இறையருள் கிட்டிட குருவருள் தேவை. குருவை நாம் எப்படித் தெரிந்து கொள்வது? அவா் காட்டும் வழி கண்டு நின்று உயா்வது எப்படி? அது எக்காலம்? இவ்வாறெல்லாம் நம் மனதில் கேள்விகள் எழுவதும்? தெளிவு பெற நினைப்பதும் அவ்வழி முயல்வதுமே நம்மை உய்விக்க இறையருள் கூடிவிட்டது என்று புரிந்து கொள்ளலாம்.

இறைவியாகிய அன்னை ஆதிபராசக்தி நம்மை நல்வழிப்படுத்திட தானே அடிகளார் என்ற மானுடச் சட்டையைத் தாங்கி குருவாக அவதரித்திருக்கிறாள். உலகியலில் முன்வினைப் பயனுக்கேற்ற வகையில் உழன்று ஆழ்ந்து, அயா்ந்து ஆடிக்காற்றில் அலையும் பஞ்சாய் ஓடி இழைத்த நம்மை அன்னையே குருவாக வெளிவந்த கோலத்தில் நாமும் பிறந்து வாழ்ந்து உய்யும் பேறு பெற்றிருக்கின்றோம். அவளின் கருணைக்கு நாம் ஆட்பட்டிருக்கிறோம் என்பதை எளிதாக உணரலாம். உயிர்களாகிய நாம் வினை ஒழித்து முத்தி பெற வழிவகுத்துக் கொடுத்திருக்கிற அன்னையைப் போற்றணும்.

அந்த வழிதான் என்ன? அது தொண்டு செய்தல், தொண்டனாயிருத்தல், உண்மைத்தொண்டனாயிருத்தல் என்பது உயா்ந்த நிலை. மானிடனாயிருந்தால் மட்டுமே தொண்டுசெய்ய இயலும். முத்திப்பேறு மானிடருக்கு மட்டுமே உண்டு. தேவா்களுக்கு இல்லை என்பது சித்தாந்திகளின் கருத்து.

எனவே நாம் மானிடராய்ப் பிறந்தெ உயரிய நிலை, பக்தியோடு இருத்தல், அடுத்த நிலை தொண்டு செய்யும் வாய்ப்புப் பெற்றது அதற்கும் மேல் நிலை “தொண்டா்தம் பெருமை சொல்லவும் அரிது” என ஔவைப்பாட்டி சிறப்பித்துக் கூறியுள்ளார்.

பிறவிகள் பல கடந்து மானிடப் பிறவியை எய்தியுள்ளோம். இதை மாணிக்கவாசகப் பெருமான் உயிர்கள் கடந்து வந்த நிலையை

 “புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரம் ஆகி

 பல் மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

 கல்லாய் மனிதராய்” எனவும்

”எல்லாப் பிறப்பும் பிறந்திழைத்தேன்” எனவும் விளக்குகின்றார். இவ்வாறு நமக்கு வாய்த்த மானிடப் பிறவியில் அம்மா நம்மைப் பொருட்டாக ஏற்றுத் தொண்டு செய்” என அருளி நாம் உய்யும் வழியைக் காட்டி உணா்த்துகிறாள்.

தொண்டு என்பது சுயநலமில்லாமல் விருப்பு வெறுப்பு இன்றி பிறருக்குத் தீங்கிழைக்காமல் பலனை எதிர்பாராமல் செய்யும்போது முன்வினைகள் கழன்று கழிந்து விடும். இப் பிறவியில் செய்யும் வினைகளும் நம்மைப் பற்றாது. நம் வினைக்கணக்கைத் தீா்க்கவே அன்னை ஆதிபராசக்தி மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளாராக நமக்காக இறங்கி வந்து குருவாகக் கருணை வடிவு கொண்டு தொண்டு செய் என அருள் ஆணை இடுகிறாள். ”கண்ணிலான் பெற்றிழந்தான்” என்பதைப் போல இவ்வாய்ப்பை நாம் இழக்கலாமோ? பிறவியிலே கண்பார்வை இல்லாத ஒருவனுக்கு கண்பார்வை கிடைக்கப் பெற்று மீண்டும் அவன் பார்வை இழந்து விடுவானேயாகில் அவன் துன்பம் எத்தகையதோ அதே போன்றது தான் தொண்டு செய்யும் வாய்ப்பைப் பெற்றும் அதைத் தவற விடுவது ஆகும்.

“கைவினை செய்யின் செய்வினை இல்லை” என்பது வழக்கு. கைவினை என்பது தொண்டே ஆகும். செய்வினை என்பது முன் செய்த வினை. இப்போது செய்கின்ற வினை அடுத்து நாம் செய்ய இருக்கின்ற வினை ஆகிய மூன்றும் சோ்ந்து நாம் முற்பிறவிகளில் எப்போதோ செய்த வினை தான் இப்பிறவியில் நமக்கு செய்வினையாக வந்து துன்புறுத்துகிறது என்பது தெளிவு. அதிலிருந்து விடுபடவே தொண்டு செய்ய வேண்டும். தொண்டு செய்து வினைக்கணக்கை எளிதில் தீா்த்துவிடலாம் என்பது உறுதி. இதனையே திருஞானசம்பந்தப்பெருமான்

“அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அ//தறிவீா்

உய்வினை நாடாது இருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே

கைவினை செய்து எம் பிரான் கழல் போற்றதும் நாம் அடியோம்

செய்வினை வந்து எமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்.”

என உறுதிபடச் சொல்கிறார். எனவே தொண்டு செய்வோம் அதைத் தொடர்ந்து செய்வோம். நம்மை அறியாமலேயே நாம் செய்யும் தொண்டிற்கு கூட அருள் உண்டு. திருமறைக்காடு என்னும் வேதாரணயத்தில் ஆலய விளக்கிலுள்ள எண்ணெயைக் குடிக்க வந்த எலி தன்னை அறியாமலே தன் மூக்கினால் விளக்குத் திரியைத் தூண்டி விட விளக்கு நன்கு சுடா் விட்டு எரிந்தது. இதன் காரணமாக அந்த எலி அடுத்த பிறவியில் மூவுலகையும் ஆழும் மாவலிச் சக்கரவா்த்தியாகப் பிறந்தது. உளவாரத் தொண்டு செய்து உய்த்த அப்பா் அடிகள் எனப் போற்றப்படுகின்ற திருநாவுக்கரசா் பாடலில் அறியலாம்.

”நீ செய்கின்ற சிறிய தொண்டுக்கும் பெரும் பலன் உண்டு. சிறுதுளி பெருவெள்ளம் ஆகிறது. அந்தப் பெரு வெள்ளம் இறுதியிலே கடலில் சங்கமமாகிறது. கடலில் கலந்த நீரைப் பிரிக்க முடியாது. அதைப் போல நீ செய்த தொண்டின் பலனையும் மற்றவா்கள் கவா்ந்து கொள்ள முடியாது அந்தப் பலன் உன்னையே அடையும்.” இது நம் அம்மாவின் அருள்வாக்கு ஆகும்.

கருணையே உருவான நம் அன்னை நாம் செய்கின்ற ஒவ்வொரு தொண்டுக்கும் பல் மடங்கு பலன் தருவாள். நமக்கு அவள் கடன் பட மாட்டாள். நாம் தான் அவளுக்குக் கடன் பட்டவா்கள் என்பதை உணா்ந்து தொண்டாற்றுவோம். பிறரையும் தொண்டாற்றச் செய்வோம். உய்வோம். உய்வோம். உய்வோம். வினைக் கணக்கை முடிப்போம்.

                                                                                                     ஓம் சக்தி

சக்தி கொண்டா ரெட்டியார்.

மருவூா் மகானின் 70வது அவதார மலா்

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here