பங்காரு அம்மா அவர்கள் நம்மையெல்லாம் பொதுத் தொண்டு செய்யச் சொல்வதில் ஒரு நுட்பம் உண்டு.

வெறும் மந்திர வழிபாட்டில் நமக்கு மட்டும்தான் நன்மை. நாம் செய்யும் பொதுத் தொண்டினால் மற்ற ஆன்மாக்களுக்கும் பயன் கிடைக்கிறது.அதன்மூலம் நம் ஆன்மா பக்குவப்படுகின்றது. அப்படிப் பக்குவப் பட்டபின் குருவின் துணையோடு ஆன்ம விடுதலை கிடைக்கும். பிறப்பு, இறப்பு என்ற சுழலுக்குள் நாம் அகப்பட்டு திண்டாட வேண்டியது இல்லை.

ஆன்ம விடுதலை என்ற பெரிய இலட்சியத்தையே எல்லா ஞானிகளும் நமக்கு வற்புறுத்திச் சொல்கிறார்கள்.

அதனைக் கொடுக்க அம்மா திருவுளம் கொண்டுள்ளாள். அதற்கான ஆரம்பப் பயிற்சிகளை அளிக்கிறாள். இந்தப் பயிற்சிகளில் நமக்கு ஈடுபாடு தேவை. பயபக்தி தேவை. அம்மாவிடம் நம்மை ஒப்படைத்துக் கொள்ள வேண்டும்.

பங்காரு அம்மா நமக்கு கொடுக்கும் பயிற்சிகளோடு சுவாமி விவேகானந்தர் கூறிய உண்மை ஒன்றை மனதில் பதிய வைப்போம்.

ஒவ்வொரு ஜீவான்மாவும் உள் நிறைந்த தெய்வத்தன்மை உடையது. அகத்தேயும் புறத்தேயும் சார்ந்து நிற்கும் பிரகிரு நிலை (இயற்கை) அடக்கி உள்நிறைந்த தெய்வத் தன்மையை வெளிப்படுத்துவதே சமயங்களுன் நோக்கமாகும்.

கருமம், பூசனை, பிராணனை இலயப்படுத்துதல், ஞானநூல் ஆராய்ச்சி என்ற இவற்றுள் ஒன்றினாலோ, பலவற்றினாலோ, யாவற்றினாலோ இதனைச் செய்து சுதந்திரனாய் இரு.

இதுவே சமயத்தின் முழு உண்மை. கொள்கைகளும், கருமங்களும், நூல்களும், கோயில்களும், பிறவும் இதற்கு உதவி செய்யும் சாதனங்களாய் அமைந்து நிற்பன.
என்கிறார்.

எனவே நாள்தோறும் கோயிலுக்குப் போவதும், மந்திரம் படிப்பதும், அன்னையை வழிபடுவதும், தெய்வத்துக்கு பணி செய்வதும், தெய்வத் தொண்டு புரிவதும் உடனடியாக ஆன்ம விடுதலையை தந்துவிட மாட்டா.இவைகள் உடனடியாக மோட்சத்தைக் கொடுத்து விடாது.

வீடு பேறு என்கிற அந்த உயர்ந்த இலட்சியத்தை அடைவதற்கான பயிற்சிகளே அவைகள்.

அந்தப் பயிற்சிகள் காலப் போக்கில் சிறுகச் சிறுக மனப்பக்குவத்தை ஒருவனுக்கு உண்டாக்கிக் கொண்டே வரும்.

ஒருவனுடைய முன்னைய ஊழ்வினைகள் படிப் படியாக தணிந்து கொண்டே வரும். இறுதியில் இந்தப் பயிற்சிகள் ஞானத்தைக் கொடுக்கும்.

அந்த நிலை வருகின்ற போது அம்மாவை குருவாக ஏற்றுக் கொண்டு யார் யாரெல்லாம் மானசீகமாக வழிபட்டு வந்தார்களோ, அவர்களுக்கு கனவின் மூலம் தீட்சை கிடைக்கலாம், நேரடியாக மந்திர உபதேசம் கிடைக்கலாம்.

அந்த நிலை பெற்றுக் கொண்டவர்கள் பிறவா நிலை பெற்று அன்னை ஆதிபராசக்தியின் திருவடிகளோடு இரண்டறக் கலந்து பேரின்பப் பேற்றில் திளைப்பார்கள்.

எனவே தன்னை நம்பி வருகின்ற ஆன்மாக்களின் உயர்வுக்காக அன்னை ஆதிபராசக்தி போடும் கணக்கு வேறு.
மற்றவர்கள் போடும் கணக்கு வேறு.