ஒரு வாய்ச் சோற்றுக்கே கஷ்டப்பட்டோம்
கடந்த 1983 டிசம்பரில் எனக்கு மூன்றாவது பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை வயிற்றிலிருக்கும்போதே எனக்குச் செய்வினை செய்து வைத்துவிட்டார்கள். யாரென்று தெரியாது. ஒவ்வொரு நாளும்
செத்துப் பிழைத்தேன்.
மாலை 6.00 மணி ஆனால் குட்டி சாத்தான் வீடு புகுந்து என்னைப்படாத
பாடு படுத்திவிடும்.
என்னை ஒரு காளி கோயிலுக்கு அழைத்துப் போனார்கள். பேய் ஓட்டினார்கள். ஒன்றும் சரியாகவில்லை. நான் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாது. யாரிடமும் எதுவும் பேசமாட்டேன்.
விழுப்புரத்தில் நான் போகிற வழியில் ஆதிபராசக்தி மன்றம் இருக்கிறது. அதற்கு முன்னால் நின்றபடி அழுவேன். அதைப் பார்த்த ஒரு சக்தி “மன்றத்திற்கு ஒரு உபயம் செய்” என்றார். எங்களுக்குச் சாப்பாட்டிற்கே கஷ்டம்.
ஒரு கிலோ அரிசி வாங்கிப் பொங்கல் செய்தேன். அம்மா! தாயே! ஏதோ என்னால் முடிந்தது இதுதான்! ஆனால் மன்றத்திற்கு நிறையப் பேர் வருவார்களே! ஒரு கிலோ அரிசி போதாதே! என்று கவலைப்பட்டேன்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள்…! பொங்கல் அதிகமாகப் பொங்கி இரண்டு, மூன்று பாத்திரத்தில் எடுத்துப் போடும் அளவிற்கு அம்மா வளர்த்துக் கொடுத்தாள். பூஜை செய்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன்.
மன்றத்தில் செய்கிற மாதிரி நானும் வீட்டில் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் படத்திற்கு அர்ச்சனை செய்யவேண்டும் என்று ஆசை.
வீட்டில் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் படமில்லை. வந்தவாசி போன என் கணவர் அப்படியே மேல்மருவத்தூர் சென்று பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் படம் வாங்கி வந்து கொடுத்தார்.
அன்று எனக்கு உடல்நிலை சரியில்லை. தூக்கதிற்கு ஊசி போட்டுக் கொண்டேன். அந்த நிலையிலும் மந்திரம் சொல்லிக் குங்கும அர்ச்சனை செய்தேன். அதுவரை நான் மேல்மருவத்தூர் வந்ததில்லை.
அன்றிரவு ஒரு கனவு. இப்போது தியானம் செய்யுமிடத்தில் ஐந்து தலை நாகம் இருக்கிறதல்லவா? அந்த ஐந்து தலை நாகம் பறந்து வந்து “உன்னிடத்தில் இருக்கும் சிவப்புப் புடவையைத் துவைத்துக் கட்டிக் கொண்டு என் ஆலயத்திற்கு வா!” என்று சொல்லி மறைந்து விட்டது.
மறுநாள் என் கணவரிடம் கனவு விவரம் சொன்னேன். இருவரும் மேல்மருவத்தூர் வந்தோம். வருடம் நினைவில்லை. கனவில் கண்ட அந்த ஐந்துதலை நாக உருவத்தை நேரில் பார்த்து என் கணவரிடம் காட்டினேன். அதிலிருந்து மருவத்தூர் அடிக்கடி போக ஆரம்பித்தோம்.
ஒரு இஸ்லாமிய பெண்மணி சொன்னார்கள். “நீ ஒன்பது பௌர்ணமி மருவத்தூர் போய்த் தங்கு. உன்னைப்பிடித்த குட்டிச்சாத்தான் உன்னை விட்டு ஓடிவிடும்” என்றார்கள்.
ஒன்பதாவது பௌர்ணமி, சித்திரா பௌர்ணமி. அன்று விடியற்காலையில் ஒரு கனவு. பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் வருகிறார்கள். ஒரு ஓலையைக் கையில் கொடுத்து விட்டு மறைகிறாள். “நானே உன் வீட்டிற்கு வருவேன்”என்று எழுதியிருந்தது.
கனவு கலைகிறது. என் கணவரிடம் சொன்னேன். மறுநாள் வீட்டில் மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. எல்லோரும் மாடியில் போய்ப் படுத்துக் கொண்டோம்.
நான் நன்றாகத் தூங்கியபடி இருந்தேன். என் கணவருக்கோ தூக்கம் வரவில்லை. விழித்துக் கொண்டு இருந்திருக்கிறார்.
அப்போது என் உடம்பிலிருந்து ஒரு ஆள் எழுந்து போனதைப் பார்த்திருக்கிறார். என்னிடம் சொல்லவில்லை. ஒரு நண்பரிடம் சொல்லக் கேட்டேன்.
பரம்பொருள் பங்காரு அம்மா
அவர்கள் வந்து தான் ஆவியை ஓட்டியிருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன். ஓலைச் சுவடியில் எழுதிக் காட்டியபடி, எப்படியோ இந்த ஏழை மகளுக்கு உயிர்பிச்சை அளித்திருக்கிறாள்.
அதிலிருந்து எனக்கு எந்தவிதத் தொல்லையோ, பயமோ இல்லை. இன்னும் என் வாழ்க்கையில்
பல அற்புதம் செய்து கொண்டுதானிருக்கிறாள்.
ஒரு வாய் சோற்றுக்கே கஷ்டப்பட்ட எங்களை இப்போது எல்லோரும் பார்த்துப் பொறாமைப்படும் அளவிற்கு வைத்திருக்கிறாள் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் ! என் குடும்பமே பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களுக்கு அடிமை.
 
ஓம்சக்தி!
பக்கம் 156-159.
சக்தி மலர்விழி குமரவேல், விழுப்புரம்.
மலரும் நினைவுகள் என்னும் நூலிலிருந்து….