையின் ‘‘தெய்வீகச் சொற்கள், காக்கும் தெய்வத்தின் திருவாயினின்று வெளிப்படாதா? என்ற ஏக்கத்துடன் ‘‘ஓம் சக்தி” எனச் சொல்லிக் கொண்டே, ஆதிபராசக்தியின் முன் அமர்கின்றார்கள்.

தொடரும்….

ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 3 (1982) பக்கம்: 46-47

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here