விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும்

பாகம் – 4

இறைவனட எத்தகையவன்? எங்கும் நிறைந்துள்ளவன். அளப்பதற்கரிய பருமை என்று ஏதாவது நம் அறிவில்பட்டால் அவன் அதனைவிடப் பெரியவன். கற்பனைக்கு மட்டும் அடங்குவதாகிய சிறியது என்று ஏதாவது இருந்தால் அதைவிடச் சிறியவன் என்று கூறவருகிறார் மணிவாசகப் பெருமான். பெரிதாகிய பருமைக்கு உதாரணமாகத்தான் விரிந்து கொண்டே செல்கின்ற இந்த அண்டத்தைக் காட்டினார்.விஞ்ஞான ரீதியாக இவருடைய கூற்று எவ்வளவு உண்மையானதும் துல்லியமானதும் ஆகும் என இதுவரைக் கண்டோம். நாளும் விரிந்து கொண்டே செல்கின்றதும் நம் கற்பனைக்குள் அடங்காததுமாகிய இந்த அண்டமே ஒரு அணு என்று கூறும்படியாக அதனைவிடப் பருமையானவன் என்று கூறவருகையில் அணுவைப்பற்றியும் பேசுகிறார் பெருமான்.

அண்டப் பகுதியில் ‘‘துன்அணு” என்று அடைமொழி கொடுத்துப் பேசினார் மெய்ஞ்ஞானி. இனி அந்தக் கற்பனைக் கெட்டாத மாபெரும் அண்டங்கூட அணு என்று கூறப்படும் அளவிற்கு அவன் பெரியவன் என்று கூறினார். இறைவன் எத்துணை பெரியவன் தெரியுமா? அளத்தற்கரிய தன்மையுடைய அண்டப்பகுதிகூட அவனை நோக்க அணுப்போலச் சிறிதாகிவிடும் அத்துணைப் பெரியவன். மணிவாசகன் என்ற மெய்ஞ்ஞானி அண்டம்பற்றிய வானியல் (Astronomy) அறிவை எந்த அளவுக்குப் பெற்றிருந்தார் என்பது இதுவரைக் கண்டோம்.

ஹ்பூடால்டன் (Hugh Dalton) என்ற விஞ்ஞானிதான் பொருள்களைப் பிரித்துக்கொண்டே சென்றால் எந்த அளவில் போய் நிற்கும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டார். எந்த ஒரு பொருளும் இறுதியில் பகுக்கப்பட முடியாமல் நிற்கும் துகளுக்கு அணு (Atom) என்று பெயரிட்டார். ‘‘அத்தோமா” என்ற லத்தீன் சொல்லின் ஆங்கிலத் திரிபாகும் ‘‘ஆட்டம்” என்ற சொல், அந்தோமா என்றால் பகுக்கப்பட முடியாதது என்பது பொருளாகும்.

பகுக்கப்பட முடியாத இறுதியான துகள் என்ற பொருளில் ஆட்டம் என்று டால்டன் பெயர் வைத்தாலும் இன்று அந்தப் பொருளை உடைத்து அதனுள் ஓர் உலகையே கண்டு உள்ளனர். அணுவை உடைத்து அதனுள் எலக்ட்ரான், ப்ரோட்டான், மிசான், பாகிட்ரான் நியூட்ரான் முதலிய பல்வேறு ட்ரான்களை எடுத்தும்கூட இன்னும் அந்த மூலப்பொருளை அணு என்றுதான் விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். காரணம் யாது? முதன் முதலாக டால்டன் அணுவைப் பற்றிக் கூறியவற்றிலிருந்துதான் பிற்கால விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்தது. எனவே அந்த மூல புருஷனுக்கு மரியாதை தெரியவிக்கும் முறையில் அணு என்ற வார்த்தையை விடாமல் இன்றும் பயன்படுத்துகின்றனர்.

19ஆம் நூற்றாண்டு ஆராய்ச்சி அடிப்படையில் எந்த ஒரு பொருளை அதற்கு மேலும் உடைக்க முடியாது என்று கருதி ‘‘அணு” என்று மேலைநாட்டார் பெயரிட்டார்களோ அந்தப் பொருளை அதற்கு மேலும் உடைக்க முடியும் எனக் கண்டனர் நம்நாட்டு மெய்ஞ்ஞானிகள். ‘‘அணுத்தகு தன்மையில் ஐயோன் காண்க.1 (அண்டம் – 45) என்று பேசுகிறது திருவாசகம். ஐயோன் என்றால் சிறியவன் என்பது இவ்விடத்தில் பொருளாகும். கோயில் திருப்பதிகம் என்ற பகுதியில் வரும் திருவாசகப் பாடல் அறிய வேண்டிய ஒன்றாகும்.

‘‘இன்று எனக்கு அருளி இருள்கடிந்து உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் தன்மை, நினைப்புஅத நினைந்தேன் நீஅலால் பிறிதுமற்று இன்மை! சென்று சென்று அணுவாயத் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம் திருப்பெருந் துறைஉறை சிவனே! ஒன்று நீ அல்லை! அன்றி ஒன்று இல்லை! யார் உன்னை அறியகிற் பாரே! (திருவா 392)

உடைக்க முடியாத மூலப்பகுதி என்று கருதிய அணுவை பல்வேறு துண்டுகளாகப் பிரிக்க முடியும் என்று கூறுகிறார். மேலே காட்டப்பெற்றுள்ள பாடலில், அணு சென்று தேய்ந்து இறுதியில் பெயர் கூறமுடியாத ஒரு பொருளாக நிற்கும் என்கிறார். ”சென்று சென்று அணுவாய் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம் நின்ற நின் தன்மை நினைப்பற நினைத்தேன்” என்கிறார் பெருமான். அணு உடைக்கக் கூடியது என்று கூறினதுடன் மட்டும் அல்லாமல் அதில் இறுதியாக மிஞ்சும் பகுதிக்கு வேறு பெயர் கொடுக்காமல் ‘‘ஒன்றாம் நின்ற நின் தன்மை” என்று பேசுகிறார். இனி இதே கருத்தை மற்றொரு பாடலிலும் பேசுகிறார்.

‘‘வண்ணந்தான் சேயதுஅன்று வெளிதே அன்று ஏகன் அனேகன் அணுஅணுவில் இறந்தாய் என்று அங்கு எண்ணந்தான் தடுமாறி இமையோர் கூட்டம் எய்துமாறு அறியாத எந்தாய்”!

அணுவுக்குள் அணுவுக்குள் சிறியவனாக உள்ளானாம் இறைவன். நுண்மையான உடம்புடைய தேவர்கள் கூட இவ்வளவு நுண்மையானவனைக் எங்கே உள்ளான் என்று அறிய முடியாமல் தவிக்கின்றனர் என்று கூறுகிறார். இந்த அடியில் வரும் ‘‘அணு அணுவில் இறந்தாய்” என்ற தொடர்தான் நாம் அறிய வேண்டிய ஒன்று, அணுவுள் அணுவாக ஒன்று உள்ளது என்பதை இப்பெருமக்கள் அறிந்திருந்தனர். 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கம்ப நாடறும் இவ்வுண்மையைக் கூறுவதுடன் அந்த நுண்பொருளுக்கு ஒரு பெயரும் தருகிறான். இறைவன் எங்கெல்லாம் இருக்கிறான் எனக் கூற வந்த பிரகலாதன் ‘‘அணுவினைச் சதகூறு இட்ட கோணினும் உளன்” என்று கூறுகிறான். அணுவின் நூற்றில் ஒரு பாகத்திற்கு நம் தமிழர் ‘‘கோண்” என்று பெயர் இட்டிருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது. இப்பகுதிகள் அனைத்தும் இந்த மெய்ஞ்ஞானிகள் விஞ்ஞான அறிவும் பெற்றிருந்தனர் என்பதை எடுத்துக் காட்டத்தான் தரப்பெற்றனவே தவிர வேறு பயன் ஒன்றும் இல்லை.

சிலட்வீட்டி கொள்கையை வகுத்துக் கூறிய மாபெரும் விஞ்ஞானியாகிய ஐன்ஸ்டீன் உலகத் தோற்ற மறைவை ஓர் அழகான உவமையுடன் கூறினார். உலகம் ஒரு காலத்துத் தோன்றி விரிந்து செயற்பட்டு மறுபடியும் சுருங்கி மறுபடியும் விரிந்து செயற்படும் தன்மை உடையது. இரசாயன சோதனைச் சாலையில் உள்ள கிப்ஸ் அப்பரெட்டஸ் போன்றது இந்நிலை. வேறு ஓர் உதாரண மூலம் இதனை விளக்க வேண்டுமாயின் ஐந்து அல்லது ஆறு பங்கர் வெங்காயத்தை ஒன்றன் மேல் ஒன்று அடுக்கியது போன்ற நிலை. வெங்காயத்தின் விரிந்த பாகம் சுருங்கிக் கொண்டே சென்று அதன் காம்புப் பகுதியில் சிறுத்து விடுகிறது. அடுத்து மறுபடியும் விரியத்தொடங்கி அடுத்த வெங்காயத்தின் விரிவை ஒப்ப விரிகிறது. இந்த விரிவு ஒடுக்கம் என்பன எங்கே நடைபெறுகின்றன தெரியுமா? அகல, நீள, உயரம் என்று முக்கூட்டுப் பரிமாணமுடைய இந்த அண்டம் (Three Dimensional Universe) நான்காவது பரிமாணமாகிய காலம் என்பதில் கலந்து (Fourth DIAMENSION) ஒன்றாகிறது என்கிறது விஞ்ஞானம். காலத் தத்துவத்தை நான்காவது பரிமாணமாகக் கண்டது இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானம்.

மெய்ஞ்ஞானியாகிய மணிவாசகர் என்ற விஞ்ஞானி இக்கருத்தை ஆயிரம் ஆண்டுகட்கு முன்னறே கூறியுள்ளார். அதுவும் முக்கூட்டுப் பரிமாணமுடைய இந்த அண்டம் நான்காவது பரிமாணமாகிய காலத் தத்துவத்தில் தோன்றி மறைந்து மறுபடியும் தோன்றுகிறது என்பதை மிக அழகாகவும் விளக்கமாகவும், ஒரு திருவாசகத்தில் கூறுகிறார்.

‘‘மேலை வாளவரும் அறியாதது ஓர் கோல மேஎனை ஆட்கொண்ட கூத்தனே!

ஞாலமே! விசும்பே! இவை வந்துபோம் காலமே! உனை என்றுகொல் காண்பதே?” (திருவா 47)

இப்பாடலில் ஞாலம் விசும்பு என்ற இரண்டு பூதங்களைக் கூறுமுகமாக இவற்றின் இடையே உள்ள பூதங்களையும் குறிப்பிட்டுள்ளார். அதாவது அண்டம் முழுவதும் என்பது பொருளாகும். ‘‘இவை வந்துபோம் காலமே!” என்று இறைவனை விளிப்பதால் இந்த முக்கூட்டுப் பரிமாணம் உடைய அண்டம் நாலாவது பரிமாணமாக உள்ளதும் நமது கட்புலனுக்கும் பிற பொறிகட்கும் எளிதில் சிக்காததும் ஆகிய காலம் என்ற தத்துவத்தில் தோன்றி, மறைந்து, தோன்றுகின்றன என்ற விஞ்ஞானப் புதுமையை மெய்ஞ்ஞானி விளக்குகிறார்.

ஐன்ஸ்டின் கண்ட காட்சியில் காலத்தில் வந்துபோம் ஞாலம் காட்சி அளிக்கிறது. விஞ்ஞானி தனது ‘‘தொலைநோக்கி”யின் மூலம் கற்பனைக்கு அடங்காத தூரத்தில் இருப்பதாகக் கூறப்படும் ஓர் உலகை காணும்பொழுது இன்று அவ்வுலகம் இருக்கும் நிலையைக் காணவில்லை; காணவும் முடியாது. அவனுடைய ஒப்புயர்வற்ற ‘‘அந்தத் தொலைநோக்கி 50 கோடி ஒளி ஆண்டுகட்கு முன் செல்கிறது. அன்று அந்த உலகம் எவ்வாறு இருந்ததோ அதையன்றோ இன்று காணுகிறது, காட்டுகிறது. உலகில் உயிரினங்கள் முதன்முதலாக முதுகெலும்பு வளர்ச்சி பெற்ற அந்த நாளில் அத் தூர உலகிலிருந்து புறப்பட்ட ஒளியன்றோ இன்று விஞ்ஞானியின் தொலை நோக்கியில் பிரதிபலிக்கிறது. பன்னூறு ஆண்டுகளின் பின்னர் அவ்வுலகம் அழிந்து கூட இருக்கலாம். ஆனால், அவ்வழிவை நாம் அறிய இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆகும்?5 என்று கூறுவது விஞ்ஞானந்தான்!

இதுவரை இக்கட்டுரைத் தொடரில் மெய்ஞ்ஞானி கண்ட விஞ்ஞானம் பற்றித்தான் கூறப்பெற்றது. இப்பொழுது இதன் எதிராக ஒரு மாபெரும் விஞ்ஞானி கண்ட மெய்ஞ்ஞானம் எத்தகையது என்பதை காணலாம். உலகப் பெருவிஞ்ஞானியாகிய ஐன்ஸ்டின் கூறும் சொற்கள் இவை.

‘‘எல்லை கடந்ததும், கற்பனைக்கு அடங்காததும் ஆகிய அந்த மாபெரும் பரம்பொருள் நம்முடைய அற்பமானதும் எல்லையுடையதுமான சிற்றறிவால் நாம் காணக்கூடிய சிறிய நுணுக்கங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. அவ்வாறு வெளிப்படுத்திக் கொள்ளும் அந்தப் பேராற்றலை நினைத்து அதன்பால் பக்தி செலுத்துவதே என் சமயமாகும். நம் சிற்றறிவுக்குப் புலப்படாத இந்தப் பேரண்டத்தில் அந்த மாபெரும் ஆற்றலின் இருப்பையும் அதன் சொல்லையும் உணர்வு பூர்வமாக அறிவதையே நான் காணும் கடவுள் தத்துவமாக நினைக்கிறேன். இந்தப் பேரண்டத்தின் அடிப்படையில் தோன்றும் சுய அனுபவம்தான் விஞ்ஞான ஆராய்ச்சியின் வலுவானதும் மிக உயர்ந்ததுமான ஆணிவேராகும்.”

‘‘எவன் ஒருவனுக்கு இந்தப் பக்தி அனுபவம் புதுமையானதாக இருக்கிறதோ, எவன் ஒருவன் இந்த அண்டத்தைக் கண்டு வியப்பினாலும் அச்சத்தினாலும் வாய் பிளந்து நிற்கவில்லையோ அவன் இருந்தும் இறந்தவனே ஆவான். நம் அறிவுக்கு அப்பாற்பட்டது என்பது உண்மையிலேயே இருக்கிறது என்பதையும், அது மாபெரும் ஞானவடிவமாக விளங்குகிறது என்பதையும், அழகே வடிவாய் அமைந்துள்ளது என்பதையும் கூர்மையை இழந்துவிட்ட நம் பொறிபுலன்கள் இதனை பழுமையாக அறிந்து அனுபவிக்க முடியாமல் உள்ள என்பதையும் அகமனம் உள்ளவாறு உணரும் நிலைதான் உண்மையான சமயத்தின் அடிப்படையாகும்.!

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 3 (1982) பக்கம்: 8-13

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here