ஒளிவடிவாய் வளர்ந்தாள்

18.2.82 வியாழக்கிழமை மருவத்தூர் வரலாற்றில் ஓர் ஒப்பற்ற மைல்கல்லாக அமைந்த நன்னாளாகும். அன்று மாலை ஐந்து மணியளவில் உலக வார வழிபாட்டு மன்றத் தலைவர் திரு.S.கோபிநாதன், அருள்திரு. அடிகளார் அவர்களைத் தம்முடைய ஊராகிய சூனாம்பேட்டிற்கு அழைத்துச் சென்றார். சூனாம்பேட்டில் சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் தொடங்கி நடைபெற்று வரும் இடத்தில் அடிகளாரின் திருவடி வடவேண்டும் என்ற நோக்குடனேயே திரு.கோபிநாதன் அவர்களை அழைத்துச் சென்றார். மாலை 6 மணியளவில் சூனாம்பேட்டை அடைந்தனர். நேரே தம்முடைய வீட்டிற்குத் திரு.அடிகளாரை அழைத்துச் சென்று அருந்துவதற்கு ஏதாவது தந்து, பிறகே மன்றத்திற்கு அழைத்து வர வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம், ஆனால் ஊருக்குள் போகும் வழியில் மன்றம் அமைந்திருந்த முத்தாலம்மன் கோயிலைத் தாண்டித்தான் அன்பரின் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.

கோயிலைக் கடக்கும் பொழுதே திரு.அடிகளார் வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கிக் கோயிலுக்குள் செல்லத் தொடங்கினார். மன்ற உறுப்பினர் பலரும் மற்றப் பொதுமக்களும் அடிகளாரைப் பின்தொடர்ந்து உள்ளே சென்றனர்.

ஏறத்தாழ நாற்பது பேருக்குமேல் உள்ளே இருந்தனர்; கோயில் கிழக்குப்பார்த்த சன்னதி ஆதலாலும், மாலை நேரமாதலாலும், மின்சாரம் தடைப்பட்டமையாலும் உள்ளே இருள் கவிந்து கிடந்தது. திரு.கோபிநாதன் ஏதாவது ஒரு விளக்கை எடுத்து வருமாறு தொண்டர் ஒருவரிடம் பணித்தார். அந்த அன்பர் விளக்கை எடுப்பதற்காக வெளியே செல்லத் தொடங்குமுன் உள்ளே கருவறையில் ஓர் அற்புதம் நிகழத் தொடங்கிவிட்டது. அன்னையின் சிலையைச் சுற்றி ஓர் ஒளிப்பிழம்பு தரையிலிருந்து மேலே கிளம்பிற்று.

அன்னையின் வடிவம் முழுவதையும் சூழ்ந்து அவ்வுருவத்தைக் கடந்து முகடு வரை சென்று நின்றது. அடுத்துச் சிலையிலிருந்து புறப்பட்டு எதிரில் நிற்பவர்கள் அனைவரையும் தன்னுள் அடக்குவது போல விரிந்து வந்தது.

கருவரை முழுவதும் அந்த ஒளி விரிந்து பரவிற்று. கற்பனையில் அக்காட்சியை நினைக்கும் பொழுது திருவண்ணாமலையில் ஐயன் பாதாளத்தில் தோன்றி வரன் முகடுவரை ஒளிப்பிழம்பாய் நின்று ஒரு காலத்தில் காட்சி தந்தது நினைவிற்கு வருகிறது. மணிவாசகப் பெருமான்

‘‘சோதியே! சுடரே! சூழ்ஒளி; விளக்கே! என்று பாடியும்

இராமலிங்க வள்ளலார்

‘‘அருட் பெருஞ் சோதி” என்றும்

‘‘சாதி சமயச் சழக்கை விட்டேன் அருள் ஜோதியைக் கண்டேனடி – அக்கச்சி”

என்றும் பாடுவதும் நினைவிற்கு வருகின்றன. அடியவர் பலருக்கும் ஜோதி தரிசனம் கிட்டியுள்ளது. தன் சுயவடிவத்தை அன்னை அடிகளாருக்குக் காட்டிய சிறப்பைப் பேசுவதா? அல்லது அடிகளாருடன் உடன் சென்ற புண்ணியத்தால் உடனிருந்த நாற்பது பேருக்கும் அந்த ஜோதி தரிசனம் கிடைக்குமாறு செய்தாரே! அதைப் புகழ்வதா! நம் நாட்டைப் பொறுத்தவரை இதற்கு முன்னர் ஒரே ஒரு பெரியவர் தாம் தமக்குக் கிடைக்க ஜோதி தரிசனத்தை உடன் இருந்த அனைவரும் காணுமாறு கருணை செய்தார்.

திருஞானசம்பந்தர் என்ற அந்தப் பெரியவர் கி.பி.7ஆம் நூற்றாண்டில் இந்த அற்புதத்தைச் செய்து காட்டினார். இருபதாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் இத்தமிழ் நாட்டில் மற்றொரு பெரியவர் தமக்கென வந்த ஜோதியை உடன் இருந்த அனைவரும் கண்டு பயன் அடையுமாறு செய்தார். இதில் ஒரு தனிச் சிறப்பும் உண்டு.

ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய திருஞான சம்பந்தரையும் அன்னை ஆட்கொண்டு ‘‘தலைமகள்” என்ற பட்டத்தைத் தந்தாள். இருபதாம் நூற்றாண்டில் அதே காரியத்தைச் செய்த அருள்திரு.பங்காரு அடிகளாரையும் அதே அன்னை ஆட்கொண்டு ‘‘தன் பாலகன்” என்ற பட்டத்தைத் தந்தாள்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகட்கும் மூலமாக இருந்த அன்னை ஆதிபராசக்தி ஒருத்தியே தான். அப்படியானால் இந்த இருபாலகர்களும் ஒருவர் தாமோ?

ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 3 (1982) பக்கம்: 44-45

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here