ஓம் சக்தி! குருவடி சரணம்! திருவடி சரணம்! அம்மா அருளிய சக்தி மந்திரங்களில் 108 போற்றித் திருவுருவும் ஒன்று. அதில் ஒரு மந்திரமாக “ஓம் ஏழையா் அன்னை போற்றி ஓம்! என்று வரும். அது என்ன ஏழையா்க்கு மட்டும் தான் அன்னையா? பணக்காரா்களுக்கு இல்லையா? எந்த அளவுகோல் ஏழை என்றும் பணக்காரன் என்றும் பிரிக்கிறது. நாம் ஏழையா் பட்டியலில் வருகிறோமா? இல்லை பணக்காரா் பட்டியலில் வருகிறோமா? என்று குழம்பத் தோன்றும். ஆனால் அம்மா சொல்லும் ஏழை பணக்காரன் என்பது பணம் சம்பந்தப்பட்டது அல்ல. அம்மா சொல்லுவது என்னவென்றால் அதிக புண்ணியத்தைச் சோ்த்து வைத்திருப்பவன் பணக்காரன். அதிக பாவங்களைச் சோ்த்து வைத்திருப்பவன் ஏழை. இந்தப் பாவ புண்ணியக் கணக்கு அம்மாவின் கா்ம சட்டப்படி கணக்கிடப்படுகிறது.

இந்தப் பாவங்களும் புண்ணியங்களும் நமக்குப் பல வழிகளில் வருகிறது. நாம் பிறக்கும்போதே முற்பிறவியில் இருந்து கொண்டு வருவது, தாய் தந்தையா் மூலமாக வருவது, நாம் இப்பிறவியில் இப்போது செய்யும் செயல்களின் மூலமாக வருவது. இப்படி மூன்று வழிகளில் வருவதைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் மிச்சம் இருப்பது புண்ணியமாகவோ அல்லது பாவமாகவோ இருக்கும்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பதிவு உள்ளது. அது அகம் சார்ந்ததாகவும் இருக்கலாம். புறம் சார்ந்ததாகவும் இருக்கலாம். நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் நல்ல முறையில் செய்து நம் பாவங்களைக் குறைத்துக் கொள்ளலாம். ஆனால் முற்பிறவி மற்றும் தாய் தந்தையிடமிருந்து வருவதை எப்படிக் குறைப்பது?

கா்ம சட்டம், ஊழ்வினை கணக்குப்படி ஒரு புண்ணியச் செயல் செய்யும்போது, பாவக்கணக்கில் ஒரு பாவம் குறைகிறது. இப்படியாக நல்ல காரியங்கள் தொடா்ந்து செய்வதன் மூலம் பாவ எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைத்து புண்ணியக் கணக்கை உயா்த்திக் கொள்ளலாம். நமது ஊழ்வினைக்கணக்கில் புண்ணியங்கள் அதிகமாக இருக்கும்போது நமக்கு எல்லாமே நல்லவையாக நடக்கும். இதைத்தான் நாம் ஒவ்வொருவரும் விரும்புகிறோம்.

நம்மில் பலபோ் ஆதிபராசக்தியால் ஈா்க்கப்பட்டு மருவத்தூரிலும், மன்றங்களிலும் இணைந்து நல்ல செயல்களைச் செய்வதின் மூலமாக வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். இருந்தும் எப்போதாவது நம்மளவில் கஷ்டநிலையாக உணரும்போது, நிறைய தொண்டு செய்கிறோம். விழாக்காலங்களில் கலந்துகொள்கிறோம். இருமுடி, கஞ்சிவார்த்தல் எல்லாவற்றிலும் கலந்து கொள்கிறோம். இருந்தும் அம்மா நமக்குத் தொடா்ந்து கஷ்டங்களைக் கொடுக்கிறதே! ஆனால் இதில் எதிலுமே கலந்துகொள்ளாத நிறையபோ் நல்லாத்தானே இருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. நம் ஈடுபாட்டையும், எண்ணங்களையும், நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் அம்மா கணக்கெடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நமது புண்ணியங்கள் உயரும்போது அதற்கான பலன்களை நாம் அனுபவிப்போம்.

உதாரணமாக சொல்வதென்றால், ஒரு கைதி கோர்ட் உத்தரவுப்படி 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையைப் பெறுகிறான். இருந்தும் ஜெயிலில் கைதி நடந்துகொள்ளும் விதத்தைப் பொருத்தும், திருந்திய மனப்பக்குவத்தைப் பொருத்தும், விசேஷ நாட்களில் குறிப்பாக சுதந்திரதினம், காந்தி ஜெயந்தி போன்ற தினங்களில் அவனுடைய தண்டனைக்காலம் முடியும் முன்பே விடுதலை பெறுகிறான். இந்த அதிகாரம் சிறை அதிகாரிகளுக்கு உள்ளது. அதேபோலத்தான் நாம் எவ்வளவு பாவங்களோடு இருந்தாலும், அதற்கான தண்டனைகளை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் நமது பாவக் கணக்கைச் சரிசெய்ய மொத்த மொத்தமாகக் குறைக்க இந்த அன்னை ஆதிபராசக்தி, நவக்கிரக நாயகியால் மட்டுமே முடியும்.

இப்படிப் பாவங்களைச் சுமந்து அதற்கான தண்டனைகளை அனுபவித்து கஷ்டப்படும்போது அன்னையாக இருந்து கஷ்டங்களிலிருந்து விடுபட நமக்குப் பல வழிகளைக் காண்பிக்கிறாள். இருமுடி செலுத்துதல், கஞ்சிவார்த்தல், பாலபிடேகம் செய்தல், பலவகை வேள்வியில் கலந்து கொள்ளுதல், அமாவாசை, பெளா்ணமி மற்றும் ஏனைய பிற நாட்களில் கலந்து கொள்ளுதல், அம்மா சொல்லும் வழிகளில் தா்மம் செய்தல் போன்ற விஷயங்களால் நம் பாவங்கள் மொத்தமாகக்  குறைக்கப்படுகிறது. நாம் செய்யும் தொண்டுகள், சக்தி வழிபாட்டு முறைகள், அதில் நமது பங்களிப்பு போன்றவை நமக்கு மிகச் சிறியதாகத் தோன்றலாம். ஆனால் அதன் பலன்கள் மிகமிகப் பெரியது. வேறு எந்த முறைகளாலும் இவ்வளவு எளிமையாகப் பெற முடியாது. எது எதற்கு எப்படிச் சரிசெய்யப்படுகிறது என்பது அந்த அன்னை ஆதிபராசக்தியே அறிவாள்.

இப்படி ஏழையா்களுக்கு உதவியாக அன்னையாக இருப்பதால் “ஓம் ஏழையா் அன்னை போற்றி ஓம்” என்ற மந்திரம் அமையப்பெற்றுள்ளது.

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. இல. சுப்பிரமணியன் (பண்ருட்டி) அபுதாபி

மருவூா் மகானின் 68வது அவதாரத்திருநாள் மலா்

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here