முக்தானந்தர் என்ற பெரியார் பின்வரும் கதையை அடிக்கடிக் கூறுவாராம். பாபா மூசா என்ற சித்தரை வணங்குவதற்காக அமீது என்பவர் அவருடைய நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு சென்றார். சித்தரை வணங்கிய நண்பர்கள் இருவரும் ‘‘தங்களைச் சீடர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று மகானை வேண்டிக் கொண்டார்கள். அவர்களை ஏற்றுக்கொண்ட சித்தர் எதிரே இருக்கும் வயலைக் காட்டி ‘‘நீங்கள் இருவரும் இந்த வயலில் பயிரிடத் தொடங்குங்கள்!” என்று ஆணையிட்டார். மிகக் கவனத்துடனும் அன்புடனும், அந்தரங்க சுத்தியுடனும் நண்பர்கள் இருவரும் காலை எட்டு மணிமுதல் இரவு எட்டு மணிவரை உழைக்கத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிந்த பிறகு அமீதின் நண்பர் ‘‘இந்த வயலில் என்ன தனியான விசேடம் இருக்கிறது? எனக்கே சொந்தமான வயல்கள் இருக்கின்றனவே? இந்தக் குருவின் பணியாகவே நினைத்து என்னுடைய வயலில் ஏன் இந்தப் பணியைச் செய்யக்கூடாது?” என்று நினைத்தார். இவ்வாறு நினைத்த அவர் தம் ஊருக்குத் திரும்பி விட்டார். ஆனால் அமீது நான் என் குருவின் ஆணைப்படி தான் செய்து கொண்டிருக்கிறேன். அவராகப் பார்த்து வேறு பணிக்கு ஏவுகிறவரை இதையே செய்து கொண்டிருப்பேன்” என்ற முடிவுடன் அதே வயலைப் பராமரித்துக் கொண்டிருந்தார்.

இந்த மனநிலையுடன் அமீது வயல் வேலையில் மேலும் மேலும் ஈடுபடவும் அந்த வேலையில் ஒரு புதிய உற்சாகத்தைக் காணத் தொடங்கினார். தன்னுள் ஓர் நிறைவு உண்டாவதையும் அந்த நிறைவின் காரணமாகத் தாம் செய்து கொண்டு வரும் வேலையில் ஒரு புதிய ஈடுபாடு ஏற்படுவதையும் அமீது உணரத் தொடங்கினார். தாம் செய்யும் வேலையில் மனத்திருப்தி ஏற்படத் தொடங்கியவுடன் எவ்வளவு மணி நேரம் இதில் செலவிடுகிறோம் என்ற எண்ணமும் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கிவிட்டது. குருவின் ஆணையை மேற்கொண்டு அந்த சேவையில் ஈடுபடுவதே அமைதியை அடையும் வழி என்பதையும் அமீது உணரத் தொடங்கினார். இந்தப் பணியிலேயே அவர் முழுவதுமாக இலயித்துவிட்ட பின் அது வெறும் வயலில் செய்கின்ற உழவுப் பணியாக அவருக்குப் படவில்லை. இந்தச் சேவை ஆன்மிக முன்னேற்றத்திற்குப் படியாக அமைந்து விட்டதை அவர் உணர்ந்தார். சேவை என்பது, ஏதோ இட்ட ஒரு வேலையைச் செய்து முடிப்பது அல்ல என்பதையும், ஒருவன் மேற்கொண்டு செய்யும் பணியின் மூலமே இறைவனிடம் தன்னை அமிழ்த்துகொள்ளும் வழியே அந்தச் சேவை என்பதும் விளங்கிற்று, எனவே சேவை என்பது இறைவனை அடையும் ஒரு வழியாகும் என்பதும் புரிந்தது. இது புரியத் தொடங்கியவுடன் அமீதுக்கு எல்லையில்லாத ஆனந்தம் உண்டாய்விட்டது.

இந்த நிலையில் அமீது தம் குருநாதரான பாபா மூஸாவைத் தாpசிக்க ஒரு நாள் சென்றார். இவரைக் கண்ட குருநாதர் ‘‘என்ன அமீது? உன் வேலை முடிந்து விட்டதா?” என்று கேட்டார். ‘‘இல்லை குருநாதரே! இன்னும் செய்து கொண்டே இருக்கிறேன்” என்றார் அமீது.

பாபா மூஸா, அமீதைப் பார்த்துக் கனிவுடன் ‘‘உன் வேலை முடிந்துவிட்டது. இனி நீ போகலாம் எல்லாம் ஞானத்தை வளர்க்கும் வழிகள். செய்யும் செயல் எல்லாமே போதனைகள்தான். எந்த ஒரு சேவையில் நீ ஈடுபட்டாலும் அதிலேயே மூழ்கிவிட்டால் அகக்கண் திறக்கும் என்பதை மறந்துவிடாதே! நீ சென்றுவா” என்று கூறி அனுப்பிவிட்டார்.

குருவின் ஆணைப்படி அவரை விட்டுச் சென்ற அமீது துருக்கிஸ்தான் என்ற ஊரில் தங்க முடிவு செய்து அங்கேயே தங்கித் தம் சேவையைத் தொடரலானார். நாளாவட்டத்தில் அவர் சேவையின் காரணமாக அவருக்கு உள்ஒளி தோன்றலாயிற்று. இந்த உள்ஒளியின் காரணமாக ஆயிரக்கணக்கான சீடர்கள் வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரையும் சேவையின் மூலம் உள்ளொளியைக் காணுமாறு பணித்தார் அமீது. இதனிடை துருக்கிஸ்தானில் ஒரு மகான் வந்திருப்பதாகவும் ஆயிரக்கணக்கான சீடர்கள் அவருக்கு இருப்பதாகவும் கேள்விப்பட்ட அமீதின் நண்பர், இப்புதிய பெரியவர் யார் என்று தெரியாமல் இவரை வணங்க வந்தார்.

வந்த நண்பர் புதிய பெரியவரைப் பார்த்தவுடன் தம்முடன் முன்பு பணிபுரிந்த அமீது தான் இப்புதிய குரு என்பதை உடன் கண்டுகொண்டார். அமீது தம்முடன் இருந்த நிலையையும், இப்பொழுது அவர் இருக்கும் நிலையையும் கண்ட நண்பர் வியப்பில் மூழ்கிவிட்டார்.

அந்த வியப்புடன் நண்பர் அமீதைப் பார்த்து, ‘‘சகோதரா! இவ்வளவு பெரிய நிலையைத் தாங்கள் எவ்வாறு அடைந்தீர்கள்? நான் பிரிந்து வந்த பிறகு பாபா மூசா தங்கட்கு எத்தகை இரகசியத்தைப் போதித்தார்?” என்று கேட்டுவிட்டார்.

அதைக் கேட்ட அமீது புன்சிரிப்புடன் ‘‘சகோதரா! பாபா மூஸா எனக்கு எந்தவிதமான உபதேசத்தையும் எந்த நேரத்திலும் செய்யவில்லை. நம் குருவாகிய பாபா இட்ட கட்டளைப்படி அந்த வயலில் பணிபுhpந்து வந்தேன். அதனால் எனக்கு ஞானமும் உள்ளொளியும் தோன்றலாயின. கண்ணை மூடிக் கொண்டு எந்த மூலையிலும் இருந்து கொண்டு நான் தியானம் செய்யவில்லை. நான் செய்யும் பணியிலேயே ஒரு தியான நிலையைக் காணலாயினேன். ஒரு வகையான ஆனந்தம், அனைவரிடமும் அன்பு என்பவை, தாமே என்னுள் துளிர்த்தன. அந்த அண்ட பேரண்டம் முழுவதும் மூலப் பரம்பொருள் நீக்கமற நிறைந்திருப்பதைக் காண முடிந்தது. என்னுள்ளேயும்கூட, ஏன்? மரங்கள் விலங்கினங்கள் ஆகிய யாவற்றிலும் நம் குருவாகிய பாபாவைக் காண முடிந்தது. காணப்படும் பொருள் அனைத்திலும் நம் குருவாகிய பாபாவையும் இறைவனையும் காண முடிந்தது. அந்தக் காட்சியில் ஆனந்தம் ஏற்படலாயிற்று” என்று கூறி முடித்தார் அமீது என்ற ஞானி.

இந்தக் கதையின் மூலம் முக்தானந்தர் என்ற ஞானி ஒரு பெரிய உண்மையை விளக்கிவிட்டார். ஒரு குருவானவர் ஒருவனைக் கடைத்தேற்றுவதற்கு உபதேசம், கடினமான கிரியைகள், தூப தீபம் பூசைகள் முதலிய எதுவும் இல்லாமல் தன்னைத் தானே அர்ப்பணித்துக்கொள்ளக் கூடிய சேவை என்பதன் மூலமே மாபெரும் முன்னேற்றத்தைத் தந்துவிட முடியும் என்பதை நன்கு காட்டிவிட்டார்.

மருவத்தூர்ப் பெருமாட்டி ஒரு சிலருக்கு இடும் பணிகளைப் பார்க்கும் பொழுது அதனைப் புரிந்து கொள்வதே கடினமாக உள்ளது. ஆன்ம முன்னேற்றம் பெறவேண்டும் என்று வருகின்றவர்கட்கு உபதேசம், பூசைமுறை முதலிய எதனையும் கற்பிக்காமல் இப்படி ஏதாவது ஒரு பணியைத் தந்து முழு மூச்சாக அதில் ஈடுபடுக என்று அன்னை ஆணையிட்டு விடுகிறாள். இந்தப் பணியை முழு மனத்துடன் செய்யத் தொடங்கினால் அதுவே ஆன்ம முன்னேற்றத்துக்கு வழி என்றும் கூறுகிறான். இதனை விளங்கிக் கொள்வது கஷ்டமாக இருக்கும். ஆன்ம முன்னேற்றத்துக்கு வழியானது ஜப, தபங்கள், கிரியைகள் என்று பலகாலமாக நம்பிக் கொண்டிருக்கும் நம் போன்றவர்கட்கு ஏதோ ஒரு பணியைச் செய்வதே தவம் என்று கூறினால் அது நம்ப முடியாததாக இருக்கும். ‘‘தவம் செய்வார் தம் கருமம் செய்வார்” என்று திருக்குறள் கூடப் பேசுகிறது. ‘‘நான் சொல்லும் பணியை முழுமனத்துடன் செய்தால் அதுவே தவம்” என்று அன்னை பல முறை கூறி இருக்கிறான். முக்தானந்தரின் கதை அன்னை ஆணை இடுவதன் அடிப்படையை நன்கு விளக்குகிறது.

ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 2 (1982) பக்கம்: 12-14

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here