14 ஆண்டுகளுக்கு முன்பு
 
1985 ஆம் ஆண்டு என் கல்லூரித் தோழி எங்கள் வீட்டிற்கு வந்தபோது, “எங்கள் வழிபாட்டு மன்றத்திலிருந்து மேல்மருவத்தூர் கருவறைப் பணிக்குச் செல்கிறார்கள்; நீயும் அவர்களுடன் சென்று வா! உனக்கு அடுத்த வருடத்துக்குள் திருமணம் நடந்துவிடும்” என்றாள். “சரி, பார்க்கலாம்” என்று மட்டும கூறினேன். அந்த ஆண்டு கருவறைப் பணிக்குச் செல்லவில்லை.
திருமணப் பிரச்சனை
 
இதற்கிடையில் என் திருமண விஷயத்தில் உறவினர்களிடையே பிரச்சினையும் மனக்கசப்பும் எற்பட ஆரம்பித்தது. சரியில்லாத வரனுக்கு
என்னை மணம் முடிக்கப் பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்தது. என் தாயாரும், தகப்பனாரும் திண்டுக்கல்லுக்கு மாறுதலாகி வந்துவிட்டதால், எங்கள் சொந்த ஊரில் நடைபெறும் சம்பவங்கள் தெரியாமல் போய்விட்டது.
என் அத்தை ஒருவர் நல்லவேளையாக வந்து, திருமணப் பேச்சை நிறுத்திவிட்டார்கள். அந்தத் திருமண ஏற்பாட்டை அம்மா எப்படியோ தடுத்து நிறுத்திவிட்டாள்.
 
அதன் பிறகு 1981 முதல் 1991 வரை மேல்மருவத்தூர் கருவறைப் பணிக்குத் தொண்டு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் கருவறை அன்னை ஆதிபராசக்தியை மட்டும்தான் வழிபடுவேன். நம் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் அவதார மகிமை தெரியாது. அதை நினைத்து இன்றும் நான் வேதனைப் படுகிறேன்.
 
அருட்கூடத்தில் பரம்பொருளின் தரிசனம்
 
1991 ஆம் ஆண்டு கருவறைப்பணிக்குச் சென்ற போது, மன்றத் தொண்டர்களோடு சோ்ந்து குரு தரிசனம் பெறச் சென்றேன். என்னுடன் என் அத்தையும் வந்தார். இருவரும், பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் டாலரையும், பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் படத்தையும் நீட்டி ஆசி கோரினோம். பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் தன் கரங்களால் தொட்டு ஆசி வழங்கிவிட்டு, “நன்றாகத் தொண்டு செய்தாய்; மேலும் தொண்டு செய்!” என்று கூறினார்கள். “சரிங்க சக்தி!” என்று கூறிவிட்டு வெளியே வந்தேன்.
“அத்தனை தொண்டர்களிருக்க, சாந்தாவிடம் மட்டும் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் பேசி இருக்கிறார்கள் என்று நிச்சயம் அடுத்த வருடம் கல்யாணம் நடக்கும்” என்று சொல்லிக் கொண்டார்கள் மன்றத்தினர்.
ஊர் திரும்பும்போது மேல்மருவத்தூர் நிகழ்ச்சிகளை அசைபோட்டவாறே வந்தேன்.
 
சுயம்பில் அதீதமான சக்தி
 
கருவறைப் பணிக்கு முதல் நாள் மாலையே மருவத்தூர் வந்துவிட்டோம். வந்தவுடன் அங்கப்பிரதட்சணம் செய்தேன். 108 முறை ஆலயம் வலம் வந்தேன். மறுநாள் விடியற்காலம் திருப்பள்ளியெழுச்சி படித்தேன்.
ஆலயத்தைப் பெருக்கித் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டேன். யாரிடமும் எதுவும் பேசாமல் தொண்டில் கவனம் செலுத்தினேன். 108 குங்கும அர்ச்சனை செய்யக் கருவறையில் அழைத்தார். சுயம்புக்கு மாலை போடச் சொன்னார்கள். அப்படிப் போடும் போது என் கைகள் சுயம்பைத் தொட்டுவிட்ன. அப்போது என்னையும் அறியாமல் என் உடம்பெல்லாம் புல்லரித்தது. அதீத சக்தி சுயம்பில் இருப்பதை உணந்தேன்.
பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் அருளால் திருமணம் கைகூடியது
1992 ஆம் ஆண்டு பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் அருளால் என் திருமணம் கைகூடியது. பலரும் என்னைப் பலவிதமாகக் குழப்பினார்கள். எல்லாம் ஓம்சக்தி அம்மா பார்த்துக்கொள்வாள் என்று கூறிவிட்டேன்.
எனக்குக் கணவராக வாய்த்தவரிடம் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. மனிதாபிமானம் உள்ளவா். சென்னையில் புகழ்பெற்ற கம்பெனி ஒன்றில் பொறியாளர்.
 
தாய்மைப் பேறடைந்தேன்
 
திருமணத்திற்குப் பின் தாய்மைப் பேறடைந்தேன். என்னைச் சோதித்த டாக்டர் ஓய்வு தேவை என்றார்.
 
என் கணவரின் இரத்த குரூப் “ஓ” பாசிட்டிவ். என் இரத்த குரூப் “ஓ” நெகடிவ். ஆர்.எச். வித்தியாசமானதாலும் என் உடல் நிலை பலவீனமாக இருந்ததாலும் படுக்கையை விட்டு எழுந்திருக்காமல் ஓய்விலேயே இருக்கவேண்டியதாயிற்று. ஐந்து மாதங்களாக நான் டி.வி. பார்க்கவில்லை. வானொலிப் பாடல் கேட்கவில்லை. மூலமந்திரம், 108, 1008 மந்திரம் என மந்திர நூல் மட்டுமே என் உலகமாக இருந்தது.
 
மன்றத்தில் சொன்னார்கள் இந்த நேரத்தில் என் கணவரை மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபாலுக்கு மாற்றிவிட்டார்கள். ஆறாவது மாதத்தில் நான் ரிக்ஸா பிடித்து ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் சென்று வழிபட்டு வந்தேன்.
 
நாக கன்னிக்கு எலுமிச்சம்பழ விளக்கு, திருவடிப்படம்
ஏழாவது மாதத்திலிருந்து மன்றத்தில் இருந்த நாக கன்னிக்குத் தினமும் விடாமல் தொடா்ந்து டெலிவரிக்கு முதல் நாள் வரையில் எலுமிச்சம்பழ விளக்கு போட்டு வந்தேன்.
 
“நீ டெலிவரிக்குச் செல்லும்போது இந்தப் படத்தை உன்னுடைனேயே வைத்துக்கொண்டு இரு! இதை மேல்மருவத்தூரில் வைத்து எடுத்து வந்தேன்” என்று சொல்லிய சக்தி. பிச்சையம்மாள் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின்திருவடிப்படம் ஒன்று கொடுத்தார்.
 
“திருவருளுக்கு முன் குருவருள்தான் உன்னிடம் வந்து நிற்கும்!” என்றார்.
அன்றிலிருந்து நம் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின்திருவடியைப் பற்றிக் கொண்டு குருவருளின் மகிமையை உணர ஆரம்பித்தேன்.
 
இடையில் ஒரு சோதனை
 
காந்தி கிராமத்தில் தலைமை டாக்டரான திருமதி கௌசல்யாதேவியிடம் என்னை ஒன்பதாம் மாதம் அழைத்துச் சென்றார்கள்.
அவா் என்னைப் பரிசோதித்த பின் “மிகவும் கஷ்டமான டெலிவரிதான். சிசேரியன் செய்துதான் ஆகவேண்டும். நார்மல் டெலிவரிக்காகக் காத்திருக்கக் கூடாது. முடிந்தால் நீங்கள் பார்க்கும் ஆஸ்பிடலில் பாருங்கள்.
இல்லாவிட்டால் இங்கே வந்துவிடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். இது சிக்கலான கேஸ்” என்று கூறிவிட்டார்கள்.
 
நான் தினமும் மன்றத்தில் குருவிளக்கிற்கு எண்ணெய் ஊற்றிவிட்டு, நாக கன்னிக்கு 54 எலுமிச்சம் பழம் வாங்கி 108 விளக்குப் போட்டு வழிபட்டு வந்தேன்.
 
என் அத்தை மகன் சிவராம் எனக்கு உடன் வந்து உதவி செய்வான்.
நிறைமாத கர்ப்பிணி என்ற நிலையில் என்னை மன்ற வழிபாட்டிற்குத் தனியாக அனுப்ப யோசனை செய்தனர்.
டெலிவரிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு என் கணவா், சிவராம், நான் மூவரும் மன்றம் சென்றோம். நான் மன்றத்தை 21 முறை சுற்றி வருவேன்.
என் கணவர் சற்று பயத்தோடு, “டாக்டர் சொன்னபடி நடந்துகொள். 21 முறையெல்லாம் சுற்றவேண்டாம்” என்பார். “எனக்கு எல்லாம் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் திருவடிதான் துணை” என்று சொல்லிவிட்டுச் சுற்ற ஆரம்பித்து விட்டேன்.
 
சித்ரா பௌர்ணமியன்று ஆண் குழந்தை
 
5.5.1993 அன்று புதன்கிழமை மதியம் 3.00 மணிக்கு ஆஸ்பிடல் சென்றோம். 4.30 மணிக்கெல்லாம் ஆண் குழந்தை பிறந்துவிட்டது. அன்று சித்ரா பெளர்ணமி. ஆஸ்பத்திரியில் டாக்டர்இல்லை. நர்ஸ் மட்டும் தான் இருந்தார். அவர் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் பக்தை.
குருவடி சரணம்! திருவடி சரணம்! என்ற மந்திரமும், மூலமந்திரமும் உச்சரித்தபடி இருந்தேன்.பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் திருவடிப் படமும், எலுமிச்சம்பழமும் கையில் வைத்தபடி இருந்தேன்.
பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் என் தலையருகில் கையில் நிறைய வேப்பிலையை வைத்துக்கொண்டு நிற்பது போல் தோன்றியது. நான் கண்களைத் திறக்கவில்லை. குழந்தை பிறந்துவிட்டது. நார்மல் டெலிவரி. ஆனால் குழந்தை அழவில்லை.
 
“ஓம்சக்தி அம்மா! குழந்தையைக் காப்பாற்று” என்று கதறியழுதேன்.
என் தாயார் வெளியில் அமர்ந்து மூலமந்திரம் சொல்லிக்கொண்டிருந்தார். என் தங்கை வீட்டில் அமர்ந்து மந்திர நூல் படித்தபடி இருந்தாள்.
நா்ஸ் குழந்தைக்கு ஊசி போட்ட பிறகு, குழந்தை அழும் சப்தம் கேட்டது. பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களுக்கு! நன்றி! எனக்கு நீ போட்ட பிச்சை தாயே! என்று கண்ணீர் மல்க அழுதேன்.
குழந்தைக்கு விக்னேஷ் பங்காரு சக்தி! என்று பெயா் சூட்டியுள்ளோம்.
கருவறைப் பணிக்குச் சென்று வந்த ஒரு வருடத்தில் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் பார்வையால் விளைந்த நன்மை ஏராளம்! பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் பார்வை கோடி நன்மை தரும் என்பது என் அனுபவம்.
 
குருவடி சரணம்! திருவடி சரணம்!
 
நன்றி!
ஓம் சக்தி
பக்கம் (52 -55).
சக்தி. சாந்தா சுப்புராஜ், B.Sc., B.Ed., திண்டுக்கல்
அவதார புருஷர் அடிகளார், பாகம் 13 .