மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீட ஆடிப்பூர விழா : செவ்வாடை பக்தர்கள் பாதயாத்திரை
செவ்வாய் 30, ஜூலை 2019 6:49:34 PM

மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீட ஆடிப்பூர விழாவிற்கு சென்னையிலிருந்து செவ்வாடை பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீட ஆடிப்பூரவிழா ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ஆடிப்பூரவிழாவிற்கு சென்னையிலிருந்து செவ்வாடைபக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டனர். பாதயாத்திரையின் துவக்க விழா சென்னை தி.நகர் பசுல்லா சாலையிலுள்ள தமிழ்நாடு கல்விகாப்பு அறக்கட்டளை வளாகத்தில் மதியம் 2.45 மணிக்கு மங்கல இசையுடன் துவங்கியது. தொடர்ந்து இயற்கை சீற்றங்கள் தணியவும், மழை வளம் வேண்டியும் இயற்கை அன்னையை வணங்கி பஞ்சபூத வழிபாடு நடைபெற்றது.

தொடர்ந்து ஆதிபராசக்தி அன்னையை வேண்டி 108 தமிழ் மந்திரங்கள் ஒலிக்க, கூட்டு வழிபாடும் நடைபெற மாலை 4.35 மணிக்கு பாதயாத்திரையை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தி.சக்தி அறக்கட்டளையின் தலைவர் வசந்தலட்சுமி ரகுவீர், ஆதிபராசக்தி அறநிலையத்தின் பொருளாளர் வெங்கடசாமி, டாக்டர். நடராசன் முதியோர்நல அறக்கட்டளை நிறுவனர் நடராசன் மற்றும் ஓய்வு பெற்ற துணைக்காவல் கண்காணிப்பாளர் முருகய்யா ஆகியோர் துவக்கி வைத்தனர். விழாவில் சமுதாயப் பணிகளாக நலிவுற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையும், தொழிற்கருவிகளும் வழங்கப்பட்டன. பாதயாத்திரையில் பெண்கள் பெருமளவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

பாதயாத்திரை ஏற்பாடுகளை பெரம்பூர் ஆதி பராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் கோபிநாத் தலைமையில் சிறப்பாக செய்திருந்தனர். பாதயாத்திரையாக செல்பவர்களுக்கு வழியில் உள்ள ஆதிபராசக்தி செவ்வாடை தொண்டர்கள் தங்குமிடம், உணவு,தண்ணீர் முதலிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கிறார்கள்.