அன்னை ஆதிபராசக்தி தன்னை அடையும் வழி, சரணாகதித் தத்துவம் என்பதைத் தெளிவுபட உரைத்துள்ளார்கள். சரணாகதித் தத்துவம் என்பது என்ன என்பதையும், மிகவும் விரிவாகப் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

“மகனே!  உன்னைப் பார்த்து இந்தக் கிணற்றில் உடனே விழுந்துவிடு என்று கூறுகின்றேன் என்று வைத்துக் கொள்,ஒரு விநாடி கூடத் தாமதிக்காமல் அன்னையின் ஆணை என்ற கருத்தில் கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் குதித்தால், நான் என்ன செய்வேன் தெரியுமா?

கிணற்றில் நூறு அடித் தண்ணீர் இருப்பினும் அதனைக் கானல் நீராக மாற்றிக் கீழே பஞ்சு மெத்தை விரித்து, நீ விழும்போது எவ்வித இடையூறும் நேராதபடிக் காப்பேன். ஏன் தெரியுமா?  நீ என்னுடைய ஆணையை நிறைவேற்றுகிறாய்.

நீ என்னுடைய ஆணையின் பலாபலன்களைப் பற்றிச் சிந்திக்காமல், ஆணையை உடனே நிறைவேற்றினால், உன்னைக் காக்க வேண்டிய பொறுப்பு எனதாகிவிடுகிறது.

எந்த நிலையிலும் உன்னை எப்படியாவது காப்பாற்றியே தீருவேன். என்னை முழுவதுமாக நம்பியவர்களை எந்த நிலையிலும் நான் கைவிடமாட்டேன்.

முழுவதுமாக என்னைச் சரண் அடைந்து விட்டவனுடைய குடும்பமும் என் பொறுப்பில் வந்துவிடுகிறது. என்னைச் சரண் அடைந்து விட்ட ஒருவன் காரணமாக, அவன் குடும்பம் முழுவதையும் தாங்குகிறேன். இதை மனதில் கொள்ள வேண்டும்.

இதன் எதிராக மகனே! அன்னை ஆணையிட்டு விட்டாள். எப்படியும் கீழ்ப்படியத்தான் போகிறேன். கிணற்றில் விழப்போவது உறுதி தான் என்றாலும் விழுவதன் முன்னர் கிணற்றை எட்டிப் பார்த்துவிட்டு விழுகிறேன் என்று நினைத்து எட்டிப் பார்த்துவிட்டு விழுவாயேயானால், நான் கைவிட்டு விடுவேன் மகனே!

காரணம், என்மேல் உள்ள நம்பிக்கையை விட உன்னையே நீ காத்துக்கொள்ளும் தற்காப்பு உணர்ச்சி அதிகமாக உள்ளது. உன் அறிவின் துணைகொண்டு நீ கிணற்றின் ஆழம், உயரம் முதலியவற்றை ஆராயத் தொடங்கிவிட்டாய் அல்லவா?

இவ்வாறு ஆராயவில்லை தாயே!  சும்மா தான் கிணற்றை எட்ட்டிப் பார்த்துவிட்டு விழ முடிவு செய்திருந்தேனே!  இது நீ அறியாததா? என்று என்னிடம் கேட்டுப் பயனில்லை.

“உன்னுடைய தற்காப்பு உணர்ச்சி தொழிற்படத் தொடங்கியவுடன் நான் அங்கு வருவதில்லை” என்று விளக்கம் தந்தாள்.

சரணாகதியின் தத்துவத்தை இதைவிட நுணுக்கமாகவும், விளக்கமாகவும் விரிவாகவும் விவரிக்க வேண்டுமா?

சரணாகதியில் அரைக்கிணறு, முக்கால் கிணறு தாண்டும் தன்மை இல்லை. அன்னையிடம் முழுவதுமாகத் தன்னை ஒப்படைப்பதே சரணாகதி. ஒருவனுடைய உடல், பொருள், ஆவி என்ற மூன்றையும் அன்னையிடம் முழுவதுமாக ஒப்படைப்பதன் மறுபெயரே சரணாகதி.

அன்னை மேலும் கூறுகிறாள்.”நானே உன்னிடம் வந்து ஒரு பணியைச் செய்யுமாறு ஏவுகின்றேன். அந்தப் பணி சிறியதாகவோ, பெரியதாகவோ, கடினமானதாகவோ, வலிமையானதாகவோ இருக்கலாம்.

ஆனால் ஒன்றை மறந்துவிடாதே!  நான் எங்கோ இருந்துகொண்டு உன்னை ஏவுவதில்லை. உனக்கு அருகில் வந்து தான் இப் பணியைச் செய் என்று ஏவுகின்றேன். நான் உனக்கு அருகில் வரும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்” என்று கூறுகிறாள்.

அன்னை கூறுவதன் உட்பொருள் நமக்கு நன்றாக விளங்குகிறது. எந்த ஒரு சக்தியை நாடி நாம் வழிபாடு, தவம், தியானம், முதலியவற்றை மேற்கொள்கிறோமோ, அந்த ஒன்றே நம்மிடம் வந்து ஒன்றைச் செய்யுமாறு ஏவினால் அதைச் செய்வதே நாம் வேண்டுவதைப் பெற்றுக் கொள்ளலாமே என்று நமக்குப் புரிகிறது.

“அம்மா”  இன்னும் கூறுகிறாள். “தவம் மேற்கொண்டு புற்றாகவும், மரமாகவும் நிற்கின்றவர்கள் கூட என்னை இன்னும் காணவில்லை. ஆனால் என் பணியைத் தலைமேற்கொண்டு செய்யும் உன் எதிரில் நான் நிற்கின்றேன். இந்த எளிய வழியை நீ விட்டுவிடாதே”

இவ்வாறு ” அம்மா”  உரைப்பதைக் கேட்கக் கேட்க சரணாகதித் தத்துவம் நமக்கு விளங்குகிறது.

எனவே, “அம்மா!  நின் திருப்பாதங்களில் நாங்கள் முழுவதுமாகச் சரண் அடைகின்றோம். எம் பாவ வினை போக்க, நீ காட்டும் தொண்டு நெறியே உனை அடையும் எளிய வழி என்று எமக்குப் புரிகிறது. ஆயினும் உன்னை முழுச்சரண் அடையவும் நீ கூறும் வழிச்செல்லவும், உன் பேரருள் துணை இன்றி எதுவும் முடியாது என்பதையும் நாங்கள் உணர்கின்றோம். அந்தப் பேரருளைப் பூரணமாக எங்களுக்குத் தந்தருள் தாயே!”  என்று வேண்டுவோம். சரணடைவோம்.

ஓம் சக்தி

நன்றி

சக்தி ஒளி 2000 மார்ச்

பக்கம் 13- 14.

 ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here