இடைக்காலத்தில் ஏற்பட்ட சில சந்தர்ப்பச் சூழ்நிலைகளால், இறைவழிபாடு குறைந்துவந்தது கண்கூடு, அதன் விளைவே இன்று நாட்டிலுள்ள சீர்குலைந்த நிலை என்பதில் ஐயமில்லை.

நேர்மையும் நீதியும் நிலைகுலைந்து தர்மம் அழியும் நிலையில், இறைவியே, மேல்மருவத்தூரில் நேரில் வந்து உலகின் அழிவுக்கான தீயநிலைகளை மாற்றி, உலகினை உய்விக்கும் முகத்தான் திருக்கோயில் கொண்டுள்ளாள்.

மருவூரில் அன்னை: மேல்மருவத்தூரில் ‘‘ஆன்மிகம் காக்க வேண்டிய அன்னை தான் சுயம்பாகத் தோன்றி” அருள்புரிந்து வருகின்றாள். பாங்காக வாக்களிக்க வேண்டிப் ‘‘பங்காரு அடிகளார்” அவர்களைப் பாலகனாக ஏற்றுள்ளான்; வருவோர் நிலை விளக்க வேண்டி ‘‘அருள் வாக்கு” அளித்து வருகின்றாள்; பக்திநிலை புகட்ட வேண்டிப் பல நிலைகளிலும் சித்தாடி வருகின்றாள்; ஊழ்வினையை ஒழிக்க வேண்டி உமையவனே நேரில் மந்திரிக்கின்றான்; மாசத்தியே உடல் வலம் வருகின்றாள்; மாநிலத்தில் எங்கும் பக்தி மணக்க வேண்டி மன்றங்கள் ஆங்காங்கு எழச் செய்கின்றாள்; அன்னையை உணர்ந்து ஓதி அருள் உய்யவேண்டி அவரவர் தாய் மொழியிலேயே வழிபாடு செய்ய வழிவகை செய்கின்றாள்.

மேற்கூறப்பட்ட வழிகளில் மருத்துவர்களால் கைவிடப்பட்ட தீராத நேரங்களை அன்னை தன் போருளினால் தீர்த்து வைக்கின்றாள்.

நீண்ட காலமாக மணங்கூடாத மகளிர்க்கு வேப்பமரத்தில் மாங்கல்ய கயிறு கட்டச் செய்து அருளீந்து மணம் கூட வழிவகுக்கின்றாள்.

மனமாற்றத்தால் பிரிந்து வாழும் தம்பதிகளுக்கு அருள்பாலித்து அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ வழி வகுக்கின்றாள்.

பில்லி, சூனியம் வைப்பு முதலிய தீயவினைகளை மாற்றுக்கிரியை இல்லாமல் தணித்து அருளுகின்றாள். ‘‘முன்வினை” காரணமாக வாழ்க்கைக்கு வழியில்லாமலும், வாழ்க்கையிலும், தொழிலிலும் இன்னல்களை ஏற்று, ‘‘தன்னடியே சரணம்” என அடைவோரை அன்புடன் அரவணைத்து அவர்களை எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றச் செய்து அருள்பாலிக்கின்றாள்.

மகப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு அருள் பாலித்து மகப்பேறு அளிக்கின்றாள். தொழில்முறை முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ள தீவினைகளை அகற்றி நல்வினை கூட்டுகிறாள். மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு சித்தப் பிரமையுடன் தன்னிலை அறியாது செயல்படுவோரையும், மற்ற தீயசக்திகளால் ஆட்கொள்ளப்பட்டவர்களையும், மாற்றுக் கிhpயை ஏதும் இல்லாமல் ‘‘அதர்வணப் பத்திரக்காளி” மண்டபத்தை வலம் வரச் செய்து அருள்பாலித்து அருளுகின்றாள்.

நாகதோஷத்திற்கு ஆளாகி அல்லல்கள் அடைந்தும், இன்னல்கள் ஏற்றும் நாள்தோறும் நலிந்து வருவோருக்கு புற்றில் பாலை ஊற்றச் செய்து அருள்பாலித்து நல்வினைப் பேற்றை அடையச் செய்கின்றாள். மேற்கூறப்பட்ட பலன்களை அளிக்க மேல்மருவத்தூரில் ‘‘அன்னை சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி”, வேறு எந்தவிதமான மாற்றுக்கிரியைகளையும் செய்யச் சொல்வதில்லை. மாறாக வருபவர்களுக்கு அன்பு வழிபுகட்டி, அறவழிகளை ஏற்கச் செய்து, இறையுணர்வு கொள்ளச் செய்கின்றாள். அருள்வாக்கில் அவரவர்கள் ‘‘நல்வினை” ‘‘தீவினை”களை விளக்கித் தீவினைகளை உணரச் செய்து, தீவினைக்காக வருந்த வைத்து மனம் திருந்தச் செய்கின்றாள். மேலும் வேம்பிலும் வெண்ணீற்றிலும் அருள் பாலித்துப் பயனடையச் செய்கின்றாள்.

ஆலய நடைமுறைகள்: மேல் மருவத்தூரில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தன்று அருள்திரு பங்காரு அடிகளார் வடிவில் அன்னை அருட்கோலம் பூண்டு, ஆலயத்தை உடல் வலம் வந்து அம்மண்ணுக்கு மகிமை சேர்த்து, அம்மண்ணை மிதிக்கும் அத்துணை அன்பர்களுக்கும் அருள்பாலிக்கின்றாள்.

சாதிமத வேறுபாடு இல்லாமல் ஆடிப்பூரத்தன்று எல்லோருடைய கையினாலும் நேரிடையாகச் செய்யும் பாலபிடேகத்தை ஏற்று, அனைவருக்கும் அருள்பாலிப்பது வேறு எங்குமில்லாத தனிச் சிறப்பாகும். தானத்தில் சிறந்தது அன்னதானம், ஆடைதானம் என்பதை உணர்த்தும் வகையில், ஆலயத்திலும் மற்றும் வழிபாட்டு மன்றங்களிலும் நடக்கும் ஒவ்வொரு விழாவிலும் அன்னதானத்திற்கும், ஆடைதானத்திற்கும் தனிச்சிறப்பு அளிக்கின்றாள். ஆடிப்பூரத்தன்று ஆலயத்தின் நான்கு திசைகளிலிருந்தும் கஞ்சியேந்தி வந்து ஆலயத்தில் அன்னதானம் செய்விக்கும் முறை மூலம் ஒவ்வொருவரும் அன்னதானத்தின் தனித்தன்மையினையும், சிறப்பியல்பினையும், முன்வினை தணியும் பாங்கினையும் உணர்ந்து மேற்கொள்ளச் செய்கின்றாள்.

ஆண்டுதோறும் ஆலயத்தில் நவராத்திரி விழா ஆரம்ப நாளில், அன்னை ஆதிபராசத்தி அருட்கோலத்தில் அகண்ட விளக்கை ஏற்றி வைக்கின்றாள். அந்த அகண்ட விளக்கின் சுடருக்கும், ஒளிக்கும் அருள் வழங்குகின்றாள். அந்த அகண்ட விளக்கிற்கு முக்கூட்டு எண்ணெய் விட்டு, அவ்வகண்ட விளக்கின் சுவாலையின் சூடு முகத்தில் படும்படியாகவும், நுகர்ந்தும் தரிசனம் செய்யும் அன்பர்களின் தீவினை அகற்றி நல்வினை கூட்டிவரும் நிகழ்ச்சி, அன்னையின் அருள்பாலிப்புக்குச் சான்றாகும். மாநிலமெங்கும் பக்தி மணம் பரப்பிடும் முகத்தான் நாட்டில் ஆங்காங்கு வழிபாட்டு மன்றங்கள் தோன்றச் செய்து அம்மன்றங்கள் வாயிலாக அப்பகுதியில் உள்ள மக்களுக்கு இறையுணர்வு ஏற்படுத்துகின்றாள். இல்லங்களிலும், ஆங்காங்கு உள்ள கோயில்களிலும் வழிபாடு, கலசபூஜை, வேள்வி முதலியன செய்வித்துத் தீவினைகள் அகற்றி நல்வினை கூட்டி வருகின்றாள்.

அன்னை ஆதிபராசக்தி மேல் மருவத்தூரில் ஆகம விதிகளுக்கு அப்பாற்பட்டவளாக நின்று விளங்குவது மற்றெங்குமில்லாத மாட்சிமையாகும்.

மேலும் கள்வர்கள், கொலையாளிகள், பஞ்சமா பாதகங்கள் புரியும் கயவர்கள், அனைவருமே ‘‘தன் மக்கள்” என அன்புடன் அணைத்துச் சமத்துவச் சமதர்மத்தை உணர்த்தி, அவரவர் வினைகளுக்கேற்ப வழிநடாத்திக் காக்கின்றாள். தன்னடி பணிந்து நிற்கும் அன்பர்களுக்கு அவ்வப்போது அவரவர் சூழ்நிலை சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு கனவிலும், நனவிலும் காட்சிகள் கொடுத்து உள்ளான். விளங்காத புதிர்களுக்கு விடைகளைக் கோடிட்டுக் காட்டி உள்ளாள்.

‘‘தாய்” ஆக அமர்ந்து, பிள்ளைகள் நம்மையறியாமல் செய்யும் தவற்றினைப் பொறுத்துக் கொள்கிறாள். பன்னிக்கின்றான். திருத்துவதற்காகப் பல சந்தர்ப்பங்களை அளித்தும், திருத்தாமல் ‘‘நான்” என்ற நிலையில் ஆணவத்துடன் செயல்படுவதை இவ்வன்னை அனுமதிப்பதில்லை! திருத்த வாய்ப்புகள் அளித்தும், திருந்தாதவர்களை மன்னிப்பதில்லை! இவ்வனுபவ உண்மை அன்னையின் நெறி காக்கும் நிலைக்குச் சான்றாக அமைகிறது. ஓம் சக்தி!

ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 2 (1982) பக்கம்: 15-17

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here