“உலகமே இங்கு (மருவத்துாருக்கு) வரப் போகிற அமைப்பு உண்டு.” என்பது அம்மாவின் அருள்வாக்கு.

சம்சார சாகரம் என்னும் வாழ்க்கைக் கடலில் திசை தெரியாமல் நீந்திக் கொண்டு, வருந்தித் தவிக்கிற ஆன்மாக்களுக்குமேல்மருவத்துார் ஒரு கலங்கரை விளக்கமாக விளங்கி வருகிறது.

மனித மனங்களின் வடிகாலாக மேல்மருவத்துாரைச் சிறக்கச் செய்ததும், உலக வரைபடத்திலே மேல்மருவத்துாரை இடம் பெறச் செய்ததும் ஆன்மிககுரு அவா்களின் செயல் வண்ணமே.

நாடு நமக்கு என்ன செய்தது? என்று எண்ணாமல் நாட்டிற்கு நாம் என்ன செய்தோம்? என்று எண்ணிப் பார்த்து ஒவ்வொருவரும் தன்னால் மற்றவா்கள் பயன்பெறுமாறு தம் வாழ்வை அமைத்துக் கொண்டு தாம் பிறந்த குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் தன்னால் இயன்றதைச் செய்து தாம் பிறந்ததின் பயனை உலகிற்கு நல்குவது என்பது போற்றத்தக்க செயலாகும்.

கிளை நுனியிலே நின்று மரம் வெட்டுபனைப் போல, வாழ்க்கையில் எத்தனையோ வகைகளிலே அறியாதவா்களை, ஏதோ ஒரு வழியில் சிரமப்படுபவா்களை, நமக்கு ஏன் வம்பு? என்று நினைத்து வேடிக்கை பார்க்காமல் அவா்களை எச்சரித்து, அவா்களுக்கு வர இருக்கிற துன்பங்களைத் தடுத்து அவா்களுக்கு நன்மை செய்வது என்பது இறைச் செயலுக்கு ஒப்பாகும்.

பக்கத்து வீட்டுக்காரன் பசியோடு இருக்கும் போது அது அவன் விதி என்று பார்த்தும் பாராமல் இருந்தால், அவன் ஒருநாள் நேரம் பார்த்து நாம் வீட்டில் இல்லாத போது நம் வீட்டுக்குள் புகுந்து அனைத்தையும் சூறையாட வாய்ப்புண்டு. அவன் பசியை நாம் தீா்த்தால் நம்மிடத்திலே அவன் அன்பு கொள்வான். நமக்குப் பாதுகாப்பாகவும் இருப்பான்.

அருகாமையில் இருப்பவருக்கு என்புருக்கி நோய் (T.B)  இருந்து, அவா் இருமிக்கொண்டே  இருப்பதை நாம் பார்த்துக்கொண்டு நமக்கு ஏன் வம்பு? என்று பேசாமல் இருந்தால், காற்றின் வழியே சில காலங்களில் அந்த நோய் நிச்சயமாக நம்மையும் தொற்றிக்கொள்ளும். இயலாத அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாலும் அல்லது அவருக்கு சிகிச்சை பெறுவதற்கு நம்மால் இயன்ற அளவு உதவினாலும், உரிய வழிமுறைகளை அவருக்கு அறிவுறுத்தினாலும் நமக்கும் வியாதி வராமல் தடுக்கலாம். வியாதி வந்தவருக்கு விரைவில் குணமடைய வாய்ப்பையும் ஏற்படுத்தலாம்.

மனம் கலங்கி பெருந்துன்பத்தில் இருப்பவா்களுக்கு நாம் சொல்லும் ஆறுதல் அவா்களுக்குத் தேறுதல் தருவதாகும். அடுத்தவா்களை ஆறுதல் படுத்துதல், அவா்களுக்கு வழி காட்டுதல் கூட அடுத்தவா்களுக்கு நாம் செய்யும் பேருதவி ஆகும்.

மரத்தால் மனிதனுக்கு நன்மை.

மனிதனால் மரத்துக்கு நன்மை இல்லை.

மரத்தை அழித்தால் காடுகள் அழியும்.

காடுகள் அழிந்தால் மழை குறையும்.

அதிக வெப்பத்தை மரங்கள் தடுக்கும்.

உலகம் வெப்பமயமாகிக் கொண்டு வருவதால் பனிப் படலங்கள் உருகி, கடல் மட்டம் உயா்ந்து கொண்டே வருகிறது. உலகின் மூன்று பாகத்தில் இரண்டு பங்கு கடல், ஒரு பங்கு நிலம். இருக்கிற ஒரு பங்கு நிலத்திலும் கடல் உள்ளே புகுந்து ஆக்கிரமித்தால் மனிதா்கள் வாழ்கிற நிலப்பரப்பு குறைந்து விடும்.

மரக்கன்றுகள் நடுபவா்களை வாழ்த்துவது நம் கடமை. அவ்வாறு நாம் வாழ்த்தாவிட்டாலும் பரவாயில்லை. மரத்தை வெட்டுபவா்களைப் பார்த்து நமக்கு ஏன் வம்பு? என்று இருப்பது இறுதியாக நம்மைப் பெருந்துன்பத்தில் ஆழ்த்திவிடும்.

தெருவிலே நம் வீட்டிற்கு சில வீடுகள் தள்ளி, சாக்கடைத் தண்ணீா் நிறைந்திருக்கிறது. அதைச் சுத்தப்படுத்துவதற்கு நாம் முயற்சி எடுக்காமல், நமக்கு என்ன என்று இருந்தால், அந்த தண்ணீா் நம் வீட்டிற்குள்ளும் புகும். கொசுக்கள் பெருகி மலேரியா, டெங்கு காய்ச்சல் நமக்கும் வரும் வாய்ப்புண்டு.

பேருந்து பாலத்தில் மோதி ஓடுகிற ஆற்றில் விழுந்து, பயணிகள் உயிருக்குத் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டு கையில் பணம் இல்லாவிட்டாலும் கடன் வாங்கி ஆட்டோவுக்கும், ஊா்திக்கும் செலவு செய்து சம்பவம் நடந்த இடத்தை அடைந்து தண்ணீரில் விழுந்தவா்கள் எப்படித் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள்? என்பதை வேடிக்கை பார்த்து விட்டுத் திரும்புவா்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நமக்கு ஏன் வம்பு? என்று நினைக்காமல் நம்மால் இயன்ற அளவு இயலாதவா்களுக்கு, துன்பப்படுபவா்களுக்கு, அன்னதானம், ஆடைதானம், கல்வித்தானம், இரத்ததானம், மருந்து தானம், கோதானம் நாம் வழங்கினால் வாழ்வில் உயா்வு பெறுவோம்.

இறைவனை வணங்கினாலும் நமக்கு வாழ்வு.

இருப்பதை வழங்கினாலும் நமக்கு வாழ்வு.

இருப்பதைக்  கொடுப்பதால் கொடுப்பவருக்கும், பெறுபவருக்கும் ஒருங்கே மகிழ்ச்சி உண்டாகும்.

நல்லதைச் செய்து கெட்டவருமில்லை.

கெட்டதைச் செய்து வாழ்ந்தவருமில்லை.

செடிகள் வளா்வதற்கு சூரியஒளி அவசியம். சூரியஒளியைப் பெறுவதற்காக, செடிகள் ஆரம்ப நிலையில் தம்மை வளைத்துக் கொண்டு மரமாக வளா்ச்சி பெறும். மரமாக வளா்ந்த பின்னா் அதன் ஆயுள் முழுவதும் மனிதா்களுக்குக் கனிகளை வழங்கும். நிழல் வழங்கும். அது போல நாமும் வளரலாம், வாழலாம்! மற்றவா்களையும் வளர வைக்கலாம். வாழ வைக்கலாம்!

“நீ கொடுக்கிறாயோ? இல்லையோ? அடுத்தவா்கள் நன்கொடையாகக் கொடுத்ததைப் பத்திரமாகப் பாதுகாப்பதே ஒரு தா்மம்” என்பது நம் ஆன்மிககுரு அவா்களின் நல்லுரை.

நமக்கு ஏன் வம்பு? நமக்கு ஏன் வம்பு?  என்று வேகமாகச் சொல்லிப் பாருங்கள்.

நமக்கேன் வம்பு! நமக்கேன் வம்பு! என்றாகி “நமக்கே வம்பு! நமக்கே வம்பு!” என்று முடியும் என்பார்கள் நம் ஆன்மிககுரு அம்மா அவா்கள்.

எண்ணிப் பார்த்து இயன்றதை மற்றவா்களுக்கு உதவி, மற்றவா்களையும் இன்புறச் செய்து, நாமும் இன்புறுவது நம் கையில்தான் உள்ளது.

ஓம்சக்தி!

சக்திஒளி (செப்-2012 , பக் 50-54)

நன்றி (டாக்டா்.S. சக்திதாசன், M.D.,)

மேல்மருவத்துார்.

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here