புதன் 18, டிசம்பர் 2019

மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் 2019-20 ஆண்டுக்கான சக்திமாலை இருமுடி விழாவை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார்.

ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூச ஜோதி விழாவிற்கு முன்பாக சக்திமாலை அணிந்து, சக்தி விரதம் இருந்து அம்மனுக்கு இருமுடி எடுத்து வந்து சுயம்பு அன்னைக்கு அபிடேகம் செய்கின்றனர். ஐந்து அல்லது மூன்று நாள் விரதம் இருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் குடும்பம் குடும்பமாக இருமுடி செலுத்துவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டும் இன்று டிசம்பர் 18ஆம் தேதி துவங்கும் இந்த இருமுடி விழா பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இதனை அடுத்து பிப்ரவரி 2020, 8ஆம் தேதி அன்று ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் ஏற்றும் தைப்பூச விழா விமரிசையாக நடைபெற உள்ளது. இன்று அதிகாலை 3.00 மணி அளவில் மங்கள இசையுடன் விழா துவங்கியது.

6 மணிக்கு கருவறை மண்டபத்தில் இயற்கை வழிபாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 6.15 மணிக்கு இருமுடி அபிடேகத்தை லட்சுமி பங்காரு அடிகளார் துவங்கி வைத்தார். முதலில் 9 சிறுமியர்களும், 9 தம்பதியர்களும் அபிடேகம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அபிடேகம் செய்தனர். விழாவிற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தகவல் நிலையங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி, சுற்றுப்புற சுகாதாரம், தீயணைப்பு வாகன ஏற்பாடு முதலிய பல ஏற்பாடுகளும் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன. ஆயிரத்திற்கு மேற்பட்ட செவ்வாடைத் தொண்டர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபாட்டுடன் தொண்டு செய்து வருகிறார்கள்.

இன்று துவங்கி விழா முடியும் வரை தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. இந்த ஆண்டும் பல லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறும் என உணவுக்குழுப் பொறுப்பாளர் கூறினார். இருமுடி விழாவிற்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் மற்றும் மாவட்டங்களிலிருந்தும் பல லட்சம் பக்தர்கள் மேல்மருவத்தூர் வர இருக்கின்றனர். தென்னக இரயில்வே பல சிறப்பு இரயில்களை இயக்குகிறது. வழக்கமாக செல்லும் பல விரைவு ரயில்களும் மேல்மருத்தூரில் நின்று செல்கின்றன. விழா ஏற்பாடுகளை இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் துணைத்தலைவர்கள் கோ.ப.செந்தில்குமார் மற்றும் ஸ்ரீதேவி ரமேஷ் பொறுப்பில் ஆன்மிக இயக்கத்தின் பல்வேறு குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.