மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் உடல் பக்தர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு நிறைய பேர் அஞ்சலி செலுத்தி வருகிறார். வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் மருவத்தூருக்கு வருகிறார்கள். நெஞ்சு பகுதியில் சளி பாதிப்பால் அவதிப்பட்டு வந்த பங்காரு அடிகளார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 1941 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி பிறந்தார். இவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறுகிறது. அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவருடைய உடல் அவருடைய வீட்டினுள் பக்தர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

செவ்வாடை அணிவிக்கப்பட்டு ஐஸ்பெட்டியில் கிடத்தப்பட்ட அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான பக்தர்கள் வீடு முன்பு குவிந்தனர். அவரது உடலுக்கு அருகே கண்ணீருடன் அமர்ந்திருக்கிறார் லட்சுமி அம்மாள். மகன் அன்பழகனும் அருகே செவ்வாடையில் நிற்கிறார். அடிகளாருக்கு அஞ்சலி செலுத்த ஒவ்வொரு பக்தர்களாக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மருவத்தூர் அடிகளாரின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நாளை காலை 8 மணிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவை அறிந்து மிகவும் வருந்தினேன். ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி அரை நூற்றாண்டுக்கும் மேலாக சிறப்பாக நடத்தி கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூகசேவைகளையு்ம மக்களுக்கு வழங்கி வந்தார். அம்மா என பக்தர்களால் அழைக்கப்பட்ட அடிகளார் ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்களே கருவறைக்குள் சென்று வழிபாடுகள் நடத்தும் புரட்சிகரமான நடைமுறைகளை வழக்கப்படுத்தினார். கோயில் கருவறைக்குள் அனைத்து ஜாதியினரும் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதற்காக திமுக பல ஆண்டுகளாக போராடி அதனை நடைமுறைப்படுத்தியும் வரும் நிலையில் அனைத்து பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூஜை செய்து வழிபடச் செய்த பங்காரு அடிகளாரின் ஆன்மீக புரட்சி மிகவும் மதித்து போற்றத்தக்கது. 2 ஆண்டுக்கு முன்பே ஆதிபராசக்தி கோயிலுக்கு அருகே தனக்கு தானே சமாதி அமைத்தவர் பங்காரு அடிகளார்! அவரது ஆன்மீக மற்றும் சமூகசேவைகளைப் பாராட்டி கடந்த 2019ஆம் ஆண்டு அவருக்கு பத்ம ஸ்ரீ விருது அளித்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தை தொடங்கி வைக்க மருவத்தூர் சென்ற போது உடல்நலிவுற்ற அடிகளாரை சந்தித்து நலம் விசாரித்தேன். உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அடிகளார் மறைவுற்றிருப்பது அவரது பக்சர்களுக்கு ஒரு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது இரங்கல்கள், பங்காரு அடிகளாரின் சேவைகளை போற்றும் வகையில் அரசு மரியாதையும் அவரது இறுதி சடங்கு நடைபெறும் என்றார். பங்காரு அடிகளாருக்கு பக்தர்கள் அஞ்சலி செலுத்தியபிறகு அவருடைய உடல் அவரால் அமைக்கப்பட்ட சமாதியில் நல்லடக்கம் செய்யப்படும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here