ஒருநாள் எங்கள் வீட்டில் மின்சார ஓட்டம் நின்று வீடு இருளில் மூழ்கியது.

ஒருநாள் எங்கள் வீட்டில் மின்சார ஓட்டம் நின்று வீடு இருளில் மூழ்கியது.
எனது பெண் குழந்தை என் கணவர் கையில் இருந்தாள்.திடீரென வீல்
என்று வித்தியாசமாக அலறினாள்.

இருட்டில் பயந்திருப்பாள் என நினைத்து விட்டு மற்ற விஷயங்கள் பேசிக்கொண்டு இருந்தோம். மீண்டும் மின் ஒளி வந்தது.

குழந்தையைக் கவனித்தால் தூக்கிவாரிப் போட்டது. குழந்தையின் கண்கள் குத்திட்டு அங்க அசைவுகளின்றி ஜடத்தைப் போல் இருந்தாள். உடல் முழுவதும் நீலம் பூத்துவிட்டது.

வீட்டிலுள்ளவர்கள் ஆளுக்கொரு ஆலோசனை கூறினார்கள். ஒன்றும் செய்யத் தோன்றவில்லை.

அதிர்ச்சியில் இருந்த நான் செய்வதறியாது முதலில் குழந்தையை தூக்கிக் கொண்டு வீதியில் ஓட ஆரம்பித்தேன். டாக்டர் வீடு தேடி ஓடுகின்றேன்.

ஆனால் எந்த டாக்டர் வீடும் எனக்குத் தெரியாது. அருகில் எந்த மருத்துவமனையும் கிடையாது.

ஆனால் டாக்டரைப் பார்க்க வேண்டும் என்ற உந்துதலால் புலம்பி அழுதபடி ஓடினேன்.

அந்நேரத்தில் திடீர் என்று ஒலி பெருக்கியில் ஓம்! ஓம்! என்ற மந்திர ஒலி கேட்டது. உடனே ஓம் வந்த திசையை நோக்கி ஓடினேன்.அங்கே எல்லோரும் உட்கார்ந்து வழிபாடு செய்து கொண்டு இருந்தார்கள்.

முதன் முறையாக அந்த இடத்திற்குள் நான் நுழைகிறேன். ஓடிவந்த நான் அங்கு இருந்த அம்மன் படத்திற்கு முன்பு என் குழந்தையைப் போட்டு விட்டுகதறி அழ ஆரம்பித்துவிட்டேன்.

ஒரு பெண் என்னிடம் வந்து என்ன நடந்தது எனக் கேட்டார்கள்.நான் ஏதும் கூற முடியாமல் ஏதோ புலம்பினேன்.

அவர்களும் கவலை தோய்ந்த முகத்துடன் அங்கு வைக்கப்பட்டிருந்த படத்தின் முன் இருந்த ஒரு பாட்டிலில் இருந்து எதையோ எடுத்து என் குழந்தையின் உச்சி முதல் உள்ளங்கால் வரை தடவினார்கள்.

அவ்வாறு தடவிக்கொண்டே குழந்தையின் வாயில் எதையோ ஊற்றினார்கள்.

அதுவரை ஜடமாக இருந்த என் குழந்தை திடீரென வாந்தி எடுத்தாள் கண்களில் லேசான அசைவு தெரிந்தது. கை, கால், தலை ஆகியன அசைந்தன.

சிறிது நேரத்தில் சாதாரண நிலைக்குக் குழந்தை திரும்பிவிட்டாள். பிறகுதான் நானும் ஒரு நிதானத்திற்கு வந்தேன்.

பேரதிர்ச்சியில் இருந்து மீண்ட பிறகுதான் நான் நிற்கும் இடத்தைப் பார்க்கிறேன். தொடர்ந்து வழிபாட்டு மந்திரங்களைப் படித்தவண்ணம் இருந்தார்கள்.

அந்தப்படம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் படம் என்றும் அங்கிருந்த மற்றொரு படம் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் படம் என்றும் கூறினார்கள்.

அவர்கள் குழந்தையின் வாயில் புகட்டியது சித்தர்பீட தீர்த்தம் என்றும், உடலில் தடவியது நவராத்திரி அன்று பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் ஏற்றி வைத்த அகண்ட விளக்கின் எண்ணெய் என்றும் கூறினார்கள்.

எனக்கோ எல்லாமே வியப்பாக இருந்தது. என் கண்களாலேயே நம்ப முடியவில்லை. ஆனால் நடந்தது உண்மையாயிற்றே! பிழைத்தது என் பிள்ளை ஆயிற்றே!

இராமபிரான் பாதம்பட்ட கல்லில் இருந்து அகலிகை சாபம் நீங்கப் பெற்றாள் என இராமாயணக் கதை கேட்டு இருக்கிறேன்.

ஆனால் கல் போன்று அசைவின்றி, உணர்வின்றி இருந்த என் குழந்தை மீது பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் ஏற்றி வைத்த அகண்ட விளக்கின் எண்ணெய் பட்டவுடனே உயிர்த்தெழுந்த அதிசியத்தை அன்று அந்த மன்றத்தில் நேரடியாகவேப் பார்த்தேன்.கூப்பிட்டு உயிர் கொடுத்தாள் அன்னை ஆதிபராசக்தி!

மலரும் நினைவுகள் நூலில் இருந்து…..