மேல் மருவத்தூரில் ஒரு நாத்திகன் பெற்ற அனுபவங்கள்!

  பாகம் – 2 ‘‘மேல்மருவத்தூர்”! – இன்று மூலை முடுக்குகளில் எல்லாம் பேசப்படும் ஊராகிவிட்டது. சமயத்துறையில் ஈடுபாடு கொண்ட பலருக்குப் புதிராக விளங்கும் இடமாக உள்ளது. அன்னை ஆதிபராசத்தியின் அருளாட்சி எங்கும் பரவத் தொடங்கிவிட்டது. துன்பத்தால் நலிந்தோரும் வறுமையால் நொந்தோரும், வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தோரும், எல்லோரும் வந்து மொய்க்கின்ற தலமாக இது மாறி வருகிறது. எல்லோர்க்கும் வழி சொல்லி, பிரச்சினைகளைத் தீர்த்து, நோய் நொடிகளைப் போக்கி வாழ்க்கையில் நம்பிக்கை கொள்ள வைக்கின்றாளே இந்தத் தாய்! எத்தனை விதமான மனிதர்கள்! எத்தனை விதமானப் பிரச்சினைகள்! பணக்காரன் வருகிறான்; பணமில்லாதவன் வருகிறான்; படித்தவன் வருகிறான்; பாமரனும் வருகிறான்; ஆத்திகனும் வருகினறான்; நாத்திகனும் வருகிறான்; தத்துவம் எல்லாம் கற்ற மேதையும் வருகிறான்; ஏதும் தெரியாதவனும் வருகிறான்; அரைகுறைப் படிப்பாளியும் வருகிறான்; அடக்கமுள்ள சான்றோனும் வருகிறான். அவனவன் தகுதிக்கும் நம்பிக்கைக்கும் மனநிலைக்கும் ஏற்ப அன்னை எல்லோரையும் ஏற்றுக் கொண்டு கருணை காட்டுகிறாள். அன்னை பலரைப் பல வழிகளிலே ஆட்கொள்கின்றாள்; நாத்திகம்பேசித் திரிந்த பலரை அன்னை தன் காலடியில் சேர்த்து வைத்துக் கொண்டு காப்பாற்றி வருகிறாள்; பல்வேறு அனுபவங்களைக் கொடுத்து கொடுத்துப் பல உண்மைகளைப் புகட்டி இருக்கிறாள். அவ்வாறு அன்னையின் காலடியில் வந்து வீழ்ந்த ஒரு நாத்திகனின் அனுபவங்களே இவை! இவை பலருக்குப் பல வகையில் பயன்படலாம்! இது புண்ணிய பூமியா? இந்த நாடு ‘‘புண்ணிய பூமி” என்று சொல்லப்படுகின்றது. எண்ணற்ற ஞானிகளும், மகான்களும் அவதரித்து அருள் பொழிந்த பூமி என்று சொல்லப்படுகின்றது. சமயச் சிந்தனைகள் எல்லாம் வளர்ந்து செழித்த நாடு என்று சொல்லப்படுகின்றது. அவ்வாறிருந்தும் இது ஏழ்மையில் உழல்கின்ற நாடாக இருக்கிறது! பிற நாடுகள் எல்லாம் விஞ்ஞானத் துறையில் முன்னேறி யிருக்கின்றன! எல்லோரும், எல்லா வசதிகளையும் வாய்ப்புகளையும் பெற்று வாழ்கின்றார்கள். ஆனால் தாம் மட்டும் ஏழ்மையின் பிடிப்பில் சிக்கிச் சீரழிகின்றோம்; கடவுள் – மதம் – பக்தி இவைதான் நாட்டு முன்னேற்றத்தக்குத் தடைக் கற்கள்! சொத்துரிமை அழிக்கப்பட்டு பொதுவுடைமை ஏற்பட்டுப் பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லாத அரசாங்கம் ஒன்று அமையுமானால் எல்லாம் சரியாகிவிடும். இந்த நாடு சொர்க்கபுரியாகிவிடும். ஆன்மா – தலைவிதி – பிறவி ஊழ்வினை இவையெல்லாம் பிதற்றல்கள்! இவ்வாறெல்லாம் இன்றைய ‘‘அறிவு ஜீவிகள்” பேசுகின்றனர்; நினைக்கின்றனர். இந்தக் கொள்கைகளின் வளர்ச்சியில் அவன் சிக்கினான். ஒரு குறிப்பிட்ட இனத்தார்மேல் கொண்ட வெறுப்பு; கடவுள் மேலேயும் வெறுப்பாக மாறியது. இந்த நிலையிலேதான் மேல் மருவத்தூரில் நடைபெறும் அருள்வாக்கு பற்றிக் கேள்விப்பட்டு வந்தான். முதல் அனுபவம்: அன்று மேல்மருவத்தூரில் சுயம்பு இருந்த இடம் மிகச் சிறியது, சிறிய குடில்; சுற்றிலும் வேலி காத்தான் மரங்கள், அப்போது அன்னையே வெளியில் வந்து விரலால் சுட்டி அழைத்துச் சென்று சுயம்புவின் எதிரில் அமர்ந்து அருள்வாக்குச் சொல்வது வழக்கம். அருள்வாக்குக் கேட்க வந்தோர் எல்லோரும் வரிசையில் அமர்ந்திருந்தனர். நேரமாகும் போல் தோன்றியது. பொழுது போகவில்லை; ஏதாவது பேசி பொழுதைக் கழிக்க வேண்டுமே! அவன் பக்கத்தில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஒருவர் அமர்ந்து இருந்தார்; ‘‘என்ன சார்! ஒருவர் மனத்தில் இருக்கின்ற அத்தனை விஷயங்களையும் சொல்லுகின்றாயே, இவையெல்லாம் உண்மைதானா? இதற்கு முன் நீங்கள் இங்கு வந்து சென்ற அனுபவம் உண்டா” என்று கேட்டான்; அவர், ‘‘நானும் புதிதுதான்; ஆனால் சாயிபாபா போன்றவர்களிடம் எல்லாம் போய் இருக்கின்றேன் சில அற்புதங்களைக் கண்ணால் பார்த்திருக்கின்றேன்” என்று சொல்லிக் கொண்டு வந்தார். யட்சணி வேலையா? யட்சணி என்று ஒரு தேவதை உண்டாம்; அந்தத் தேவதையைச் சில மந்திரங்களின் மூலம் சக்கரத்தில் எழுதி வயப்படுத்தி ஒரு குறிப்பிட்ட இடத்தில் புதைத்து வைத்துவிட்டு அவ்வாறு புதைத்த இடத்தின்மேல் அமர்ந்து கொண்டு வருபவர்களின் பிரச்சினையைச் சொல்ல முடியுமாம்; இந்தச் செய்தியை அவன் கேள்விப்பட்டிருந்தான்; ஆயினும் அவ்வாறு யட்சணி மூலம் சொல்வது என்பதிலேயே அவனுக்கு நம்பிக்கை இல்லை, ஆகவே பக்கத்தில் இருந்தவரிடம், ‘‘என்ன சார்” ஏதோ ‘‘யட்சணி” தேவதையை வசப்படுத்திக் கொண்டு குறி சொல்வார்கபளாமே! அது போலவா இது!” என்று மெல்லிய குரலில் கேட்டான், அருகில் இருந்தவர் ஏதும் சொல்ல முடியாமல் இருந்தார்; அதன் பிறகு சில நிமிடங்கள் கழிந்தன. அன்னை, வந்தாள். அவனை அழைத்துச் சென்று, அமரச் சொன்னான், இப்போது இருக்கும் அச்சமும் – பயமும் அப்போது இல்லை. அமர்ந்தான்; அன்னை மளமளவென்று சொல்லத் தொடங்கினாள். ‘‘மகனே! நீ என்னிடத்தில் பக்தியோடு வரவில்லை; பணம் இருந்தால் எதையும் சாதித்துக் கொள்ளலாம் என்று நினைக்காதே. உன்னை இதுவரை விளையாட்டுப் பிள்ளையாகவே வளர்த்து விட்டேன். என்றுசொல்லி அவன் வாழ்க்கையின் கடந்தகால நிகழ்ச்சிகளையெல்லாம் சொன்னாள். பின், மகனே! நீ இந்த இடத்தை ஏதோ யட்சணி வேலை என்றல்லவோ சொல்லிக் கொண்டிருந்தாய்; இது அப்படிப்பட்ட இடம் அல்ல என்பது போகப்போகப் புரிந்து கொள்வாய்; மகனே! விஞ்ஞானம் என்று ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தாய்! விஞ்ஞானத்தால் பொருளைப் படைக்கலாம்; பணத்தைப் படைக்கலாம் ஆனால் மனத்துக்கு நிம்மதி….? அதற்கு என்னிடம் தானடா வரவேண்டும்?” என்று சொல்லி, ‘‘அடிக்கடி இந்த மண்ணை மிதித்து விட்டுச் செல்; என் அருள் உனக்கு உண்டு.” என்று சொல்லி ‘‘உத்தரவு” என்று முடித்தான். அவனுக்கு ஏதோபுத்துணர்வு வந்தது போலவும்; ஏதோ ஒரு அதிசய அனுபவத்தில் நினைத்தது போலவும்; மனமெல்லாம் களிப்பும் திருப்தியும் ஊற்றெடுத்துப் பெருகுவது போலவும் எதிர்காலம் குறித்து அச்சப்பட வேண்டாம் என்பது போலவும் இருந்தது! இந்த மகிழ்ச்சியை அடிக்கடி பெற வேண்டும் என்று மறுபடியும் கோயிலுக்கு வந்தான்! அங்கே பலர் புதுப்புது அனுபவங்களைச் சொல்லக் கேள்விப்பட்டான்! மதம் என்று வேலி போட்டுக் கொண்டு சடங்குகளிலேயே மூழ்கிப் போய் முடிவை விட்டுவிட்டு கிரியைகள் பற்றியே பெருமை பேசித் திரிகின்ற மதப்பற்றாளர்கள் புரிந்துகொள்ள வேண்டிய அனுபவம் ஒன்றைக் கேள்விப்பட்டாள்! அந்த அனுபவம் கடவுளைப் பற்றியும் முன்பிறவி பற்றியும் தெய்வம் கண்முன் காட்சி கொடுப்பதும் உண்டு என்பது பற்றியும் அறியும் வாய்ப்பாக அமைந்தது. தொடரும்… ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி r விளக்கு -1 சுடர் 3 (1982) பக்கம்: 30-32]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here