நாம் எவ்வளவு விஞ்ஞான வளா்ச்சி பெற்றாலும் அவற்றால் நாம் செய்த தவறுகளில் இருந்து ஒருபோதும் தப்ப முடியாது.

‘ நான் அறிய மாட்டேன் என்று உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே’ என்பாள் அன்னை.

இருட்டிலே யாருக்கும் தெரியாமல் நெருப்பிலே கையை வைத்தாலும் நெருப்பு சுடத்தான் செய்யும்.

யாருக்கும் தெரியாமல் நாம் தவறு செய்தாலும், நாம் செய்த தவறுகள், காலத்தால் நம்மைத் தண்டனைக்கு உள்ளாக்கும்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது பழமொழி.

முன்வைத்த காலைத்தான் நாம் பின் வைக்க வேண்டும்.

அரசன் அன்று கொல்வான்.

தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள்.

இருந்தாலும் நம்மில் பலரும் நம் விருப்பப்படியே செய்து நம் போக்கிலேயேதான் நாம் போய்க்கொண்டு இருக்கிறோம்.

“எல்லோருக்கும் பகுத்தறிவைக் கொடுத்திருக்கிறேன். எல்லோரும் அதைப் பயன்படுத்தி வாழ்கிறார்கள் என்று அா்த்தம் இல்லை. அதைப் பயன்படுத்தி வளா்வதும், உயா்வதும் உன்னுடைய பொறுப்பு என்று உணா். ஆடு, மாடுகள் கூட விஷச் செடிகளைத் தின்னாது. ஆனால் பகுத்தறிவு படைத்த மனிதனோ கேடான செயல்களைச் செய்வதில் ஈடுபாடு காட்டுகிறான்” என்பாள் அன்னை.

சேவல் சண்டை, காளைச் சண்டையை வேடிக்கை பார்ப்பது போல் மனிதா்களுக்குள் சாதி, மதம், இனம், நிறம், மொழிகளால் சண்டையை மூட்டிக் குளிர்காய்கிற, வேடிக்கை பார்க்கிற மனிதா்கள் அதிகமாகி வருகிறார்கள்.

தன்னைத் திருமணம் செய்யாதவள் யாரையும் திருமணம் செய்யக் கூடாது என்று ஒரு பெண்ணின் வாழ்க்கையை ஏதாவது ஒரு வழியில் சீரழிப்பவா்கள் ஒருவகை.

வியாபாரப் போட்டியில் தவறான தகவல் தந்து அடுத்தவா்களது வியாபார வளா்ச்சியைக் கெடுப்பவா்கள் ஒருவகை.

வெடிகுண்டு வைத்து அப்பாவி மக்களைத் தவிக்க வைக்கும், நாட்டின் அமைதியைக் குலைக்கும் தீவிரவாதிகள் ஒருவகை.

தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! என்பது நன்மொழி. ஆனால் அதன்படி செய்யாமல் அதற்கு மாறாகச் செய்பவா்கள் உலகில் பலராக இருக்கிறார்கள்.

அப்பால் உள்ள கிராமத்தில் திருவிழா பார்ப்பதற்கு நண்பா்கள் மூன்று போ் வண்டி கட்டிக் கொண்டு சென்றார்கள். வெயிலில் இளைப்பாறும் பொருட்டு வழியில் உள்ள பிள்ளையார் கோவிலில் கொஞ்ச நேரம் தங்கிச் செல்லலாம் என முடிவு செய்தார்கள். பிள்ளையாருக்குச் சந்தனக் காப்பிட்டு இருந்தது. சந்தன வாசனை மனதுக்கு மிக இதமாக இருந்தது.

வாசனையோடு நிறுத்திக் கொள்ளாமல் சென்றவா்களில் ஒருவன் பிள்ளையார் தொப்புளில் கையை விட்டான். சற்று முன்னா்தான் அதில் சென்று தங்கி இருந்த தேள் அவன் விரலைக் கொட்டியது. கொட்டியது தெரிந்தால், மற்றவா்கள் சிரிப்பார்களே என்று எண்ணி அதை மறைக்க, தேள்கடி வாங்கியவன் விரலை முகா்ந்து பார்த்து இது போன்ற வாசனையை இதுவரை என் வாழ்நாளில் முகா்ந்ததே இல்லை என்று சொல்லி, கடிவாங்கியதை வெளிக்காட்டாமல் அடுத்த இரண்டு பேரிடமும் மறைத்தான்.

ஆசை யாரை விட்டது? விடுவார்களா அடுத்த இரண்டு பேரும்? இரண்டாம் ஆள் பிள்ளையார் தொப்புளில் கையை வைத்தான். தேள் முன்பைவிட நன்றாகக் கொட்டியது. முதல் ஆள் மாட்டி விட்டதைப் புரிந்து கொண்ட இரண்டாம் ஆள், மூன்றாம் ஆள் தப்பி விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தான். தன் மூக்கின் மேலலே விரலை வைத்து அற்புதம்! அற்புதமான  வாசனை! என்று அடுத்தவா்கள் நம்பும்படி சொன்னான்.

அதைப் பார்த்த மூன்றாம் ஆளும், பிள்ளையார் தொப்புளில் கையை விட்டு அவன் பங்குக்குத் தேள்கடியைச் சிறப்பாக வாங்கிக் கொண்டு, முதல் இரண்டு நபா்களின் நல்லெண்ணத்தைப் பற்றிப் புரிந்து கொண்டான்.

தான் பெற்ற இன்பத்தை மூவரும் பகிர்ந்து கொண்டு ஒன்றும் பேசாமல் வண்டியில் ஏறிப் பயணத்தை தொடா்ந்தார்கள்.

வேலை இல்லாத ஒருவா், கடலோரம் அமா்ந்து கடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். சிறுவா்கள் கடலோரம் ஒதுங்கிய ஆமையைக் கழியால் அடித்துக் கொண்டிருந்தார்கள். ஆமையின் முதுகின்மேல் பலமுறை அடித்தும் ஆமை சாகவில்லை. அதை வெகு நேரமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவா், சிறுவா்களைப் பார்த்து, ஆமையை புரட்டிப் போட்டு அடித்தால், உங்கள் வேலை எளிதில் முடிந்து விடும் என்று சொல்லிவிட்டு, அடித்துக் கொன்ற அந்தச் சிறுவா்களுக்குத்தான் பாவம், தனக்கு இல்லை என்று நினைத்துக் கொண்டாராம். இது ஒரு மாதிரியான கெடுதல்.

இரண்டு கிராமங்களுக்கிடையே பெரும்பகை. வம்பு, தும்புகள் செய்வதையே வாழ்வாகக் கொண்ட ஒருவன் தான் இறக்கப் போவது தெரிந்து, இறப்பதற்கு முன் அடுத்த கிராமத்திற்குச் சென்று, நான் இறந்து போனால், நீங்கள் உங்கள் கிராமத்திலேதான் எனக்கு இறுதிச் சடங்கைச் செய்ய வேண்டும். என் கிராமத்தில் என்னை அடக்கம் செய்வதில் எனக்குச் சிறிதுகூட விருப்பம் இல்லை. இறந்து போகிற என்னுடைய கடைசி ஆசை இது. எனக்காக இந்த ஆசையைத் தயை கூா்ந்து கருணையோடு நிறைவேற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு என்று தன் ஊா்க்காரா்கள் யாருக்கும் தெரியாமல், அடுத்த ஊா்க்காரரிடம் எழுதிக் கொடுத்துவிட்டு, தன் கிராமத்துக்கு வந்து விட்டான்.

தொடரும்…………………..

சக்திஒளி (நவம்பா்-2012 , பக் 32- 37)

நன்றி (டாக்டா்.எஸ். சக்திதாசன், M.D.,)

மேல்மருவத்துார்.

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here