பங்காருஅடிகளார் ஆசி வழங்கினார்
சனி 3 , ஆகஸ்ட் 2019 1 :54:56 PM

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 48வது ஆடிப்பூர விழாவில் கஞ்சி வார்த்தல் மற்றும் பால்அபிடேக நிகழ்ச்சி நடைபெற்றது . ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் ஆசி வழங்கினார் .

மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் 48 ஆம்ஆண்டு ஆடிப்பூரவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது . இந்நிகழ்ச்சியில் கஞ்சிவார்த்தல் , சுயம்பு அன்னைக்கு பால் அபிடேகம் ஆகிய நிகழ்ச்சிகளில் இலட்சக்கணக்கான பக்தர்களும், பொது மக்களும் பங்கேற்று வருகிறார்கள் . முன்னதாக நேற்று 2 ஆம்தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 . 35மணிக்கு கலசவிளக்கு வேள்வி பூசையை இலட்சுமி பங்காருஅடிகளார் துவக்கி வைத்தார் . வேள்வியில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் .

விழாவை முன்னிட்டு சித்தர்பீடத்தின் முகப்பிலும் மற்றும் வளாகத்தை சுற்றிலும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது . இந்த விழா இன்று காலை 3 மணிக்கு மங்கள இசையுடன் துவங்கியது. தொடர்ந்து கருவறை அன்னைக்கு சிறப்பு அபிடேக , அலங்கார, ஆராதனை செய்யப்பட்டன . காலை 5 . 50 மணி அளவில் கஞ்சி தயாரிக்கப்பட்டு கேசவராயன்பேட்டை வளாகத்திலிருந்து மண் கலயங்களில் புதியகஞ்சி வழங்கும் நிகழ்ச்சியை ஆன்மிக இயக்கத் துணைத்தலைவர் செந்தில்குமார் துவக்கி வைத்தார் . காலை 7 . 15மணிக்கு சித்தர்பீடம் வருகைதந்த ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளாருக்கு மேளதாளங்கள் முழங்க விழாப் பொறுப்பாளர்கள் பாதபூசை செய்து வரவேற்றனர் .

பின்னர் ஆன்மிககுரு அருள்திருஅடிகளார் அவர்கள் வீட்டிலிருந்து காலை 7 . 45 மணிக்கு லட்சுமி பங்காருஅடிகளாரால் எடுத்து வரப்பட்ட தாய்வீட்டு கஞ்சிக்கு சித்தர்பீடத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது . அருள்திருஅடிகளார் முன்னிலையில் தாய்க்கஞ்சி கருவறை அம்மனுக்கு படைக்கப்பட்டது . இயக்கத் துணைத்தலைவர் கோ . ப . அன்பழகன் கஞ்சியை செலுத்துவதற்கு சித்தர்பீடம் வருகை தந்தார் .

தொடர்ந்து பக்தர்கள் தங்கள் தலையின் மேல் கஞ்சிக்கலயங்கள் சுமந்தபடி பிரகாரத்தை சுற்றி வந்து கஞ்சி வார்க்கும் பள்ளி மைதானப் பகுதிக்குச் சென்றனர் . அங்கே அனைத்து பக்தர்களும் எடுத்துவரும் கஞ்சிகளும் சமத்துவ கஞ்சியாக ஒன்று சேர்க்கப்பட்டு அதனை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது . கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சியை இயக்கத் துணைத்தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் துவக்கி வைத்தார் .


மதியம் 11. 30 மணிக்கு ஆன்மிககுரு அருள்திருஅடிகளார் பால்அபிடேகத்தை துவக்கி வைத்தார் . பால் அபிடேகத்தில் சிறப்பு விருந்தினராக உயர்நீதிமன்ற நீதிபதி டீக்காராமன் , ஓய்வுபெற்ற நீதிபதி இராஜேஸ்வரன் , ஓய்வு பெற்ற தென்னிந்திய இரயில்வே அதிகாரி ஜெயந்த் , கோவை மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா, மத்திய பாதுகாப்புபடை அதிகாரி மல்லிகா உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர் . பக்தர்கள் பால்அபிடேக நிகழ்ச்சியில் பங்கேற்க பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் தொடர்ந்து வந்து அபிடேகம் செய்து கொண்டிருந்தனர் . இன்று மதியம் துவங்கிய பாலபிடேகம் இரவு முழுவதும் விடிய விடிய தொடர்ந்து நடைபெற்று வருகிறது . நாளை 4 ஆம் தேதி மதியம் வரை நடைபெறும் என்று சித்தர்பீட நிர்வாகிகள் தெரிவித்தனர் .

அன்று மதியம் நடைபெறும் அன்னதானத்தை ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி தாளாளர் உமாதேவி ஜெய்கணேஷ் துவக்கி வைக்கிறார் . வரிசையில் வரும் பக்தர்களுக்கு உணவுபொருட்களும் , தேநீர் , இட்லி , பழபானங்களும், குழந்தைகளுக்கு பிஸ்கட் , பால் முதலியவைகளும் செவ்வாடை தொண்டர்கள் தொடர்ந்து வழங்கினர் . பக்தர்களை வரிசைபடுத்துதல் மற்றும் பாதுகாப்பு பணிகளை இயக்கஆன்மிக இளைஞரணியினர் சிறப்பாக செய்திருந்தனர் . தகவல் பாதுகாப்பு குடிநீர்வசதி சுகாதாரம் தீயணைப்புவசதி மற்றும் முதலுதவி ஆகிய வசதிகளை சித்தர்பீடம் செய்திருந்தது .

தொலை தூரத்திலிருந்து வரும் பக்தர்கள் வசதி கருதி சித்தர் பீடத்திலேயே கஞ்சி தயாரித்து வழங்கும் பொறுப்புகளை காஞ்சிபுரம் , இராமநாதபுரம் , சிவகங்கை , மதுரை மற்றும் நீலகிரி மாவட்டத்தினர் செய்திருந்தனர் . சித்தர்பீட கருவறைப்பணி , வேள்விப்பணி செய்யும் மகளிரணி பால்அபிடேகம் செய்வதற்கு உதவியாக தொண்டாற்றினார்கள் .

விழா ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தலைவர் இலட்சுமி பங்காருஅடிகளார் தலைமையில் இயக்கத்தின் கோவை மற்றும் திருப்பூர் மன்றங்கள் மற்றும் சக்திபீடங்கள் முறையே கிருஷ்ணமூர்த்தி மற்றும் சரஸ்வதி சதாசிவம் ஆகியோர் தலைமையில் சிறப்பாக செய்திருந்தனர் .