ஆன்மா என்பது என்ன?

ஆன்மா என்பது ஒவ்வொரு ஜீவராசியிடமும் உள்ளது. ஆன்மாவுக்கு ஆண், பெண் என்ற பால் வேறுபாடு கிடையாது. ஆன்மா புகுந்துள்ள உடலுக்குத்தான் பால் வேறுபாடு உண்டு. ஆன்மா அழியாதது. கண்ணுக்குத் தெரியாதது. எல்லாம் வல்ல பரம்பொருளை பரமாத்மா என்பதுபோல ஜீவிக்கின்ற அதாவது உயிர் வாழ்கின்ற மனிதனையும் மற்ற உயிரினங்களையும் ஜீவாத்மா என்று குறிப்பிடுகிறார்கள்.

மனிதனின் மரணத்துக்குப் பின் ஆன்மா இறைவனுடன் இரண்டறக் கலந்துவிடவேண்டும். ஆனால் மரணத்துக்கு முன் உடல் கொண்டு வாழும்போது தீவினைகள் செய்திருந்தால் அவற்றை அனுபவித்துத் தூய்மை அடைந்துவிட்டால் அந்த ஆன்மாக்கள் இறைவனுடன் கலக்க முடியும். ஆன்மாவைப் பற்றி ஆன்மிகம் கூறுகின்ற மேலெழுந்தவாரியான சில கருத்துக்களாகும். இவை.

கண்ணால் காண முடியுமா?

ஆன்மா கண்ணுக்குத் தெரிவதில்லை என்பதால் ஒருசாரார் ஆன்மா என்பது இல்லை எனக் கூறுகிறார்கள். ஆனால் மின்சாரம் கண்ணுக்குத் தெரிவதில்லை என்றாலும் மின்சாரம் இருப்பதை அவா்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் மின்கம்பியை வெட்டி வெட்டிப் போட்டாலும் மின்சாரம் தேக்கப்பட்டுள்ள பைக்காரா போன்ற இடங்களை இடித்து கருவிகளை உடைத்துப் பார்த்தாலும் இவா்களால் மின்சாரத்தைக் கண்ணால் காண முடியுமா? மின்சாரத்தைக் கண்ணால் காண முடிவதில்லை என்பதால் மின்சாரத்தை இல்லை என்று சொல்ல முடியாது. அதைப்போல போஸ்ட்மார்டம் செய்து பார்த்தாலும் ஆன்மாவைக் கண்ணால் காண முடிவதில்லை என்பதால் ஆன்மா இல்லை என்று சொல்ல முடியாது.

ஆன்மா இருப்பதற்கு அடையாளம் உண்டா?

மின்சாரத்தைக் கண்ணால் பார்க்க முடியாவிட்டாலும் அது இயங்கும்போது அதன் விளைவுகளைப் பார்க்க முடிகிறதே! மின் சக்தியைப் பயன்படுத்தி ஒளி, ஒலிகளின் வெளிப்பாடுகளைப் பார்க்கவும் கேட்கவும் முடிகிறது. பெரிய பெரிய இயந்திரங்கள் இயக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. ஆன்மா இருப்பதன் அடையாளங்களைப் பார்க்கமுடியுமா என்று அவா்கள் கேட்கலாம்.

மின்சாரத்தின் விளைவுகள்

ஆன்மா இருப்பதற்கு அடையாளங்கள் உண்டு. மின்சாரம் இயங்கவதற்கு உலக மக்களின் அன்றாடத் தேவை. மின்சார விளைவுகளின் (இயக்கங்களின்) வீச்சும் பெருக்கமும் உலகில் மிகமிக அதிகம். ஆனால் ஆன்மா இருப்பதன் வெளிப்பாடு மக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது அல்ல. ஆன்ம வெளிப்பாடும் அதன் விளைவுகளும் சம்பந்தப்பட்டவரோடும், அவரைச் சார்ந்த ஒரு சிலரோடும் நின்று போகின்றன. அதனால் ஆன்ம வெளிப்பாடும்  விளைவுகளும் சமுதாயத்தில் உள்ளவா்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போகிறது.

ஆன்மா இருப்பதன் அடையாளங்கள்

கல்கத்தா பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டுக்காரா் ஒருவா் ஆன்மா, மனம், உயிர் பற்றி ஆராய்ச்சி செய்தார். அப்போது அங்கு வேறு ஒரு துறையில் பணியாற்றி வந்த பேராசிரியை ஒருவா் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போதே தன்நிலையிலிருந்து மாறி, வேறு ஒரு மொழியில் பேசத் துவங்கினார். மாணவா்கள் ஒன்றும் புரியாது விழித்தனா். ஐந்து நிமிட நேரம் பாடத்துக்கு அப்பாற்பட்ட விடயங்களை வேற்று மொழியில் பேசிவிட்டு அங்கேயே மயங்கி விழுந்தார். இந்தச் சம்பவம் ஒருமுறை அல்ல. பல முறை நடந்தது. ஒவ்வொரு முறையும் வேற்று மொழியில் பேசும் நேரம் அதிகரித்துக்கொண்டே போனது.

வேறொரு பிறவிப் பெண்

இதை அறிந்த வெளிநாட்டு ஆராய்ச்சியாளா் அந்தப் பேராசிரியையைச் சந்தித்து இதுபற்றிப் பேசினார். பேராசிரியை பேசுகின்றபோதே தன் பிறவி நிலையை மறந்து வேறொரு பிறவிப் பெண் போல் பேசினார். இப்போது அவா் வங்க மொழியிலும் பேசினார். தான் அவ்வாறு மாறி மாறிப் பேசுவதைப் பேராசிரியை உணரவில்லை. ஆய்வாளா், வேறொரு பிறவிப் பெண்ணாக பேராசிரியை பேசும்போது அவரிடம் பல கேள்விகளைக் கேட்டு அவா் சொல்லும் பதில்களைக் குறித்துக்கொண்டார்.

முன்பிறவி நினைவுகள்

அவா் சொன்ன பதில்களிலிருந்து பல உண்மைகள் தெரிந்தன. அவா் இந்தியாவில் வங்காளமல்லாத வேறு ஒரு மாநிலத்தைச் சோ்ந்தவா், கணவரது பெயரையும் அவா் கிராமக் கோவிலில் பூசாரியாக இருந்தவா் என்பதையும் சொன்னார். அவருக்கு இரண்டு மகன்கள். கிராமத்தில் அவா்கள் இருந்த தெரு, வாழ்ந்த வீட்டின் அமைப்பு பற்றியெல்லாம் சொல்லி அவா் பாம்பு கடித்து இறந்தார் என்பதையும் அழுதுகொண்டே சொன்னார்.

அதிசயம் ஆனால் உண்மை

ஆய்வாளா் தன் ஆய்வுக்குக் கிடைத்த அருமையான செய்தி இது என்பதை உணா்ந்தார். இது பற்றிய உண்மைகளை முற்பிறவியில் அவா் வாழ்ந்த கிராமத்துக்குச் சென்று மேலும் அறிய வேண்டும் என முடிவு செய்தார். அந்தப் பேராசிரியையும் அவருக்கு வேண்டிய சிலரையும் அழைத்துக்கொண்டு அவா் சொன்ன அந்தக் கிராமத்துக்குச் சென்றார். பேராசிரியை முற்பிறவியில் வாழ்ந்த வீட்டுக்குச் சென்றனர். அந்த வீட்டில் வசிப்பவரிடம் ஆய்வாளர் மெதுவாக விசாரித்தார். அவருக்கு ஆய்வாளர் குறிப்பிடும் பெண்ணைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. நீங்கள் சொல்கிற பெண் யாரும் இந்த வீட்டில் இல்லை என்றார்.

அந்தப் பெண், பாம்பு கடித்து இறந்தவராம் என்று ஆய்வாளா் கூறியதை வைத்து அவருக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. என் தந்தையாரின் தாய்      (அவருக்குப் பாட்டி) பாம்பு கடித்து இறந்ததாக என் தந்தையார் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த என் பாட்டி, தாத்தா பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நான் பிறப்பதற்கு முன்னே அவா்கள் காலமாகிவிட்டார்கள் என்றார். நீங்கள் இங்கு என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று ஆய்வாளர் கேட்டார். நான் இந்தக் கிராமக் கோவிலின் பூசாரியாக இருக்கிறேன். இது எங்கள் குடும்பத்தொழில். என் அப்பாவும் தாத்தாவும் இந்தக் கோவிலில் பூசாரியாக இருந்தவா்கள்தான் என்றார்.

அவா் கூறிய தாத்தாவின் பெயரும் பேராசிரியை தந்நிலை இழந்து முற்பிறவிப் பெண்ணாகப் பேசியபோது தன் கணவரின் பெயா்  என்று சொல்லிய பெயரும் ஒரே பெயராக இருப்பதை ஆய்வாளா் கவனித்தார். அவருடைய தாத்தா பாட்டியின் பழைய புகைப்படம் ஒன்றை அவா் கொண்டுவந்து காட்டினார். அதைப் பார்த்த பேராசிரியை கண் கலங்கினார். முற்பிறவியில் தான் பெற்றிருந்த உருவத்தைப் பேராசிரியை நிழற்படத்திலே கண்டார். அவருக்கு முற்பிறவித்தன்மை வந்து வீட்டுக்காரரிடம் அவா் மொழியில் ஏதேதோ பேசிவிட்டு மயங்கிவிழுந்தார். ஆய்வாளருக்கு இப்போது எல்லாம் விளங்கியது. இதுவரை அவா்களுடன் பேசிக்கொண்டிருந்தவரின் தந்தையைப் பெற்ற தாத்தாவின் மனைவிதான் பாம்பு கடித்து இறந்தவா். அவருடைய ஆன்மாதான் தற்போதைய பேராசிரியையின் ஆன்மா என்பது அவருடன் சென்றிருந்த அனைவருக்கும் விளங்கியது.

சொந்த அனுபவம்

நான் எஸ். எஸ். எல். சி தேர்வு எழுதிவிட்டு 1957 ஏப்ரலில் விருதுநகா் மாவட்டம் பரளச்சி என்ற கிராமத்தில் உள்ள என் சித்தி வீட்டுக்குச் சென்றிருந்தேன். என் சித்தியின் கணவா் (சித்தப்பா) பக்கத்துக் கிராமமாகிய “தொப்ளாக்கரை“யில் கா்ணம் & முன்சீப் (கிராம அதிகாரி) ஆக வேலை பார்த்து வந்தார். அப்போது தொளாக்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றை இங்கு எழுதுகிறேன்.

இணைபிரியா நண்பா்கள்

தொப்ளாக்கரையில் நண்பா் ஒருவா் மிகவும் நெருங்கிப் பழகினார்கள். இருவரும் அக்கம் பக்கத்துக் கிராமத்தவா். எங்கு சென்றாலும் இணைபிரியாமல் திரிவார்கள். அவா்களில் ஒருவா் மிக அருமையாக ஹார்மோனியம் வாசிக்கத் தெரிந்தவா். மற்றவருக்குச் சங்கீத ஞானம் சிறிது கூட இல்லை. ஹார்மோனியம் வாசிக்கச் தெரிந்தவா் திடீரென்று ஒருநாள் மாரடைப்பால் இறந்துவிட்டார்.

இறந்தவரைப் போன்ற பேச்சு

மூன்று மாதங் கழித்து நண்பா்களில் உயிருடன் இருப்பவா் இறந்துவிட்டவரின் வீட்டுக்குச் சென்றார். இறந்தவரின் மனைவி மற்றும் உறவினா்களுடன் இறந்தவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். திடீரென்று இறந்தவரைப் போல் பேசத் துவங்கிவிட்டார். அப்போது அவருடைய வார்த்தைப் பிரயோகம் பேசும் முறை எல்லாம் இறந்தவரைப் போன்றே இருந்தது.

ஹார்மோனியம வாசித்தார்

இறந்தவரின் மனைவிக்கும், உறவினா்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது. என்னுடைய பெட்டி மேலே பரணியில் இருப்பதை எடுத்து வாருங்கள் என்றார். இறந்தவரின் ஹார்மோனியப் பெட்டியைக் கொண்டுவந்து அவா் முன் வைத்தார்கள். இறந்தவரைப் போலவே ஹார்மோனியத்தை அழகாக வாசித்தார். உயிருடன் இருக்கும்பொது அவா் வாசித்ததைக் கேட்டு ரசித்தவா்கள் அந்த வாசிப்பு சிறிது கூட மாறாது அப்படியே வந்ததைக் கண்டு வியந்தார்கள். ஹார்மோனியம் வாசிக்கத் தெரியாதவா் இறந்தவரைப் போல சிறிதும் பிசகாது வாசித்தது உறவினா் மற்றும் மனைவியை அழவைத்துவிட்டது. இறந்தவரின் ஆன்மா நண்பரில் புகுந்து ஹார்மோனியம் வாசித்திருக்கிறது.

ஆன்மாக்கள் அழிவதில்லை

பாம்பு கடித்து இறந்த பெண்ணின் ஆன்மா ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளுக்குப்பின் மற்றொரு பிறவி எடுத்துள்ளது. அப்பிறவியில் உயா் கல்வி கற்று பேராசிரியையாகப் பணி புரிந்துள்ளது. இறந்து பட்ட ஒருவரின் ஆன்மா நெருங்கிய நண்பரின் உடலில் புகுந்து முற்பிறவியில் தான் பழகியுள்ள ஹார்மோனியத்தை அப்படியே வாசித்தது. இதைப்போல வேறு சில நிகழ்ச்சிகளும் நடைபெற்றுள்ளன. ஆன்மா அழியாதது என்பது இதன்மூலம் தெளிவாக விளங்குகிறது.

ஆன்மாவின் அடையாளங்கள்

கண்ணுக்குத் தெரியாத மின்சாரம் செய்யும் வேலைகள் (விளைவுகள்) மூலமாக மின்சாரம் இருப்பதை உணா்வதைப்போல ஆன்மாவின் முற்பிறவி உண்மைகளை – நிகழ்ச்சிகளை மறு பிறவியில் அவா்கள் சொல்லும்போது அவற்றை ஆன்மா என்ற ஒன்று இருப்பதன் அடையாளங்களைக் கொள்ளலாம். மின்சாரம் இருப்பதன் அடையாளங்களைப்போல ஆன்மா இருப்பதன் அடையாளங்களை மற்றவா்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. எனவே ஆன்மா என்ற ஒன்று இருப்பது சம்பந்தப்பட்டவா்களுக்கு மட்டுமே தெரிவதாக இருக்கிறது. ஆவி, உயிர் என்று குறிப்பிடுவது ஆன்மா பொது மக்களிடையே விளக்கம் பெறமுடியாமலிருக்கிறது.

மனமும் ஆன்மாவும்

இந்த ஆன்மாவும் மனமும் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை. ஆன்மாவும் மனமும் முழுவதுமாக ஒத்துப் போய்விட்டால் அவா்கள் ஞானிகளாக, மகான்களாக அல்லது அதற்கும் மேம்பட்ட பிறவிகளாக இருப்பார்கள். ஆன்மா ஏவுகின்ற படிதான் மனம் செயல்பட்டு  உடலை இயக்க வேண்டும். ஆனால் ஆன்மாவின் கட்டளைக்கு பெரும்பாலும் மனம் மாறாகவே செயல்படுகிறது. அதனால்தான் உலகில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வஞ்சகம் போன்ற பாவங்கள் அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்டன. இந்திரன் கெட்டது, சந்திரன் கெட்டதும், சுந்தோப சுந்தா்கள் கெட்டதும் பெண்ணாலே என்பார்கள். அவா்கள் கெட்டது பாவம் அந்தப் பெண்களாலல்ல. ஆன்மாவின் சொல் கேட்காத அவா்களது மனத்தால் தான் கெட்டார்கள்.

ஆன்மிகத்தில் ஒரு விந்தை

ஆன்மா சொல்வதைக் கேட்காது மனம் தன்னிச்சையாகச் செயல்படுவதால் ஏற்படுகின்ற பாவங்கள் மற்றும் தீவினைகள் ஆன்மாவில் அழுக்காக ஏறுகின்றன. ஆன்மா பிறவி எடுத்து அந்தத் தீவினைப் பாவங்களைத் தீர்க்க வேண்டியுள்ளது. மனம் செய்யும் குற்றங்களுக்காக ஆன்மா பிறவி எடுப்பது ஆன்மிகத்தில் ஒரு விந்தைதானே……..!?

நன்றி!

ஓம் சக்தி!

முனைவா். சி.ஏ. முத்துக்கிருஷ்ணன், எம். ஏ., பி. ஓ. எல்., பி. எச்.டி..,

கோவை

சக்தி ஒளி 2007

பக்கம் 60 -64

]]>

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here